- றொமிலா தாப்பருடன் ஓர் நேர்காணல்
இந்தியாவில் இன்றைய பெண்களின் நிலையானது எப்போதும் மரபுகளின் மிகையான தாக்கத்துக்குட்படுத்தப்பட்டதாகவே பண்புருவமைக்கப்பட்டு வருகிறது. மரபுகளை நீங்கள் எவ்விதம் பார்க்கிறீர்கள், அவை எவ்விதம் எமது வாழ்வைப் பாதிக்கின்றன?
பொதுவாக குறித்ததோர் நடத்தையை, மனப்பான்மையை அல்லது ஒழுக்காற்றமைவை வற்புறுத்த வேண்டுகையில், அது காலங்காலமாக தன்னிலை மாறாது புழக்கத்திலிருந்து வந்து இன்று எம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கற்பிதங்கொண்டு, நாம் மிகச் சாதாரணமாக, "இது மரபார்ந்தது" என்கிறோம். இந்தத் தற்புனைவு மிகத் தவறானது. காரணம், மரபுகள் ஒருபோதும் - பிறிதொரு தலைமுறைக்குக் கையளிக்கப்படுகையிலும் கூட வெறுமனவே இயக்கமற்று உறைந்திருப்பதில்லை.
ஒரு தலைமுறையிலிருந்து மற்றைய தலைமுறைக்கு மரபின் கூறுகளைக் கையளிக்கும் செயற்பாட்டின்போது அம்மரபு இயல்பாகவே மாற்றத்துக்குள்ளாகிறது. அத்துடன், இன்று எம்மால் மரபெனக் குறிப்பிடப்படுவது சமயங்களில் வெறும் நான்கைந்து தலைமுறைகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம். எதுவுமே முற்றுமுழுதாகத் தொன்னலம் வாய்ந்த வடிவத்துடன் நூற்றாண்டுகளைக் கடந்து எம்மை வந்தடைவதில்லை.
மரபுகள் மாற்றமுறுவதை இனங்கண்டுகொள்வதைத் தொடர்ந்து ஏன், எப்போது அக்குறித்த மாற்றம் நிகழ்ந்ததென கேள்வியெழுப்பவேண்டியது அவசியமாகிறது. உதாரணமாக, வேறுபட்ட தொல்பிரதிகளில் பெண்கள் சித்தரிக்கப்படுமாற்றை எடுத்துக் கொள்ளலாம். இவை மரபார்ந்த இந்தியப் பெண்மையின் சித்தரிப்பாகக் கருதப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மகாபாரதத்தில் இடம்பெறும் சகுந்தலையின் கதையில், துஷ்யந்தன் சகுந்தலையைக் கன்வ முனிவரின் பர்ணசாலையில் சந்திக்கும்போது அவர்களிருவரும் வெளிப்படையாக உரையாடுவதுடன், எவ்வித சடங்கு சம்பிரதாயங்களையும் வேண்டாத காந்தர்வத் திருமணத்தில் இணைவதற்கு துஷ்யந்தன் அவளுக்கு அழைப்பு விடுக்கிறான். சகுந்தலையோ, தமக்குப் பிறக்கும் மகனை துஷ்யந்தன் தனது முடிக்குரிய வாரிசாக அறிவிக்கவேண்டுமென்ற நிபந்தனையுடன் சம்மதிக்கிறாள். காந்தர்வ மணத்தினைத் தொடர்ந்து துஷ்யந்தன் பிரிவதோடு, அவளுக்கு மகனும் பிறக்கிறான். சில வருடங்களுக்குப் பின், அவள் தனது மகனுடன் துஷ்யந்தனின் சபைக்குச் சென்று முடிக்குரிய வாரிசாக மகனது உரிமையை எடுத்துக் கேட்கிறாள். துஷ்யந்தனோ அவளது வேண்டுகோளை நிராகரிப்பதுடன் அவளை அவமதிக்கவும் செய்கிறான். ஆனால், பின்னர் ஒரு அசரீரி அது துஷ்யந்தனின் சட்டரீதியான புதல்வனேயென எடுத்துக் கூறுகிறது. அதைக்கேட்ட துஷ்யந்தனும், அந்தப் புதல்வன் தனது சட்டரீதியான முடிக்குரிய வாரிசென நிரூபிப்பதற்கான ஆதாரம் வேண்டியே தான் அவ்வாறு சகுந்தலையைக் அடையாளங் காணாதது போல பாவனை செய்ததாகக் கூறுகிறான்.
ஆனால், காளிதாசர் இக்கருத்தினை எடுத்தாளுகையில் சகுந்தலையின் குணவியல்பினை முற்றுமுழுதாக மாற்றியமைத்து விடுகிறார். தற்றுணிவுடனும், முன் நிபந்தனையுடனும் திருமணத்தினுள் புகும் ஒரு தன்முனைப்புடைய பெண்ணின் நிலையிலிருந்து அவள் பணிவமைதியுடைய, இணங்கிப் போகின்ற, பின்வாங்கும் இயல்புடைய இளம் பெண்ணாக மாறுகிறாள். தனக்கான உரிமைகளுக்காகக் கூட வாதிட முடியாதளவு துஷ்யந்தன் மீதான காதலினுள் அவள் மூழ்கிப் போகிறாள். அத்துடன், தனதும் தனது புதல்வனதும் உரிமைகளுக்காக சகுந்தலை வாதாடுவதல்லாமல், அவள் சபையை நீங்கிச் சென்றதும் தனது செயலையெண்ணி மனம் விரக்தியுற்று துஷ்யந்தனே தனது முடிக்குரிய புதல்வனையும் தொலைந்த காதலையும் மீட்டெடுக்க தவித்தலைகிறான்.
இதில் சுவாரசியமான விடயம் என்னவெனில், இன்று சகுந்தலையின் கதை குறித்து உரையாடும் போதெல்லாம் நாம் காளிதாசரின் விளக்கத்தையே முன்னெடுக்கிறோம். ஆனால் மரபினைப் பற்றி ஒருவர் உரையாடுகையில், மகாபாரதக் கதைவடிவம் பரவலான ரசிகர்களைக் கொண்டதாயிருந்திருக்கும். அக்கதைவடிவத்தினைச் செவிமடுப்போர் அதிகமாயிருந்திருப்பார்கள். காளிதாசரின் கதைவடிவமோ வெகு சிலருக்கே பரிச்சயமாயிருந்திருக்கும்.
இன்று, காளிதாசரின் கதைவடிவத்தினை மட்டுமே கருத்திற்கொள்வதன் மூலம் நாம் ஒரு தற்சார்புப் போக்குக்கு எம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவ்வடிவத்தினைத் தெரிவுசெய்து அதனை மரபார்ந்த விம்பமாகக் கட்டமைக்கக் காரணம், பெண்ணை தற்றுணிவுடையவளாகவும், திருமண வேண்டுகோளொன்றை ஏற்றுக்கொள்ள முன்னர் முன் நிபந்தனையொன்றை வற்புறுத்துபவளாகவும், மன்னன் தன்னை அடையாளங்கண்டுகொள்ளத் தவறுகையில் அசாத்தியமான மனவலிமையுடன் தன்பக்க நியாயத்துக்காக எதிர்வழக்காடுபவளாகவும் சித்தரிக்குமொரு கதைவடிவத்தினை விட, அவளைத் தயக்கமும், பணிவும், பின்னிற்கும் மனப்போக்குமுடையவளாகச் சித்தரிக்கும் ஒன்றை முன்னிறுத்துவதானது இன்றைய எமது சமூகத்தினைப் பொறுத்தவரை பயனுடையதும் கூட. தற்காலச் சமூகம் ஒரு மரபுத் தெரிவை மேற்கொள்ளும் முறையானது பெண்கள் குறித்தான சமூகத்தின் நிகழ்காலத்து மனப்பான்மையினால் ஏலவே வரையறுக்கப்பட்டு விடுகிறதெனலாம்.
இராமாயணத்தைப் பொறுத்தவரையிலும் இதனையொத்த கதை/திரிபு வடிவங்கள் உருவாக்கப்பட்டனவென நீங்கள் நினைக்கிறீர்களா?
இன்று அதிகம் பேசப்படுவதும், புகழ்பெற்றதும், தொலைக்காட்சிகளில் கூட காட்டப்பெறுவதும் வால்மீகியினதும் துளசிதாசரதும் கதைவடிவங்கள்தான். இவற்றினைவிடவும் வேறு பல வடிவங்களிருப்பது மக்களுக்குச் சொல்லப்படவில்லை. அவற்றுள் சில வால்மீகியினதை விடவும் காலத்தினால் முற்பட்டதாக இருந்திருக்கக் கூட வாய்ப்புண்டு.
பௌத்த ஜாதக இலக்கியங்களில், இராமாயணத்தின் சில பகுதிகளுக்கு மிக நெருங்கிய தொடர்புடைய குறுங்கதைகள் காணப்படுகின்றன. அவ்வாறான கதையொன்று இராமனும் சீதையும் சகோதரர்களெனவும், தமது சிறிய தாயின் கொடுமைகளுக்கஞ்சி இலக்குமணனுடன் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறுகிறது. தசரதனின் மறைவுக்குப் பின்னர், அவர்களது இளைய சகோதரன் இராமனிடம் வந்து அவனை நாட்டுக்குத் திரும்புமாறு அழைப்பு விடுக்கிறான். அஞ்ஞாதவாசக் காலம் முடியுமுன் திரும்ப மறுக்கிறான் இராமன். அவர்கள் நாடு திரும்பியதும், சீதை இராமனின் துணைவியாகவும் பட்டத்து இராணியாகவும் ஆகிறாள்.
சகோதரனுக்கும் சகோதரிக்குமிடையிலான இந்த உறவு அக்காலத்துச் சமூகம் மீதான கற்பிதங்கள் குறித்து பெருமளவு விளக்கத்தை எடுத்துக் கூறுகிறது. பௌத்த பிரதிகளினடிப்படையில் புத்தர் பிறந்த சாக்கிய குலத்தின் தோற்றமானது சகோதரன் - சகோதரி இணைவினது வழிவந்ததாகவே நிறுவப்படுகிறது. இவ்வுறவு நேருண்மைப் பொருளில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதில்லை. இம்மரபுவழியில் ஏதோவொரு தனித்துவமான அம்சம் காணப்படுவதும், இதற்கும் ஏனையவற்றுக்குமிடையில் சமூக எல்லை வரையறையொன்று கட்டியெழுப்பப்பட்டிருக்கலாமென்பதுவுமே இங்கு குறியீட்டுப் பொருளில் எடுத்துக்கூறப்படுகிறது.
எனவே, இராமாயணத்தின் பிரபலமான கதைவடிவமொன்று 'இராமாயணப் பரம்பரை' என ஒரு மரபினை முன்னிறுத்துகையில், இதேபோல வேறும் பல கதைவடிவங்கள் நிலவுவதாகவும், இது ஒற்றைப்படையான மரபல்ல, மாறாக வேறுபட்ட மக்கள் குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு விதங்களிலும் மாற்றியமைக்கப்பட்ட கதைகளாலான நிலையற்ற மரபெனவும் மக்களுக்குக் கூறவேண்டியது அவசியமாகிறது. இப்படித்தான் பெரும்பாலான காவியங்கள் உருவாக்கப்படுகின்றன. கதைகள் சேகரிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒன்றமைக்கப்படுகின்றன. இந்நிலையற்ற, மாறுமியல்புடைய மரபினை வால்மீகியின் கதைவடிவம் குறித்தவொரு நோக்கில் ஒன்றமைக்குமாயின், பௌத்த மற்றும் ஜைனக் கதைவடிவங்கள் அதையே வேறோர் நோக்கில் ஒன்றமைக்கக் கூடும்.
இவைதவிர நாட்டுப்புற மற்றும் தென்கிழக்காசியக் கதைவடிவங்களும் நிலவுகின்றமை குறிப்பிடத்தகுந்தது. அவற்றுள் சிலதில், சீதை இராவணனின் மகளாகவும், இன்னும் சிலதில் இராவணனுடன் ஏதோவொரு வகையில் உறவு பூண்டவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள். கதை புதிய புதிய இடங்களுக்குப் பயணிக்க, அப்பகுதிகளின் சமூகக் கட்டமைப்பு, குடும்ப மற்றும் இனங்களுக்கிடையிலான உறவுகள், நம்பிக்கைகள், அவற்றின் கட்டமைவு என்பன அப்பகுதி மக்கள் அக்கதையை தமது ஒழுக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்குமேற்ப தமக்கேயான முறையில் மீளுருவாக்கம் செய்வதில் பெரும் தாக்கம் செலுத்துகின்றன.
இதுதான் இராமாயணத்தின் மிகவும் ஆர்வமூட்டும் பகுதி. கருத்தமர்வுகளின்போது அறிவுலகினர் பெரும்பாலும் பிரதியின் ஒருங்கிணைவிலும் வேறுபட்ட கதைவடிவங்களுக்கிடையே ஒத்த தன்மையைக் காண்பதிலுமே அதிக கவனம் செலுத்துகின்றனர். நோக்கின், இந்த ஒத்திசைவின்மையே அதிகம் சிக்கலானதும், பிரதிகளை மேலும் செறிவூட்டக்கூடியதும், இன்னும் ஆராயப்படவேண்டியதுமாகும். உதாரணமாக, ஜைனக் கதைவடிவமானது முக்கியமானதோர் மாற்று வடிவமாகும். பிராகிருதத்தில் எழுதப்பட்ட இது, Paumacharyam என அழைக்கப்படுகிறது. வால்மீகியின் வடிவத்தில் மேலோங்கிக் காணப்படும் பிராமணீய நோக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நோக்கினை இது முன்னிறுத்துகிறது. உண்மையில் வால்மீகியின் மூலக் கதைவடிவத்தின் தகவல்கள் குறித்து நாம் எதுவித முடிவுகளுக்கும் வர முடியாமலுமுள்ளது, காரணம் இன்று எம்மிடமிருக்கும் வால்மீகியின் கதைவடிவமானது ஆரம்பத்தில் உலகியல் சார்ந்ததாகவிருந்து பின்னர் காலப்போக்கில் பிராமணர்களால் புனிதப்படுத்தப்பட்ட ஓர் பிரதியேயாகும்.
ஜைனக் கதைவடிவத்து சீதை வால்மீகி வடிவத்துடன் ஒப்பிடப்படுகையில் எவ்வகையில் வேறுபடுகிறாள்?
ஜைனக் கதைவடிவத்து சீதை மிகவும் தற்றுணிவும் உறுதியுமுடையவள். இராவணன் சீதையைக் கடத்திச் செல்வது நிகழ்ந்தாலும் அதுவே மைய நிகழ்வல்ல. இராமனும் இலக்குமணனும் பல அரச சபைகளுக்குச் செல்கிறார்கள். அவர்கள் வெறுமனவே காடுகளினூடு பயணிக்கவில்லை. எனவே, கடத்தலானது பல நிகழ்வுகளைக் கொண்ட கதையின் ஒரு பகுதி மாத்திரமே. கதையின் முழு குவிமையமுமே அதுவல்ல.
அடுத்தது, சீதைக்கும் இராவணனுக்குமான உறவும் வேடுபடுகிறது. இராவணன் ஒரு அரக்கனாகச் சித்தரிக்கப்படவில்லை. அவன் துறவறம் பூண்டு அதன் விளைவாக பல வரங்களையும் சக்திகளையும் பெற்றுக்கொண்ட ஒரு ஜைனன்/ சமணன். தனிப்பட்டளவில் அவன் சீதையின் பால் ஈர்க்கப்படுகிறானேயொழிய அவ்வுறவில் எவ்வித வக்கிரம் நிறை காமவுணர்வோ, கொடூரமோ காணப்படவில்லை. தனது காதலுக்கு சீதையிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கும் அவன், அவள் அவ்வாறு நடந்துகொள்ளாததால் ஏமாற்றமடைகிறான். சீதை தான் அஞ்சி நடுங்கத்தக்க ஒரு அரக்கனை எதிர்கொள்ளவில்லை. மாறாக, ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு முகங்கொடுப்பதைப்போலவே அவள் நடந்துகொள்கிறாள். அவனுக்குச் சாதகமாகப் பதிலளிப்பதற்கும் மறுப்பதற்குமான உரிமை அவளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இறுதியில், இராமனும் தசரதனும் சமண முனிவர்களாகின்றனர். இராவணனைக் கொல்வது இலக்குமணனேயொழிய இராமனல்ல. ஒரு உயிரைப் பறித்ததற்குப் பொறுப்பேற்க வேண்டியிராத இராமன் தொடர்ந்தும் கறைபடியாதவனாயிருக்கிறான். வால்மீகி இராமாயணத்தைப் போலல்லாது, சத்திரிய அறத்துக்கு மாறாக, சமண அறமே இங்கு இறுதியில் வெல்கிறது. இக்கதைவடிவத்தில் சீதை முக்கிய கதாபாத்திரமாகவுமில்லை, அதேவேளை முக்கியமற்றவளாகவுமில்லை.
இதுவிடயத்தில் துளசிதாசரின் இராமாயணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பெண்களைக் கருத்திற்கொள்கையில், துளசிதாசரின் இராமாயண வடிவமானது மிகவும் மனவழுத்தத்துக்குட்படுத்துவதாகவே அமைந்துள்ளது. பெண்களும் சூத்திரரும் அடிக்கப்பட/ வதைக்கப்பட வேண்டியவர்கள் என்ற புகழ்பெற்ற அவரது வரிகளுக்குமப்பால் பெண்களின் இயற்கை குறித்து விசனத்துக்குட்படுத்தும் வேறும் பல விமர்சனங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. துளசிதாசரின் சீதை பலவீனமானவளாக, பின்னிற்பவளாகக் காணப்படும் அதேவேளை புனிதத்துவத்தை மேற்கொணரும் முயற்சியில் அவரது கதாபாத்திரங்கள் பெருமளவு இறுகிய மரபார்ந்தவையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வால்மீகியின் கதைவடிவத்திலிருந்தான மிக முக்கிய வேறுபாடெனப்படுவது, பொய்த்தோற்றங்களில்/ மாயையில் ஏமாறும், மருட்சி மிக்கவளாக சீதை சித்தரிக்கப்படும் விதமேயாகும்.
ஒரு கதை அதன் காவிய வடிவத்திலிருந்து தெய்வத்தன்மையால் ஆக்கிரமிக்கப்பட்டதாக மாற்றமுறுவது குறித்து..?
அயோத்தி மற்றும் இலங்கை பற்றிய ஏராளமான கதைகள் சுற்றிலும் வழக்கிலிருந்து வருகின்றன. அவையனைத்துமிணைந்தே இராம கதையாக உருவெடுத்துள்ளன. ஏறத்தாழ கிறிஸ்து வருடத்துக்கு முந்தைய, வெகு நெருங்கிய நூற்றாண்டுகளில் (வீர)நாயகன் கடவுளின் திருவவதாரமாக உருவகிக்கப்படும் முதலாவது மாற்றம் இடம்பெற்றது. இவ்வாறே இந்தியக் காவியங்கள் கிரேக்க காவியங்களிலிருந்து வேறுபடவாரம்பித்தன. கிரேக்க காவியங்களில் கடவுளர் வீரர்களுடன் சேர்ந்து பங்குபற்றினர்; இந்தியக் காவியங்களிலோ - அவை மீளெழுதப்பட்ட காலகட்டத்தில், நாயகர்கள் கடவுளரின் மறு அவதாரமாக்கப்பட்டனர்.
இவ்வாறாக, இந்தியக் காவியங்கள் நிலைமாற்றத்துக்குள்ளாகின. சபைகளிலும், விழாக்களிலும் எடுத்துக்கூறப்பட்ட வீர காவியங்கள் பிரதிகள் மீளெழுதப்பட்டு நாயகர்கள் புனிதமான கதாபாத்திரங்களாக மாற்றமடைந்ததை இயல்பென ஏற்றுக்கொண்டன. இருந்தும், புராதன கதைவடிவத்தின் சில எச்சங்கள் நவீன பிரதிகளிலும் காணக்கிடைப்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, வாலியை இராமன் முதுகுப்புறமாக அம்பெய்து வீழ்த்துவது, பிந்தைய காலங்களில் இழிவானதாகக் கருதப்பட்டாலும் (18ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாராஷ்டிரா ஓவியங்களில் இராமன் வாலியின் மார்பில் அம்பெய்து வீழ்த்துவதாக சித்தரிக்கப்பட்டுள்ளமை), யுத்தத்தின் விதிகள் வேறுவிதமாக வரையறுக்கப்பட்டிருந்திருக்கக்கூடிய ஆரம்ப காலங்களில் அவ்வாறாக கருதப்படாமலுமிருந்திருக்கலாம்.
பெண்களின் கற்பனையில் சீதை பற்றிய உருவகம் ஏற்படுத்தும் தொடர்ச்சியான பாதிப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
சீதை மிக சுவாரசியமான ஒரு உருவகம். அவளொரு சராசரி சத்திரிய பெண்ணல்ல. அவளது பிறப்பு - நிலத்தை உழுகையில் ஜனகனால் கண்டறியப்பட்டதால் - அசாதாரணமானது. அவள் சத்திரியப் பெண்ணுக்குரிய விழுமியங்களை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்துகொள்வாளா இல்லையா என எவராலும் உறுதிகொள்ள முடியாதிருந்த நிலையில், இறுதியில், அத்தனை பரீட்சிப்புகள் இன்னல்களையும் கடந்து, மீளவும் பூமியன்னையை அடையுமிடத்து, அவளதேயான விதத்தில் அவள் வெல்கிறாளென்றே கூறவேண்டும். 'உன்னால் நானடைந்தது போதும்' என்ற தோரணையுடன் அவள் தனது தோற்றுவாயை நாடித் திரும்புகிறாள்.
ஏதோவொரு வித எதிர்ப்பை வெளிப்படுத்துமுகமாக தீக்குளித்து மரணிக்கும் எல்லாப் பெண்களையும் போலவா?
சீதையைக் கருத்திற்கொள்ளுமிடத்து, இந்நிகழ்வானது வெறும் தற்கொலை அல்லது ஏதேனுமொன்றை நிறுவுவதென்பதை விடவும் சற்று மேலானது. 'நான் மாறுபட்டவள்; மண்ணிலிருந்து பிறந்தவள்; இவையனைத்தினூடாகவும் நான் வாழ்ந்திருந்து என்னை நிரூபித்து விட்டேன், இப்போது எனதேயான, எனக்குரித்தான இடத்துக்கு நான் திரும்பிச் செல்கிறேன்; நான் உனக்குச் சொந்தமானவளல்ல' என்பதான எழுதப்படாத, பேசப்படாத கூற்றை அது எடுத்துரைக்கிறது. ஆழுணர்வார்ந்ததாயினும், இது பரந்த கவனிப்புக்குரியதொன்றெனவே நான் நினைக்கிறேன்.
சீதையின் பிரபல்யம், ஒரு வகையில், வழக்கத்திலுள்ள வேறும் பல பெண் உருவகங்களையொத்த - முன்னுதாரணமான 'பெண்'ணென்ற அவளது விம்பத்தின் வழிவந்ததாகவிருப்பினும், இன்னுமொரு பார்வையில் - ஆழ்நோக்கில் - தான் எதிர்கொண்ட துன்பங்களிலிருந்து தனக்கேயான தனித்துவமான வகையில் விடுபடலைக் கண்டடைந்தவளாக அவளைக் காண்கின்றமையே பெண்கள் மத்தியில் அவள் பிரபலமடைந்தமைக்கு காரணமெனலாம். இந்தவகையில் சீதை ஒரு compensatory model ஆகவும் வெளிப்படுகிறாள்.
அக்னிச் சோதனையின் குறிப்பிடத்தக்க அம்சம் எது?
அது பல குறியீட்டமைவுகளைக் கொண்டது. நெருப்பு ஒரு தூய்மையாக்கி; சடங்குகள் அதனைச் சுற்றியே இடம்பெறுகின்றன. மாசடைந்து கொண்டிருக்கும் இறந்த உடல் நெருப்பிலிடப்படுவதால் தூய்மையாகிறது; ஆன்மா விடுதலையடைகிறது. அதேபோல, மிகத் தூய்மையான ஒரு பெண் மட்டுமே நெருப்பிலிருந்து தப்பிப் பிழைப்பாள். சீதையைப் பொறுத்தவரை அது அவளது கற்பினைப் பரிசோதிக்கும் முயற்சி. புராதன இந்திய சமூகங்களில் நீதியை நிலைநிறுத்தும் - குற்றத்தை அல்லது நிரபராதியென்பதை நிரூபிக்கும் - ஒரு சோதனையாக அக்னிப் பரிசோதனைக்கு முக்கிய இடமிருந்து வந்தது. சில பின்தங்கிய பிரதேசங்களில் அது இன்னமும் புழக்கத்திலிருந்து வருகிறது.
பிற்காலக் கருத்துருவாக்கமான 'சதி'யுடன் இந்த அக்னிப் பரிசோதனை ஏதோவொரு விதத்தில் உறவுகொண்டிருக்கிறதென்று நினைக்கிறேன். கணவரின் சிதையில் தானும் வீழ்வதன் வாயிலாக அவருக்குத் தான் நேர்மையாகவிருப்பதை நிரூபிக்க/ எடுத்துக் காட்ட முயல்கிறாளா அந்தப் பெண்? ஒரு பெண்ணின் கற்பினைப் பரிசோதிக்கும் வழிமுறையாக தீக்குளிக்கும் வழக்கத்தினை எடுத்துக்கொள்வது வேதகாலத்துப் பிரதிகளில் இடம்பெற்றிருக்கவில்லை.
ஆர்வமூட்டும் வகையில், முதலாயிரமாண்டுகளின் இறுதிப் பகுதியில் தோன்றிய இராமாயணக் கதைவடிவங்களில் அக்னிப் பரிசோதனையானது ஒரு மாறுபட்ட வடிவமெடுப்பதுடன், இதன் தாக்கம் துளசிதாசரின் இராமாயணத்திலும் பிரதிபலிப்பதைக் காணலாம். சீதை கடத்தப்படுவதற்கு முன்பு, இப்போது கடவுளின் திருவவதாரமாக்கப்பட்ட இராமன் அவளை ஒரு அக்னிச் சடங்குக்கு உள்ளாக்குகிறான். அதன் வாயிலாக உண்மையான சீதை பாதுகாப்பாக இருக்கும் அதேவேளை போலி சீதையே உலகில் தொடர்ந்திருந்து கடத்தல் தொடக்கம் அனைத்து இன்னல்களுக்கும் ஆளாகிறாள். இராமன் இராவணனை வென்றதன் பிற்பாடு, மீளவும் உண்மையான சீதை உலகுக்குத் திரும்புமுகமாகவே அக்னிச் சோதனை இடம்பெறுகிறது.
வெளிப்படையான விளக்கங்களுக்குமப்பால் இது அத்வைத தத்துவத்தையும், 'மாயை' என்ற கருத்துருவாக்கத்தையும் சார்ந்து இயங்குவது குறிப்பிடத்தக்கது. கதையில் இடம்பெற்றிருக்கும் இம்மாற்றம், சீதை அக்னிச் சோதனைக்கு ஆளாக வேண்டி வந்ததை கேள்வியுடன் எதிர்கொள்ள வைக்கிறது. இந்த மாற்றத்தின் நோக்கம் - 'சதி', புறவய நோக்கில் இதனையொத்ததாக இருந்தாலும், உண்மையில் பலியிடும் வழக்கமேயொழிய ஒரு சோதனையல்ல என்பதை எடுத்துக்காட்டவும், இரண்டுக்குமிடையே குழப்பங்கள் ஏற்படாமல் தடுப்பதற்குமா? அல்லது, சக்தி வழிபாட்டு முறையின் கீழ் பெண் தெய்வங்கள் புகழ்பெற்று வருகையில், சீதையும் அவ்வாறு - பெண் தெய்வமாகக் - கருதப்பட்டு விடக்கூடாதென்ற காரணத்தாலா?
நன்றி:
Traditions versus Misconceptions: Romila Thapar
Published by: Social Scientists' Association, 1997
Reproduced from Manushi, Sep-Dec 1987
(மொழியாக்கம்: நிவேதா)
Friday, September 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
welcome back
i was always there, even when you didn't see..:-)
தமிழில் பெயர்த்தமைக்கு நன்றி நிவேதா.
நன்றி வளர்மதி! இது நீண்ட நேர்காணலொன்றின் ஆரம்பப் பகுதி மட்டும்தான். முழுவதையும் மொழிபெயர்க்க விருப்பம், பொறுமைதான் இல்லாமற் போய்க்கொண்டிருக்கிறது..:-(
நேர்காணலை Manushi - யில் வாசித்திருக்கிறேன் நிவேதா. ரொமிலா தாப்பரின் எழுததுக்கள் இந்திய வரலாற்றெழுதியல் குறித்த தெளிவுகளை எனக்குள் கிளர்த்தியவை. மிகுந்த ஆதர்சத்துடனே அவருடைய பங்களிப்பை நோக்குகிறேன்.
பொறுமை இல்லாமல் போவதின் தருணங்களை பொதுமைப்படுத்த விரும்பவில்லையெனினும், அத்தகைய சூழல்களை அனுபவித்திருக்கிறேன்/கொண்டிருக்கிறேன்.
பொறுமை வாய்க்கும்போது முழுமையும் மொழிபெயர்க்க முயற்சியுங்கள்.
ஒருவேளை சாத்தியமானால், இந்நேர்காணலை நானும் பெயர்க்க முயற்ச்சிக்கிறேன். ஒருவேளை பெயர்த்துவிட்டால், தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தங்களுடைய பதிவில் வெளியிட்டால் மிகுந்த மகிழ்ச்சியுறுவேன்.
அன்புடன்
வளர் ...
மிகவும் நன்றி வளர்மதி! உங்களுடைய மொழிபெயர்ப்பை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..
ஆழமான விடயங்கள். தலைமுறைகளில் மாற்றம் பெறும் மரபு பற்பல இடைச்செருகலுக்குப் பிறகு பல சமயங்களில் (மதம் அல்ல) உருத்தெரியாது மாறிப்போவதும் ஓரளவு அறிந்த ஒன்றுதான்.
சீரிய மரபு, அதாவது இராயிரம் ஆண்டுகள் கண்ட மரபு என்பது, நிரூபணமாக்கப்பட்ட, 'மரபு' எனும் பெயரில் உலவும் இடைச்செருகலைவிட எந்த விதத்தில் உயர்ந்தது என்று ஒரு மீள் பரிசீலனை செய்வது, இத்தகைய 'இடைச்செருகல்களை மரபாக்கும்' போக்கிற்கு ஒரு முடிவு செய்யும். நம்மை, அதாவது இந்தத் தலைமுறையைப் பொருத்தவரை எல்லாப் புனித பிம்பங்களும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, களைகள் நீக்கப்பட்டு, செறிவானவை என்று கருதப்படுபவைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முயல்வதே சரி எனப் படுகிறது.
ஜைன கதை வடிவத்தில், ராமன் வாலியையாவது கொல்கிறானா அல்லது அப்பழியும் இலக்குவன் மேல் திணிக்கப்பட்டு, பின்னால் சமண முனிவனாகப்போகும் ராமன் உயிர் கொல்லும் பாவத்திலிருந்து தப்புவிக்கப் படுகிறானா? இதன்படி, இன்றைய இந்து மதத்தின் பிரதான தெய்வங்களில் ஒன்றான ராமன், சமண மதத்திற்கு மதமாற்றம் செய்திருப்பதுடன், மகாவீரர் காலத்துக்குப்ப் பின்னரே ராமன் வந்திருக்க வேண்டும் என்று எண்ண வைக்கிறது.
எல்லா மதங்களின் இடையுறா, வரலாற்றைத் திரித்து சாதகமாக்கிகொள்ளும் போக்கினால் துன்புறுவது என்னவோ மானுடம்தான்.
சீதையைப் பற்றிய அலசல்கள் பிரமிப்பூட்டுகின்றன. ஒரு நல்ல நேர்காணலின் ஒரு பகுதியை மொழிபெயர்த்த உங்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
அனுஜன்யா
பின்னூட்டத்துக்கு நன்றி, அனுஜன்யா!
ஜைனக் கதைவடிவத்தில் வாலி ராமனால் கொல்லப்படுகிறானா அல்லது இலக்குவனாலா என்பது தெரியவில்லை. இராவணனையே கொல்லாது விடுபவன் வாலியையும் கொன்றிருக்க மாட்டானென்றே தோன்றுகிறது. இந்தக் கதைவடிவங்களெல்லாம், அவ்வக்காலத்தில் நிலவிவந்த வாய்மொழிக் கதைகளைக்கொண்டு ஒவ்வொரு பிரிவைச் சார்ந்த மக்களாலும் மேலும் மெருகேற்றப்பட்டவையே என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.
வரலாற்றாக்கத்தினையும் அதன் போக்கினையும் பற்றிய தெளிவைத் தந்துகொண்டிருப்பவர்களென்ற வகையிலேயே றொமிலா தாப்பரும், உம்பர்த்தோ ஈகோவும் மிகவும் கவர்கின்றனர். அவர்களுக்கு நிகராக இல்லையென்றாலும் Dan Brown ம் சுவாரசியமானவராகப்படுகிறார். 'The Da Vinci Code', 'Angels and Demons' போன்ற அவரது வர்த்தகமயப்படுத்தப்பட்ட நாவல்களிலும், மத்தியகாலத்து தாய்த்தெய்வ வழிபாடு குறித்த சான்றுகளும் குறிப்புகளும், குறிப்பாக கட்டட வடிவமைப்புக் குறித்த தகவல்கள் இடம்பெறுவது வியக்க வைக்கின்றது. தென்னிந்தியக் கோயில்கள் வட்ட வடிவத்திலிருந்து சோழர் காலத்தில் சதுரவடிவாக்கப்பட்டமையின் அதே பின்னணியை அங்கே ஐரோப்பாவிலும் காணமுடிகிறது. Dan Brown ன் பிரதிகள் அவற்றின் சார்புத்தன்மை/ நம்பகத்தன்மை குறித்து பலத்த சர்ச்சைக்கு ஆளாகிவருகின்றமையும் குறிப்பிடப்பட வேண்டியதே. இந்த வரலாற்றாக்கத்தின் அபத்தத்தைப் புரிந்துகொள்ளவென, The Templar Revelation தொடக்கம் ஏராளமான பிரதிகள் வரிசையில் கிடக்கின்றன. அறிமுகக் குறிப்பு எழுத விருப்பம். பார்ப்போம்.
Post a Comment