Thursday, December 08, 2005

மீள்வருகை...


1.

நன்றி... நன்றி... நன்றி... கிஞ்சித்தும் எதிர்பார்த்திராத வாழ்த்துக்களையும், ஊக்குவிப்புக்களையும், உளம் நிறைந்த ஆசிகளையும் கண்டு மெய்சிலிர்த்தே போனேன், தோழர்களே. என் மொழியின் பலவீனம்... உணர்ந்ததை முழுவதுமாக வெளிப்படுத்தத் தெரியவில்லை. இப்படியொரு அற்புத உலகத்தையும், அன்பான மனிதர்களையும் இத்தனை காலமும் அறிந்திராமற் போனமைக்காக வருந்துகிறேன்.

இதோ.. உங்கள் பின்னூட்டங்கள் குறித்தான எனது கருத்துக்கள்...

ஆழ்வார்க்கடியான்..,
உங்கள் அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. ஒற்றை அனுபவம் வாழ்வை நிர்ணயிக்கக்கூடாதுதான். ஆனாலும் மனதில் அறைந்து விட்டுச்சென்ற ஒற்றை வார்த்தை வாழ்வின் போக்கையே திசைதிருப்பக்கூடுமல்லவா... அந்த மாற்றம் மனதுக்கும் பிடித்திருந்தால் என்ன செய்ய...? (நிவாரணமுகாம் அனுபவம்...)

சுப்ரமணியம், மதுமிதா, செல்வநாயகி, அன்பு, கண்ணண், தங்கமணி, karthikaramas, மயூரன்..,
உளமுருகச் செய்த உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி.

மதி..,
நீங்கள் மட்டுமல்ல, இந்த அக்கா/அண்ணா விளித்தலில் உடன்பாடில்லாத இன்னும் எத்தனையோ பேர் உலகில் இருக்கிறார்கள். ஆனால் இந்த மறத்தமிழர் குணம் - பொடிச்சி சொன்னதைப் போல் - விட்டுப் போகுதில்லை. இங்கே எத்தனையோ கடைகளில் 'அண்ணா' என்று கூப்பிடப்போய், அவங்கள் 'சொல்லுங்கோ அக்கா' என்று திருப்பிக்கேட்டுவிட, 'தேவைதான்' என்று அடிமனம் என்னையே நொந்துகொண்ட சந்தர்ப்பங்கள் ஏராளம். ஆனாலும் பாருங்கோ, இன்னமும் நான் திருந்தினபாடில்லை. 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்று யாரோ சொன்னத வைத்துக்கொண்டு ஊர் முழுக்க சொந்தம் சேர்த்துக்கொண்டிருக்கிறன். :-)

டி.சே. தமிழன்..,
நீங்களும், பொடிச்சியும், இன்னும் பலரும் நேர்மையான சொல்லல்முறையைச் சிலாகித்திருப்பது என்னை வியப்பிலாழ்த்துகிறது. இந்த நேர்மைதான் எத்தனையோ பேருடன் முரண்பட வைத்தது. சிலதினங்களுக்கு முன்னரும் அருமை நண்பனொருவனை இப்படித்தான் இழந்தேன். உண்மை.. எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிதாய் இருப்பதில்லையல்லவா? 'பொய்' யின் கவர்ச்சியும், 'கற்பனை' யின் அலங்காரமுமே மனித மனங்களால் விரும்பப்படுகின்றன. அவர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக எப்படி அறிந்தே துரோகம் செய்வது?

நேர்மையையும், வெளிப்படைத்தன்மையையும் ஏற்றுக்கொள்ளத் தெரிந்த உங்களைப் போன்றோரின் அறிமுகம் கிடைத்ததில் மிகவும் சந்தோஷம். மற்றும்படி, உணர்ச்சிவசப்படுதலிலும் 'ப்ரோ', 'தங்கத்தீ' (சத்தியமா விளங்கேல்ல) என அழைத்தலிலும் எந்தத் தவறுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

சந்திரவதனா அக்கா..,
அன்பான உற்சாகப்படுத்தலுக்கு நன்றி. உங்கள் கருத்துக்கு மயூரனே தக்க பதிலளித்து என் சிரமங்களைக் குறைத்துவிட்டார். உடற்பயிற்சி செய்வது தவறென நான் சொல்லவரவில்லை, உடற்பயிற்சி நிலையங்களை நாடுபவர்களைத் திட்டவும் எனக்கு எந்த அருகதையுமில்லை. உடற்பயிற்சியென்பது ஒருவகையில் செலவளிக்க வழியில்லாது சேர்ந்துபோன சக்தியினை / அதிகபட்ச சக்தியினை சூழலுக்கு இழக்கும் ஒரு முறைதானே... ஒருவிதத்தில் சக்திவிரயம்தானே... அன்றாடக் கருமங்களை நிறைவேற்றுவதற்கே போதுமான தெம்பில்லாமல் எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்கள் அல்லலுற்றுக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் உடற்பயிற்சி செய்து உடற்பலத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் வசதிபடைத்தவர்கள்... இப்படியாக, இவ்வுலகத்து மனிதரிடையே நிலவும் அசமத்துவம் மீதான என் விசனங்களைத்தான் எடுத்துக்கூறினேன்.

கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேசமயம், அக்கருத்துக்கள் எந்த சூழலிலிருந்து முன்வைக்கப்படுகின்றன, என்ன மனநிலையுடன் முன்வைக்கப்படுகின்றன என்பதையும் கவனத்திற் கொள்வோமாயின் - சற்றுச் சிரமம்தான், நடைமுறைக்குச் சரிவராதுதான் என்றாலும் - இன்னும் தெளிவான புரிதலேற்படக்கூடுமென்பது எனது தாழ்வான அபிப்ராயம்.

anonymous அண்ணனுக்கு..,
80 களிலேயே பெண்களைச் சுடலைக்குச் செல்ல அனுமதித்தார்களென்றால் உங்கள் குடும்பம் மிகவும் முற்போக்கானதாகத்தானிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக எல்லாருக்கும் இப்படியான பரம்பரையில் பிறக்கும் பேறு கிடைப்பதில்லை. சில மாதங்களுக்கு முன்னர் நான் நேரில் அனுபவித்ததைத்தான் சொன்னேன். பழமைவாதம் இன்னமும் மரணித்து விடவில்லை...

feman...,
பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி. ஆனால் பெண்கள் மிருதுவானவர்கள், மென்மையானவர்களென்ற உங்கள் வாதத்தை எந்தவிதத்திலும் என்னால் நியாயப்படுத்த முடியவில்லை. இறுதிக்கிரியைகளை ஏற்றுக்கொள்ளும் மனவுறுதி பெண்களுக்கு இல்லையென்ற முடிவுக்கு நீங்களாக எப்படி வரமுடியும்? இந்தச் சடங்குகளில் கலந்துகொள்ள மட்டுமல்ல, இவற்றை முன்னின்று நடத்தவும் தேவையான மனோதிடம் என்னிடமிருக்கிறதென்று தலைநிமிர்த்தி நானே சொல்கின்றபோது, அதை எப்படி நீங்கள் மறுக்கமுடியும்?

உடன்பிறந்த சகோதரியைப்போல் எம்மோடு நெருங்கிப் பழகிய ஒரு ஆசிரியை (கிறிஸ்தவப் பெண்) கடந்தவருடம் தற்கொலையில் உயிரை மாய்த்துக்கொண்டபோது - அப்போது அவர் ஒரு நிறைமாதக் கர்ப்பிணி - அவரது இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் மயானம்வரை சென்று பிடி மண்ணள்ளிப் போட்டுவந்தோம், நானும் சில தோழிகளும். அப்போதிருந்த மனவுறுதி சைவச் சடங்கென்றதும் தொலைந்துவிடுமோ?

பத்துமாதம் வயிற்றில் சுமந்து, சீராட்டிப் பாராட்டி வளர்த்த செல்வக்குழந்தைகளைப் போர்முனைக்கு - மரணத்தின் வாயிலுக்கு - வழியனுப்பி வைக்கும் தாய்மார்களையா மென்மையானவர்கள் என்கிறீர்கள்? அருமைப் புதல்வன் வீரமரணமடைந்தானென்று கேள்விப்பட்டதும் போர்க்களத்திற்கு ஓடிச்சென்று அம்பு முதுகில் பாய்ந்ததா, மார்பில் பாய்ந்ததாவென ஆராயும் சங்ககாலத்து மறத்தமிழச்சிகளின் வழிவந்த பெண்களைப் பார்த்தா மிருதுவானவர்களென்கிறீர்கள்?

மென்மைக்குரிய அளவுகோலாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்... அழுகையையா? அழுகை பலவீனத்தின் அறிகுறியென்று எவர் சொன்னது? அதுவொரு உணர்ச்சி வெளிப்பாடு அவ்வளவுதான். அழுகை - பெண்மைத்தனம், கோபம் - ஆண்மைத்தனமென்ற கற்பிதங்களிலிருந்து விலகிநின்று பாருங்கள். உணர்வுகள் மதிப்பிற்குரியவை... அவற்றை வெளிப்படுத்தவும் தைரியம் வேண்டும். அழத்துணிவில்லாதவன்... எனக்குக் கவலையாக இருக்கிறதென்று சொல்லத் தயங்குபவன் உலகில் வேறு என்னத்தை சாதித்துவிட முடியும்?

உங்கள் வாதங்கள் தவறென்றோ, அநியாயமானவையென்றோ நான் சொல்லவரவில்லை. அவற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனமைக்கான காரணங்களைத்தான் முன்வைத்தேன்.

தோழர்கள் அனைவருக்கும்..,
இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஆரம்பித்த பிற்பாடுதான் என் அறிவினதும், அனுபவத்தினதும் போதாமை தெரியவருகின்றது. அறிவுபூர்வமாகவும், ஆக்கபூர்வமாகவும் எதுவும் எழுத இன்னும் சற்றுக்காலம் பொறுத்திருக்க வேண்டிவரும். அதுவரை இந்த வலைப்பதிவு என் உணர்வுகளுக்கான வடிகாலாக அமையட்டும். மற்றும்படி.., இந்த L board காரியிடமிருந்து தோழர்கள் அதிகமாக எதையும் எதிர்பார்க்க மாட்டார்களென நம்புகின்றேன்.


2.

இதுவரைகாலமும் இந்த உலகத்தின் மீதான வெறுப்பையும்..,
மனிதர்களின் மீதான அவநம்பிக்கையையும்..
அடிமனத்தாழங்களில்
சேர்த்துச் சேர்த்து வைத்திருந்தேன்..
எனதேயெனதான உலகமொன்றைப் பற்றிய
கனவுகளில் மூழ்கி..,
இவர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போயிருந்தேன்..
இவ்வுலகம் எனக்கானதல்லவென்ற உணர்வு
மேலோங்க மேலோங்க...
இன்னுமின்னும் அதிகமாக
இவர்களையும்..,
இவர்கள் சார்ந்தவற்றையும்
அலட்சியப்படுத்தத் தொடங்கினேன்.

போதிசத்துவருக்கு அரசமரத்தடியில் ஞானம் கிட்டியதாம்..
எனக்கோ கசந்துபோன உறவொன்று
விலகியதன் பின்னர் ஞானம் பிறந்தது..
இனியும்..
உணர்ந்துணர்ந்து உருகவும்..,
உள்ளுக்குள்ளே கிடந்து மறுகவும் தயாரில்லை, நான்..

நான் உணர்வுகளை - கோபம், காமம், விரக்தி, வேதனை என எதுவாயிருந்தாலும் - நேசிக்கிறேன்..
உயிரினும் மேலாய் மதிக்கிறேன்..
இந்த மனிதர்களைப் பொறுத்தவரை
அவை எத்துணை கேவலமாயிருந்தாலும்..,
எத்துணை ஆபாசமாயிருந்தாலும்..

மொழி பலவீனமானதுதான்..
எனினும்,
இந்த மனிதர்களோடு வேறெந்த ஊடகத்தினூடு உரையாட..?
சொல்லாதுபோன வார்த்தைகளையும்,
அடிமனத்தில் உறைந்துபோன உணர்வுகளையும்
வேறெப்படி வெளிப்படுத்த..?

இனி இவர்களுக்கு எடுத்துச் சொல்லுவேன்..
என் கோபங்களை..,
தாபங்களை..,
அடக்கியே வைத்திருந்த
அடக்கக்கூடாத உணர்வுகளை...


3.

இன்னும் எத்தனையோ சொல்ல வேண்டியிருக்கிறது இந்த மனிதர்களுக்கு...

நான் அவர்களை எவ்வளவு நேசித்தேன்
என்று சொல்ல வேணும்...
அவர்களது அரவணைப்புக்காக எவ்வளவுதூரம் ஏங்கினேன்
என்று சொல்ல வேணும்...
என் மீதான புறக்கணிப்பின் சாயல்கள் அவர்களில் பிரதிபலித்த போதெல்லாம் நான் எப்படி மனமுடைந்து போனேன்
என்று சொல்ல வேணும்...
இவ்வுலகத்திலிருந்து தனிச்சுப் போனதாய் உணர்ந்த போதெல்லாம் நான் எப்படி அழுதேன்
என்று சொல்ல வேணும்...
அவர்களது அதிகாரமும், அடக்குமுறையும் என்னைக் காயப்படுத்தின
என்று சொல்ல வேணும்...
அவர்களது மரபார்ந்த நம்பிக்கைகளும், தெய்வ நியதிகளும் என்னை அவமதித்தன
என்று சொல்ல வேணும்...
என்மீது வலிந்து திணிக்கப்பட்டுள்ள 'பெண்' என்ற அடையாளத்தை - அதற்கென வகுக்கப்பட்டுள்ள பலவீனங்களோடு - நான் வெறுக்கிறேன்
என்று சொல்ல வேணும்...
அவர்களது வக்கிரப் பார்வையும், குருதி படிந்த கரங்களும் என்னை அச்சத்திலாழ்த்தின
என்று சொல்ல வேணும்...
அவர்களது சில கருத்தியல்களோடு ஒத்துப்போக முடியாத என் இயலாமையைப் பற்றிச்
சொல்ல வேணும்...
அவர்களது சில்லறைத்தனமான எதிர்பார்ப்புக்களை என்னால் நிறைவேற்ற முடியாது
என்று சொல்ல வேணும்...
அவர்களது மூளையைக் குத்தகைக்கெடுத்து அவர்களின் பாஷையில் நான் பேசுவது சாத்தியமில்லை
என்று சொல்ல வேணும்...
உள்ளத்தை அடகுவைத்து, உணர்வுகளைக் கடன்வாங்க எனக்குத் தெரியாது
என்று சொல்ல வேணும்...

எல்லாவற்றிற்கும் மேலாக...,
இன்னமும் நான் அவர்களை எந்தக் கபடமுமில்லாமல் நேசிக்கிறேனென்றும்...,
அவர்களற்ற உலகத்தைக் கனவுகளில்கூட என்னால் உருவாக்க முடியாதென்றும்...,
அவர்களுக்கு மத்தியில் - ஆனாலும், என் சுயத்தை இழந்துவிடாமல் நான் நானாகவே - வாழவிரும்புகிறேனென்றும்...
நான் சொல்லியேயாக வேண்டும்...

12 comments:

ramachandranusha(உஷா) said...

தேர்வு நன்றாக எழுதினீர்களா? உங்களுக்கு போன பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தது

"பாதகரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்து விடு பாப்பா
அவர்கள் முகத்தில் உமிந்துவிடடி பாப்பா"

பாரதி, உங்க மாதிரி சின்ன பொண்ணுங்களுக்கு பாடியது.

கொழுவி said...

மீண்டு(ம்) வந்தது மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

ஒரு பொடிச்சி said...

// மீண்டு(ம்) வந்தது மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்.//
அதே!!

அருள் குமார் said...

//நான் உணர்வுகளை - கோபம், காமம், விரக்தி, வேதனை என எதுவாயிருந்தாலும் - நேசிக்கிறேன்..
உயிரினும் மேலாய் மதிக்கிறேன்..
இந்த மனிதர்களைப் பொறுத்தவரை
அவை எத்துணை கேவலமாயிருந்தாலும்..,
எத்துணை ஆபாசமாயிருந்தாலும்..//

இத உணர்வது சாதாரண விஷயமல்ல.
great! great!! great!!!

-அருள்.

மு. மயூரன் said...

//உணர்வுகள் மதிப்பிற்குரியவை... அவற்றை வெளிப்படுத்தவும் தைரியம் வேண்டும். அழத்துணிவில்லாதவன்... எனக்குக் கவலையாக இருக்கிறதென்று சொல்லத் தயங்குபவன் உலகில் வேறு என்னத்தை சாதித்துவிட முடியும்?//

மிக ஆழமான கருத்து.
இப்படியான பார்வை ஒன்றை முதல் தடவையாக சந்திக்கிறேன்.

அழுவதற்கான துணிச்சல், அடுத்ததாக அழுவதற்கான நேர்மை.

அழுவதற்கு நிறைய நேர்மை வேணும். அது இல்லாட்டி அழுகை வராது..

இளைஞன் said...

அன்புத் தோழி நிவேதா,

இணையப் பரப்பில் உங்கள்
எழுத்துக்களை படித்தத்தில்
மகிழ்ச்சி. உணர்வுகளை
உணர்வுகளாய் வெளிப்படுத்தும்
எழுத்து. எழுதுங்கள்.
வாசிப்போம். உள்வாங்குவோம்.
கருத்தாடுவோம்.

விலங்குகள் உடை
சிறகுகள் விரி
உனக்கென்ன தடை
சிந்தனை திரி

நட்புடன்
புதியதோர் உலகம் செய்வோம்
இளைஞன்

Anonymous said...

எல்லாவற்றிற்கும் மேலாக...,
இன்னமும் நான் அவர்களை எந்தக் கபடமுமில்லாமல் நேசிக்கிறேனென்றும்...,


மறத்தமிழ் தாயின் மற்றொரு முகம் - யதார்த்தமான குணம். இதை வைத்து தான் பெண்கள் மிருதுவானவர்கள் என்கிறார்களோ!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இந்த மனிதர்களைப் பொறுத்தவரை
அவை எத்துணை கேவலமாயிருந்தாலும்..,
எத்துணை ஆபாசமாயிருந்தாலும்..//

நல்லது சகோதரியே.. இது பக்குவம் வாய்ந்த பதில்.

உம் பயணம் தொடரட்டும்..

Pot"tea" kadai said...

kudos to "A REBEL BY THE HEART"

Anonymous said...

ramachandranusha, கொழுவி, பொடிச்சி, அருள்குமார், மயூரன், இளைஞன், இறை நேசன், நிலவு நண்பன், potteakadai அனைவருக்கும் மிகமிக நன்றி..

தமிழ்நதி said...

நான் ஒரு இருபது நாட்கள் இணையப்பக்கம் வரவில்லை. அதற்குள் ஏதாவது நடந்ததா நிவேதா... பதிவும் பின்னூட்டங்களும் ஒன்றுமே விளங்கவில்லை. நிறைய எழுதுங்கள் நிவேதா. நாங்கள் சில நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும்போது உங்களைப் பற்றிச் சிலாகித்துப் பேசுவோம். அப்போது எனக்குப் பெருமையாக இருக்கும்... தொடர்ந்து எழுதுங்கள்.

நிவேதா/Yalini said...

நன்றி தமிழ்நதி..

இப்போது பதிவும், பின்னூட்டங்களும் விளங்குமென்று நினைக்கிறேன்.. என்ன நடந்ததென்று தெரியவில்லை.. இதை ஒழுங்குபடுத்தித் தந்த நண்பரிடம்தான் கேட்டுப்பார்க்க வேண்டும்..:-)