Sunday, February 10, 2008
புழுவென மரணமூறும் தெருக்கள்
இந்த நாள் ஒரு விசர்க்கனவோட விடிஞ்சது. அக்கா ஒரு பெரிய கட்டடத்திலையிருந்து கீழை குதிச்சு தற்கொலை செய்யுறா.. நான் கீழையிருந்து பார்த்துக்கொண்டேயிருக்கிறன் அவா விழுறதை.. ஒவ்வொரு மாடியாய்க் கடந்து கடந்து அவாட உடம்பு கீழை விழுந்து சிதறித் தெறிக்கிறதை பார்த்துக்கொண்டேயிருக்கிறன்.. எனக்குப் பக்கத்திலையிருந்த அப்பா அதைப் பார்க்கச் சகிக்காமல் நெஞ்சு வெடிச்சு இறந்து போறார்.. அப்பாவுக்காக அழுறதா, அக்காவுக்காக அழுறதா என்டிருக்கு எனக்கு.. இந்தா இந்த அழுகை அப்பாவுக்கு, இந்த அழுகை அக்காவுக்கென்டெல்லாம் சொல்லி வைச்சா மனுசர் அழுவினம்.. அழக்கூட திராணியில்லாமல் நான் தேம்புறன், தேம்பிக் கொண்டேயிருக்கிறன்.. அப்படியே தூக்கம் குழம்பினது.. இது வெறும் கனவுதான் என்டு நினைக்க கொஞ்சம் ஆறுதலாயிருந்தாலும், உண்மையாவே நான் தேம்பிக் கொண்டுதானிருந்திருக்கிறனென்டும் விளங்கினது.. தனியாப் படுக்கிறதும் ஒருவகையில் நல்லம்தான் போல..
............
'சுமிதாட அப்பாவை சுட்டுப்போட்டாங்கள்'
'யார் சுமிதா?'
'சுமிதாவை நினைவில்லையா, அந்த மெலிந்த கேர்ள், துர்க்காட செட்'
அண்டைக்கு நானுமிருந்தன் அந்த இடத்தில், அது நடக்கிறதுக்கு சில நிமிஷம் முன்னுக்கு.. ஏதோ கனவு காணுறதைப்போல இருக்கு.. கனவெல்லாம் உண்மை போலவும், உண்மையெல்லாம் கனவு போலவும்.. ஏதோ கோவத்தில் வீட்டை விட்டு வெளியேறி வந்த நண்பனொருத்தன் தன்ரை கேர்ள் பிரெண்ட் க்கு கடைசியா ஏதோ குடுக்கவேண்டுமென்டு என்னட்டைக் குடுத்து அவட்ட குடுக்க சொன்னான்.. சரி சேர்ச்சில் சந்திப்பம் 7 மணிக்கென்டன்.. அவனைச் சந்திச்சு கதைச்சுத் திரும்பி வீட்டை வந்து சேர ஊடக நண்பரொருவரிட்டயிருந்து தொலைபேசியழைப்பு வருது, சேர்ச்சுக்கு முன்னுக்கு யாரையோ சுட்டுப்போட்டாங்கள், எங்கை நிக்கிறீங்களென்டு..
'நான் இப்பதானெ அங்கயிருந்து வாறன்'..
'இப்பதான் நடந்தது'..
அப்பாட உடம்பில் ஏழு சூடு, அம்மாவுக்கு ஒன்டு.. பார்த்துத்தான் குடுத்திருக்காங்கள் போல, எல்லாத்திலயும் துணைக்கு நின்டவ இதிலையும் வாங்கட்டுமென்டு.. ஏன் இப்படி குரூரமான யோசனை வருதெனக்கு.. இதைவிட்டால் வேறை எதைத்தான் யோசிக்க..
...........
'மா எங்கை பிடிக்கிறீங்கள்.. ஆள் இந்த உலகத்திலை இல்லை போல.. இன்னும் கொஞ்சம் தள்ளிப் பிடியுங்கோ இன்னும் தள்ளி..'
ககா மமா பப/ ககமம பபதத//
வயலின் நடு ஓட்டைக்குள்ளயிருந்து புழுவொன்டு வந்து தண்டிக்கு மேலால் ஊர்ந்து போகத் தொடங்கினது.. சீஈஈ, புழூ.. அருவருத்து முடிய முதல் குவியல் குவியலாய் புழுக்கள் ஓட்டைக்குள்ளால் வந்து வயலின் முழுக்க ஊரத் தொடங்கினது.. விரலுக்கு மேலால், வில்லுக்கு மேலால்.. மிஸ்ஸ்ஸ், புழூஊஊ...
மமா பபா தத/ மமபப ததநிநி//
பக்கத்திலை இருந்த நண்பியை முழங்கையால் இடிக்கிறன். புழு.. அவள் திரும்பிப் பார்க்கிறதாவே காணேல்லை.. மிஸ்ஸ் என்டு திரும்ப, மிஸ் இருந்த இடத்தில் கோழியொன்டிருந்து வயலினுக்கால் வழிந்த புழுக்களை கொத்திக் கொண்டிருந்தது.. வியந்துபோய் வயலினைப் பார்த்தால் வயலின் ஒரு மலைப்பாம்பாய் மாறி என்ரை கையை சுத்திக்கொள்ளத் தொடங்கினது..
அம்மாஆஆஆ..
கத்திக்கொண்டு தூக்கியெறிந்தன்.. அம்மா எனக்கு இங்கையிருக்க பயமாயிருக்கு, எனக்கு பயமாயிருக்கு.. ஏன் என்னை இங்கை கூட்டிக்கொண்டு வந்தனீங்கள்.. என்னைத் திரும்ப கூட்டிக்கொண்டு போங்கோ.. எனக்கு இங்கையிருக்க ஏலாது.. ஏலாது.. புழு.. புழு.. தெருவெல்லாம் புழு.. வயலினுக்குள்ளயும் புழு.. என்ரை கையெல்லாம் புழு.. இது என்ரை கையில்லை.. எனக்கு இந்தக் கை வேணாம்.. புழு அரிச்ச கை.. கழட்டி வீச வேணும்.. எனக்கு வேணாம்ம்ம்ம்..
...........
வகுப்பு முடிஞ்சு வாறன்.. பொலிஸ் ஸ்டேஷனுக்கு முன்னுக்கு அந்த ஆன்ரி..
'எங்கடை மகனை நேற்றுப் பிடிச்சுப் போட்டாங்களம்மா'
'அண்ணாவையோ ஏன், எப்ப?'
'இங்க தெரிஞ்ச பொடியன்ட வீட்டை வந்த நேரம்.. நேற்றிரவிருந்து றோட்டிலை உட்கார்ந்திருக்கிறன்.. இப்பதான் போய் சாப்பாடும் குடுத்துட்டு வந்தனான்.. இன்னும் கொஞ்ச நேரத்திலை விடுறனென்டு சொன்னவங்கள்..'
'ஐசி எல்லா வைச்சிருந்தவர் தானே..'
'ஓ.. வேலை செய்ற இடத்தின் கார்ட் எல்லாம் வைச்சிருந்தவன்'
'அப்ப கெதியா விட்டுடுவினம்.. நீங்கள் ஒன்டும் யோசிக்காதீங்கோ'
'விட வேணும்..'
'விடுவினம்'
மண்டை வெடிக்கிற மாதிரி இருக்கு.. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் புழுக்கள் பின்னுக்காலை தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கு.. ஓடப் பார்க்கிறன்.. வெள்ளம் மாதிரி அடிச்சுக்கொண்டு வந்த புழுக்களோட நானும் அள்ளுப்பட்டுக்கொண்டு போறன்.. புழுவோட புழுவாய்.. இனி நானும்.. அம்மாஆஆஆஆஆ....
Subscribe to:
Posts (Atom)