Tuesday, July 24, 2007

முன்பனிக்காலத்துப் பிரியங்கள்

செஞ்சொண்டுக் காகமொன்றன்
நிலம் பதியா நிழல்போல
அலைவுண்டபடியிருக்கும்,
ஒரேயொரு நினைவு மட்டும் எனக்குள்..
அழித்துவிட முடியாததும் நித்தியமானதுமாய்..
சிவனொளிபாதத்தின் உச்சியில் நின்றபடி
சூரியோதயத்தின் முதல் கிரணத்தின்
ஸ்பரிசத்தை ரசிக்கும் பரவசத்துடனும்..,
விளிம்பில் நின்றுகொண்டு
ஆழ்கிணற்றினுள் எட்டிப்பார்ப்பதான
கலவரம் நிறைந்த ஆர்வத்துடனும்..


இந்தக்கணத்தில் உலகின் எங்காவதோர் மூலையில் கணனிக்கு முன் அமர்ந்திருந்து நீங்கள் இதனை வாசித்துக் கொண்டிருக்கக் கூடும்.., கையில் தேநீர்க் கோப்பையுடனோ.. நொறுக்குத் தீனியுடனோ. மிகச் சில காலம் மட்டுமேயான இவ்வுலகத்து வாழ்தலில் ஒவ்வொரு கணமும், கணத்தின் கணமும் அளப்பரிய பெறுமதி வாய்ந்தவை. விரல் சொடுக்குமொரு நொடிப்பொழுதில் என்னவும் நடந்துவிடலாம்.. அம்மாவின் விரலைப் பிடித்துக்கொண்டு துள்ளிநடந்த சிறுவன், கண்மூடித் திறப்பதற்குள் வாகனமொன்றில் சிக்கி நடுத்தெருவில் வீழ்ந்து கிடக்கலாம்.. புகழ்பெற்ற ஓட்ட வீராங்கனையொருத்தி ஒரு செக்கன் வித்தியாசத்தில் தோற்றுப் போகலாம்.. தற்செயலாக வெளிப்பட்ட ஒற்றை வார்த்தையின் காரணமாக நெடுங்கால உறவுகளும் முறிந்திடலாம்..

அந்தக்கணத்தை.., கடந்துபோன துர்ப்பாக்கியமான அந்தப் பொழுதை மறுபடியொருமுறை திருப்பித் தரும்படி, காலச்சக்கரத்தை ஒரேயொரு கணம் பின்னோக்கிச் சுழற்றும்படி நம்முள் எத்தனைபேர், எத்தனை தடவை கடவுளிடம் இறைஞ்சியிருப்போம்..

ஓ.எல் லில் வணிகக்கல்வி கற்பித்த ஆசிரியை கணவருடனான மனத்தாங்கலில் ஒன்பது மாதக் கர்ப்பிணியாய் தற்கொலை செய்துகொண்ட போது, கணவர் தனது மனைவிக்காக ஒரு சில நிமிடங்கள் செலவளித்திருந்தால் அதைத் தடுத்திருந்திருக்கலாமென இப்போதும் தோன்றுவதுண்டு. சுகமில்லாமல் படுத்திருக்கும் அம்மாவுக்கு, 'என்னம்மா பண்ணுது' என்ற எமது ஒற்றை வார்த்தை வேதனைகளனைத்தையும் போக்கியிருந்திருக்கும். பாராட்டுவது, நன்றிகூறுவது, மன்னிப்புக் கேட்பதென இதுபோன்ற இன்னமும் சிறு சிறு விஷயங்களில்தான் வாழ்தலின் அழகு தங்கியிருக்கிறது போலும். அவற்றை விடுத்து, தத்தமது ஈகோவைப் பாதுகாக்கும் தீவிர முயற்சியில் வாழ்வினதும், அதனை உயிர்ப்புள்ளதாக்கும் உறவுகளினதும் மகத்துவங்களைப் புரிந்துவிடத் தவறிக்கொண்டிருக்கிறோம்..

.........

எமது சந்திப்பு மிக மிகத் தற்செயலானதுதான். எழுதவென முடிவெடுத்த அந்தக் கணத்தினைத் தவறவிட்டிருந்திருப்பேனாயின் என்றென்றைக்குமாய் அவனையும் தொலைத்திருந்திருப்பேன். உலகின் ஒரு கோடியில் அவனும், மறுகோடியில் நானுமென எமது அன்றாட அலைக்கழிதல்களுக்குள் மூழ்கியிருந்திருப்போம், எதுவிதக் கரிசனைகளுமற்று. வாழ்வென்பதே ஒரு மிகப்பெரிய அதிசயம்தான்.. எப்படி அது மனிதர்களை இணைத்தும், பிரித்தும் வேடிக்கை பார்க்கிறது.. எந்தவொரு உயிராலும் பிறனிருக்கத் தான் தனித்து வாழ்தல் இயலாததாயிருக்க.., அரியமொன்றினுள் புளியங்கொட்டைகளையும், குண்டுமணிகளையும் போட்டு உருட்டி உருட்டி விதவிதமான வடிவங்கள் தோன்றுவதையும், சிறு சலனத்தின்போதும் மறைந்து இன்னொன்று தோன்றுவதையும் வாய்பிளந்து ரசிப்பது போல, வாழ்வு மனிதர்களை இணைப்பதையும், இமைப்பொழுதில் காததூரம் விலத்தி விடுவதையும் அதே லயத்துடன் ரசிக்க முடியாததாயிருப்பதும் ஏன் ?

கடல் கடந்த வாழ்வின் சிரமங்களுக்கு மத்தியில் ஈழத்து நினைவுகளுடனும், கடந்தகாலத்தின் காயங்களுடனும் எஞ்சியிருக்கும் உயிர்ப்புடன் மனிதர்களை ஆழ்ந்து நேசிக்க நிபந்தனைகள் தேவைப்படுவதில்லை அவனுக்கு.. மனிதர்கள் விசித்திரமானவர்கள். எவருடனும் நெருங்கிப் பழக முன்னரே அவரைப்பற்றிய விம்பங்களை மனதில் வளர்த்துக்கொள்ளத் தொடங்கி விடுவார்கள். பின்னர் பின்னரான பொழுதுகளில் நெருங்கிப் பழக சந்தர்ப்பம் வாய்த்தாலும், அந்த விம்பம் இடையிடையே குறுக்கிட்டு தொந்தரவுபடுத்தும். சமயங்களில் 'விம்பத்துடன் மட்டுமே வாழ்தல் மேல்' எனவும் தோன்றும். இறுதியில், விம்பமும் யதார்த்தமும் முரண்படுகிற புள்ளியில் விரிசல் வெடித்து வாக்குவாதம் முற்றி, நூலறுந்த பட்டமென உறவும் காற்றிலலையத் தொடங்கிவிடும். பிறகென்ன.., கண், காது, மூக்கு முளைத்த கதைகளும் அவலரைத்தல்களும் 'ஏனடா, இந்த மனுச சகவாசம்' என்ற நிலைக்கு இட்டுக்கொண்டுவந்துவிடும். அதையும் தாண்டி, மனிதர்களை அவரவரது இயல்புகளுடன் - அவனைப்போல எவராலும் - நேசிக்க முடிதல் அதிசயம்தான்.

நான் சொல்வது மட்டும்தான் சரி.. உனக்கென்ன தெரியுமென்ற தோரணையுடன் 'கொம்பு முளைத்த ஆம்பிளை' களுக்கு மத்தியில், என்னையும் சக மனுஷியாய் மதித்து அவன் கதைக்க முற்பட்டதுதான் பெரும் ஆறுதலாகவிருந்தது. வேறெவரும் என்னைக் கதைக்க வைக்க இத்தனை முயன்றதாய் நினைவில்லை. ஒவ்வொரு சின்னச் சின்ன விடயத்திலும் நான் என்ன நினைக்கிறேன், என் கருத்தென்ன.. பார்வையென்னவென்பது குறித்து இந்தளவு எவரும் அக்கறை கொண்டதாயும் நினைவில்லை. எனக்குள்ளே இறுகிக்கிடந்த சுயத்தை, மெல்ல மெல்ல மௌனத்தின் கண்ணாடித் திரைகளை உடைத்து நொறுக்கி வெளிக்கொணர முடிந்தது அவனுக்கு. இத்தனை 'வளவளா' க்காரியா நான், என ஒருகட்டத்தில் என்னாலேயே நம்பமுடியாமல் போனது. நீண்டகாலமாக எவருடனும் மனந்திறந்து பேசாததையெல்லாம் சேர்த்துவைத்து அவனுடன் பேசுகிறேனாக்குமென நினைத்துக் கொள்வதுதான்.

..........

மரணம் கருநிழலென உன்னைப் பின் தொடர்கிறதென்கிறாய்.. பிறந்த நாளிலிருந்து, செம்மண் ஒழுங்கைகளெங்கும் பூனையாய் மெல்ல அடியெடுத்து அது உன்னைத் துரத்திக் கொண்டிருக்க, பிரக்ஞையற்றவளாய் இங்கேயமர்ந்து எதுவும் எழுதிக்கொண்டிருப்பதும் அபத்தமெனத் தோன்றுகிறது.

நீயின்றி பூரணமடையப் போவதில்லை
எனது எந்த இருப்பும்
எல்லாப் பொழுதுகளிலும்
உனக்காகவே உன்னோடே
காலங்களின் விறைத்த கணங்களினூடு
நானும் உயிர்த்திருப்பேன்
குட்டி அலிஸாய்
உன் மனக்காடுகளில் துள்ளியோட
போதாது இப்பிறவி ஒருசிறிதும்...

(தொலைதூரத் தோழனுக்கு வாழ்த்துக்களுடன்..)

9 comments:

காயத்ரி சித்தார்த் said...

உங்கள் கவிதைகளின் காதலி நான். இந்தகணம் உங்கள் பதிவு படித்து மெய்சிலிர்த்தது.. பிரமிப்பாயிருக்கிறது.. வேறென்ன சொல்ல?

தமிழ் said...

அந்தக்கணத்தை.., கடந்துபோன துர்ப்பாக்கியமான அந்தப் பொழுதை மறுபடியொருமுறை திருப்பித் தரும்படி, காலச்சக்கரத்தை ஒரேயொரு கணம் பின்னோக்கிச் சுழற்றும்படி நம்முள் எத்தனைபேர், எத்தனை தடவை கடவுளிடம் இறைஞ்சியிருப்போம்..

ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை

தமிழ்நதி said...

"அந்தக்கணத்தை.., கடந்துபோன துர்ப்பாக்கியமான அந்தப் பொழுதை மறுபடியொருமுறை திருப்பித் தரும்படி, காலச்சக்கரத்தை ஒரேயொரு கணம் பின்னோக்கிச் சுழற்றும்படி நம்முள் எத்தனைபேர், எத்தனை தடவை கடவுளிடம் இறைஞ்சியிருப்போம்.."

நிவேதா!நானும் பல தடவைகள் அப்படி நினைத்திருக்கிறேன்... கடவுளிடம் இறைஞ்சியிருக்கிறேன். எம்மை இழந்து சம்பந்தப்பட்டவர்கள் முன் மண்டியிடுவதா என்ற 'ஈகோ'வினால் அந்த உறவுகளை மீளிணைக்க முடியாது போயிற்று. எப்போதாவது நேரம் வாய்க்கும்போது 'மன்னிக்கப்படாதவளின் நாட்குறிப்பு'என்றொரு கவிதை எனது பக்கத்தில் உள்ளது. தயவுசெய்து அதை வாசியுங்கள். நன்றி.

Anonymous said...

பேரிரைச்சல் கொள்ளும் மழையைப்போல பெருகிக்கொண்டிருக்கின்றன பாவங்கள்' என்று எப்போதோ எழுதியது... உங்களது பதிவின் சில பகுதிகளை வாசிக்கும்போது நினைவுக்கு வருகின்றது. பிரியமான மனிதர்கள் என்றால், இயன்றளவு அவர்களோடு சமரசம் செய்து உறவுகளை மீளப்புதுப்பிக்கவே பலரும் விரும்புவார்கள். எனினும் நேரடியாகப் பிரச்சினைகளைப் பேசத் தயங்குபவர்களையும், மெளனங்களால் தங்களை நியாயப்படுத்திக்கொள்பவர்களையும் எப்படிப் புரிந்துகொள்வதென்ற கேள்வியும் உண்டு. அவரவர் நியாயம் அவரவர்க்கே என்று விளங்கிக்கொண்டு -கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற அடர்ந்த காடு தாண்டிய நெடும்பயணம் உண்டென நினைத்து- அவர்களையும் கடந்துபோகவேண்டியதுதான்.

செல்வநாயகி said...

நிவேதா,

கனகாலமாய்க் காணாது போயிருந்த உங்கள் எழுத்து நான் அதைத் தேடத்துவங்க எத்தனிக்குமொருபொழுதில் வந்துசேர்ந்திருக்கிறது சரியாய்.

////பாராட்டுவது, நன்றிகூறுவது, மன்னிப்புக் கேட்பதென இதுபோன்ற இன்னமும் சிறு சிறு விஷயங்களில்தான் வாழ்தலின் அழகு தங்கியிருக்கிறது போலும். அவற்றை விடுத்து, தத்தமது ஈகோவைப் பாதுகாக்கும் தீவிர முயற்சியில் வாழ்வினதும், அதனை உயிர்ப்புள்ளதாக்கும் உறவுகளினதும் மகத்துவங்களைப் புரிந்துவிடத் தவறிக்கொண்டிருக்கிறோம்../////

///கடல் கடந்த வாழ்வின் சிரமங்களுக்கு மத்தியில் ஈழத்து நினைவுகளுடனும், கடந்தகாலத்தின் காயங்களுடனும் எஞ்சியிருக்கும் உயிர்ப்புடன் மனிதர்களை ஆழ்ந்து நேசிக்க நிபந்தனைகள் தேவைப்படுவதில்லை அவனுக்கு///

///இறுதியில், விம்பமும் யதார்த்தமும் முரண்படுகிற புள்ளியில் விரிசல் வெடித்து வாக்குவாதம் முற்றி, நூலறுந்த பட்டமென உறவும் காற்றிலலையத் தொடங்கிவிடும். பிறகென்ன.., கண், காது, மூக்கு முளைத்த கதைகளும் அவலரைத்தல்களும் 'ஏனடா, இந்த மனுச சகவாசம்' என்ற நிலைக்கு இட்டுக்கொண்டுவந்துவிடும். அதையும் தாண்டி, மனிதர்களை அவரவரது இயல்புகளுடன் - அவனைப்போல எவராலும் - நேசிக்க முடிதல் அதிசயம்தான்.////




இந்த வரிகள் எல்லாம் சொல்லும் பொருள்கள் அதிகம். படிக்குமொரு கணத்தில் அதை வியந்தும், அதில் நெகிழ்ந்தும் போய்விட்டு அடுத்தநாளே ஒரு அற்பக் காரணத்திற்காய் மனிதர்களைத் துவேசிக்கப் பழகிய சமூகம் நாம். ஆனாலும் மொத்தமாய்க் கதவுகள் எங்கும் மூடப்படவில்லைதான். சில இதயங்களின் கசிந்துருகும் அன்பு பிசுபிசுப்பாய் ஒட்டிக்கொண்டுதானிருக்கின்றன காட்டிலொரு மரத்தில் யாரும் காணாதபோதிலும் பிசின் வடிவதைப்போல.

நிவேதா/Yalini said...

காயத்ரி, திகழ்மிளிர்.. பின்னூட்டங்களுக்கு நன்றி!

நன்றி, தமிழ்நதி. உங்கள் அந்தக்கவிதையை எழுதப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே வாசித்து விட்டேனென நினைக்கிறேன்.. பின்னர், மன்னிப்புவேண்டி நீண்ட கடிதமொன்று அனுப்பியதாகவும் நினைவு. இன்றுவரை அதற்கான மறுமொழி கிடைக்கப் பெறாததால் - உங்களுக்கு விருப்பமில்லையோ எனக் கருதி - மேலும் தொந்தரவு கொடுக்க விரும்பாமல் நானும் ஒதுங்கியே இருந்துவிட்டேன். சமயங்களில், யார்.. யாரை மன்னிப்பதென்ற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடிவதில்லை. பின்னூட்டத்துக்கு நன்றி!

//பேரிரைச்சல் கொள்ளும் மழையைப்போல பெருகிக்கொண்டிருக்கின்றன பாவங்கள் //

உண்மைதான் டிசே. உங்கள் கவிதைகளில் என்னை மிகக் கவர்ந்த வரிகளுளொன்றிது. கடக்கவேண்டிய பாதை நெடுந்தொலைவு நீண்டிருக்க, பாவங்களும் நீண்டுகொண்டே வருகின்றன. ம்ம்ம்... மனிதவுணர்வுகள் மர்மமானவை.. கடந்துபோக வேண்டியதுதான் அனைத்தையுமே..

நன்றி, செல்வநாயகி!

//காட்டிலொரு மரத்தில் யாரும் காணாதபோதிலும் பிசின் வடிவதைப்போல//

மிக அழகான உவமானம்.. ஒரு முழுப்பதிவில் எழுதப்பட்டிருந்ததை சில வார்த்தைகளுக்குள் சுருக்கி விட்டீர்களே..:-)

மாயா said...

மிக நன்றாயிருக்கிறது , , ,

நிவேதா/Yalini said...

நன்றி, மாயா!

Oorsutri said...

புளியங்கொட்டைகளையும், குண்டுமணிகளையும் போட்டு உருட்டி உருட்டி விதவிதமான வடிவங்கள் தோன்றுவதையும், சிறு சலனத்தின்போதும் மறைந்து இன்னொன்று தோன்றுவதையும் வாய்பிளந்து ரசிப்பது போல, வாழ்வு மனிதர்களை இணைப்பதையும், இமைப்பொழுதில் காததூரம் விலத்தி விடுவதையும் அதே லயத்துடன் ரசிக்க முடியாததாயிருப்பதும் ஏன் ?

இந்த வரிகள் மிக பிடித்திருக்கிறது.... வாழ்க்கை நம்மை எவ்வாறு புரட்டி போடுகிறது என்பதை அழகாக எழுதி இருக்கிறீர்கள் அருமை .