Monday, December 31, 2007

அரியத்திலுருளும் உணர்வுகள்

பாவமன்னிப்புக் கேட்கவேண்டும் நான்
வலியெடுத்துக் கதறுமோர்
குழந்தையின் குரலில்
செய்தவைக்காகவும்
செய்யாமல் தவிர்த்தவைக்காகவும்
கதைத்தவைக்காகவும்
சமயங்களில்

கதைக்க மறுத்ததற்காகவும்
சுற்றியிருக்கும் அனைவருக்கும்
வெறுப்பினையே பரிசளித்தமைக்காக
பிறர் முதுகில் சுமையிறக்கி
ஆறுதலாக இளைப்பாறியமைக்காக
புன்னகைகளைக் கிழித்தெறிந்து
கருந்திரைகளைத் தொங்கவிட்டமைக்காக
இன்னமும் எனதன்பே,
விரல்கள்
நடுங்க மந்திரக்கோலைக் கைவிடும்
சூனியக்காரியொருத்தியின் பாவனையுடன்
உனதந்தச் சிவப்பு ரோஜாக்களை
வெளிறச் செய்தமைக்காக.

8 comments:

Anonymous said...

புத்த்தாண்டு வாழ்த்துகள் நிவேதா. உங்கள் கவிதைத் தொட்டு செல்வது உண்மை. வார்த்தை கோர்ப்பும் பொருட் செறிவும் அழகு.

செய்தவையும் செய்யத் தவறியவையும், எப்போதும் சந்தோஷப் பொழுதுகளில் நினைவில் வந்து சஞ்சலத்தை தரும்.

சந்திரா

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

//////
சூனியக்காரியொருத்தியின் பாவனையுடன்
உனதந்தச் சிவப்பு ரோஜாக்களை
///////

இந்த உருவகம்-சிவப்பு ரோஜாக்கள்- எதனைப் பற்றியது,கவிதையை முற்றாக உணரும் ஆர்வத்தில் கேட்கிறேன்..

அரியம் என்பது முக்கோணப் பட்டகம்தானே??????

Murali said...

நிவேதா,

தேர்ந்தெடுத்த வார்த்தைகள்.
"விரல்கள்
நடுங்க மந்திரக்கோலைக் கைவிடும்
சூனியக்காரியொருத்தியின் பாவனை" - ரஷ்ய நாடோடி கதைகளில் பார்த்த சூனியக்காரியின் முகத்தை கற்பனை செய்து கொண்டேன்.

தோழமையுடன்,
முரளி

Anonymous said...

அருமையான வார்த்தைகளின் வார்ப்பில் நிறைவாய் ஒரு கவிதை

ஜமாலன் said...

புத்தாண்டிற்கான உணர்வுகளை நுட்பமாக உணர்த்தும் உங்கள் கவிதை வரிகள் அருமை.

சிறந்த வார்த்தைகளில் வடிக்கப்பட்ட அருமையான கவிதை.

வாழ்த்துக்கள்.

நிவேதா/Yalini said...

நன்றி, சந்திரா!

பின்னூட்டத்துக்கு நன்றி, அறிவன்! ஆம், அரியமென்பது முக்கோணப் பட்டகம்தான். இவ்வரிகள் அவரவர்க்குரிய முறையில் தன்னிலை விளக்கத்துக்குட்படக்கூடியவையெனினும், நீங்கள் கேட்பதற்காக, சிவப்பு ரோஜாக்கள் தனிமனித உறவுகளைக் குறிக்குமுகமாகவே என்னால் பயன்படுத்தப்பட்டிருந்தன.

நன்றி, முரளி! இந்தச் சூனியக்காரிகள் எப்போதும் என்னை அதிகம் ஈர்ப்பவர்கள்..:-)

நன்றி, ஜோதிராமலிங்கம்!

நன்றி, ஜமாலன்!

இறக்குவானை நிர்ஷன் said...

//புன்னகைகளைக் கிழித்தெறிந்து
கருந்திரைகளைத் தொங்கவிட்டமைக்காக
//

நன்றாயிருக்கிறது நிவேதா. தொடருங்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றாக வந்துள்ளது; பிடித்திருக்கிறது.