Tuesday, February 10, 2009
செதுக்கும் சிற்பியும் செதுக்கப்படும் கல்லும்
*இரு தெரிவுகள் எங்கள் முன்:
ஒன்றில், பயங்கரவாதியாயிருத்தல் அல்லது
பயங்கரவாதத்தை எதிர்த்தல்
எதிர்மறைத் தத்துவத்தின்படி:
ஒன்றில் B, அல்லது B அன்று
**ஒரேநேரத்தில் இரண்டாகவும் இருப்பதும் (சாத்தியமில்லை)
இரண்டாகவும் அல்லாதிருப்பதும் (சாத்தியமில்லை)
அரசியல் கற்றுக்கொடுத்தது:
பயங்கரவாத எதிர்ப்பென்ற பெயரில்
மகா பயங்கரவாதியாக.. - அல்லது
இரண்டையும் எதிர்த்தபடி நடுநிலைமையாளனாக..
குழந்தைகள் உறங்கியபடியிருந்த ஒரு
குளிர்கால நடுநிசியில், எனதன்ப
நான் கல்லாயிருந்தேன் - நீ
என்னைச் செதுக்கும் சிற்பியாயிருந்தாய்
காதல் ஒரு செடியென
ஆத்மாவின் ஈரமுறிஞ்சி வளர
என்மீது
கோபுரங்கள் தாதுகோபங்கள் எழுந்தன
உடல் துளைத்து பாதைகள் நீண்டன
உளியின் ஆங்காரம் பொறுத்திருந்து பொறுத்திருந்து
நான் கடவுளானேன்
பூதமானேன்
மனிதனுமானேன்
பயங்கரவாதப் புழுதி மண்டியிருந்த தெரு
மனிதர்களை சிற்பங்களாக்கி விட்டிருந்தது
நெரிவுண்டு நொறுங்குண்டு
எஞ்சியிருந்த குறுணிக்கற்களும்
சிதறிக்கொண்டிருந்தவோர் நாளில்
நானொரு
சிற்பியுருவங்கொண்ட கல்லாய்ச் சமைந்து போனேன்
அல்லது, கல்லாலான சிற்பியாய் அலைந்தேன்
இரண்டுக்கும் அதிக வேறுபாடுகள் இருக்கவுமில்லை
*நன்றி: திரு.ஜோர்ஜ்.டபிள்யு.புஷ், திரு.கோத்தபாய ராஜபக்ஷ
**தத்துவவியல் இந்நிலையைப் 'போலி' என்கிறது
படம்: சல்வடோர் டாலி
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
எங்கே நிவேதா எதுவுமே சொல்லவில்லையே எனும் பொழுது கடந்த பதிவை எழுதியிருந்தீர்கள் அதற்கு எதுவம் சொல்லவில்லை
இந்தப்பதிவுக்கும் எதுவும் சொல்லாமல் போனால் நான் போலியென்பது தெரிந்துவிடக்கூடும்...
\\
அல்லது
இரண்டையும் எதிர்த்தபடி நடுநிலைமையாளனாக..
\\
இது நடுநிலமை என்று சொல்கிறீர்களா அல்லது அது நடுநிலமையாகலாம் என்கிறீர்களா..
ஏனெனில் எங்களுக்கு நாட்டுல சமாதானம்தான் வேணும் எண்டு சொல்கிற பெரும்பாலானவர்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான பயங்கரவாதிகளாகத்தான் இருக்கிறார்கள்...
போலியாய் இருத்தல் சுகமாய் இருக்கிறது மற்றப்படி,
ஒரு கவிதைக்கு உவகை செய்த புஷ், மற்றும் கோத்தபாய ராஜபக்க்ஷக்கும் நன்றி சொல்லதென்பதும் பயங்கரவாதமாகலாம் என்பது பின்குறிப்பு
நன்றி கிங்!
//இது நடுநிலமை என்று சொல்கிறீர்களா அல்லது அது நடுநிலமையாகலாம் என்கிறீர்களா..//
அடிக்குறிப்பில் கூறியிருப்பதன்படி, தத்துவவியல் இந்த இரண்டையும் எதிர்க்கும் நிலையைப் போலியென்கிறது. மற்றபடி, அவரவர்க்கேற்ற முறையில் ஒவ்வொரு விதமாக வாசிக்கலாம்..
//ஏனெனில் எங்களுக்கு நாட்டுல சமாதானம்தான் வேணும் எண்டு சொல்கிற பெரும்பாலானவர்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான பயங்கரவாதிகளாகத்தான் இருக்கிறார்கள்...//
உண்மையிலும் உண்மை.
புஷ்ஷுக்கும், கோத்தபாயவுக்கும் நன்றி சொன்னது, அவர்களிருவரும்தான் பகிரங்கமாக இந்த பிரசாரத்தை முன்னெடுத்தவர்கள்: 'பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடு, அல்லது நீயொரு பயங்கரவாதி!'
உலகில் இத்தகைய இருவிதமான மக்கள் மட்டும்தான் இருக்கமுடியுமென வாதிட்டவர்கள் அவர்களிருவரும்.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!
//நன்றி: திரு.ஜோர்ஜ்.டபிள்யு.புஷ், திரு.கோத்தபாய ராஜபக்ஷ//
"திரு" என்று குறித்ததில் ஏதேனும் subtext இருக்கிறதா?
வணக்கம்.. நிவேதா
உங்க வலைபுவிற்கு முத முதலய் வந்திருக்கன்.. இந்ந்த கவிதை என் சிற்ரறிவுக்கு புலப்படவேயில்லை... ஆனா உங்கள் மற்றய பதிவுகள் படித்தேன்.. உங்கல் எழுத்து நடை என்னை காவர்ந்தது... நல்லா இருக்கு.. ஆனா குறைவாகவே (நிறைவா) எழுதி இருக்கிங்க... உங்கள் எழுத்துக்களில் நிறையவே பெண்னியம் தெரிகிறது...
நிறைய எழுதுங்க... வாசிச்சதும் சொல்லனும்னு தோனிச்சு
\\"செதுக்கும் சிற்பியும் செதுக்கப்படும் கல்லும்"\\
தலைப்பே கலக்கல் நிவேதா
மூன்றாவதாக ஒரு தெரிவு வைத்திருக்கலாம்..
பயங்கரவாதியாக இல்லாமலோ, எதிர்க்காமலோ, இறந்து போதல்....
நல்ல கவிதைங்க... உருவகங்கள் சரியா இருக்கு....
[B]இருந்தாலும் அவங்களுக்கு நன்றீ சொல்லியிருக்க வேண்டியதில்லைதான்..[/B]
திசைமாறி வந்தவன்,
:-)
கவின், வருகைக்கு நன்றி!
//உங்கள் எழுத்துக்களில் நிறையவே பெண்ணியம் தெரிகிறது//
பெண்ணியம் என்பதை எதை வைத்து அளவிடுகிறோமென்பதும் முக்கியம்.. கருத்துக்கு நன்றி..
நன்றி, ஜமால்!
ஆதவா, அந்த 'நன்றி' யினை நீங்கள் புரிந்துகொண்ட விதமும், நான் எதிர்கொண்ட விதமும் முற்றிலும் நேர்மாறானவை. அதேபோலத்தான் 'பயங்கரவாதமும்'. உங்கள் வாசிப்பின் சுதந்திரத்தை முற்றுமுழுதாக அங்கீகரிக்கிறேனெனினும், நீங்கள் கருத்துத் தெரிவித்திருப்பதால்:
- இங்கு 'நன்றி' என்பது ஒருவித subtext ஆகவும் இருக்கலாம்.
- புஷ்ஷினதும், கோத்தபாயவினதும் கூற்றுக்களை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியிருப்பதால், அந்தக் கருத்துக்கு அவர்களே உரிமையாளர்களென்றவகையில் 'நன்றி' கூறியதாகவுமிருக்கலாம்.
- மற்றையது, இந்த அடிக்குறிப்புக்களும் கவிதையின் ஒரு பகுதியென்பதால் மற்றுமொரு உருவக முயற்சியாகவும் இருக்கலாம்.
முக்கியமான விடயம், தயவுசெய்து, இந்தக் கவிதை அவர்களது கருத்துக்களுக்கு நேரெதிரான விமர்சனத்தை முன்வைப்பதை, அவர்களது கூற்றுக்களுக்கும் நடத்தைக்குமிடையிலான முரணை கேள்விக்குட்படுத்துவதை கவனிக்கத் தவறவேண்டாம்..
//பயங்கரவாதியாக இல்லாமலோ, எதிர்க்காமலோ, இறந்து போதல்//
இந்தப் 'பயங்கரவாதம்' என்பதும் கூட மேற்குலகம் கட்டியமைத்த ஒரு வெறும் Myth. அவர்களது பார்வையில் நீங்கள் மேற்குறிப்பிட்டிருக்கும் வகை மக்களும் 'பயங்கரவாதிகள்'தான். ஏனென்றால் அவர்களிந்த so called 'பயங்கரவாதத்தை எதிர்க்கவில்லை'.
சொல்ல மறந்தது: அந்தத் தெரிவுகள் கவிதை முன்மொழியும் தெரிவுகளல்ல.. அடிக்குறிப்பிட்ட அரசியற் தலைவர்களால் உலக மக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டவை/ விதிக்கப்பட்டவை.
நிவேதாவுக்கு தப்பிச் செல்லல் எதையும் பேசவைக்கும்
தங்களுக்கு யதீந்திரா என்பவரின் எழுத்துக்கள் தெரியும்தானே அவரது சமீப கால எழுத்தை படியுங்கள் நேர்மை தெரியும்
தப்பிச் செல்லுதல் எதையும் பேசவைக்கும்
உதவாக்கரையாக எப்போதும் உள்ள
எஸ்.சத்யதேவன்
சத்யதேவன், பின்னூட்டத்துக்கு நன்றி. எனது அரசியல் நிலைப்பாடு தெரியாமல், கவிதை விளங்காமல் கருத்துத் தெரிவிக்கிறீர்களெனினும், தப்பி வருவதற்கு முன்னரே கொழும்பிலிருந்த காலங்களில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பேசிவந்தவர்கள்தான் நாங்கள். பாடசாலைக் காலங்களில் சக சிங்கள மாணவிகள் எங்களைப் பயங்கரவாதிகளென முத்திரை குத்தியபோதும், சிங்கள ஆசிரியர்கள் எங்களிடமிருந்து விலகி நிற்கும்படி தங்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தபோதும், எங்கள்பக்க நியாயங்களை எடுத்துக்கூறி சண்டை பிடித்தவர்கள் நாங்கள். விக்ரமபாகு கருணாரத்ன, ரணத் குணசிங்க, ராவய மற்றும் எக்ஸ் குறூப் நண்பர்களுடன் சேர்ந்து மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டதோடு சிங்களவர்களிடையே எமது இனப்போராட்டம் தொடர்பான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கருத்துப் பட்டறைகளிலெல்லாம் கலந்துகொண்டவர்கள். இங்கு தப்பிவந்த இடத்திலும், 'நடுநிலைமையாளர்கள்' என்று தங்களைச் சொல்லிக்கொண்டிருப்பவர்களோடு போராடவேண்டியிருக்கிறது..
தப்பிச் செல்லுதல் எதையும் பேசவைக்குமென நீங்கள் சொல்வதை மிகுந்த விசனத்தோடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.. உங்களுக்காக நான் இங்கே கொள்கை/ கவிதை விளக்கப் பட்டறை வைத்துக் கொண்டிருக்க விரும்பவில்லை.. தப்பி வருவதற்கு முன்னர் (வந்தே சிலமாதங்கள்தான் ஆகிறது, அதற்குள்ளாகவே இதைவிட அங்கேயிருந்து செத்திருக்கலாமென்றளவு அனுபவித்து விட்டேனென்பது வேறு விடயம்.. நண்பியொருவர் தங்க இடமில்லாமல் நடுங்கும் -10 குளிருக்குள் பேருந்து நிலையத்தில் சுருண்டு படுத்தபடி இரவுகளைக் கழித்திருப்பதைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கவும் பொறுமையில்லை.. புலம்பெயர்ந்தவர்களொன்றும் சொர்க்கத்தில் வாழ்ந்துகொண்டிருக்கவில்லையென்று மட்டும் நினைவுறுத்த விரும்புகிறேன்) என்னத்தைப் பேசிக்கொண்டிருந்தேனென்பதை வலைப்பதிவைச் சற்றே தட்டிப் பார்த்தாலே அறிந்துகொள்வீர்கள்..
நீண்ட இடைவெளி. மீண்டும் தங்கள் எழுத்தைப் பார்க்கச் சந்தோஷமாக உள்ளது.
பெண் பயணக் குறிப்புகளின் அரசியல், கால முக்கயத்துவம் குறித்து நீங்கள் முன்னர் எழுதிய கட்டுரைதான் நான் முதலில் படித்தது. பின்னர் சில கவிதைகளும் படித்தேன். போர் உச்சத்தில் இருக்கும் இச்சமயம் கொழும்பில் வசிக்கும் நீங்கள் அதைப்பற்றி எதுவும் எழுதியிருக்கக்கூடும் என்ற எண்ணத்திலேயே இங்கு வந்தேன். ஆனால் நீங்களும் அகதியாக்கப்பட்டிருக்கிறீர்கள். என்ன சொல்வதென தெரியவில்லை. தமிழகத்தில் வசிக்கும் நாங்கள் பெருத்த குற்றவுணர்வுடனும், ஏதும் செய்யவியலாத கையறு நிலையிலும் இருக்க வேண்டியிருக்கிறது. யாரும் எதையும் இழக்கத் தயாரில்லை, எல்லோரும் அவரவர் குற்றவுணர்வைப் போக்கிக்கொள்ள வேண்டும். உங்களுக்கு சொல்ல எந்த நம்பிக்கை வார்த்தைகளும் என்னிடம் இல்லை.
அன்புடன்,
பாரதி தம்பி, சென்னை
நிவேதாவுக்கு,
மிக நீண்டகாலம கழித்தே தாங்கள் அளித்த பதிலை பார்க்ககிடைத்தது.
தங்கள் அரசியல் நிலைப்பாடுகள் பற்றி ஓரளவு தெரியும்.
நீங்கள் அங்கே சொகுசா இருப்பதாக நான் எப்போதுமே நினைக்கவில்லை. அப்படி கருத்துப்பட நான் அந்தக்கருத்தைக் கூறவில்லை. நான் சொல்லவந்தது 'தப்பிச் செல்லுதலே எதையும் பேசவைக்கும்' என்பதை மட்டும்தான்.
அதை எழுதிய கால நெருக்கடிகளின் மனநிலை வேறுவகையானது. தங்களுடைய பெறுமதி மிக்க பணிகளை நான் மறுக்கவி்ல்லை. மதிக்கிறேன். தங்களோடு முரண்படும் எண்ணம் எனக்கு இல்லை.என் கருத்துக்கள் தங்களுக்கு விசனத்தைத்தந்தால் மன்னித்துக்கொள்க. ஆனாலும் இந்த இடத்தில் ஒன்டு மட்டும் இடறிக்கொண்டே இருக்கிறது
சூடு பட்டவனுக்குத்தான் அந்த வலியை சரியாக புரிந்து கொள்ள முடியும்.
தங்களுக்கு வாழ்த்துக்கள்
எப்போதுமே கற்றுக்கொள்ளவும் ஏற்காததை எதிர்க்கவும் மட்டுமே தெரிந்த
உதவாக்கரை
எஸ்.சத்யதேவன்
Post a Comment