'நச்சுப் பொய்கையொன்றின் நடுவே ஒரு செந்நிறத் தாமரை பூத்தது. அதுக்கு தான் *வெடிபலவன் மாதிரி இருக்கவேண்டுமென்று விருப்பம். தன்ரை கண்ணைக் குத்துற சிவப்பு அதுக்கு பிடிக்கேல்லை. வெடிபலவன் மாதிரி வெள்ளையாய் இருக்கோணும். தன்ரை கால் சேத்துக்குள்ளை புதைஞ்சிருக்கிறதும் அதுக்கு பிடிக்கேல்லை. வெடிபலவன் மாதிரி கால்கள் பற்றின உணர்வேயில்லாமல் பறந்து திரியோணும்.
தண்ணியில் கழுவிக் கழுவி தன்ரை சிவப்பில் கொஞ்சத்தை ஒருவழியா போக்கிக் கொண்டது. சரியா நொந்ததென்டாலும் தன்ரை காலை சேத்துக்குள்ளையிருந்து பிடுங்கியும் கொண்டது அந்தப் பிடிவாதம் பிடிச்ச தாமரை.
இப்ப அது வெள்ளையில்லை, ஆனா சிவப்பாவும் இல்லை. இப்பவும் அதாலை பறக்க முடியேல்லை, ஆனா ஒரே இடத்தில் முந்திமாதிரி புதைஞ்சும் இல்லை.
அது முக்கியம்.
தண்ணிக்குள்ளை தன்ரை பாட்டுக்கு மிதந்து திரிய முடிஞ்சது. அந்தமட்டில் அதுக்கு சந்தோஷம்தான்.'
ஏதோவோர் புள்ளியிலிருந்து தொடங்கியாகத்தான் வேண்டும், அல்லது கோட்டிலிருந்தாவது. ஒரு கதையெழுதவென உட்கார்ந்தேன்.. அந்தக் கதை என் மூளையிலிருந்து தன்னை நிகழ்த்திக்கொள்ளத் தொடங்கியது.
..................
மேசையின் மேலிருந்த அழைப்பிதழை அவள் வெறித்துக் கொண்டேயிருந்தாள். கணங்கள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்தியாலங்களாகி, மணித்தியாலங்கள் நாட்களாகி, நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, வருடங்கள் யுகங்களாகி காலம் அவள் கண்ணெதிரே ஒரு நீர்த்திவலையென உருண்டோடிக் கொண்டிருந்தது.
இந்தத் திருமணத்துக்கு கட்டாயம் போகத்தான் வேண்டுமா?
'வேண்டும்' என்பதற்கான காரணங்கள்:
- அது மிக மிக நெருங்கிய தோழியின் திருமணம்.
- பாடசாலைக் காலத்துக்கு முன்பே அறிமுகமாகி இன்றுவரையும் வாழ்வின் மேடு பள்ளங்கள், கோணல்மாணல்கள், இன்பதுன்பங்கள் அனைத்திலும் பங்குகொண்டவள்.
- கட்டாயம் வர வேண்டுமென்று நேற்றும் தொலைபேசியில் தனியாக அழைப்பு விடுத்திருந்தாள்.
- அவளது வாழ்வின் மிக முக்கியமான தருணமொன்றில் நான் கூடவிருந்தாக வேண்டியது கட்டாயம்.
- போகாவிட்டால் ஒருபோதும் என்னை மன்னிக்க மாட்டாள்.
- ஒரு அருமையான நட்பை இழந்து விடுவேன்.
- என்னில் அதிகம் அக்கறை கொண்டிருப்பவளை மனம் வருந்தச் செய்துவிடுவேன்.
- etc. etc.
'வேண்டாம்' என்பதற்கான காரணங்கள்:
- அந்த இடத்தில் நான் நானாக இருக்க மாட்டேன்.
- சாறி உடுத்த வேண்டும், அது என்னால் முடியாது.
- காது கழுத்துக்கு ஏதாவது போட்டுக்கொண்டு போகவேண்டும், அதுவும் என்னால் முடியாது.
- ஆக மொத்தத்தில், என் சுயத்தை விட்டுக் கொடுக்க வேண்டிவரும்.
'நீ ஒன்டும் போடாமல் வந்தாலும் நான் எதுவுமே சொல்ல மாட்டன், வந்தால் காணும், எனக்கென்னமோ யோசனையாவேயிருக்கு வர மாட்டியோ என்டு'' (நன்றாகவே புரிந்து கொண்டிருப்பவள்).
'எனக்கும் ஒன்டும் போடாமல் வர விருப்பம்தான்.. பிறகு உன் மாப்பிள்ளை மயங்கி எனக்குப் பின்னால் வந்தாரென்டால்.., வேண்டாம், என்னாலை ஏன் ஒரு கல்யாணம் குழம்ப வேணும்'
வேடிக்கையாகப் பேசுவதொரு வித்தைதான். இக்கட்டான சந்தர்ப்பங்களிலிருந்து அவ்வப்போது நழுவிக்கொள்வதற்கான சிறந்த உபாயம். யாரையும் காயப்படுத்தாமலும், அதேநேரம் பிடிகொடுக்காமலும் கேள்விகள், மற்றும் எதிர்பார்ப்புக்களிலிருந்து மிக இலகுவாகத் தப்பித்துக்கொள்ளலாம், அந்த நேரத்துக்கு மட்டும். அதுவொரு தற்காலிக தப்பித்தல்.
சாறி கட்டத்தானே பிடிக்காது; சல்வார் இல்லாட்டி குர்தா ஏதும் போட்டுக்கொண்டு போகலாம். ஆனால், திருமண வீட்டில் அவள் மட்டுமொரு விநோதப் பிராணியாகிப் போவாள். ஆண்களை கோட் சூட்டுக்குத் தாவ அனுமதித்த திருமணங்களில் கூட பெண்களுக்கு சாறியிலிருந்து விடுதலையே இல்லை. 'எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்குடைய பெண்கள் மட்டும் ஆவதேயில்லை' எங்கேயோ வாசித்திருந்த கவிதை அவள் நினைவுக்கு வந்தது. எல்லாம் ஒன்றுதான். பண்பாடும், மரபும் பெண்களாலேயே கட்டிக் (சாறி கட்டி, தாலி கட்டி) காப்பாற்றப்பட வேண்டும். ஆண்கள் அனைத்தையும் மொனிட்டர் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.
சாறி கட்ட, நகை போட ஏன் பிடிக்காது? இது அவள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பதில் (கேள்வியின் தோரணையைப் பொறுத்து) அவள் கைவசமிருக்கும்.
அதிகாரத்துடன் அல்லது இளக்காரத்துடன் மூன்றாம் பேரால் கேட்கப்பட்டால்:
'என் உடம்பு.. எதுவும் போடுவதும் போடாததும் என் இஷ்டம்.. நீங்கள் யார் அதைப்பற்றிக் கவலைப்பட'
அக்கறையுடன், உண்மையாகவே அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் (மூன்றாம் தரவழி):
'நானொரு உயிருள்ள மனுசி.. ஷோக்கேஸ் பொம்மையில்லை.'
மிக நெருங்கிய யாரும் எந்தத் தோரணையுடன் கேட்டாலும்:
'விருப்பமில்லை'
வேறென்ன, மௌனம்ம்ம்...
ஒருமுறை அப்பாவின் நண்பரொருவர் 'ஏன் தோடு போடுவதில்லை?' எனக் கேட்டபோது, இதே கேள்வியைப் பல்லாயிரம் முறை எதிர்கொண்ட சலிப்பில் அமைதியாக அவரை நோக்கி 'ஏன் போட வேண்டும்?' எனத் திருப்பிக் கேட்டாள். சுவரில் மோதுண்ட பந்தைப் போல எதிர்பாராத மறுகேள்வியில் ஒருகணம் அதிர்ந்துபோய் வாயைப் பிளந்தார் அவர். 'she's really a smart girl..' அவரது வியப்பு வார்த்தைகளில் தொனித்தது. 'அது எங்கடை tradition என்டதுக்கும் அப்பாலை இந்தக் கேள்விக்கு எனக்கும் பதில் தெரியாது. அடுத்தமுறை உங்களைப் பார்ப்பதற்கு முதல் இதுக்கு பதில் கண்டுபிடித்து விடுகிறேனா பார்ப்போம்' என்றுவிட்டுப் போனார். அந்தக் கணத்தில் அவளுணர்ந்த சந்தோஷம், அது வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. மிக மிக நுணுக்கமான முறையில் அவளை விளங்கிக்கொண்டவர் அவர் மட்டும்தான். மரபு அல்லது பண்பாடு என்ற வெகு அபத்தமான (பண்பாடு என்பது வெறுமனவே ஆறுமுழ சேலையிலும், ஒன்றரைப் பவுன் தங்கத்திலும் மட்டும் தங்கியிருப்பதில்லையென்ற புரிதலுடன். எ+கா 4 அபத்தம்: ஆண்கள் கோட்சூட் போட்டாலும் தொலையாத பண்பாடு சேலை கட்டியவுடன் காப்பாற்றப்பட்டு விடும்) காரணங்களுக்கு அப்பால் எதற்காக சாறி உடுத்தவும், தோடு போடவும் பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட வேண்டும் என்பது தான் கேள்வி.
பெண்களுக்கான அடையாளங்களாய் சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டவற்றைப் புறக்கணித்து வாழ்வதன் சிரமம் வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் புரியும். 'என்ன தைரியம் உனக்கு இப்படிப் பண்ண' என்ற அதிகாரப் பார்வைகள், 'ஐயோ பாவம் அவ்வளவு வசதியில்லை போல' என்ற அங்கலாய்ப்புக்கள், 'வடிவாய் வெளிக்கிடத் தெரியாத பெட்டை' என்ற இளக்காரங்கள் கூடப் பரவாயில்லை. 'நீ இப்படியிருப்பதெல்லாம் மற்றவர்களிடமிருந்து உன்னை வித்தியாசமாய்க் காட்டிக்கொள்ளவும், மற்றவர்களது attention ஐ உன் பக்கம் திருப்பவும்தான், எல்லாரும் உன்னிடம் வந்து நீ ஏன் இப்படியென்று கேட்பதில் உனக்கு ஒருவித சந்தோஷம்' என்பதான அல்லது 'மற்றவர்களுக்கு முன்னால் உனது இமேஜை விட்டுக்கொடுக்காமலிருக்கத்தான் நீ இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறாய், மற்றபடி உண்மையில் உனக்கு விருப்பமில்லாமலில்லை' என்பதான 'நான் இப்படி' களை எதிர்கொண்டு எதிர்கொண்டு அவளுக்கு உண்மையில் 'தான் எப்படி' என்பதே ஒருவித குழப்பமாகிப் போனது.
இருந்தாலும் அருமையான குடும்பமொன்று அவளுக்கு வாய்த்திருந்தது. 'இப்படி தோடு கூட போடாமலிருந்தால் கல்யாணத்துக்கு வாற சனமெல்லாம் எங்களுக்கென்னமோ வசதியில்லையென்டு நினைக்கும்' என அங்கலாய்த்தாலும், 'நாங்கள் வசதியாயிருக்கிறமா இல்லையா என்டதை ஊர் முழுக்க சொல்லிக்கொண்டு திரியவேண்டுமா என்ன.. வசதியில்லாட்டியும் அக்கம்பக்கத்தில் கடன் வாங்கிக்கொண்டு போட்டு அழகு காட்டுற ஆக்களைப் பார்த்த பிறகுமா இப்படிக் கேட்கிறீங்கள்' என திருப்பிக் கேட்கும் மகளை நினைத்து உள்ளூரப் பெருமைகொள்ளும் அம்மா. சாமத்தியப்பட்டபோது இதெல்லாம் ஒன்றுமேயில்லையென்டு உடனேயே வெளியில் திரிய அனுப்பினவா, இவ்வளவுக்கும் அவளின் தோழிகளெல்லாம் ஒரு மாதம் வரை அறையை விட்டே எட்டிப்பார்க்க அனுமதிக்கப்படவில்லை. சுதந்திரமாகச் சிந்திக்கப் பழக்கிய அப்பா. 'என்ன வளர்ப்பு வளர்த்திருக்கிறீங்கள்' என்று விடுப்புக் கேட்பவர்களுக்கெல்லாம், 'என் பிள்ளையை நான் சராசரி பொம்பிளையா வளர்க்கவில்லை' என்று அடிக்கடி சொல்பவர். உண்மைதான்.., திருமணச் சந்தையில் விலைபோக தன் பிள்ளையை அவர் வளர்க்கவில்லைதான்.
ஆனால், இந்தப் பாதுகாப்பும் பிடிவாதங்களும் இந்தக் குடும்பத்துக்குள் இருக்கும்வரை மட்டும்தானென்பதும் அவளுக்குத் தெரிந்துதானிருந்தது. திருமணம் போன்ற சட்டகங்களுள் அடைபட்டால் அதற்கேயான விதிகளுடன் தான் (அவரின் விருப்பம், பிள்ளைகளின் விருப்பம், இனசனத்தின் விருப்பமென்று - அவளது விருப்பத்தை யார் பொருட்படுத்துவார் - சுயம் துண்டு துண்டாய்ச் சிதறி திசைக்கொன்றாய்ப் பறக்க) தொடர்ந்து வாழவேண்டிவரும், எமது விதிகளையும் ஒழுக்கங்களையும் தொலைத்துவிட்டு. 'நானும் விழுமியங்களுடதான் வாழ்கிறேன். ஆனால், எனக்கான விழுமியங்களையும், ஒழுக்கக் கோட்பாடுகளையும் நானே உருவாக்கிக் கொள்கிறேன்' (-அருந்ததி ரோய்?) எங்கேயோ வாசித்தது போல வாழ்ந்துவிட விருப்பம் தானெனினும், அதற்காகத் தனித்திருக்கவும் தயாரில்லை. ஏன் மனிதராய்ப் பிறந்த அனைவரும் நேசிக்கவும், நேசிக்கப்படவும், துணை தேடவும் சபிக்கப்பட்டிருக்கிறோம்..? நேசம் அவளது மாபெரும் பலவீனம்!
எப்படிப் பார்த்தாலும் அவள் இன்று திருமணத்துக்கு போய்த்தானாக வேண்டும். தனது சுயத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் ஒரு உறவை இழந்துவிட முடியாது. போகத்தான் வேண்டுமென்பதைக் கட்டாயமாக்கினால் பின்னும் அவள் முன் இரு தெரிவுகள்:
1. சாறி உடுத்திக்கொண்டு, நகையணிந்து போவது (சமூகத்துடன் ஒன்றிவாழும் முயற்சி. ஆனால், விருப்பமில்லாத ஒன்றை வருந்திச் செய்ததில் இயல்பாக இருக்க முடியாமற் போகும்)
2. வேறேதாவது இயல்பு குலையாமல் அணிந்து கொண்டு தான் தானாகவே போவது (ஆனால் நிறைய விநோதப் பிராணி பார்வைகளையும், கேள்விகளையும் எதிர்கொள்ள நேருமாகையால் அங்கும் இயல்பு குலையாமலிருக்குமா என்பது சந்தேகமே)
உறவுகள் வேண்டுமென்றால் 'என்'னை இழக்கவேண்டிவரும். எனது 'என்' வேண்டுமென்றால் உறவுகளை இழக்கவேண்டி வரும். நான் நானாக.., இதே மனிதர்களுக்கு மத்தியில் அவர்களை நேசித்துக்கொண்டு வாழ்வது எப்படி???
மனம் இவ்வளது தூரம் வட்டமிட்டு வரும்வரை அவள் அழைப்பிதழை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தாளென்று எழுதிக்கொண்டு அவசர அவசரமாக கதையை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து விடுகிறேன்.
.....................
கேரளாவில் ஆதித்தாய்வழிச் சமுதாயம் நிலவியதன் எச்சங்களாக இன்றும் நிலைத்திருப்பவற்றுள் அங்கு பெண்கள் பெரும்பாலும் வெள்ளை நிற சேலை கட்டுவதைக் குறிப்பிடலாம் என்கிறார் ஜெயமோகன் (ஆழ்நதியைத் தேடி-கட்டுரைத் தொகுப்பு). வெள்ளை நிறச் சேலைக்கும் ஆதித்தாய்வழிச் சமுதாயத்துக்குமான தொடர்பு என்னவென்ற கேள்வியெழலாம். தாய்வழிச் சமுதாயத்தில் பெண்களுக்குப் பாலியல் சுதந்திரமிருந்தது. அங்கு அவர்கள் எவரையும் கவர்ந்திழுக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. கண்கவர் வண்ணங்களில் ஆடை அணிவதும், தம்மை அலங்கரித்துக் கொள்வதும் எதிர்பாலாரைக் கவர்ந்திழுக்க வேண்டிய, பெண்களுக்குப் பாலியல் சுதந்திரம் மறுக்கப்பட்ட, தந்தைவழிச் சமுதாயத்திலேயே அறிமுகமாகியிருக்கலாமெனும் ரீதியில் தொடர்பை நிறுவுகிறார் அவர்.
பெண்ணுடம்பு மிக மிக இயல்பாய்ப் பண்டமயமாதல் எனவும் தலைப்பிட்டிருக்கலாமோ?
*வெடிபலவன் - ஒருவிதத் தாவரம். பஞ்சைப்போல காற்றில் பறந்து செல்லும் கீழே ஒரு சிறிய விதையுடன்.
Friday, October 12, 2007
Subscribe to:
Posts (Atom)
