Thursday, November 08, 2007

பிரதிகளை மீளப் பதிதல் - 2

Baudolino
by Umberto Eco


1.

வரலாறு நமக்குத் தேவைதான், ஆனால் அறிவின் தோட்டத்தில் சீரழிந்து, நோக்கமின்றித் திரியும் தறுதலைக்குத் தேவைப்படும் விதத்தில் அல்ல.
- நீட்ஷே (Nietzsche, Of The Use And Abuse Of History)


இந்த வரலாற்று மற்றும் மர்ம நாவல்கள் மீதான மோகம் அக்காவிடமிருந்து தொற்றிக் கொண்டதாயிருக்க வேண்டும். பெரிய பெரிய புத்தகங்களை வாசிக்கப் பழகியிராத வயதுகளில், விழிகளை உருட்டி உருட்டி அக்கா கதைசொல்லும்போது வாய் பிளந்தபடி நானுமொரு கதாபாத்திரமாய் அந்தக் கதைகளுக்குள் வாழ்ந்திருக்கிறேன். அவளொரு சிறந்த கதைசொல்லி. சம்பவங்களை விழிமுன் படமென விரியச் செய்வதிலும், வரைபடங்கள் வரைந்து சமயங்களில் நடித்தும் காட்டுவதிலும் அவளை மிஞ்ச யாருமில்லை. கதை கேட்கும் ஆர்வத்துக்காகவே புத்தகம் வாசித்து முடிக்கும்வரை காத்திருந்து, கதை சொல்லி முடியும்வரை நல்ல பிள்ளையாக சொன்னபடியெல்லாம் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். அதெல்லாம் ஒரு காலம்.

ஒன்பதோ பத்து வயதில் வாசித்த பொன்னியின் செல்வனிலிருந்து வரலாறும் அதன் மர்மங்களும் மிகவும் ஈர்க்கத் தொடங்கின. ஆதித்த கரிகாலனின் கொலை குறித்து அக்காவுடனும், தோழிகளுடனும் மணிக்கணக்காய் விவாதித்துக் கொண்டிருந்ததாய் நினைவு. அதைத் தொடர்ந்து வாசிக்க நேர்ந்த வரலாற்று நாவல்களில் மனதில் இன்னும் நிலைத்திருப்பது Paul Doherty யின் The House of Death - மாவீரன் அலெக்ஸாண்டரினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முற்றுகையைப் பற்றியது. மன்னர்களின் பலவீனங்களை, தகிடுதத்தங்களை அம்பலப்படுத்தும் ஒரு மர்ம வரலாற்று நாவல். மற்றும் சில படங்கள் - ராஜராஜசோழன் வகையறா தமிழ்ப்படங்களல்ல - First Knight, Brave Heart, Troy போன்ற ஹொலிவுட் வணிகப் படங்களும், The Grief of The Yellow River (2ம் உலகமகாயுத்தத்தின் போதான சீனாவைக் கதைக்களமாகக் கொண்டதோர் படம்), Les miserables, Anna and The King போன்ற கொஞ்சம் நடுத்தரப் படங்களும், Europa Europa, Sabiha Sumar ன் Silent Waters, Lumumba போன்ற குறிப்பிடத்தக்கனவும், இன்னும் பெயர் நினைவுக்கு வராத சிலவும் ஏதோவொரு வகையில் வரலாறும் மானுடமும் பற்றிய புரிதலுக்கு வழிவகுத்தன.

இவை அனைத்திலுமிருந்து வரலாறு குறித்த சில முடிவுகளுக்கு வர முடிந்தது:
- மானுட குல வரலாற்று அத்தியாயங்கள் பெரும்பாலும் கறைபடிந்தவை. அல்லது, கறைபடிந்தவை மட்டுமே அழியாக் காவியங்களாக வரலாற்றில் நீங்கா இடம்பிடிக்கின்றன.
ஒன்று மட்டும் புரியவில்லை. எல்லாமே அழிந்து கொண்டிருக்க அழிவு மட்டும் எப்படி அழியாது நிலைத்திருக்கிறது? வரலாற்றின் இந்தக் கறைபடிந்த அத்தியாயங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன? அவை எமக்கு எதைப் போதித்தன? ஆக்கத்தைவிட - மாபெரும் நகரங்களின், நாகரிகங்களின், கணக்கற்ற மானிடவுயிர்களின் - அழிவுதான் புகழ்ந்து போற்றப்படுகிறது; வீரமென்று மதிக்கப்படுகிறது. இந்த 'வீரம்' என்பதன் வரைவிலக்கணம் என்ன? 'அழிவு' என்பதா? அதில் பெருமைப்படுவதற்கும் போற்றப்படுவதற்கும் என்ன இருக்கிறது?

- வரலாறென்பது பாதி புனைவும், மீதி உருட்டுப் புரட்டுகளும் கலந்தது.
இந்தப் பொறுப்பு வரலாற்றாசிரியர்களைச் சார்ந்தது. வரலாறும், கடந்தகாலமும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவையென்கிறார் ஜோன்.எச்.அர்னோல்ட் (History: A Very Short Introduction). வரலாறு கடந்தகாலத்தை முழுமையாக வெளிப்படுத்தாது ஒரு பகுதியை மட்டுமே பிரதிபலிக்கும் அதேவேளை, கடந்தகாலமென்பது எண்ணற்ற ரகசியங்களின் புதைகுழியென வரலாற்றின் எல்லைகளைத் தாண்டியும் விசாலமான வெளியினை நோக்கி விரிந்திருப்பது. அதிகார வர்க்கத்தினரின் நலன்களைச் சார்ந்தவையும், அவற்றுடன் முரண்படாதவையும் மட்டுமே பெரும்பாலும் வரலாற்றில் தொகுக்கப்படுகின்றன. எங்கிருந்தாவது ஒன்றிரண்டு ஈனஸ்வரத்தில் ஒலிக்கும் ஒடுக்கப்பட்ட குரல்களைக் கணக்கிலெடுக்காது பார்த்தால், இன்று எம்மால் வரலாறெனப்படுவது ஒருவகையில் அதிகார வர்க்கத்தினரின் வரலாறு மட்டுமேயெனலாம். அதிலும் திணிக்கப்படுவதும், திரிக்கப்படுவதும் அநேகம். இலங்கையின் வரலாறு இதற்குத் தக்க சான்று.

உம்பர்த்தோ ஈகோவின் Baudolino வினை இவ்வாறு வரலாற்றின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் அதே 'வரலாற்று' நாவலாகக் கொள்ளலாம். இக்கதையினூடாக ஆசிரியர் மத்தியகாலத்து வரலாறென நாம் அறிந்ததை/ நம்பிக் கொண்டிருப்பதைக் கட்டுடைக்கிறார்.


2.


"It's not the truth, but in a great history little truths can be altered so that the greater truth emerges. You must tell the true story of the empire of the Romans, not a little adventure that was born in a far-off swamp, in barbarian lands, among barbarian peoples..."

"It was a beautiful story. Too bad no one will find out about it."

"You surely don't belive you're the only writer of stories in this world. Sooner or later, someone - a greater liar than Baudolino - will tell it."
(pg.521)


பிரதியின் சாராம்சத்தை விளங்கிக்கொள்ள எப்போதும் இறுதிப் பக்கத்திலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது, இதுவே இந்நாவலை இதுவரை வாசித்திராதவர்களின் சுவாரசியத்தை போக்கி விடக்கூடுமென்றாலும்..

1204ம் ஆண்டின் ஏப்ரல் மாதம். பட்டு மற்றும் வாசனைத் திரவியங்களின் பாதையில் (Silk and Spice Route) கேந்திர நிலையமான கொன்ஸ்தாந்து நோபிள் நகரம் 4வது சிலுவைப்போரை முன்னின்று நடத்தும் தளபதிகளால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கீழை ரோமப் பேரரசின் (Byzantine Empire) முக்கிய வரலாற்றாசிரியரொருவரை (Niketas) போர்வீரர்களிடமிருந்து காப்பாற்றும் Baudolino தனது சுய வரலாற்றினை அவரிடம் சொல்லத் தொடங்குகிறான்.

இத்தாலியின் பின்தங்கிய கிராமமொன்றில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த Baudolino வுக்கு இரண்டு அற்புதமான வரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன: ஒன்று, எந்த மொழியினையும் இலகுவில் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல், மற்றையது பொய் சொல்லும் திறமை. சிறு வயதிலேயே இவனது துடிதுடிப்பையும், ஆற்றலையும் கண்டு வியந்து பேரரசர் Frederick Barbarossa அவனைத் தனது வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டு பாரிஸுக்கு அனுப்பி கல்விகற்கச் செய்கிறார்.

இடைநடுவே தனது வளர்ப்புத் தந்தையின் துணைவியாரின் மீது Baudolino காதல் கொள்வதும், சிலுவைப் போர்களும், தனது பிறந்த கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களால் பேரரசருக்கு எதிராகக் கட்டியெழுப்பப்பட்ட நகரமொன்றை அழிக்கவென முற்றுகையிடும் அரசரிடமிருந்து அதனை தனது அசாத்தியத் திறமையால் காப்பாற்றுவதும், அரசரின் பெரு விருப்புக்குரியவனாக விளங்குவதால் வரலாற்றையே புரட்டிப்போடும் வல்லமையை நண்பர்களுடனிணைந்து பரீட்சித்துப் பார்ப்பதுமென நகர்கிறது கதை. இவையனைத்துக்குமிடையில் அரசர் ஜெருசலேம் மீதான படையெடுப்பின்போது வழியில் தற்செயல் விபத்தொன்றில் இறந்துவிட, Baudolino மன்னருக்களித்த வாக்குறுதியின் பேரில் தனது நண்பர்களுடன் Prester John எனும் மதகுருவால் ஆளப்படும் கனவுத் தேசமொன்றைத் தேடி (இந்தியா) கீழை நாடுகளை நோக்கிப் பயணிக்கிறான்.

உயர்ந்த அறிவும், ஞானமும் கொண்ட பெண்கள் மக்களது மத நம்பிக்கையைக் கெடுத்து விடுவார்களென்ற பயத்தில் சூனியக்காரிகளென முத்திரை குத்தப்பட்டு அழிக்கப்பட்டமையும் நாவலில் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு அழிக்கப்பட்ட Hipatia எனும் பெண்ணொருவரின் சிஷ்யைகள் கீழைத்தேசத்துக்கு தப்பியோடி, தமது குருவின் வழிநின்று பெண்களால் மட்டுமேயான சமூகமொன்றைக் கட்டமைத்து வாழ்ந்து வருவதும் ஒரு குறிப்பாக இடம்பெறுகிறது. இனப்பெருக்கத்துக்கு அவர்கள் வேறேதோ creatures ஐ நாடுவதால் தனி மனிதப் பிறவிகளாயல்லாமல், மனிதவுருவமும் இடுப்புக்குக் கீழே ஆட்டினையொத்த உருவத்துடனும் காணப்படுகின்றனர். Prester John ன் தேசத்தைத் தேடிப்போகும் நண்பர்கள் தலைகளற்ற, ஒற்றைக் கால்களுடனான, முழந்தாள் வரை தொங்கும் காதுகளையுடைய மனிதவுருவங்களைக் காண்கின்றனர். அம்மனிதர்கள் வெவ்வேறு நம்பிக்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களாக - சிலர் இயேசு மனிதவுயிராக அவதரித்தாரென்பதை நம்புபவர்களாகவும், சிலர் அதை மறுப்பவர்களாகவும், சிலர் தூய ஆவி வடிவத்தினை மட்டுமே நம்புபவர்களாகவும் - காணப்படுகின்றனர். இந்த மனிதர்கள் மேற்குலகு குறித்த அற்புதக் கனவுகளுடனும், அளப்பரிய ஆர்வத்துடனுமிருப்பதைக் காணும் நண்பர்கள் கீழைத்தேசம் குறித்து தாம் கொண்டிருந்த கனவுகளையும் அதன் இயல்பு நிலையினையும் நினைத்து ஏமாற்றத்துக்குள்ளாகின்றனர்.

பயணம் வெற்றியென்றும், தோல்வியென்றும் கூறமுடியாத நிலையில் முடிந்துவிட, பன்னிரண்டு நண்பர்களில் ஆறுபேரை இழந்து மீதி ஆறுபேர் மட்டுமே ஊர் திரும்ப முடிகிறது. சில சச்சரவுகளால் நண்பர்கள் பிரிய நேர்ந்துவிட்டாலும், Niketas இடம் கதைகூறி முடிந்ததும், தனது சில வாக்குறுதிகளைக் காப்பாற்றும் பொருட்டு தனியொருவனாக Baudolino மீண்டும் கீழை நாடுகளுக்குப் பயணமாகிறான்.

இங்கு Baudolino வின் உள்ளார்ந்த சிக்கல்களையும் குறிப்பிட்டாக வேண்டும். மிகவும் நேசித்த தன் வளர்ப்புத் தந்தையின் மரணத்துக்கு ஒருவகையில் தான் தான் காரணமென்ற உண்மை அவனைப் படுமோசமாக உறுத்தியமையே தந்தைக்காக, மறுபடியும் அந்தக் கனவு தேசத்தினை நாடிப் போவதற்கு அவனைத் தூண்டியதெனலாம். தன்னைப் பெற்றெடுத்த தாய்க்கும், தந்தைக்கும் ஒரு உண்மையான மகனாக அவனால் இருக்க முடியாமற் போனமை, தாய் இறக்கும் தறுவாயில் கூட அவளருகே நிற்க முடியாமற் போனமை தனது கடமையிலிருந்து தவறிவிட்ட குற்றவுணர்ச்சிக்கு அவனை ஆளாக்குகிறது. மறுபுறம் அவனது பிரியத்துக்குரிய பெண்கள் மூவர்: முதலாவது பெண், அவனது வளர்ப்புத் தந்தையின் துணைவி. பதின்மங்களில் ஆரம்பித்த அவள் மீதான மோகம் பின்னர் தந்தைக்கு துரோகம் செய்கிறோமோவென கவலைப்பட வைத்ததில் நீர்த்துப் போனது. அடுத்தவள், அவனது மனைவி. அவனை விட மிகவும் இளையவள். கர்ப்பமுற்றிருக்கும் போது ஒரு விபத்தில் உயிர்துறக்கிறாள். தன்னை முழுமையாக நேசித்த ஒரு பெண்ணுக்கு நல்ல துணைவனாகத் தானிருக்கவில்லையே என்பது இறுதிவரை அவனை வாட்டுகிறது. மூன்றாமவள், கீழைத்தேசத்தில் அவன் கண்ட Hipatia சமூகத்தைச் சேர்ந்தவொரு பெண். அவன் மறுபடியும் கீழைநாடுகளுக்கு பயணிப்பதற்கு அவளும் காரணமாகிறாள்.

இவ்வாறு, அவன் கூறிய கதையில் எது உண்மை எது பொய்யென என குழப்பமடையும் Niketas அவனது வரலாற்றையும் கதையாக எழுத விரும்பி நண்பருடன் உரையாடும் பகுதியே மேற்குறிப்பிட்டது.


3.

மத்தியகாலத்தில் கத்தோலிக்கத் திருச்சபைக்கும், அரசர்களுக்குமிடையே நிலவிய அதிகாரம் சார் போட்டியினை கதையோட்டத்தின் வழி அறிந்து கொள்ளமுடிகிறது. அரசு பற்றிய கோட்பாடுகள் மாறுதலடையத் தொடங்கிய அக்காலகட்டத்தில் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை முன்வைத்து அரசர்களும் திருச்சபையும் முரண்படத் தொடங்கினர். அரச அதிகாரமானது இறைவனிடமிருந்து மன்னனுக்கு நேரடியாக வழங்கப்படுகிறதென மன்னர்கள் எடுத்துக்கூற, அதிகாரம் இறைவனிடமிருந்து திருச்சபைக்கும் திருச்சபையின் வழியே மன்னர்களுக்கும் கடத்தப்படுவதாக திருச்சபையினர் எதிர்க்கருத்தினை முவைக்கலாயினர். இங்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இறைவனுக்கும் தமக்குமிடையிலான நெருக்கத்தினை நிரூபிக்க வேண்டிய தேவையும், கடப்பாடும் மன்னர்களுக்கும், திருச்சபைக்கும் அவசியமாயிற்று. இதற்குச் சிறந்த உபகரணமாகப் பயன்பட்டவை திருச்சின்னங்கள்/ வரலாற்றுச் சின்னங்கள் (Relics). புனிதர்களின் உடலின் பகுதிகளையும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும், இயேசுவுக்குச் சொந்தமானதென நம்பப்பட்ட பொருட்களையும் வைத்திருப்பது அதிகாரத்தைத் தக்க வைத்திருப்பதற்கும், மக்களது நம்பிக்கையைத் தம்பால் இழுப்பதற்கும் இவர்களுக்கு உதவியது (இலங்கை வரலாற்றில் புத்தரின் புனித தந்ததாதுவுக்கு நேர்ந்த அதே கதி). இதன் விளைவாக பல போலிப் பிரதியெடுப்புக்களும் உலாவத் தொடங்கியதுடன், உண்மையான நினைவுச் சின்னத்துக்கும் போலிச் சின்னங்களுக்குமிடையிலான வேறுபாட்டைக் கண்டறிய முடியாதளவு அவை பரவலாகவும் தொடங்கின.

கைப்பற்றப்பற்ற இத்தாலிய நகரமொன்றின் தேவாலயத்திலிருந்து, இயேசு பிறந்தவன்று அவரைச் சந்தித்த மூன்று அறிஞர்களின் பதப்படுத்தப்பட்ட உடல் Baudolino வுக்கு கிடைக்கப் பெறுகிறது. அதை மக்களுக்கு காட்சிப்படுத்தவெனக் கிளம்பும்போது அரசரின் தலைமை மதகுரு தடுத்து, இவ்வுடல்களைப் போர்த்தியிருக்கும் உடைகள் சற்று தராதரம் குறைந்தவையாகக் காணப்படுகின்றனவெனக் கூறியதையடுத்து கீழ்த்திசையிலிருந்து வந்த அந்த அறிஞர்களுக்கு இத்தாலிய தலைமைக் குருமார் (Archbishops) அணியும் ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. இறுதியில் அந்த 'அறிஞர்கள்' கீழை நாடுகளிலிருந்து வந்த கத்தோலிக்க மதகுருக்களாகிப் போகின்றனர்.

இதற்கிடையில் போப்பாண்டவருக்கும் Frederick Barbarossa வுக்குமிடையே கடும் போட்டி உருவாகிறது (இந்தவிடத்தில் கதை சற்றுத் தெளிவாகப் புரியவில்லை. Anti-Pope என இன்னுமொருவர் குறிப்பிடப்படுகிறார். இவரைத் தமது ஏகாதிபத்திய நலன்களுக்கென அரசரது தலைமை மதகுருவே இரகசியமாக நியமித்ததாகவும் கூறப்படுகிறது). போப்பாண்டவரையும் விட மன்னரை அதிகாரம் மிகுந்தவராக எடுத்துக்காட்டும் பொறுப்பு Baudolino விடம் ஒப்படைக்கப்படுகிறது. Baudolino வின் ஆரம்பகால குரு Otto தான் இறக்கும் தறுவாயில், Prester John இன் சாம்ராஜ்யத்தை Frederick கண்டுபிடித்து அந்த மன்னருடன் தொடர்புகொள்வதன் மூலமே அவர் எதிர்பார்க்கும் உயரிய நிலையை அடைய முடியுமெனவும், அதற்கு உதவும்படியும் Baudolino விடம் கூறுகிறார். அப்படியொரு சாம்ராஜ்யம், பொன்னும் மணிகளும் தவழும், பாலாறும் தேனாறும் பெருக்கெடுத்து ஓடும் வளம் பொருந்திய கனவுத் தேசமொன்று மிகத் தொலைவில் கீழைநாடுகளில் காணப்படுகின்றதென்ற நம்பிக்கை, அது இறைவனின் நேரடி வரம் பெற்ற கத்தோலிக்க மதகுரு/ அரசரொருவராலேயே ஆளப்படுகிறதென்ற எண்ணம் மக்களிடையே ஆழமாக வேரூன்றியிருந்தது.

இதை மனதிற்கொண்ட Baudolino தனது நண்பர்களுடனிணைந்து Prester John, Frederick க்கு அனுப்புவதாக ஒரு கடிதமொன்றைத் தயாரிக்கிறான். இக்கடிதம் மன்னருக்கு பெரும் புகழையும், மதிப்பையும் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, ஏனைய அரசர்கள் மத்தியிலும் பெற்றுத்தரக்கூடும். போப்பாண்டவரும் கூட தவிர்க்கவே முடியாமல் மன்னரை மதிக்க வேண்டி நேரிடும். ஆனால், அக்கடிதம் Baudolino வின் கவனயீனத்தினால் பைசாந்திய (Byzantine) உளவாளியொருவரின் கையில் அகப்படுகிறது. அதை உண்மையான கடிதமென அவ்வுளவாளி நம்பியதன் விளைவு, Baudolino வின் கற்பனைத் திறமையில் உருவான அக்கடிதத்தை Frederick பகிரங்கப்படுத்துவதற்கு முன்பே, பைசாந்திய மன்னரிடமிருந்து Prester John தனக்கெழுதியதாக இதே கடிதம் அச்சு அசலாக Frederick க்கிடம் திரும்பி வருகிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீள்வதற்குள், போப்பாண்டவரும் Prester John தனக்கெழுதியதாக ஒரு கடிதத்தைக் காண்பித்து, அதற்குத் தானனுப்பிய பதிலையும் காட்சிப்படுத்துகிறார். அத்தகைய சாம்ராஜ்யமொன்றின் இருப்பே சந்தேகத்திற்காளாகியிருந்த நிலையில், இக்கடிதப் பரிமாற்றம் நிகழ்வது Baudolino வுக்கு பெரும் வேடிக்கையாகத் தோன்றுகிறது.

கடிதமனுப்பும் முயற்சியும் தோல்வியடைந்த நிலையில் மன்னரின் புகழை நிலைநிறுத்தும் பொருட்டு வழி தேடியலையும் நண்பர்களின் கவனத்தையீர்க்கிறது, இறுதி இராப்போசனத்தன்று இயேசு மதுவருந்திய கிண்ணம். அது பாலஸ்தீனிய அரசரொருவரின் வசமிருந்ததாகக் கேள்விப்பட்டு நண்பர்கள் அதைத் தேடத் தொடங்க, Baudolino தனது சொந்தத் தந்தையிடம் அவர் இறக்கும் தறுவாயில் அந்தக் கிண்ணத்தை விவரிக்கிறான். அது ஆயிரம் மணிகளின் ஒளிபொருந்திய பிரகாசத்துடனும், அரிய வாசனைத் திரவியங்களின் நறுமணத்துடனும் திகழுமென இவன் கதைசொல்ல இடைமறித்த அந்தக் கிழக்குடியானவத் தந்தை, ஒரு தச்சனின் மகன் மணிகள் பதிக்கப்பட்ட கிண்ணமொன்றில் மதுவருந்தியதாக எனக்குக் கதை சொல்கிறாயா எனத் திட்டத் தொடங்குகிறார். அந்தவுண்மை அப்போதுதான் உறைக்கிறது அவனுக்கும். தனது தந்தை இறந்த பிற்பாடு அவர் உபயோகித்திருந்த பழைய கிண்ணமொன்றைத் துடைத்தெடுத்து அதுதான் இயேசு பயன்படுத்திய Holy Grasal என்று மன்னர் தொடக்கம் அனைவரையும் நம்பவைத்து விடுகிறான். சிலர் அதிலிருந்து ஆயிரம் சூரியன்களின் ஒளி பரவுவதைக் கண்டதாகவும், அரிய வாசனைத் திரவியங்களின் நறுமணம் கமழ்வதாகவும் கூறித் திரியத் தொடங்கினர். இது அதனை உரியதாக்கியிருந்த மன்னரின் புகழை ஒரேயடியாக உயர்த்தி விடுவதுடன், அரும் பெரும் பொக்கிஷமாக தான் செல்லுமிடமெங்கும் அதனைக் காவிச்செல்லுமளவு மன்னரும் அதை மதிக்கிறார். பிற்காலங்களில் ஏராளம் மனக்கசப்புகளுக்கும், பிரச்சனைகளுக்கும் அக்குடியானவனின் வெறும் கிண்ணமே காரணியாவது வேறுவிடயம்.

Prester John ன் சாம்ராஜ்யத்தைக் கண்டடைய முடியாது திரும்பும் நண்பர்கள் ஊர் திரும்புவதற்கு முதல் பணமும் புகழும் சேர்க்க, திருச்சின்னங்களைத் தாமே உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். தொழுநோயாளியின் முகம் பதித்த துணி, இயேசுவின் திருமுகம் பதித்த திரைச்சீலையாகிறது; கொல்லைப்புறத்தில் கிடக்கும் சாதாரண துருவேறிய ஆணி இயேசுவைச் சிலுவையில் அறைந்த ஆணியாகிறது; இடுகாடொன்றில் தோண்டியெடுக்கப்பட்ட எலும்புத் துண்டு புனிதரொருவரின் உடலின் ஒரு பகுதியாகிறது. கத்தோலிக்க தேவாலயங்களும் உயர் குடும்பத்தினரும் இத்தகைய நினைவுச் சின்னங்களை வாங்குவதற்குப் பெரும் பணத்தினைச் செலவளிக்கத் தயாராகவிருந்த நிலையில் இது செல்வம் கொழிக்கும் வியாபாரமாகத் திகழ்கிறது.

இவையனைத்தும் வரலாற்றுச் சின்னங்களதும், சம்பவங்களதும் நம்பகத்தன்மை குறித்து சிந்தனையைத் தூண்டுவதாக அமைகின்ற நாவலின் சில பகுதிகள் மட்டுமே.


4.

மிக எளிய வார்த்தைகளுள் கூறுவதானால், 'ஒரு பொய்யை நாம் தீவிரமாக நம்பத் தொடங்கும் போது அது உண்மையாகி விடுகிறது' என்பதே இந்நாவலின் தத்துவசாரமென நினைக்கிறேன். கதையின் ஒவ்வொரு சிறுசிறு சம்பவங்களிலும், கதையோட்டத்திலுமே கூட அதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

"Believing a relic true, you catch its scent. We believe that we, only we, need God, but often God needs us. At that moment I believed it was necessary to help him. That cup must truly have existed, if Our Lord had used it. If it had been lost, it had been through the fault of some worthless man. I was restroing the Grasal to Christianity. God would not have contradicted me."
(pg.280)

திருவள்ளுவரும் இதைத்தான் சொல்லிப் போனார் போலும்.

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்

(அதி.292)

ஆனால், தத்துவங்கள் இடம்பார்த்து பிரயோகிக்கப்பட வேண்டியது அவசியம். இது வரலாற்றிலும் பிரயோகிக்கப்படும்போது அதன் விளைவுகள் என்னவாயிருக்கும்? ஆடம்பரமான கற்பனைகளையல்ல, திடமான உண்மைகளுக்கிடையேயுள்ள உறவுகளை முதன்மைப்படுத்துவதே வரலாற்றின் நோக்கமாயிருக்க வேண்டும். இது வரலாற்றாசிரியர்களின் கடமையும் கூட. அதிலிருந்து தவறுமிடத்து, வருங்காலத்தையே ஒரு தவறான பாதையில் வழிநடத்திச் செல்வதைத் தவிர அது சாதிக்கப் போவது வேறொன்றுமில்லை. வரலாறென்பது வெறும் கட்டுக்கதைகளின் மூட்டையெனக் கருதப்படுமிடத்து, வரலாற்று முதல்வாதம் போன்ற அணுகுமுறைகளின்மீதும் ஐயங்கொள்ள வேண்டியதாகிறது. விடயமொன்றன் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் வரலாற்றை அறிந்துகொள்வதன் மூலமே அவ்விடயங் குறித்த தெளிந்த ஆழமான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாமென்ற அரிஸ்டோட்டிலின் கருத்து காலப்போக்கில் காலாவதியாகிவிடுமென்றே தோன்றுகிறது.

12 comments:

சன்னாசி said...

The Name of the Roseல் Jorge of Burgos என்று கதாபாத்திரத்தின் பெயர் வைத்ததிலிருந்து, Kant and the Platypusல் புத்தகம் தொடங்கியபோதான அனுமானத்தைக் குறிப்பிட்டதிலிருந்து, பாதோலினோ எங்கிருந்து கிளைத்ததென்று அறிய, தமிழில் 'வாளின் வடிவம்' என்று மொழிபெயர்க்கப்பட்ட 'The shape of the sword' கதையையும், 'Funes the memorious' கதையையும் படித்துப் பார்க்கவேண்டுமென்று (என் அனுமானத்தினடிப்படையில்) கேட்டுக்கொள்கிறேன்!

தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்) said...

//ஈனஸ்வரத்தில் ஒலிக்கும் ஒடுக்கப்பட்ட குரல்களைக் கணக்கிலெடுக்காது பார்த்தால், இன்று எம்மால் வரலாறெனப்படுவது ஒருவகையில் அதிகார வர்க்கத்தினரின் வரலாறு மட்டுமேயெனலாம். அதிலும் திணிக்கப்படுவதும், திரிக்கப்படுவதும் அநேகம். இலங்கையின் வரலாறு இதற்குத் தக்க சான்று.//

இலங்கையின் வரலாறு என்று எதைச் சொல்கிறீர்கள்? அப்படி 'ஒன்று' இருக்கிறதா என்ன?

நிவேதா/Yalini said...

நன்றி சன்னாசி, தேடிப் பார்க்கிறேன்..

ம்ம்ம்.. வியாபகன், இதுவொரு நல்ல கேள்வி!

Anonymous said...

வரலாறு என்பது அந்தந்தக்கால அதிகார மையங்களின் வலிந்த பார்வையையும் புனைவையும் கொண்டிருக்கின்றது என்பதுபோல, வரலாற்றை எவ்வாறு விளங்கிக்கொள்வதென்ற கேள்விகளும் இருக்கின்றன. உதாரணமாக நீங்கள் மேலே குறிப்பிட்ட யூரோப்பா யூரோப்பா (Europa Europa) நாசிகளின் காலத்தில் யூதர்கள் அனுபவித்த கொடுமையைக் கூறுகின்ற ஒரு படம். இறுதியில் அந்த யூத இளைஞன் பாலஸ்தீனம் போவதாய்ச் சொல்வதோடு படம் முடிகின்றது. ஆனால் இன்றைய பார்வையாளன்/ள் இந்த வரலாற்றை யூதர்கள் பாலஸ்தீனியர்கள் மீது செய்யும் இன்றைய கொடூரத்தினூடாகத்தான் பார்க்கவேண்டியிருக்கின்றது. உடனடியாக அதைத் தவிர்த்து இரண்டாம உலகமகாயுத்தத்திற்கு நேரடியாகப் பாய்ந்துசென்று விடமுடியாது. கெய்டெக்கரோ (Heidegger) அல்லது யாரோ, கடந்தகாலத்தை/வரலாற்றை, நிகழ்காலத்திலிருந்து பார்ப்பதன் போதாமையை ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார்; ஒரு சரித்திரக் கால கல்லைக் கண்டுபிடிக்கும்போது நாம் அதை எப்படி விளங்கிக்கொளோம் என்றால், இன்றைய காலத்தில் அதன் பயன்/செயற்பாட்டை வைத்துத்தான் விளங்கிக்கொள்வோம். ஆனால அதே கல் சில நூற்றாண்டுகளுக்கு முன் வேறு பல பயன்களை/பார்வைகளைக் கொண்டிருக்கலாம். எனவே எமது எந்தப் பார்வையும் ஒரு முழுமையானதாக இருக்கமுடியாது என்றமாதிரி விவாதிக்கப்பட்டிருக்கும். இதையேன் குறிப்ப்டுகின்றேன் என்றால், வரலாறு குறித்த முழுமையான பார்வை சாத்தியப்படுமா? என்ற வினாதான் நன்றி.

மு. மயூரன் said...

நிவேதா,

புனைவிலக்கியத்துடன் பெரிதாகப் பரிச்சயமில்லாமையால் நூல் குறித்து என்னால் உரையாட முடியவில்லை.

வரலாறு பற்றிய உரையாடல் நிகழ்வதால்,

வரலாற்றினை முற்றாக மறுதலிக்கும் சிந்தனைப்போக்கொன்றும் வரலாற்றினூடே வளர்ந்து வருகிறது.

வரலாறு மனிதகுலத்துக்கு , அல்லது மனிதக்கூட்டமொன்றுக்கு எந்த வகையிலாவது தேவை என்று நீங்கள் கருதுகிறீர்களா?

அல்லது, வரலாற்றின் தேவைகள் பற்றிய விவாதத்தைவிட, வெறும் "புனைசுருட்டுக்களாக" உள்ள வரலாற்றை ஒரேயடியாக மறுத்துவிடுவது மனிதரை அதிகாரங்களிலிருந்து விடுவிக்கும் செயன்முறைகளில் ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறீர்களா?

//விடயமொன்றன் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் வரலாற்றை அறிந்துகொள்வதன் மூலமே அவ்விடயங் குறித்த தெளிந்த ஆழமான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாமென்ற அரிஸ்டோட்டிலின் கருத்து காலப்போக்கில் காலாவதியாகிவிடுமென்றே தோன்றுகிறது.//

இப்படிச்சொல்வது வரலாற்றின் இருப்பையும் தேவையையும் முற்றாக மறுதலிக்கும் கருத்துநிலையினின்று வருவதாக எடுத்துக்கொள்ளலாமா?

நிவேதா/Yalini said...

நன்றி, டிசே!

கடந்தகாலத்தை முழுமையாகப் புரிந்துகொள்தல் எந்தக் கட்டத்திலும் சாத்தியமில்லையென்னும் ஜோன்.எச்.அர்னோல்ட்டின் கருத்தைத்தான் உங்கள் கேள்விக்குப் பதிலாக என்னால் பதிவு செய்ய முடிகிறது. வரலாற்றாசிரியர்கள் அது சாத்தியமென்று கருதி முயற்சித்தும் வந்தனர். ஆனால், எவரும் அதில் வெற்றியடைந்தார்களா என்று தெரியவில்லை. இன்று, நாம் புரிந்துகொள்ளும் வரலாறென்பது வரலாற்றாசிரியர்களால் எமக்கு முன்மொழியப்பட்டதுதான். அதன் உண்மை, பொய் குறித்தே ஐயங்கொள்ளும் நிலையிருக்க, கடந்தகாலத்தை - நிகழ்காலத்தின் பாதிப்புக்களிலிருந்து விடுபட்டு - கடந்தகாலமாகவே (மட்டுமே) பார்க்கும் முழுமையான புரிதல் சாத்தியமாகுமென்று தோன்றவில்லை.

யூத, பாலஸ்தீன பிரச்சனையை நோக்கின், இங்குதான் கடந்தகாலம் எதைக் கற்றுத்தந்ததென்ற கேள்வியும் எழுகிறது.

நன்றி, மயூரன்!

எனதிந்தப் பதிவும், அதிலெழுப்பப்பட்டிருந்த அனைத்துக் கேள்விகளும், சந்தேகங்களும் முழுக்க முழுக்க புனைவுவெளியைச் சார்ந்ததென்பதைக் கவனத்திற்கொண்டு..,

உங்கள் கேள்விகளுக்கு கீழிருந்து மேலாக வருகிறேன்..

3.
வரலாற்றின் இருப்பையும், தேவையையும் முற்றாக மறுதலிக்கிறேன் என்று அர்த்தமில்லை. இங்கு நீங்கள் 'வரலாறு' என்று எதை அர்த்தப்படுத்திக் கொள்கிறீர்களென்பதுதான் விடயம். நீங்கள் கடந்தகாலத்தைக் குறிப்பிடுகிறீர்களென்று நினைக்கிறேன். இந்தப் பதிவில் வரலாறெனும் பதத்தை அர்னால்ட்டின் விளக்கத்துக்கேற்ப, வரலாற்றாக்கத்தின் வழியுருவான ஒன்றைக் குறிப்பிடுவதற்காகவே பயன்படுத்தியிருந்தேனேயொழிய, கடந்தகாலத்தைக் குறிப்பிடும் எண்ணத்திலல்ல. இக்குழப்பம் நேருமென்று எதிர்பார்த்தமையினாலேயே வரலாறு - கடந்தகாலம் ஆகிய பதங்களுக்கிடையிலான தொடர்பையும் முரணையும் பதிவின் ஆரம்பத்திலேயே கூறிவிட்டிருந்தேன்.

வரலாறென்பது கடந்தகாலத்தையும், வரலாற்றாசிரியர்கள் கடந்தகாலம் பற்றி எழுதுவதையும் இரண்டையுமே குறித்து நிற்கிறது. வரலாற்றாக்கமென்பது வரலாற்றை எழுதும் செயற்பாடு அல்லது அச்செயற்பாட்டைப் பற்றிய ஆய்வு. வரலாற்றை எழுதும் செயற்பாட்டினால்/ வரலாற்றாக்கத்தினால் உருவாக்கப்படும் ஒன்றே இங்கு வரலாறென எடுத்தாளப்பட்டிருக்கிறது.

வரலாற்றை ஐயத்துடன் அணுகுதல் எனும் கருத்தை ழான் போதின் முன்வைக்கிறார். இங்கு நான் காலாவதியாகிவிடுமென சந்தேகங்கொண்டிருப்பது இந்த எழுதப்பட்ட வரலாற்றையே. பதினாறாம் நூற்றாண்டுவரை வரலாறென்பது அதை எழுதுபவர்களின் தேவைக்கேற்ப புனைவாகவோ, முன்முடிவுகளைச் சார்ந்ததாகவோதான் இருந்து வந்திருக்கிறது.

'வரலாற்றாசிரியர் எலி தின்று மிஞ்சிய பழைய ஆவணங்களைக் குவித்து வைத்துக்கொண்டு, தன்னைத்தானே வரலாற்றின் அதிகாரியாக நியமித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய மாபெரும் அதிகாரம் புகழ்பெற்ற கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்டது'
- Sir Philip Sidney

இந்தக் கட்டத்தில்தான் கடந்தகால வரலாற்றாசிரியர்கள், அவர்களுடைய நோக்கங்கள், முறைகள், முன்முடிவுகள் அனைத்தையும் ஒரு வாசகர் சந்தேகபூர்வமாக அணுகவேண்டுமென்றார் போதின். இந்தப் பதிவில் நான் முனைந்ததும் அதனையேயொழிய கடந்தகாலத்தை மறுப்பது என் நோக்கமல்ல.

1.
மற்றும்படி, கடந்தகாலத்தின் தேவையென்பது நிர்த்தாட்சண்யமானது. அதனை முற்றாக மறுதலிப்போமானால் எமது இன்றைய இருப்பை எப்படி நிறுவுவது? ஆனால், வரலாறுகளின் துணையின்றி கடந்தகாலத்தை எப்படிப் புரிந்து கொள்வதென்ற கேள்வியும் எழுகிறது. நானும் கேள்விகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பவள்தான், மயூரன்.

2.
வெறும் புனைசுருட்டுகளாலான வரலாற்றை ஒரேயடியாக மறுத்துவிடுவது 'மட்டுமே' அதிகாரங்களிலிருந்து எம்மை விடுவிக்குமென்றில்லை; ஆனால், அதுவும் 'விடுவிக்கலாம்' என்று தோன்றுகிறது. குறைந்தபட்சம் அதிகாரக் குவிமையங்களின் நலன்களை, தேவைகளை, இலக்குகளை அடையாளங் காண்பதற்காகவேனும் வரலாறு உதவக்கூடுமென்பதையும் இங்கு மறுக்க முடியாது. எங்கோ வாசித்த கவிதையொன்று நினைவுக்கு வருகிறது..

'தெரியும்,/ உங்கள் சரித்திரங்களில்/ எங்களுக்கு இடமில்லை/ ஆனாலும் படிப்போம்/ உங்கள் அழுகல்களை/ பாவங்களை/ மறைக்கப்பட்ட உண்மைகளைக் காண,/ நிம்மதிகொள்ள.'

இன்றைய காலகட்டத்தில் வரலாற்றின் (வரலாற்றாக்கத்தின்) பயன் இதுவாய்த்தானிருக்க வேண்டும்.

மறுபடியும் குறிப்பிட விரும்புவது,

'வரலாறு நமக்குத் தேவைதான், ஆனால் அறிவின் தோட்டத்தில் சீரழிந்து, நோக்கமின்றித் திரியும் தறுதலைக்குத் தேவைப்படும் விதத்தில் அல்ல.'

மேலதிக வாசிப்புக்கு:
வரலாறு: மிகச் சுருக்கமான அறிமுகம்
- ஜோன்.எச்.அர்னால்ட் (தமிழில் - பிரேம்)

வரலாறு: காலமும் கலையும்
- வால்ட்டர் பெஞ்சமின் (தமிழில் - வி.நடராஜ், எம்.கண்ணன்)

மு. மயூரன் said...

பரிந்துரைத்திருக்கும் நூற்களுக்கு மிகவும் நன்றி நிவேதா. பெற்றுப்படிக்க முயல்கிறேன்.

வரலாறு குறித்து "நீட்ஷே" என்ன சொல்கிறார் என்பதில் எனக்கு பெரிதான அக்கறைகள் ஏதுமில்லை. வரலாற்றை நீங்கள் மறுதலிக்கச்சொல்லும் தர்க்க நியாயங்களூடே நீட்ஷேபோன்றவர்களின் மெய்யியலையும் சுயநலங்களையும் என்னால் ஒரேயடியாக மறுத்துவிடமுடியும்.

வரலாறாக எவையெல்லாம் வடிகட்டபட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு எமக்குப் பரிமாறப்படுகிறது என்பதில்தான் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.

வரலாறு குறித்து நீங்கள் எடுத்துக்காட்டும் சிந்தனைகளும் அவ்வாறானவையே. அவரவர் நலன்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிமாறப்படுபவை.

"பொய்யான வரலாறு" "வரலாற்றுத்திரிப்பு" போன்ற சொற்களும் குற்றச்சாட்டுக்களும் மேற்கின் சிந்தனையாளர்கள் சொல்லித்தான், எம்மை வந்தடைய வேண்டும் என்றில்லை தானே? எங்கள் நாட்டின் சாதாரண தமிழ் மக்களுக்குக்கூட்ட இந்த சொற்களின் அர்த்தம் தெரியும்.

எமது தேசியப்போராட்டத்தின், தேசிய அடையாளத்தின் தவிர்க்கமுடியாத கூறாக வராலாறும்தான் இருக்கிறது.

எமக்கெதிராக வராற்றாக்கத்தின் வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. அதற்கெதிராக, ஒரு போர்முறையாக நாமும் வரலாற்றைக்கையிலெடுத்து எமது வாழ்வினைத்தேடுகிறோம்.

இங்கே ஒரு வன்முறைக்கெதிரான போர்வடிவமாக வரலாறு கையிலெடுக்கப்படுகிறது.

இந்தப்பதிவிலெங்கும் விரவியிருக்கும் "வரலாற்றாக்கத்தின்" மீதான குற்றச்சாட்டுக்கள், தனிநபர்க் கதைகளூடான வரலற்றைச்சொல்வது பற்றியதுதான் என்று நினைக்கிறேன்.

வரலாறென்பது தனிநபர்க்கதைகள் அல்லவே. வரலாற்று என்பது மக்களின் வரலாறு. மக்களின் வரலாற்று அசைவியக்கத்தினை, சமன்பாடுகளை (அப்படி ஒன்று இருந்தால்) விளங்கிக்கொள்வதற்கான கற்கை.

அந்த வகையில் வரலாறு மிக அழுத்தமானதொரு பங்கினை அரசியலில் ஆற்ற முடியும்.

வரலாற்றை மறுதலிப்பதென்பது சிலருக்குச் சாதகமானது. அவர்கள் வரலாற்றை மறுதலிக்கச்சொல்லும் மெய்யியலை ஊதிப்பெருக்குவர்.

1. தம்மால் கொன்றொழிகப்பட்ட பழங்குடிகளை உலகின் வரலாற்றிலிருந்து மறைத்துவிட ஆசைப்படுபவர்கள்.

2. ஹிட்லரை விட பல மடங்கு பயங்கரமான ஏகாதிபத்தியத்தை பாசிசத்தை காலனித்துவம் என்ற பெயரில் உலகெங்கும் கட்டவிழ்த்துவிட்ட தமது அயோக்கியத்தனத்தை மறைக்க முற்படுபவர்கள்.

3. தாம் வரலாற்றினூடே செய்துவரும் ஏமாற்றுக்களையும் பித்தலாட்டங்களையும் கண்டுபிடித்து வரலாறாக்கி மக்களை விழிக்க வைப்பவர்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளவேண்டியிருப்பவர்கள்.

இவர்கள் அனைவருக்கும் வரலாற்றை மறுதலிக்கக்கோரும் தத்துவஞானம் உவப்பானது.

இவர்களின் கையிலேயே இன்று நாம் எதைப்படிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்து வழங்கும் அதிகாரம் குவிந்திருக்கிறது.

இன்று மாணவர்கள் கற்கும் தத்துவஞானம், எதை மாணவர்கள் இன்று "பேசுவதுகூட இல்லை" (ஒரு பதிவில் உங்கள் ஐரோப்பிய நண்பி சொன்னதாக சொல்லியிருந்தீர்கள்) எல்லாம் அவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது.

சமூகமாற்றத்தில் அழுத்தமான பங்காற்றக்கூடிய தெளிவான மக்கள் வரலாற்றின் ஆய்வுமுறையை எழுந்தமானமாக மறுதலிக்கும் நிலைக்கு இத்தகைய சுயநல மெய்யியல் போக்குகள் உங்களைப்போன்றவர்களை கொண்டுபோய் விட்டுவிடக்கூடாது.

வரலறென்பது அதிகாரத்தினது ஆயுதம். அதேநேரம் வரலாறென்பது மக்களின் , ஒடுக்கப்படுபவர்களின் அழுத்தமான அரசியலாயுதம்.

இரண்டும் வரலாற்றின் முரண்பாடான பக்கங்கள். ஆனால் இரண்டும் உண்மை.
இந்த முரண்பாட்டை "அப்படியே" ஏற்றுக்கொள்வதும், அதன்படி, வரலாற்றை ஆயுதமாக்க வேண்டிய இடங்களில் ஆயுதமாக்குதலும் கட்டுடைக்க வேண்டிய இடங்களில் கட்டுடைக்கவும் தெரிந்துகொள்ள வேண்டும்.

அரிஸ்டோட்டிலின் கூற்றை அப்படியே காலாவதியாகிவிடும் என்று ஒதுக்குவது, அனைத்தினதும் முப்பரிமாணத்தை பார்க்கப்பழகவேண்டும் என்று வலியுறுத்தும் புதிய மெய்யியற்போக்குகளை அறியவிழையும் உங்களைப்போன்றவர்களால் செய்யப்படும்போது ஆச்சரியமே மிஞ்சுகிறது.

soorya said...

இந்த வரலாறு பற்றிய ஆய்வுகளுக்கு நாம் என்ன முறைமைகளைப் பாவிக்கிறோம்??
அரிஸ்டோட்டில் காலத்திலிருந்து முளைவிட்ட தொகுத்தறி அனுமானத்தையே இன்றும் பயன் படுத்துகிறோம்.
சேர் கார்ள் பொப்பர் என்பவரின் விஞ்ஞானமுறைமை பற்றிய கதையாடல்கள் எனக்கு சில வெளிச்சங்களைக் கோடிட்டன.அது பற்றியும் இங்கே பேசலாம்.
நீட்சேயின் சாட்டை போன்ற வரிகள் என்றுமே அதன் தளத்தில் வைத்து இரசிக்கக்கூடியவை. நல்ல படைப்பையும்..நல்ல சிந்தனைகளையும் தந்தமைக்கு நன்றி......!

வளர்மதி said...

தற்செயலாகவே தங்களது இப்பதிவை வாசிக்க நேர்ந்தது.

வலைப் பதிவுகளில் இப்படியொரு ஆழமான கட்டுரையை வாசிக்க நேர்ந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் :)

இப்பதிவு குறித்து சிலவற்றை விரைவில் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உம்பர்டோ ஈகோவின் ஃபூக்கோஸ் பென்டுலம் மற்றும் சில மொழிபெயர்ப்பு கதைகளைக் கொஞ்சம் படித்த ஞாபகம்....

காத்திரமான கட்டுரை. சிந்திக்க / அசை போட கட்டுரையிலும் பின்னூட்டங்களிலும் நிறைய விஷயங்களிருக்கின்றன. நன்றி.

நிவேதா/Yalini said...

பின்னூட்டத்துக்கு நன்றி, மயூரன்!

விரிவாய் பதிலெழுத விருப்பமிருந்தாலும், அதற்கான நேரமோ மனநிலையோ இப்போதைக்கில்லை. மன்னிக்கவும். ஏற்கனவே அம்மாவிடம், ரோம் நகரம் எரிய பிடில் வாசித்த நீரோ போல என பேச்சு வாங்கிக் கொண்டிருக்கிறேன்..:-(

நன்றி சூர்யா,

கார்ல் பொப்பரின் பொய்ப்பித்தல் கோட்பாடு போன்றவை இன்றைய சூழலில் எந்தளவுதூரம் வாய்ப்பானதாக அமையுமென்று தெரியவில்லை. இருந்தாலும் வரலாறு பற்றிய ஆய்வுகளுக்கு அரிஸ்டோட்டிலின் உய்த்தறி முறையும் கூட பெருமளவில் பங்காற்றியிருக்கிறதென்றே நினைக்கிறேன்.

நன்றி வளர்மதி,

உங்களது பின்னூட்டத்தை எனது பதிவில் காண நேர்ந்தது, மிகவும் சந்தோஷம். எதிர்பாராததும் கூட..:-)

பின்னூட்டத்துக்கு நன்றி, ஜ்யோவ்ராம் சுந்தர்!

ஜமாலன் said...

நிவேதா...

தாமதமான பின்னோட்டம். படித்த அன்றே இதனை எழுதியருக்கலாம் அதற்குள் ஏடாகூடமாக சில மதம்சார்ந்த விவாதங்களில் போய் மாட்டிக் கொண்டேன்.

//இன்று, நாம் புரிந்துகொள்ளும் வரலாறென்பது வரலாற்றாசிரியர்களால் எமக்கு முன்மொழியப்பட்டதுதான். அதன் உண்மை, பொய் குறித்தே ஐயங்கொள்ளும் நிலையிருக்க, கடந்தகாலத்தை - நிகழ்காலத்தின் பாதிப்புக்களிலிருந்து விடுபட்டு - கடந்தகாலமாகவே (மட்டுமே) பார்க்கும் முழுமையான புரிதல் சாத்தியமாகுமென்று தோன்றவில்லை.//

புதுவரலாற்றுவாத அடிப்படைகளைக் கொண்ட வரலாறு குறித்த உங்கள் பார்வையில் எனது உடன்பாட்டை தெரிவிக்கவே இந்த பின்னோட்டம். வரலாறு என்பதும் ஒரு புனைவுதான். ஏடுத்துரைப்பின் அரசியல் என்பது அதில் செயல்படுவதால் வரலாற்றை கள்ளமற்ற நிகழ்வுகளின் தொகுப்பாக காணமுடியாது. இன்றைக்கான மொழியே வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படை. கடந்தகாலம் இன்றைய மொழியால் இன்றைக்கான அரசியலாகவே வாசிக்கப்படுகிறது. நுட்பமாக இது இன்றைய புனைவாக மாறிவிடுகிறது. அல்லது வரலாற்றுப் புனைவாக மாறிவிடுகிறது அவ்வளவே.