Thursday, June 05, 2008



கடலொன்று காத்திருந்தது எம்மிருவருக்கும் மத்தியில்
நீயோ நானோ இப்படியிருந்திருக்க வேண்டியவர்களல்ல
அடிவானத்தைப் பார்த்து
நான் உரக்கக் கத்த வேண்டியிருந்தது,
மனிதர்களை நேசிப்பவளெனினும்
காற்றில் கலந்த என் குரலை
சூரியன் விழுங்கி ஏப்பம் விட்டதாக
அவர்கள் பேசிக்கொண்டார்கள்
எனக்குத் தெரியும்,
படகெடுத்து கையுளைய துடுப்பு வலித்து
புயல்கள் கடந்து உன் கரையை வந்தடையும் முன்பு
ஓங்கிக் குரலெழுப்பி சலித்துப்போய்
நீ திரும்பிக் கொண்டிருப்பாய்...
கரைகள் என்னைக் கைவிட்டுவிட்டதாகப் புலம்பிக்கொண்டு
நானொரு க‌ட‌ற்க‌ன்னியாகியிருப்பேன்.
...................

கண்முன்னே பிணமொன்று செத்துவீழ்கிறது
என் சாயலுடன்
அதன் அங்க அசைவுகளும் உதட்டுச் சுழிவும்கூட
என்னதையே ஒத்திருப்பதாக அக்கா முணுமுணுத்தாள் காதுக்குள்
பட்டுப்போன இதயம்..
தீய்ந்துபோன உதடு..
கருகிய மூளை..
'இதுவொரு மனித உயிரியா என்ன'
சா வீட்டில் அனைவருக்கும் சந்தேகம்
நான் உயிரைச் சுருட்டியெடுத்து பைக்குள்ளிட்டு
இரைப்பையின் ஆழத்தில் புதைத்து விட்டிருந்தேன்
நாற்பது நாள் கடந்து,
நானொரு பிணமென நடமாடுவதாய்
அம்மா சலித்துக்கொள்வாள் அனைவரிடமும்


ஓவிய‌ம்: ச‌ல்வ‌டோர் டாலி

5 comments:

King... said...

வாங்க நிவேதா கன நாட்களுப்பிறகு...

King... said...

ஏன் இதுக்கு தலைப்பு வைக்காம விட்டிங்க, எனக்கு உங்களுடைய நோக்கம் எதுவென்று புரியவில்லையே...

King... said...

இந்த நேரத்தில எழுதிக்கொண்டிருக்கிறியள் எப்படியிருக்கிறது பொழுதும் நாளைக்கான ஆயத்தமும்...

King... said...

நான் புரிந்து கொண்ட வகையில் நான் அனுபவித்த ஏதோ ஒரு நிலையை உணர்த்துகின்றன வரிகள்..

அடிக்கடி எழுதுங்க நிவேதா நன்றி....

நிவேதா/Yalini said...

பின்னூட்டங்களுக்கு நன்றி கிங்..