
1.
எல்லாம் வேடிக்கையெனத் தோன்றுகிறதின்று
இந்தச் சுவர்களுக்குள் அடைந்துகொண்டிருக்குமென்
பெருமூச்சுக்களை
கம்பிவலையிட்ட சன்னலின் சிறுதுவாரங்களினூடு
பிதுக்கி வெளியேற்றுவதுதான் வாழ்வென்றிருந்திருந்தால்
நேசிக்காதிருந்திருப்பேன் எவரையும்
படிப்பு, எழுத்து, பேச்சு
ஆர்வம், துடிப்பு, தேடல்
இந்தப் புள்ளியில் அனைத்தும் தொலையுமென்றிருந்திருந்தால்
சிந்திக்கப் பழகாதிருந்திருப்பேன் அன்றைக்கே
காத்திருப்பை வேண்டும்
சட்டகங்களுக்குள் சிக்கிக்கொண்ட
பலிபீட வாழ்வு
இனியும் அன்பென்ன அன்பு..
கனவிலொரு கழுகு வரைந்து
அதன் கால்விரல்களிடை காதலனுப்பி
அந்தப்புரத்தில் தவளைக்கும் தேருக்குமாய்
காத்திருந்து சுகங்காணத் தெரிந்தவர்களுக்கெல்லாம்
முடிவதில்லை,
என்னைப்போல
கருணை வரண்டு மூர்க்கம் பிடித்த
பாம்படக் கிழவியாயிருக்க
இருந்துவிட்டுப் போகிறேன்
திமிர்க் கிழவியாயில்லையென்றாலும்,
அவளது சிலிர்த்தாலும் நிமிராத
ஒரு கற்றை சுருள் மசிராகவாவது..
2.
நடுங்கும் விரல்களுடன்
தடித்த சாக்கு ஊசிக்குள்
தட்டுத் தடுமாறி நூல்கோர்க்க விழையும்
ஒரு கிழவியின் தீவிர கவனத்துடன்
கடக்க வேண்டியிருக்கிறது இந்த நாட்களை
சாவை சில்லறைகளாய் கணக்கிட்டுக் கொண்டிருக்கும்
நாட்டிலிருந்து எந்தச் செய்திகளும் வேண்டாமென
என்னைப்போலவே நூல்பின்னிக்கொண்டிருக்கும்
இன்னொருத்தி பதற்றத்துடன் கூறுகிறாள்
வெகுதொலைவுக் கிராமமொன்றில்
பெண்ணுறுப்பைக் கீறியெடுக்க மறுக்கும்
பருவமடைந்த ஆபிரிக்கப் பெண்ணின் அலறல்
வளையங்களால் நிரப்பப்பட்ட அவள் சகோதரியின் கழுத்து
எமக்கென இல்லாமற்போன
நாகரிகமொன்றுக்கு சாட்சியமாகிறது
யன்னல்களுக்குப் பின்னால் முகங்களைப் புதைத்துக்கொண்டு
என்னால் சகோதரிகள் குறித்தும்
ஆதங்கப்பட முடிவது வேடிக்கைதான்
இன்னும் என்னைத் தேற்றிக்கொள்ளவும்..
அந்தக் கிழவி நிமிர்ந்து பார்த்து சிரித்தபடியே
செம்மறியாடுகளை ஓட்டிச் செல்கிறாள்
பசும்புல்வெளி தேடி
அவள் பொக்கை வாய்க்குள் எதிரொலிக்கும்
நீரோடை பற்றியதோர் பாடல்
எழுதுமேசை மீண்டு,
நானும் கிழவியாய்ப் பிறவாததன் விசனத்தை
ஒரு கவிதையாக்கி
கிழவியாய்ப் பிறந்து குழந்தையாய் சாகவேண்டும்
என் (கடவுளர்க்கான) விண்ணப்பங்களுடன்
நாட்குறிப்பின் பக்கமொன்றினுள்
பத்திரமாய் ஒளித்துக் கொள்கிறேன் மறுபடியும்
தலைகீழ் வாழ்வு சிறு எலுமிச்சைச் செடியென
துளிர்விடத் தொடங்கும்
என் இன்றிராக் கனவுக்குள்