Tuesday, June 12, 2007

வெறுமைகளின் வன்முறை

இருத்தலை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு..!

- மால்கம் எக்ஸின் அட்டல்லாவுக்கும், எஸ்போஸின் குழந்தைக்கும் மற்றும் அனைவருக்கும்
1.

எப்போதும் எதையாவது பேசிக்கொண்டிருந்தாக வேண்டும்.
அல்லது, எழுதிக்கொண்டு..
குறைந்தபட்சம் வாசித்துக்கொண்டாவது.

ஒன்றும் அடுத்ததுமான இரு நிகழ்தல்கள்
அல்லது, அசைவுகளுக்கிடையிலான இடைவெளி (space)
சகிக்க முடியாததாகவிருக்கிறது.
உ+ம்: குளியலின் கடைசிச்சொட்டு நீருக்கும் துவாலையின் முதல் ஸ்பரிசத்துக்குமிடையிலான.. அல்லது, தொண்டைக்குள்ளால் இறங்கும் கடைசிப் பருக்கைக்கும் கையலம்புகையில் முதல் துளி நீருடனான உறவாடலுக்குமிடையிலான இடைவெளி..
(பாடிக்கொண்டே குளித்தல், பேசிக்கொண்டே சாப்பிடுதல் போன்ற உபாயங்கள் கைகொடுக்காது போயின்..)
யுகமென நீளும் அக்கணநேர வெறுமையின் வாதையில்
இத்தனையாண்டுகால வாழ்தலும் அதன் சமரசங்களும்
வரித்துக்கொண்ட அர்த்தங்களின் மீதான - துவம்சம்
நிகழ்ந்தே விடுகிறது.


2.

ஓ.. யாழ்ப்பாணமா..?!

புருவம் நெரித்து
அடையாள அட்டையைப் புரட்டியபடியிருக்கும்
அதிரடிச் சட்டைக்காரனினருகில்
அசடு வழிய அரைமணி நேரம் தாமதித்து
பல்லைக் காட்டுவதும்...
(கவனிக்க: புன்னகைக்கும் பல்லிளிப்புக்குமிடையிலான வேறுபாடு)

இயல்பு மறந்து சந்தேகப் பார்வையுடனேயே ஏறிட்டு நோக்கும்
அதிகார + இனவாத விழிகளை எதிர்கொள்வதும்...
(அவற்றைக் கடன்வாங்கிக்கொண்ட சடத்துவம், சடத்துவமல்லாத அனைத்தும் உள்ளடங்க)

அதிகரித்துக் கொண்டிருக்கும்
வாழ்க்கைச் செலவினைக் குறைகூறியபடி
சமயங்களில் உணவையே தள்ளிப்போட்டு பட்டினி கிடப்பதும்...
(இணையச் செலவுக்காய்.. கஞ்சிக்கழுது கொண்டிருப்பவரின் முன்னே பூவுக்கும் பாலுக்குமழுவதைப்போல)

இன்னபிறவும்,
மார்க்கோஸ் துணைவர மால்கம் எக்ஸுடன்
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் -
வாழ்க்கை, சுதந்திரம், இன்பம் -
(மேலும், We believe that all men are created equally because they are created in the image of God. - ட்ரூமன்)
பூக்கோவிலிருந்து பூர்த்தியு வரை
அனைத்தையும் விவாதித்தபடி
பனி படர்ந்த வெளி தாண்டி அடியெடுத்து வைப்பதான - கனவுகளைப்
புறக்கணித்தபடியேயிருக்கும் எப்போதும்..,
ஒரு சொட்டு இரக்கமுமின்றி (ஈவுமின்றி).


3.

இனியென்ன...

சிந்தனைக்குக் கடிவாளமிட்டு
(திமிரால் விறைத்த ஒற்றைக் கொம்புடன் கூடிய unicorn என சபித்தபடி),
உடலின் ஒவ்வொரு அணுவையும் பிழிந்து சாறெடுத்து
இனியுமேலாதென சோர்ந்து வீழ்கையில்
படுக்கைக்குத் திரும்ப வேண்டும்..

கனவினை ஆக்கிரமித்துக் கொள்ளும்
கருநிறைக் குருதி படிந்த தரையும்,
கோணிப்போன முகங்களும்,
எச்சிலாயும், இரத்தமாயும் கடைவாயிலிருந்து உயிர்வடிய
துளைக்கப்பட்ட மனித உடலங்களும்,
இன்னும் பலவுமென..
காட்சிப் படிமங்கள் யாவற்றையும் - வெறும்
கழிப்பறைக் காகிதமென
கடலின் அக்கரையிலேயே கசக்கியெறிந்து கைகழுவி
மஞ்சள் புற்பாய் விரித்த ஸ்தெப்பி வெளியெங்கும்
பட்டாம்பூச்சிகளைத் துரத்தித் திரிந்த
கஸாக்கியச் சிறுமியொருத்தியை
நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் (ஆறுதலுக்காகவாவது..).


4.

அதற்கப்பாலும்...

(உம்பர்த்தோ ஈகோ.. டெரிடா, சிமோன் தி பூவாவை விமர்சித்ததன் போதானதைப் போன்ற)
உரையாடல்களின் நீட்சியில் எடுத்தெறியப்படும்
ஒரு வார்த்தைக்கும் மற்றுமொரு வார்த்தைக்கும்,
எழுதப்பட முன்னரே மனதிலுறைந்து விட்ட கவிதையொன்றின்
ஒரு வரிக்கும் மற்றைய வரிக்கும்,
(போர்கேயின் கணிதவியல் மற்றும் மார்க்வெஸின் மாயா யதார்த்தவாத மற்றும் அதனுடன் கூடிய..)
பிரதிகளின் ஒரு பக்கத்துக்கும் அதனருகான அடுத்த பக்கத்துக்கும்
இடையிலான இடைவெளியில்
வெளியெங்கும் வியாபிக்கும் ஆன்மாவின் எஞ்சிய தடயங்களோடு
சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வேன்,
இனியொருபோதும்..
என் சின்னஞ்சிறு மயிர்க்கொட்டிகளை வெறுமை விழுங்காதிருக்க.


5.

எப்படிச் சொல்வேன் நான்... நியூயோர்க்கின் ஆதுபான் அரங்கிலும், வவுனியாவின் வீடொன்றிலும் கண்முன்னே சுடப்பட்டிறந்த (அட்டல்லாவுக்கு ஆறு வயதாயிருந்திருக்கவேண்டும் அப்போது.. எஸ்போஸின் குழந்தைக்கு எட்டோ என்னமோ..) அவர்களது அப்பாக்களை என்னால் திருப்பித் தர முடியாது.. உயிர்ப்பிக்கவும் இயலாது. இன்மைகள் மனிதத் தடங்கள் மீது நிகழ்த்திய வன்முறையின் வெளிப்பாடென அதனை அடையாளப்படுத்துதல் மட்டுமே என்னால் சாத்தியமான போதிலும், அவர்களை அணைத்துக்கொண்டு சொல்வேன்..,

"எனது அப்பாவை அவர்கள் எப்போது பறித்துக் கொள்வார்களென்று எனக்கும் தெரியாது. நீண்டநாட்களாக அந்தக் கணத்தை - அப்படியேதும் நடந்துவிடக் கூடாதென்ற பதைபதைப்புடன் - எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் குழந்தைகளுள் ஒருத்திதான் நானும். வெகு விரைவில், என் உள்ளுணர்வின்படி - வானத்தில் இன்னுமொரு புது நட்சத்திரம் முளைக்கும்போது (இறந்தவர்கள் நட்சத்திரமாக வானில் மின்னுவார்களென்று அம்மா சொல்வாள்), உங்களுக்கு இன்னுமொரு தோழி கிடைத்துவிட்டதை உணர்வீர்கள்.

நாங்கள் அனைவருமிணைந்து எங்கள் அப்பாக்களுக்குக் கடிதமெழுதுவோம்:
'அப்பா, அப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், அப்பா, நீங்கள் இறந்திருக்கக் கூடாதென்று நான் நினைக்கிறேன்.'

முகவரிகளற்ற உலகுக்கு அந்தக் கடிதங்களை அனுப்பி வைப்போம். அல்லாதுவிடில், எமது கனவுகளில் வளையவரும் வெண்சிறகணிந்த தேவதைகள் எமக்காய் அவற்றை எடுத்துச் செல்லட்டும்."

ஓ.. என் பிரிய மயிர்க்கொட்டிகளே! எனக்கும் தெரியும். அப்பாக்கள் எப்போதும் கண்டிப்பானவர்கள்.. வீட்டிலிருப்பதைவிட அவர்கள் வெளியிலிருக்கும் நேரம் அதிகம்.. எங்களைவிட மற்ற அனைவர் மீதும் அதிக அக்கறை கொள்வார்கள்.. எங்களுக்கு பரிசுப்பொருள் வாங்கித் தருவதோ, அம்மாவுக்கு உடுப்போ, நகையோ ஒன்றுமில்லை..ஆனால், அவர்களுக்கு வேறு செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும்..

இத்தனையிருந்தும், நாங்கள் அவர்களை நேசிக்கிறோம். ஏனென்றால், எமக்குத் தெரியும், அவர்கள் மற்றவர்களுக்காக உயிர்வாழ்ந்தவர்கள்.. மற்றவர்களுக்காக உயிர்துறந்தவர்கள். எங்களுக்காக அவர்கள் விட்டுச் சென்றது எதுவுமேயில்லை எனினும், மற்றவர்களுக்காக எங்களை விட்டுச் சென்றிருக்கும் எங்கள் அப்பாக்களை நாங்கள் எப்போதும் நேசிப்போம்!

-Apr 20, 2007-

3 comments:

Anonymous said...

vanmuRaikaLin veRumai...
hoplessly hopeless world...

JK

Anonymous said...

அப்பாக்களை அதிகளவு வெறுப்பதாய் அல்லது அளவுக்கு மீறி நேசிப்பதாய் பதிவுசெய்யப்படும் எழுத்துக்களிலிருந்து இது சற்று வேறுபடுகிறது. பலவீனங்களுடன் உள்ள அப்பாககளை அவர்களின் இருத்தல்களோடு ஏற்றுக்கொள்ளமுடியுமென கடைசி இரு பத்திகளும் கூறுவது பிடித்திருக்கிறது.

நிவேதா/Yalini said...

ஜே.கே, துவாரகன்..

பின்னூட்டங்களுக்கு நன்றி!