தேவதைகள்
சினங்கொள்ளக் கூடாதென்கிறார்கள்..
பெருந்தன்மை வாய்ந்தவையென்கிறார்கள்..
எற்றுண்டு கிடத்தல்...
மரணபீதியில் வெளிறியிருந்த பௌர்ணமி நிலவு
சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்படும்
தமிழரின் முகத்தை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது
ஒன்றாய்.. ஒவ்வொன்றாய்..
மனங்கொள்ளா எதிர்பார்ப்புகள் பொய்த்திடப் பொய்த்திட
வானக் கந்தலிலிருந்து கழன்றுவிழும் தாரகைகள்
முக்கால் மணிநேரத்தில் முற்றத்தில் கிடந்த
முழுவாளி நிறைத்தன
அது விளிம்புடைந்த பழம் வாளியென்பது வேறு கதை.
புறநிலைக் குறிப்பு
தனித்தனியே பொறுக்கியெடுத்து தூசு தட்டி
சேலை நெய்து அணிந்திட்ட ஒருத்தி
தேவதையாக உருக்கொண்டு - அவர்கள்
கதவுகளைத் தட்டத் தொடங்கினாள்
அகலத் திறந்த கோட்டைகளின் கதவுகள்
அல்லோலகல்லோலத்துடன் ஆடம்பரமாய் வரவேற்க
பாளம் பாளமாய் வெடித்திருந்த வறள் நிலத்தில்
முதல் துளியின் ஸ்பரிசத்தை உணர்ந்து ரசித்தவள்
'நீ மட்டுமா வந்தாய்' என்ற புருவமுயர்த்தல்களை
கவனிக்கத் தவறியதை எப்படிக் கண்டிக்க..
எல்லாம் தேவதையாய் உருக்கொண்டதால் வந்த வினை
விருந்துக்கும் உபசாரத்துக்கும் பரிகாரமாய்
இனி அவள் அரசர்களை அழைத்துவர வேண்டும்
வெடிச்சத்தங்களும், வாணவேடிக்கைகளும்,
தோரணங்களும், பந்தல்களுமென
கோட்டைகளும் இப்போது விழாக்கோலம் பூண
இம்முறை வரவேற்பு இன்னமும் பலமாகவிருக்கும்
அரசர்களை உள்நுழைய அனுமதித்த பின்
கோட்டையின் சுவர்களிலிருந்து வெளிக்கிளம்பும் பிசாசொன்று
அவளைப் பிதுக்கி வெளித்தள்ள
அதிக காலமெடுக்காதென..
அவளது தயவின்றி அரசர்களின் அருட்கடாட்சம் கிட்டாதென்பது
அவர்களுக்குத் தெரியுமென - பாவம்
அவளெப்படி அறிவாள்?
அகவயத் தெளிவு
கழுத்தைப் பிடித்து புறந்தள்ளப்பட்ட வேதனையுடன்
புழுதியில் கிடந்துகொண்டு
அண்ணாந்து பார்க்கிறேன்..
நெடிதுயர்ந்த மதில்களுக்கும் மேலால்
இன்னமும் ஓரிரண்டு தாரகைகள்
அந்தரத்தில் தொங்கிக்கொண்டுதான் கிடக்கின்றன
இனியென்ன..
கலைந்த ஆடைகளை சரிசெய்தபடி
அடுத்த கதவினை நோக்கி விரைய வேண்டியதுதான்,
தூக்கியெறியப்படுதலை எதிர்பார்த்தபடி.
எனினும்
நீட்டிய கரங்களுடன் நீங்கள் ஓடிவருமோர் நாளில்
புறந்திரும்பி,
உங்கள் எல்லை கடந்து
வெகுதூரம் சென்றுவிட்டிருந்திருப்பேன்
தேவதைகள் காத்திருப்பதில்லை எவருக்காகவுமே.
(2007-04-27)
Tuesday, May 01, 2007
Subscribe to:
Posts (Atom)
