Sunday, April 27, 2008
எனக்கும் மேலால் அழுதுகொண்டிருக்கும் ஒரு வானம்..
பித்தேறி மூளை அச்சகன்று சுழலத் தொடங்கிய பொழுதொன்றில்
குரல்வளை கீறிப்பிளந்தொரு குரல்
தெருவழி ஊரத் தொடங்கியதென
ஆதிகாலக் கதைகள்
பாப்பிரஸ் புல்லிலிருந்து மெல்ல நழுவியவாறு
சொல்லித் திரிகின்றன
ஓங்கிக் குரலெடுத்து ஒரு கிழவி ஓலமிடுகிறாள்
இன்னுமொரு தல்கோனை வயலின் மடியிலமர்ந்து
பால்வெளியை விழுங்கக் காத்திருக்கிறாள்
தொன்மங்கள் கனவுகளில் வடிகின்றன
கனவுகள் தொன்மங்களை வடித்துக்கொண்டிருக்கின்றன
'கண் விழித்துப் பார்த்தபோது கரைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே'
கடந்துகொண்டிருக்கிற தேநீர்க் கடையிலயிருந்து கேட்கிறது பாட்டு.. ஒருகாலத்தில் என்னைப் பைத்தியமடையச் செய்திருந்த பாட்டு.. ஒருகணம் நின்டு அடுத்த வரியையும் கேட்க வேணும் போல இருக்கு.. குரல் உச்சஸ்தாயிக்கு ஏறுது..
'கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது விம்பமே'
குண்டுவெடிப்பொன்டுக்கு அடுத்த நாள், அதுவும் ஞாயிற்றுக்கிழமையொன்றில் கொழும்பைப் பார்க்கவேணும் நீங்கள்.. அப்படியொரு அமைதி.. காலி வீதி, மிகப் பரபரப்பான அந்த றோட்டிலயே அங்கையொன்டும் இங்கையொன்டுமாய் தான் வாகனம்.. நடக்கிற சனத்தை கண்ணுக்கு எட்டின தூரம் வரை காணோம்.. மழை நாள்.. எனக்கு அதில் நடக்கப் பிடிச்சிருந்தது.. கொள்ளுப்பிட்டி சந்தியிலயிருந்து பம்பலப்பிட்டி சந்திவரை, பிறகு அங்கையிருந்து திரும்பி அவ்வளவு தூரம், அதையும் தாண்டி அலரி மாளிகை கடந்து.... நடுவில் ஆகக்குறைந்தது ஒரு ஐந்தாறு இடத்திலாவது மறிச்சிருப்பாங்கள்.. ஒவ்வொரு முறையும் ஒரு முறைப்போட, எரிச்சலோட எதிர்கொள்ளுற இந்த மறியல்கள் இண்டைக்கு ஒருவித ஏக்கத்தோட, என்னை இப்படியே மறிச்சு வைக்க மாட்டீங்களா, என்னை பிடிச்சுக்கொண்டு போக மாட்டீங்களா என்டு கெஞ்சுற மாதிரி.. சிங்கத்துட குகைக்குள்ள தானாய் விரும்பி தலையைக் குடுக்கிற ஆடு மாதிரி என்டு அந்த இடத்தில் என்ட நிலையை எவராவது விபரிச்சிருக்கலாம்.. வழக்கமாய் ஐசியில் யாழ்ப்பாணம் என்டு கண்டதுமே நிப்பாட்டி ஆயிரத்தெட்டு கேள்வி கேட்கிறவங்கள் இண்டைக்கு பார்த்துட்டு பேசாமல் திருப்பித் தாறாங்கள்.. ஏமாற்றம், ஏமாற்றம்.. ஒருத்தன் மட்டும், ஓ, யாழ்ப்பாணம் போல என்டு சிரிச்சுட்டு திருப்பித் தந்தான், வேற யாருமே கணக்கெடுக்கக்கூட இல்ல.. மினிஸ்டரோ யாரோ போறதுக்காய் றோட்டை மறிச்சு நடந்து போற சனத்தைக் கூட போகவிடாமல் அரை மணிநேரம் மறிச்சு வைச்சிருந்தவன் கூட என்னை ஏனென்டு கேட்கேல்லை.. நான் பரிதாபமாய் அவனுக்கு பக்கத்தில் அரை மணிநேரம் நின்டு கொண்டிருந்தன், என்ன நினைச்சானோ, ஒரு சிரிப்பு மட்டும் பதிலாய் வந்தது.. ஏன் இவங்கள் இண்டைக்கென்டு பார்த்து அநியாயத்துக்கு நல்லவங்களாய் இருக்கிறாங்கள்.. எனக்கு விசர் விசராய் வந்தது..
தன்னந்தனிய ஒரு பொம்பிளைப்பிள்ளை அலரி மாளிகைப் பக்கம் ஏன் போறாள், அதுவும் இந்த மழைக்குள்ள, கையில் குடையொன்டும் இல்லாமல், என்டு நீங்கள் யோசிக்கக்கூடாது.. அப்பாக்கு மட்டும் தெரியவேணும் காலை முறிச்சுப் போடுவார்.. றோட்டின்ரை எதிர்த்திசையில் ஒருத்தர் கையில் வயலினோ, கிடாரோ பெட்டிக்குள் தூக்கிக்கொண்டு வந்தார், அதுவொரு குண்டாயிருந்து திடீரென்டு இந்த இடத்தில் வெடிச்சுடக் கூடாதா என்ற நப்பாசையில் கொஞ்சநேரம் அதே இடத்தில் தாமதிச்சுப் பார்த்தன்.. ம்ஹூம்.. அவர் தன்ரை பாட்டுக்குப் போறார், என்ரை நினைவில் ஒரு குண்டை வெடிக்க வைச்சு அதில் நானும் செத்துப் போறதாய், என்ரை ஐசி எல்லாம் பார்த்து வீட்டுக்குத் தகவல் தெரிய வாறதாய், எல்லாரும் கத்திக் குழறுறதாய் நானே கற்பனை செய்துபார்த்து திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியது தான்.. சாவு அதாய் என்னைத் தேடி வரவேணும், எனக்கு அதைத்தேடிப்போக கொஞ்சம் பயம்..
கோல்பேஸ் மூடிக்கிடக்கு.. Nangi me paththen yanna bahaa (தங்கச்சி இந்தப் பக்கத்தால் போக ஏலாது).. அப்ப அந்தப் பக்கத்தால் போக ஏலுமா.. Bahaa (NO!!).. கடலை மூடுறத்துக்கு நீங்கள் யாரடா.. எனக்கு நாக்கு நுனியில் இடறுது வார்த்தை.. No one wants me, not even youuu??? எனக்கு கடலைப் பார்த்துக் கேட்கவேணும் போல இருக்கு.. அதுவும் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கிற மாதிரி.. அலை மற்ற பக்கமாய் திரும்பி ஆழ்கடலைப் பார்த்து அடிக்கத் தொடங்கினால் எப்படியிருக்குமென்டு யோசிச்சுப் பார்த்தன்.. 'Everything gonna be alright'.. Alicia Keys ன் பாடல் நினைவுக்கு வந்தது..
வாழ்க்கை என்டுறது எவ்வளவு சின்னது.. எத்தனைகாலம் வாழ்ந்திருப்பன் இந்த உலகத்தில், வெறும் இருபது வருஷம் கூட ஆகேல்லை இன்னமும்.. ஆனா, வாழ்வின் ஒவ்வொரு பருவத்தையும் இதுகாலம் வரையில் முழுமையாய் அனுபவிச்சு, அந்தந்த வயசுக்குண்டான அத்தனை குழப்படிகளையும், குறும்புகளையும் ஒன்டுவிடாமல் செய்து, இண்டைக்கு இந்த நாளில் இந்தக்கணத்தில் இப்படி வந்து நிக்கிறன் என்டது ஒரு திருப்தி.. இப்ப செத்துப்போறதென்டாலும் நிம்மதியாப் போவன்..
நாளைக்கு என்ன, அடுத்த நிமிஷம் என்ன நடக்குமென்டு தெரியாத ஒரு வாழ்க்கை, கணப்பொழுதேயான வாழ்க்கை, அதுக்குள்ளயும் எத்தனை சண்டைகள், எத்தனை முறுகல்கள், எத்தனையோ பேரைக் காயப்படுத்திக்கொண்டு, வருத்திக்கொண்டு.. ஏனப்படி வாழவேணுமென்டிருக்கு.. எதைச் சொன்னாலும் அது பிழையாப் போய்டுமோ என்ட பயத்தில் கதைக்கவே விருப்பமில்லாமலிருக்கு.. என்னைச் சுற்றியிருக்கிறவங்களை, என்னை நேசிக்கிறவங்களை காயப்படுத்திக்கொண்டு எனக்கு வாழப் பிடிக்கேல்லை, உங்களுக்குப் பிடிக்குமா.. அப்படி காயப்படுத்தி அதில சந்தோஷம் காணுறவங்களும் இருக்கிறாங்கள்தான்.. ஆனா, ஏன் நான் அவங்களில் ஒருத்தியாயில்லை.. எனக்குத் தெரியாமலேயே என் ஒவ்வொரு நடத்தையாலும், அசைவாலும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறன், என்னவொரு வாழ்க்கை, வாழ்ந்தும் என்ன பிரயோசனம்..
வானம் மூக்கைச் சிந்திக்கொண்டிருக்கு இன்னும்.. இண்டைக்கு நனைஞ்சது காணாது.. தலையில விழுற தண்ணி முகத்தால வடியுற நேரம் எல்லாத்தையும் கழுவிக்கொண்டு, அத்தனை பாரத்தையும் இறக்கிக்கொண்டு வடிய வேணும்.. It should make us feel free.. இந்த மழை அவ்வளவு வேகத்தோட தலையில் இறங்கேல்லை.. விழுந்த கொஞ்சநஞ்ச தண்ணியும் சேர்ந்து தலைக்குள்ள இறுகிப்போயிருக்கு பனிக்கட்டியாய்..
'தூரத்துக் கடல் என்னை அழைக்கிறது.. விடைகொடு எனதன்பே, என்றென்றைக்குமாக விடைகொடு..' பிரைடா காலோவின் வரிகளோடு அப்படியே தூங்கிப்போக வேண்டும் போலிருக்கிறது.. இனியொருபோதுமே இவ்வுலகில் கண் விழிக்க வேண்டியிருக்காதென்ற நிம்மதியோடு..
Subscribe to:
Posts (Atom)