Monday, June 04, 2007

நேசத்துக்குரியவர்களை நெகிழ்வுடன் அசைபோடுதல்

உன்னுடனான சில நிமிட உரையாடலே போதுமானதாயிருக்கிறது.., உலகத்துக் கவலைகளை மறக்க; மறுபடியுமொருமுறை புத்துயிர் பெற்றெழ. உனது அன்புக் கட்டளையின்படி நேற்றிரவு, வேண்டாத விடயங்களில் மனது அலைபாய்வதைத் தடுத்து மனதுக்குப் பிடித்த விடயங்களையே நினைப்பதென்ற தீர்மானத்துடன் படுக்கையில் சாய்ந்தேன்.

மனதுக்குப் பிடித்தது...? வேறென்னவாக இருக்கமுடியும் உன் நினைவுகளைத்தவிர. இறுதியாக என்ன பேசிக்கொண்டிருந்தோம்... ம்ம்ம்... பெரியார்.. மதம்.. மார்க்ஸியம். விவாதிப்பதற்கு அருமையான விடயங்களில்லையா.. இவை குறித்து உன்னுடன் இன்னும் எவ்வளவோ கலந்துரையாட வேண்டியிருக்கிறது; என் அரைகுறை அறிதல்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனது நம்பிக்கையீனங்களையும்.., எனக்கான கொள்கைகளை வகுப்பதில் தாக்கம் செலுத்திய நிர்ப்பந்தங்களையும்.., எனது நம்பிக்கைகள் எங்கே தொலைந்து போயினவென்பதையும்.. உன்னுடன் பகிர்ந்துகொள்ளத் துடிக்கிறது மனம். உனது நம்பிக்கைகளை நோக்குமிடத்தும்.., உன் அப்பாவைப்பற்றி நீ கூறியவற்றைக் கேட்டவிடத்தும் என் நிலைப்பாடுகளும் என்றேனுமொருகால் இப்படித் தடம்புரளுமாவென்ற கலக்கம்... அல்லது அப்படியேதும் நிகழ்ந்தால் இன்னும் நிம்மதியாய் உணர்வேனோவென்ற நப்பாசை... என்னவெல்லாமோ தோன்றுகின்றது.

நானும் ஒருகாலத்தில் இத்தகைய நம்பிக்கைகளோடு வாழ்ந்தவள்தான். முருகன்... சைவசமயம் கற்றுத்தந்த கடவுளரில் என்னை மிகவும் கவர்ந்தவன். இன்றைக்கு சில வருடங்களுக்கு முன்பு அவனையொத்த வயதுகளில் நானுமிருந்தபடியாலோ என்னமோ... ஒரு தோழனாய் என் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள முடிந்தது அவனோடு. கார்த்திகேயன்... அவனது பெயர்களில் மிகப் பிடித்தது.. நெஞ்சுகொள்ளாப் பிரியத்துடன் 'கார்த்தி' என்றே அவனை விளித்திருக்கின்றேன் (இந்தத் தாக்கத்தில்தான் என் நாட்குறிப்பிற்கும் கார்த்தி என்றே பெயரிட்டு.. இன்றுவரை அப்படித்தான்.. கார்த்தியோடு உரையாடுவதாய்த்தான் நாட்குறிப்பு எழுதிவருகிறேன்). மனம் கனத்துப் போகும் போதெல்லாம் அவனது படமொன்றினை வைத்துக்கொண்டு மணிக்கணக்காய் அவனுடன் உரையாடியிருக்கிறேன். ஒருபோதும் 'பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.. அது வேண்டும்.. இது வேண்டும்..' என்று எதுவும் கேட்டுக்கொண்டதில்லை அவனிடம். இது தந்தால்.. அது தருவேனென என் அன்பினை/பக்தியை ஒருபோதும் வியாபாரமாக்கியதுமில்லை. நான் வேண்டியதெல்லாம், 'நீ எப்போதும் என்னுடனேயே இருக்க வேண்டும்.. என் ஒவ்வொரு இன்பத்திலும் துன்பத்திலும்... ஏற்றத்தாழ்வுகளிலும் ஒரு ஆறுதலாக நீ இருக்கவேண்டும்..' என்பதுதான். அவனும் இருந்தான்... உலகம் எனை வஞ்சித்துவிட்டதாய் உணர்ந்து மனமுடைந்து அழுதபோதெல்லாம், 'யாமிருக்க பயமேன்..?' என்று கூறிச்சென்றான்.. அசட்டுக் குழந்தையே என்று அடிக்கடி என்னைக் கடிந்தும் கொண்டான்.

ஏன் இந்த நம்பிக்கையெல்லாம் சடுதியாகக் கைநழுவிப் போயிற்று..? சடங்குகள், ஒழுக்க ஆசாரங்கள், மரபு வழிவந்த (மூட) நம்பிக்கைகளை எந்தக்காலத்திலும் நான் ஏற்றுக்கொண்டதில்லையெனினும் ஏன் கடவுளரை வெறுக்க ஆரம்பித்தேன், நான்..?

வியாபாரமாகிப்போன பக்தி... தரகர்களாக மாறிப்போன பூசாரிகள்... கேலிக்கூத்தாய்ப்போன கிரியைகள்... மேலும் இந்தத் தெய்வ புத்திரர்கள்... கடவுளரின் மைந்தர்களாய்த் தம்மை அடையாளங்காட்டிக் கொள்பவர்களில் ஒருத்தியாய் - வெட்கித்தலைகுனிந்து - நானுமிருக்கக் கூடாதென்ற வீறாப்பில்தான் அவர்களைத் தூக்கியெறிந்தேன். இந்த மதமும், அதன் பாதுகாவலர்களும் என் பெண்மையை அவமதித்தபோது.., பெண்ணென்ற ஒரே காரணத்திற்காய் எத்தனையோ சந்தர்ப்பங்களில் என்னைப் புறக்கணித்தபோது... வெறியும் திமிரும் கிளர்ந்தெழ... என்னை மதிக்காத எதையும், எவரையும் நானும் மதிக்கப்போவதில்லையென முடிவெடுத்து இவர்களின் போலி அரிதாரங்களை அலட்சியப்படுத்தத் தொடங்கினேன். இந்த இந்த நாட்களில் என்னை நெருங்காதே என்று எந்த இறைவன் வந்து சொல்லிப் போனானாம் இவர்களிடம்..?! இறைவர்களை விடுங்கள்.. இறைவியரைக்கூட நெருங்க வேண்டாமாம்... அநியாயமாயில்லை.. அபத்தமாயில்லை..?? நான் மிக மிகப் புனிதமானதாக மதிக்கும் தாய்மையை இவ்வுலகத்தின் சிருஷ்டிகர்த்தாக்களாகக் கூறிக்கொள்ளும் சக்திகளே அவமதிக்கும்போது நான் மட்டுமேன் அவர்களை மதிக்க வேண்டும்..

மார்க்ஸியம் பற்றிய எனது அறிவு மிக மிகச் சொற்பமானதுதானென்றாலும், அந்தச் சொற்பத்திற்குள்ளும் ஆயிரத்தெட்டு முரண்பாடுகளை என்னால் அடையாளங்கண்டுகொள்ள முடிந்ததாலும்... - கம்யூனிஸமும் ஆணாதிக்கவழிச் சிந்தனையின் மற்றுமொரு வடிவமே.. என்னதான் சமத்துவம்பற்றி வலியுறுத்திக் கூறினாலும் பெண்கள் தொடர்பான ஆணாதிக்கமுறைமைச் சமுதாயத்தின் நிலைப்பாடுகளுக்கு முரணாகவோ, பாலினச் சமத்துவம் பற்றியோ அது அதிக கரிசனை காட்டவில்லை - இவர்களது மற்றுமொரு உழுத்துப்போன தத்துவக் கழிவுகளுள் ஒன்றாகத்தான் மார்க்ஸியத்தையும் கருதினேனென்றபோதும்... மனித சுயவுணர்வே உண்மையான, உயர்ந்த கடவுளென்று கூறிய மார்க்ஸ் என்ற தனிமனிதர் என்னை மிகவும் ஈர்த்ததும் இந்தக் காலங்களில்தான்.

மானுட இயலுமைகளுக்கும், புரிதலுக்கும் அப்பாற்பட்ட அமானுஷ்ய சக்தியொன்று இருப்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்தான் என்றாலும், அவ்வமானுஷ்ய சக்தி/ பரப்பிரம்மம் ஒரு சமுத்திரமென்றால்... அதில் நானும் ஒரு சிறுதுளி... நீயும் ஒரு சிறு துளி... அவனும்.. அனைவரும். இப்படி எத்தனையோ துளிகள் ஒன்றிணைந்துதான் ஒரு சமுத்திரம் உருவாகின்றதென்ற புரிதல் ஏற்படும்போது... அதன்பிறகும் எவரையும் வெறுக்கவோ, அலட்சியப்படுத்தவோ எம்மால் முடியப்போவதில்லை.

மனித இனத்தைக் கூறுபோடவும், ஒருசாராரை தீட்டு.. அந்த இந்தப் பணியாரங்களென்ற பெயரில் ஒதுக்கி வைக்கவும் வழிசெய்த மதங்களை/ கடவுளரை விடவும்... 'மனிதனே மனிதனுக்குக் கடவுளென்றால் மனிதனை இழிவுபடுத்துகின்ற.., அடிமைப்படுத்துகின்ற.., புறக்கணிக்கிற.., கைவிடுகின்ற.. எல்லா உறவுகளும் தூக்கியெறியப்பட வேண்டும்..' என்றுகூறிய மார்க்ஸ் எனும் மாமனிதருக்கு... சக மனிதரை நேசிக்கவும், மதிக்கவும் கற்றுத்தந்த அந்த அற்புதமான ஆளுமைக்குத் தலைவணங்குகின்றேன்.

நீ கூறியதுபோல மொஸ்கோவில் மழைபெய்கின்றதென்றவுடன் இங்கே குடைபிடிக்கின்ற அரைவேக்காடுகள், அவரையும் அவரது சிந்தனைகளையும் கொச்சைப்படுத்துவதாகவே தோன்றுகின்றது, எனக்கு. மார்க்ஸ் மதங்களை அவற்றின் இயல்பான பலவீனங்கள் காரணமாக மறுத்திருக்கலாம்.. ஆனால், ஒருபோதும் அவர் மதங்களைத் தூக்கியெறிய முயலவில்லை. 'மதம் ஒடுக்கப்பட்ட உயிரின் பெருமூச்சு, இதயமற்ற உலகத்தின் இதயம், அது உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சி..' என்ற தெளிவு இருந்திருக்கிறது அவருக்கு.

(தமிழ் மொழிபெயர்ப்பு அவ்வளவு வாய்க்கவில்லைதான் என்றாலும்) மார்க்ஸின் கவிதைகளில் கைவசமிருந்தவை..:

நான் கெட்டவனல்ல, நல்லவனுமல்ல;
என்னிடம் வேகமில்லை, சுணக்கமுமில்லை
நான் நேற்று முன்னே சென்றால்,
நான் இன்று பின்னால் செல்வேன்.
ஒளிமிக்க மதவாதி நான்
பெண்குதிரையல்ல, ஆண் குதிரையுமல்ல;
sophocles, சாட்டை இருவருமே
என்னுடைய எழுச்சியின் ஊற்றுக்கள்

....................................

கான்ட்டும் Fichte யும் தொலைதூரத்திலுள்ள
உலகத்தைத் தேடி வானில் பறக்கிறார்கள்;
நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன்
அதைத் தெருவில் கண்டெடுக்கிறேன்

.....................................

என்னுடைய ஆன்மாவின் கருத்து வெறியை
என்னால் ஒருபோதும் அமைதிப்படுத்த இயலவில்லை
எதையும் நான் சுலபமென்று நினைக்கவில்லை
நான் ஓய்வில்லாமல் முன்னேற வேண்டும்
கடவுள்கள் அருளும் ஆசிகளை
அனைத்தையும் பெற நான் முயற்சிப்பேன்,
ஆழத்திலுள்ள அனைத்து அறிவைப் பெறுவேன்,
கவிதைக் கலையின் ஆழத்தைத் தொடுவேன்
எனவே நாம் எல்லாவற்றையும் இழக்கத் தயாராவோம்.

13 comments:

அற்புதன் said...

வணக்கம் நிவேதா ,

//ஆனால், ஒருபோதும் அவர் மதங்களைத் தூக்கியெறிய முயலவில்லை. 'மதம் ஒடுக்கப்பட்ட உயிரின் பெருமூச்சு, இதயமற்ற உலகத்தின் இதயம், அது உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சி..' என்ற தெளிவு இருந்திருக்கிறது அவருக்கு//

என்று சொல்கிறீர்கள் ஆனால் நான் அறிந்தவரை மாக்ஸ் 'மதம் ஒரு அபினி' எனவே கூறி உள்ளார்.

(“Religion is an opiate of the masses”)

உங்கள் மேற்கூறிய கூற்றிற்கான மூலாதாரம் எங்கு இருக்கிறது அதன் சுட்டியைத் தர முடியுமா?

இந்தச் சுட்டியில் இப்படி எழுதி இருக்கிறார்கள்.

http://atheism.about.com/od/philosophyofreligion/a/marx_4.htm

//According to Marx, religion can only be understood in relation to other social systems and the economic structures of society. In fact, religion is only dependent upon economics, nothing else — so much so that the actual religious doctrines are almost irrelevant.

This is a functionalist interpretation of religion: understanding religion is dependent upon what social purpose religion itself serves, not the content of its beliefs.

Marx’s opinion is that religion is an illusion that provides reasons and excuses to keep society functioning just as it is. //

மு. மயூரன் said...

//இறுதியாக என்ன பேசிக்கொண்டிருந்தோம்... ம்ம்ம்... பெரியார்.. மதம்.. மார்க்ஸியம். விவாதிப்பதற்கு அருமையான விடயங்களில்லையா.. இவை குறித்து உன்னுடன் இன்னும் எவ்வளவோ கலந்துரையாட வேண்டியிருக்கிறது;//

என்னையும் என் நேசத்துக்குரியவர்களை அசைபோட வைத்தது இந்தப்பதிவு.

கருத்தியல் திணிப்புக்களும் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற அச்சம், எனக்குத்தெரிந்த என்னால் முடிந்த வழிகளில் செப்பனிடப்பட்ட பாதையினை போட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற கடமையுணர்வு எனும் கத்திமேல் நடக்கும் உரையாடல்களை நிறைந்த நேஅத்துடன் செய்த உரையாடல்கள் அவை.

அடுத்தடுத்த படிநிலைகள், அடுத்தகட்ட உறவுகள், ஒப்பீட்டளவில் உயர்ந்த மனிதர்களை சந்திக்கும் போது ஏணிகளும் தோணிகளும் எட்டியுதைக்கப்படுவது இயல்புதானே?

இறந்து போன என் பழைய உறவொன்றை அசை போடவைத்தமைக்கு நன்றி

மு. மயூரன் said...
This comment has been removed by the author.
அற்புதன் said...

//''Religious distress is at the same time the expression of real distress and the protest against real distress. Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, just as it is the spirit of a spiritless situation. It is the opium of the people.

The abolition of religion as the illusory happiness of the people is required for their real happiness. The demand to give up the illusion about its condition is the demand to give up a condition which needs illusions.''

This is often misunderstood, perhaps because the full passage is rarely used: the boldface in the above is my own, showing what is usually quoted. The italics are in the original. In some ways, the quote is presented dishonestly because saying “Religion is the sigh of the oppressed creature...” leaves out that it is also the “heart of a heartless world.” This is more a critique of society that has become heartless and is even a partial validation of religion that it tries to become its heart. In spite of his obvious dislike of and anger towards religion, Marx did not make religion the primary enemy of workers and communists. Had Marx regarded religion as a more serious enemy, he would have devoted more time to it.

Marx is saying that religion is meant to create illusory fantasies for the poor. Economic realities prevent them from finding true happiness in this life, so religion tells them this is OK because they will find true happiness in the next life. Marx is not entirely without sympathy: people are in distress and religion does provide solace, just as people who are physically injured receive relief from opiate-based drugs.

The problem is that opiates fail to fix a physical injury — you only forget your pain and suffering. This can be fine, but only if you are also trying to solve the underlying causes of the pain. Similarly, religion does not fix the underlying causes of people’s pain and suffering — instead, it helps them forget why they are suffering and causes them to look forward to an imaginary future when the pain will cease instead of working to change circumstances now. Even worse, this “drug” is being administered by the oppressors who are responsible for the pain and suffering. //

மேல் உள்ள பந்தியில் விளக்கிய படி மாக்ஸ் கூறியவற்றில் இருந்து ஒரு சில வசனங்களை மட்டுமே மேற்கோள் காட்டினால் அவர் கூற வந்ததன் முழு அர்த்தமும் முற்று முழுதாகவே மாற்றப்படும்.இதனாலையே உங்களிடம் 'அவர் ஒரு போதும் மதங்களைத் தூக்கி எறியச் சொல்லவில்லை' என்கிற கருத்து ஏற்பட்டிருக்கலாம்.எனக்கு விளங்கிய அளவில், சமூகத்தில் இருக்கும் துன்பங்கள் துயரங்களுக்கு மதம் ஒரு மாயமான வடிகாலாக இருக்கிறது.அது இதயம் இல்லாத சமூகத்திடம் இதயம் இருப்பதாக பாவனை செய்கிறது.ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்ற பாகுபாடுகளை அப்படியே இருக்க வைக்கிறது.அதனாலையே அவர் மதத்தை ஒரு அபினி என்றார்.அதாவது மனிதனின் துன்பங்கள் துயரங்களை மறக்கடித்து அவனை நிரந்தரமான் போதையில் ,மாயமான உலகத்தில் வைத்திருக்கிறது என்றார்.போதைகளைத் துறந்து மனிதன் அநீதிகளுக்கு எதிராகாப் போராட வேண்டும் என்றார்.அவர் மதத்தைத் தூக்கி எறியச் சொல்லவில்லை என்பது முற்றிலும் பிழையான் வியாக்கியானம் என்றே எனக்குப் படுகிறது.மதம் சமூகத்தின் கேடுகளையே பிரதிபலிக்கிறது என்றார்.மதத்தை,போதையைத் தூக்கி எறியாமல் மக்கள் விழுப்புணர்வு பெற்று போராட முடியாது.

இளங்கோ-டிசே said...

நிவேதா & அற்புதன்:
இந்தக்கட்டுரையோடும், அற்புதனின் கேள்வியோடும் தொடர்புடைய பகுதியொன்றை காலம் நேற்று வெளியிடப்பட்ட சிவத்தம்பி பவளவிழா (+ தாசீயஸ்) சிறப்பிதழில் வாசித்திருந்தேன். ஜெயமோகன் சிவத்தம்பி குறித்து எழுதிய கட்டுரையொன்றிலுள்ள பகுதி அற்புதனின் கேள்விக்கு சிலவேளைகளில் பதிலளிக்கூடும் என்பதால்...கீழே:

....இதைத் தொடர்ந்து மார்க்ஸின் புகழ்பெற்ற மேற்கோளை எடுத்துத் தருகிறார் சிவத்தம்பி. 'நம்மில் பலர் எண்ணுவது போல மார்க்ஸியம் மதத்தை முழுமையாக நிராகரிப்பதில்லை' என்று கூறி ' தன் ஆற்றலை முழுதாகக் கண்டுகொள்ளாத அல்லது இழந்துவிட்ட மனிதனது சுய உணர்வும் சுயப் பிரக்ஞையுமே மதம்...' என்று மார்க்ஸின் மேற்கோளைத் தொடங்குகிறார். மார்க்ஸின் நோக்கம் மதத்தை நிராகரிப்பதல்ல. அதன் வரலாற்றுப் பாத்திரத்தை புரிந்துகொள்வதும் வகுப்பதுமேயாகும் என்பதை விளக்குகிறார். 'அது மனிதசாரத்தின் எல்லையில்லா கற்பனை சார்ந்த வெளிப்பாட்டு நிலை. மதம் சார்ந்த துயரம் உண்மையான துயரத்தின் வெளிப்பாடு, உண்மையான துயரத்திற்கு எதிரான எதிர்ப்பும் கூட மதம் ஒடுக்கப்பட்ட உயிரின் பெருமூச்சு. அது எவ்வாறு ஆன்மாவற்ற ஒன்றின் ஆன்மாவாக அமைகிறதோ அவ்வண்ணம் இதயமற்ற உயிரின் இதயமாக அமைகிறது' என்ற மேற்கோளின் முடிவில்தான் புகழ்பெற்ற ஒற்றை வாக்கியமான 'மதம் மக்களுக்கு அபின்' என்ற வரி வருகிறது. இந்த வரியை மட்டும் பிரித்தெடுத்து மார்க்ஸை புரிந்துகொள்வது அபாயமானது என்று எச்சரிக்கும் சிவத்தம்பி, மூலத்தில் மார்க்ஸ் opiate (போதைத்தன்மையுடையது) என்றுதான் கூறியிருக்கிறாரேயொழிய இன்று வழங்கும் கொச்சைத்தனமான பொருளில் அல்ல என்று வலியுறுத்துகிறார்.
(ப 125, காலம் 28&29 இதழ்)

அற்புதன் said...

டிசே விளக்கத்திற்கும் சிவத்தம்பியின் மேற் கோளுக்கும்(?) நன்றி.

இங்கே எனது கேள்வி மார்க்ஸ் போதைத் தன்மையான மதத்தில் மனிதர்கள் திழைத்து இருக்கச் சொன்னாரா அல்லது அதில் இருந்து வெளியேறி உண்மையான மானிட விடுதலையை நிகழ்த்தச் சொன்னாரா என்பதே.இங்கே மதம் என்பது இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தும் ஒரு மாயையான கற்பிதம் என்பதே மார்க்சின் முழுமையான கூற்றில் இருந்து நான் விளங்கிக் கொள்வது.மதம் உருவாவதற்கான காரணம் பற்றியோ அதன் இருப்பிற்கான தேவை பற்றியதோ அன்று எனது கேள்வி. மதத்தை மார்க்ஸ் அங்கீகரித்தார் என்பதன் பின்னால் இருக்கும் அர்த்தம் தான் என்ன? வலியால் கஸ்ட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவன் போதைப் பொருட்களை உட் கொள்ளுவதால் வலி தீர்ந்து விடும் தான், அதற்காக மார்க்ஸ் வலிகளுக்கான நிவாரணி மதம் என்னும் அபின் என அங்கீரித்தாரா?வலிக்கான அடிப்படைக் காரணத்தைக் குணப்படுத்தாமல், வலியின் கொடுமையை மறைக்கும் மதம் என்னும் அபினை பரிந்துரைக்க முடியுமா? இது வலியையும் அதற்கு மூலகாரணமான நோயையும் தொடர்ந்தும் பேண அல்லவா உதவுகிறது? இது எவ்வகையில் நியாயமானது?மார்க்ஸ் மதம் உருவாவதற்கான சூழலை, அந்தச் சூழலில் உளரும் மனிதர்களுக்கு அதற்கான தேவையை ஏற்றுக் கொண்டாரே ஒழிய, மனித அவலங்களுக்கு மதங்களே தீர்வு எங்கிற அர்த்ததில் மதத்தை அங்கீரிக்கவில்லை.மதத்திற்கான தேவையை உருவாக்கிய அந்தச் சூழலை மாற்றவே அவர் கோரினார்.அவ்வாறான மாற்றம் நிகழும் போது ,மதத்திற்கான தேவையும் அற்று விடும்.

Anonymous said...

அற்புதன் சொல்வதே உண்மை. மார்க்ஸ் எப்போதுமே மதங்களைத் தூக்கிப் பிடிக்கவில்லை.

நிவேதா வரலாற்றை ஒருமுறை அறிவுக் கண்களுடன் ஆராயுங்கள். அரைகுறையாக எழுதாதீர்கள். இல்லையெனில் நீங்களும் மொஸ்கோவில் மழை பெய்தால் இங்கு குடை பிடிக்கும் அரைவேக்காட்டுக்காரர்களுடன் சேர்க்கப்பட்டு விடுவீர்கள்.

இளங்கோ-டிசே said...

அற்புதன், நீங்கள் ஆங்கிலத்தில் எடுத்துப்போட்ட கட்டுரையில் முக்கியமான பகுதியைத் தவறவிட்டுவிட்டீர்களோ (அல்லது மறைத்தீர்களோ :-) ) தெரியாது.
Marx’s most famous statement about religion comes from a critique of Hegel’s Philosophy of Law:

Religious distress is at the same time the expression of real distress and the protest against real distress. Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, just as it is the spirit of a spiritless situation. It is the opium of the people.

The abolition of religion as the illusory happiness of the people is required for their real happiness. The demand to give up the illusion about its condition is the demand to give up a condition which needs illusions.
This is often misunderstood, perhaps because the full passage is rarely used: the boldface in the above is my own, showing what is usually quoted. The italics are in the original. In some ways, the quote is presented dishonestly because saying “Religion is the sigh of the oppressed creature...” leaves out that it is also the “heart of a heartless world.” This is more a critique of society that has become heartless and is even a partial validation of religion that it tries to become its heart. In spite of his obvious dislike of and anger towards religion, Marx did not make religion the primary enemy of workers and communists. Had Marx regarded religion as a more serious enemy, he would have devoted more time to it.

அந்தக் கட்டுரையில் கூறப்பட்ட, இந்தப்பகுதியைத் தான் நான் சிவத்தம்பியின் தமிழாகத்திலிருந்து எடுத்து உபயோகித்தேன்.

/Religious distress is at the same time the expression of real distress and the protest against real distress. Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, just as it is the spirit of a spiritless situation. It is the opium of the people./

நீங்கள் உதவிக்கு அழைத்த கட்டுரையாளரே, 'In spite of his obvious dislike of and anger towards religion, Marx did not make religion the primary enemy of workers and communists. Had Marx regarded religion as a more serious enemy, he would have devoted more time to it.' என்கிறார்.

இதைத்தான் வேறொரு வாசிப்பில் சிவத்தம்பியும், //மார்க்ஸின் நோக்கம் மதத்தை நிராகரிப்பதல்ல. அதன் வரலாற்றுப் பாத்திரத்தை புரிந்துகொள்வதும் வகுப்பதுமேயாகும் என்பதை விளக்குகிறார்./ என ஜெயமோகனும் கூறுகின்றார். மேலும் மதம் நமது அனைத்துச் செயற்பாட்டுகளிலும் இரண்டறக்கலந்திருக்கும்போது, 'மதத்தின வரலாற்றுப் பாத்திரத்தை' முதலில் புரிந்துகொள்வது அவசியமாகும். அவ்வாறு புரிந்துகொள்வதிலிருந்துதான் மதத்தை நாம நிராகரிக்கமுடியுமே தவிர, 'மதம ஒரு அபின்' என்ற ஒற்றைச் சொல்லில் மார்க்ஸை அமுக்கி எல்லாவற்றையும் உடனே நிராகரித்தல் யதார்த்ததில் சாத்தியமும் இல்லை.
.....
மார்க்ஸின் எடுகோளிலிருந்து மதத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை புரிந்துகொள்ள முயலும் ஒருவன்/ஒருத்தி -முக்கியமாய்- நமது தமிழ்ச்சூழலில் மதத்தை நிராகரிக்கவே செய்வார். ஆனால் மார்க்ஸ் மத்தை நிராகரிக்கச் சொன்னார் என்ற ஒற்றை வார்த்தைக்குள் எழுந்தமானமாய் அடக்குவது ஆபத்தாக முடியும். நூற்றாண்டு காலமாய் மதத்திலும் (சாதியிலும்) ஊறித்திளைத்திருக்கும் மக்கள் கூட்டத்தின் சிந்தனைகளை 'மதம் ஒரு அபின்' என்ற மார்க்ஸின் ஒற்றைச் சொல்லாடலால் அசைக்கமுடியாது. மத்ததின் வரலாற்றுப் பாத்திரத்தை விளங்கிக்கொளக் என்ற மார்க்ஸைக் கைக்காட்டுவதுன் மூலம் அவரகள் தமது இறுதியான புரிதல்களை -மதம் ஒரு அபின் -வந்தடையட்டும் என்று அமைதியாக இருப்பதே மார்க்ஸிற்கு நாம் செய்யும் நன்றியாகவும் இருக்கும். இவ்வாறு முடிந்த முடிவுகளால் உரையாடும் சந்தர்ப்பங்களாலேயே ஒரு பெரும் சனத்திரளை மார்க்ஸிடம் வந்தடையச் செய்யாமல் தடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்பது காலம் நமக்குக் கற்பித்துக்கொண்டிருக்கும் பாடங்கள்.

நமது சூழலில் வளமான சித்தர் பரம்பரை இருக்கிறது. அதை இன்று மதம் தனக்குள் உள்வாங்கிகொண்டு இருக்கிறது.. அப்படியெனின் மதம் ஒரு அபின் என்று மார்க்ஸ் சொல்லிவிட்டார் என்று அதையும் நிராகரிக்கவா சொல்கின்றீர்கள்? இங்கே தான் மதத்தின் வரலாற்றுப் பாத்திரதைப் புரிந்துகொள்வதும் வகுத்துக்கொள்வதும் முக்கியமாய் எனக்குப்படுகிறது..
...
நீங்கள் எழுதியது....
//அதற்கான தேவையை ஏற்றுக் கொண்டாரே ஒழிய, மனித அவலங்களுக்கு மதங்களே தீர்வு எங்கிற அர்த்ததில் மதத்தை அங்கீரிக்கவில்லை.மதத்திற்கான தேவையை உருவாக்கிய அந்தச் சூழலை மாற்றவே அவர் கோரினார்.அவ்வாறான மாற்றம் நிகழும் போது ,மதத்திற்கான தேவையும் அற்று விடும்.//

நீங்கள இறுதியில் எழுதிய இதைத்தானே எனது முதல் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கின்றேன். மற்றும்படி நானோ (நான் புரிந்தளவில் நிவேதாவோ) மனித அவலங்களுக்கு மதங்களே தீர்வு என்று கூறவரவில்லை. எங்கிருந்து தான் இந்தப் புரிதல்களை எடுத்தீர்களோ தெரியவில்லை.

நான் கூறவருவது, மதம் ஒரு அபின் என்ற ஒற்றைச் சொல்லாடலுக்குள் மார்க்ஸை அடக்கிவிடாதீர்கள் எனத்தான் சொல்லவருக்கின்றேன். ஒரு நீண்டபுரிதலுக்கும் விவாதத்திற்கும் பிறகே நாம் இந்தச் சொல்லாடலுக்கு வரமுடியும் என்றுதான் கூறவருகின்றேன்.
......
/Religion is the sigh of the oppressed creature/
இதைக்கூட நீங்கள் எப்படி எடுக்கின்றீர்கள்? ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாய் -வடிகாலாய்- மதம் இருக்கின்றது என்பது மார்க்ஸ் மதத்தை அதன் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்கின்றார் என்றுதானே விளங்கிக்கொள்ளவேண்டும் அவ்வாறு ஒரு வடிகாலாய் திணிக்கப்பட்ட மதத்தை ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து பிரித்தெடுப்பது குறித்துத்தான் மார்க்ஸ் கோருகிறாரே தவிர (மாற்றை), மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு என்று சொல்லிவிட்டார்,அப்படியே விட்டுவிடவேண்டும் என்று எவருமே எடுத்துக்கொள்ளவில்லையே?
மற்றும்படி மத்த்தை முற்றாக நிராகரிக்கச் சொன்னார் (fully eliminate) என்பதை மூலத்திலிருந்து எடுத்துத் தருவீர்கள் என்றால் நன்றியுடையவனாக இருப்பேன். எனது புரிதல்களையும் திருத்திக்கொள்ளவும் உதவும். நன்றி.

அற்புதன் said...

//ஆனால், ஒருபோதும் அவர் மதங்களைத் தூக்கியெறிய முயலவில்லை.//

//''Religious distress is at the same time the expression of real distress and the protest against real distress. Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, just as it is the spirit of a spiritless situation. It is the opium of the people.

The abolition of religion as the illusory happiness of the people is required for their real happiness. The demand to give up the illusion about its condition is the demand to give up a condition which needs illusions.மார்க்ஸ்''-//

//மார்க்ஸின் நோக்கம் மதத்தை நிராகரிப்பதல்ல. //

//அவ்வாறு புரிந்துகொள்வதிலிருந்துதான் மதத்தை நாம நிராகரிக்கமுடியுமே தவிர, //


டிசே மேல் உள்ளவையே எனக்கு ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது, ஒரு இடத்தில்
மாக்ஸ் மதத்தை நிராகரிக்கவில்லை என்று சொல்லுகிறீகள் இன்னொரு இடத்தில் 'அவ்வாறு புரிந்துகொள்வதில் இருந்து தான் மத்தை நிராகரிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறீர்கள் இரண்டுக்கும் இருக்கும் வேறு பாடு தான் என்ன? மதம் என்பது போதை என்று புரிந்து நிராகரிக்க வேண்டும் என்றுதானே மாக்ஸ் சொல்லி உள்ளார் என்று வைத்துக்கொண்டால், மாக்ஸ் மதத்தை தூக்கி எறியச் சொல்லவில்லை என்றும் மாக்சின் நோக்கம் மதத்தை நிராகரிப்பது அல்ல என்றும் எவ்வாறு சொல்லலாம்.

மேலும் எனது இரண்டாவது பின்னூட்டத்தில் மாக்ஸ் கூறியதன் முழு வடிவமும் படியெடுத்துப் போடப்படுள்ளது.இங்கே நான் எதை மறைப்பதாக எண்ணுகிறீர்கள்?எனது இரண்டாவது பின்னூட்டத்தில் படி எடுத்துப்போட்டுள்ளதை மீள வாசிக்கவும்.

அது சரி நிவேதாவைக் கேட்டா பதிலையே காணமே? இடையில் மயூரன் வேற தோணி ,ஏணி எண்டு எதோ எழுதி உள்ளார். நான் எதோ 'பின் புல அரசியல்' உள்ள பதிவில் வந்து கரடி புகுந்த மாதிரி எதாவது எழுதி இருந்தா மன்னிக்கவும் :-)

அற்புதன் said...

//The abolition of religion as the illusory happiness of the people is the demand for their real happiness. To call on them to give up their illusions about their condition is to call on them to give up a condition that requires illusions. The criticism of religion is, therefore, in embryo, the criticism of that vale of tears of which religion is the halo//

Introduction to A Contribution to the Critique of Hegel’s Philosophy of Right
Karl Marx in Deutsch-Französische Jahrbücher, February, 1844

http://www.marxists.org/archive/marx/works/1843/critique-hpr/intro.htm

டிசே மேல தந்திருப்பது மாக்ஸின் மூலக் கட்டுரையின் ஆங்கில வடிவம்.அதில் அவர் மதத்தை அழிப்பது (abolition of religion )மக்களின் உண்மையான மகிழ்ச்சிக்கு முன் நிபந்தனையான ஒன்று என்று எழுதி உள்ளார்.இதைவிட வேறு எதை நான் தர முடியும்? 'முழுமையாக நிராகரிப்பதற்கும்', 'நிராகரிப்பதற்கும்' இடையேயான வித்தியாசமும் எனக்குப் புரியவில்லை?

இளங்கோ-டிசே said...

/The abolition of religion as the illusory happiness of the people is the demand for their real happiness. To call on them to give up their illusions about their condition is to call on them to give up a condition that requires illusions./

நன்றி அற்புதன். இதைத்தான் எதிர்பார்த்தேன்.

/To call on them to give up their illusions about their condition is to call on them to give up a condition that requires illusions./


condtion: an assumption on which rests the validity or effect of something else/

மேலும் condtion என்றால் variables இருக்கும்.variabless மாறக்கூடியதும் அவ்வாறு variables மாறினால் condtion வேறொரு தளத்திற்கு நகரக்கூடியதாகவும் இருக்கும். இந்தக்கூற்றிலிருந்து மார்க்ஸ் முடிந்த முடிவாய் மதத்தை அழித்தால் (மட்டுமே) தான் மக்களுக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும் என்று எப்படி எடுத்துக்கொள்ளமுடியும்? மதத்தை அழிப்பதை மக்களின் உண்மையான சந்தோசத்திற்கு ஒரு நிபந்தனையாக மார்க்ஸ் கொள்கின்றாரே தவிர, மதத்தை 'கட்டாயம்' அழிக்கத்தான் வேண்டும் அவ்வாறெனில்தான் மக்களுக்கு உண்மையான சந்தோசம் கிடைக்கும் என்று சொல்லவரவில்லையே? இந்தக் கேள்விதான் எனது ஆரம்பக்கேள்வியாகவும் -இப்போதும் மாறாததாகவும்- இருக்கிறது.


நிற்க. நான் கேட்ட,
/நமது சூழலில் வளமான சித்தர் பரம்பரை இருக்கிறது. அதை இன்று மதம் தனக்குள் உள்வாங்கிகொண்டு இருக்கிறது.. அப்படியெனின் மதம் ஒரு அபின் என்று மார்க்ஸ் சொல்லிவிட்டார் என்று அதையும் நிராகரிக்கவா சொல்கின்றீர்கள்? /
இதற்கு இன்னும் நீங்கள் பதிலளிக்கவில்லையே? நீங்கள் இதற்கான உங்கள் பதிலைக் கூறும்போது, ''முழுமையாக நிராகரிப்பதற்கும்', 'நிராகரிப்பதற்கும்'இடையேயான வித்தியாசம புரியும் என நம்புகின்றேன்.

இன்னும் சற்று எளிமையாக்கி நான் கூறவிரும்பியதை இன்னொரு கேள்வியாக உங்களிடம் முன்வைக்கிறேன். ஈழத்தில் ஆரம்பவகுப்பிலிருந்து பதினொராம் வகுப்பு வரை சமயம் ஒரு முக்கியபாடமாய் இருக்கிறது (உங்களுக்கு மத நம்பிக்கை இல்லாவிட்டாலும், நீங்கள் படித்து சித்திபெறுவது அவசியமானது). ஆகவே அவ்வாறு சமயத்தை/மதத்தை கற்று (எம்மோடு மதம் இரண்டறக் கலந்திருக்கிறது என்பது இது ஒரு எளிய உதாரணம்) வருகின்ற ஒருவனிடம் மதம் ஒரு அபின் என்று சொல்வதால் ஏதும் பயனிருக்கும் என்று நம்புகின்றீர்களா? எனவேதான் மதம் நமக்குள் கட்டமைக்கப்பட்டிருக்கும் வரலாற்றை விளங்கிக்கொள்வதன் மூலமே நிராகரிக்கமுடியுமே தவிர, மதம் ஒரு அபின் என்று மார்க்ஸ் கூறிவிட்டார் நீ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று உடனடியாக முழுமையாக நிராகரித்தல் சாத்தியமில்லை என்றுதான் கூறவருகின்றேன்.
.....
இதற்கு அப்பால், எனது புரிதல்களை எழுத்தில் வைக்கும் தெளிவு இல்லையென்றே நினைக்கிறேன். மார்க்ஸை இன்னும் விளங்கிக்கொள்ள வைத்த நிவேதாவின் இப்பதிவுக்கும் அற்புதன் உங்களுக்கும் நன்றி. தொடர்ந்து உரையாடும் சந்தர்ப்பம் இப்போதைக்கு இல்லை :-).

மு. மயூரன் said...

//இடையில் மயூரன் வேற தோணி ,ஏணி எண்டு எதோ எழுதி உள்ளா//

இந்தப் பதிவு சொல்லும் வேறொரு விடயம் தொடர்பாகவும் நாங்கள் கருத்துச்சொல்லலாம் தானே?

கூடவே இப்பதிவு மனித உணர்வுகள் சம்பந்தப்பட்ட விடயம் ஒன்றைத் தொடுவதால் அதுபற்றிய எனது பதிவொன்றை செய்திருந்தேன்.

கட்டுரையின் அரசியற் பார்வை தொடர்பாக கருத்துச்சொல்ல இப்போதைக்கு ஆர்வமில்லை.

நிவேதா மார்க்சியம் பற்றிய தன்னுடைய அறிதலூடாக வந்த மனப்போராட்டங்கள் பற்றியே எழுதிச்ச்ன்றிருப்பதாகப்படுகிறது.

மொஸ்கோ மழை பற்றிய காலகாலமாகவரும் காலவதியாகிப்போன கருத்து அவருக்கு மற்றவர்கள் ஏற்படுத்திய கருத்தியல் திணிப்பால் வந்ததாக இருக்கலாம்.

மார்க்ஸ் ஒரு பொருள்முதல்வாதி. அதுவும் இயங்கியல் பொருள்முதல்வாதி என்பதை மட்டும் இங்கே அழுத்தமாக பதிவு செய்துவைக்கலாம் என்று எண்ணம்.

நிவேதா/Yalini said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி!

பதிவின் பின்புல அரசியல் அற்புதனுக்காக..:

..இது இன்றைக்கு ஒன்றரை வருடத்துக்கு முன்பு நாட்குறிப்பாக எழுதி வைத்திருந்தது. தற்செயலாக - வலைப்பதிவு நீண்டநாட்களாக வெறுமையாக இருந்ததால் - பதிவிலிட்டிருந்தேன். பரீட்சைக் காலங்களில் அடிக்கடி இணையப் பக்கம் தலைகாட்ட சந்தர்ப்பம் கிடைப்பதில்லை தானே.. தாமதித்த பதிலுக்கு மன்னிக்கவும்.

பதிவிலிட்டிருந்த - இங்கு விவாதத்துக்குக் காரணமாயிருந்த மேற்கோள்கள் 'மார்க்ஸ் பிறந்தார்' எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. கென்றி வோல்கவ் (Henry Volkov) என்பவரால் எழுதப்பட்ட புத்தகம் அது. தமிழ் மொழிபெயர்ப்பு, பிரசுரித்தவர்கள் பெயர் தெரியவில்லை..

அற்புதன், இந்தப் பதிவு மனிதவுணர்வுகள் மற்றும் புரிதல்கள் சம்பந்தப்பட்டது மட்டும்தான். அரசியல் அல்லது அறிவுஜீவித்தளத்தில் நின்று விடயங்களை அலசுமளவுக்கு மார்க்ஸ் பற்றியோ, மார்க்ஸிஸம் பற்றியோ எனது அறிவு போதாதென்பதையும் ஏற்றுக்கொள்கிறேன், தயக்கமின்றி.

பின்னூட்டத்துக்கு நன்றி மயூரன்.

உதறப்படாதிருப்பதாயின், ஏணிகளாயிருப்பதற்கும் சில நிபந்தனைகள் இருக்கக்கூடும்.. ஏற விரும்பி, ஆனால் வழிதெரியாது தவிப்பவருக்கு வழிகாட்டியாக இருத்தல், சந்தர்ப்பங்கள் மற்றும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல், அவர் விரும்பிய இடத்துக்குப் பயணிக்க உதவியாக இருத்தல் கூடவே.. எல்லா இடத்துக்கும் தன்னையும் காவிக்கொண்டலைய முடியாதென்ற குறைந்தபட்ச புரிதலைக் கொண்டிருத்தல்.. இப்படிப்பட்ட ஏணிகள் குறைவு.. காட்டுமரத்துக்கு நான் தான் தண்ணியூற்றினேனென்று பெருமைப்பட்டுக்கொள்பவர்களே அதிகம் போலும். எது எப்படியிருப்பினும், ஏணியாயிருப்பதும், ஏணிகளைப் பயன்படுத்திக் கொள்வதும் என்னளவில் உவப்பில்லாதன..:-)

கருத்துத் திணிப்புகள்.. இருந்திருக்கலாம். எனினும், இன்றைக்கு சிலகாலத்துக்கு முன்பு - இதை எழுதியபோதிருந்ததை விடவும், இன்றைய பொழுதில் சிந்தனையும், கருத்துக்களும் எவ்வளவோ மாறிவிட்டனவென்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

மறுபடியுமொருமுறை, பின்னூட்டத்துக்கு நன்றி!

பின்னூட்டங்களுக்கும், விளக்கத்துக்கும் நன்றி, டிசே!

உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன், இதுவேதான் நான் மனதில் கொண்டிருந்ததும்.

ஆனாலும், இந்தப்பதிவில் இத்தகைய வாக்குவாதங்கள் எழவேண்டிய தேவையென்னவென்று புரியவில்லை. மார்க்ஸ் மதங்களை மறுத்தாரா, தூக்கிப்பிடித்தாரா என்பது குறித்து நான் பதிவில் விவாதித்திருக்கவில்லை.. அவர் கூறியிருந்த,

//மனித சுயவுணர்வே உண்மையான, உயர்ந்த கடவுள்//

//'மனிதனே மனிதனுக்குக் கடவுளென்றால் மனிதனை இழிவுபடுத்துகின்ற.., அடிமைப்படுத்துகின்ற.., புறக்கணிக்கிற.., கைவிடுகின்ற.. எல்லா உறவுகளும் தூக்கியெறியப்பட வேண்டும்..//

//'மதம் ஒடுக்கப்பட்ட உயிரின் பெருமூச்சு, இதயமற்ற உலகத்தின் இதயம், அது உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சி//

இத்தகைய கருத்துக்கள் என்னைக் கவர்ந்திருந்தன. அதை மட்டும்தான் கூற விரும்பினேன்.

மார்க்ஸ் ஒரேயடியாக மதங்களை நிராகரிக்கவில்லை.. போதைத்தனமுடையதென மறுத்திருந்தாலும், அவற்றின் இருப்பினை அங்கீகரித்திருக்கிறார். இதுவேதான் எனது புரிதலும், டிசே எடுத்துக்காட்டியிருந்தபடி ஜெயமோகன், சிவத்தம்பி அனைவரின் புரிதலும். மற்றும்படி, மதம்தான் அனைத்துக்குமான தீர்வென எந்த இடத்திலும் குறிப்பிட்டதாக நினைவில்லை.

//மதத்தை மார்க்ஸ் அங்கீகரித்தார் என்பதன் பின்னால் இருக்கும் அர்த்தம் தான் என்ன? //

மதம் வெவ்வேறு விதமான நம்பிக்கைகளுடனும், பரிணாமங்களுடனும் காலங்காலமாக உலகிலிருந்து வந்திருக்கிறது. மதத்தினை முற்றுமுழுதாக நிராகரித்துவிட்டு நாங்கள் மனிதர்களை, மதத்தின் பிடியில் விரும்பியோ விரும்பாமலோ கட்டுண்டிருக்கும் சமூகத்தினைப் புரிந்து கொள்ள முடியாது.. மனிதர்களையோ, சமூகத்தையோ அதன் யதார்த்த நிலை நின்று புரிந்துகொள்ளத் தவறுபவர்களால் மானிட விடுதலைக்கான விதிகளை வகுப்பதும் சாத்தியமில்லை. இதுதான் அதற்கான விளக்கமாகவிருக்க வேண்டுமென நினைக்கிறேன், என் அறிவுக்கெட்டியபடி.

மற்றும்படி, மயூரன் கூறியதுபோல..

//மார்க்ஸ் ஒரு பொருள்முதல்வாதி. அதுவும் இயங்கியல் பொருள்முதல்வாதி என்பதை மட்டும் இங்கே அழுத்தமாக பதிவு செய்துவைக்கலாம் என்று எண்ணம்.//

இதைவிடுத்து மார்க்ஸ் மதச்சார்புடையவரா.. பெண்ணிலைவாதியா என்ற கேள்விகளும் விவாதங்களும் அர்த்தமற்றவையெனவே தோன்றுகிறது.

அனானிமஸுக்கு,

//நிவேதா வரலாற்றை ஒருமுறை அறிவுக் கண்களுடன் ஆராயுங்கள். அரைகுறையாக எழுதாதீர்கள். இல்லையெனில் நீங்களும் மொஸ்கோவில் மழை பெய்தால் இங்கு குடை பிடிக்கும் அரைவேக்காட்டுக்காரர்களுடன் சேர்க்கப்பட்டு விடுவீர்கள்.//

எப்போதும் சராசரி மனிதர்களுக்கு மத்தியிலே நின்றுகொண்டு எதையும் யதார்த்தக் கண்கொண்டு பார்க்க விரும்புபவளிடம், அறிவுஜீவித் தனங்களை எதிர்பார்க்காதீர்கள், தயவுசெய்து. எனக்கு மனிதர்கள் முக்கியம், உறவுகள் முக்கியம்.. மிகச்சிறிதுகாலம் மட்டுமேயான இவ்வாழ்க்கையினை அணுவணுவாக அதன் ஒவ்வொரு கணத்தினையும், சின்னச் சின்ன சிலிர்ப்புகளையும் அனுபவிப்பது முக்கியம்.. தத்துவங்களும், சித்தாந்தங்களும் மனிதவுணர்வுகளுடன் தொடர்புபடும் புள்ளியில் மட்டுமே எனது கரிசனை அதன்பால் திரும்புமேயொழிய மற்றும்படி, அவை குறித்த எனது அறிவு பூச்சியம்தான்.

பின்னூட்டத்துக்கு நன்றி!