Thursday, May 18, 2006

காடுகளால் கடத்தப்பட்டவர்கள்

- சில உணர்தல்களும் என் மீளசைவும்

உனக்கு நினைவிருக்குமோ என்னமோ...
இதே போன்றதொரு நாளில்தான்
எமது சந்திப்பும் நிகழ்ந்தது..,
மின்காந்த அலைகளின் இரைச்சல்களினூடு..
வார்த்தைகள் பரவ மறுத்த வெளிகளெங்கும்
எம் ஆன்மாக்கள் உலாவித் திரிந்தன.

அலரிப்பூக்கள் தூவி ஆசீர்வதிக்க
தேவதைகளும் தயங்கி நின்றாலும்..,
நினைவுக் குவியல்களில் இடறுண்டு,
பயமெனும் பாதாளம் நோக்கி
அருவியாய்ப் பாய்ந்துகொண்டிருப்பவளின்
நீட்டிய கரங்களை
இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறாய்.

அவஸ்தா தேவியாய்
உன்னை ஆட்டிப்படைத்துக்
கொண்டிருக்கிறேனென்பது
புரிந்தாலும்..,
மீட்டெடுக்க முனையும்
உனது ஒவ்வொரு எத்தனிப்பையும்
என் பிடிவாதங்களால்
வீணாக்கிக் கொண்டிருந்தாலும்..,

உன் பிடி நழுவிவிடுமொரு பொழுதில்..
இன்மைகளினூடுதான்
என்னைக் கண்டுகொள்ள வேண்டிநேரும்.
என்னை விட்டுவிடாதே...
விட்டுவிடாதே..
விட்டுவிடாதே..

இருத்தல்களின் நெரிசல்களில் சிக்குண்டு
இறந்தே போய்விடுவேன்
என் அன்பே,
என்னை விட்டுவிடாதே..

காடுகளுக்குள் காலடியெடுத்து வைத்திருக்கிறீர்களா நீங்கள்.., எப்போதாவது? நெடிதுயர்ந்த மரங்களின் உயரத்தினை அளவிடும் முயற்சியில் விழிகளும் சுளுக்கிக்கொள்ள.., இடைக்கிடை தலைகாட்டும் மெல்லிய ஒளிக்கீற்றுக்களையும், இருள் விழுங்கி ஏப்பம் விட்டபடியிருக்க.., செவிப்பறைகளைத் துளைக்கும் சில்லூறுகளின் இரைச்சல்களினூடு... மதம் பிடித்தலையும் யானைகளின் தடங்களைப் பின்பற்றியிருக்கிறீர்களா.., எவராவது?

காடுகள் மர்மமானவை.

இப்போது நீங்கள் தொடரும் வழித்தடம் யானையினுடையதாகவிருந்தாலும்... சில அடிகளுக்கப்பால் அது நீர்யானையாவதையும்.. பின்னர் காண்டாமிருகமாவதையும்.. அதன் பின்னர் காட்டுப்பன்றியாகி.. குரங்காகி.. மானாகி.. இறுதியில், சிறுத்தைப் புலியாகி.. ஒரு பாழடைந்த குகையில் வந்து முடிவடையக்கூடுமென அனுமானித்தீர்களென்றால்.., நீங்கள் உயிர்வாழ்வதற்கான எவ்வித அருகதையுமற்றவர்கள்.

தடங்கள் புதிர் நிறைந்தவை.

காட்டுத் தடாகங்கள் குறித்து எப்போதும் விழிப்புடனிருங்கள். உங்கள் தடங்கள் தடாகங்களுக்கு இட்டுச்செல்லக்கூடுமென உள்ளுணர்வு எச்சரிக்குமாயின்.., பாதைகளை விட்டு விலகியே நடவுங்கள். நீங்கள் அறியாவிட்டாலுமேகூட அநேகமாக காடுகளின் மர்மங்கள் தடாகக் கரைகளில்தான் புதையுண்டு கிடக்கின்றன.

தடாகங்கள் விபரீதமானவை.

செஞ்சொண்டுக் காக்கைகள் பொய்யுரைப்பதில்லையென்பதை எவரும் சந்தேகிக்காதவரை.. நான் கூறுபவையனைத்தையும் நீங்கள் நம்பித்தானாக வேண்டும்.


அறிதல்களுக்கு அப்பாற்பட்ட அறிமுகங்கள்

இன்றைக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர்.. இன்னமும் கடந்திராத எதிர்காலப்பொழுதொன்றில்.., இப்படிப்பட்டவொரு தடாகத்தில்தான் நாங்கள் சந்தித்துக்கொள்ள நேர்ந்தது. அவன் செஞ்செட்டை மீனாகவும்... நான் தூண்டில் புழுவாகவும். மீன்களனைத்தும் புழுக்களையுண்பனவென்ற என் கற்பிதங்கள் தாறுமாறாக உடைந்து சிதறியதும் அந்தக்கணத்தில்தான். மீனாகிய அவன் அல்லது அவனாகிய மீன்.. புழுவாகிய நான் அல்லது நானாகிய புழுவை.. கடித்துக் குதறாததை விடவும் என்னை வருத்தியது.., பிற மீன்களின் கூரிய பற்களின் முனையிலிருந்து பாதுகாப்பதற்காகத் தனது சிவப்புநிறச் செட்டைகளினிடுக்கில் என்னைக் காவியபடி அவன் அலைந்ததுதான். அவ்வப்போது அவன் நீந்தும் வேகம் மந்தமடையும் போதும்.. மூச்சிரைக்க அவன் இளைப்பாறும் போதும்.. குற்றவுணர்வு பிடுங்கித் தின்னும்.., என் கனங்களால் அவனை இன்னுமின்னும் அழுத்திக் கொண்டிருக்கிறேனோவென்று.

ஆனால்.., செஞ்செட்டை மீன்கள் கனங்கள் குறித்துக் கவலைப்படுவதில்லை.


ஏதுமற்றுப்போன பூர்வீகங்கள்

இவ்வாறாக, நாங்கள் ஆழ்மணற் பரப்பில் உலாவிக்கொண்டிருந்த காலை... மந்திரவாதியொருவனால் எமது தடாகம் ஆக்கிரமிக்கப்பட்டுவிட, எதிர்காலத்திலிருந்து ஏதுமற்றுப்போன எமது பூர்வீகங்கள் நோக்கி நாம் பயணிக்கத் தலைப்பட்டோம்.., அவன் ராஜ்யத்தையும், ராணிகளையும் இழந்த அரசிளங்குமரனாகவும்.. நான் துடைப்பங்கட்டையேந்திய சூனியக்காரியாகவும்.

தடம் 01 - மந்திரவாதிகளை அவதானித்தல்

எமது தேசங்களை கடவுளரும், அவர்தம் நியதிகளும் கைப்பற்றிக்கொண்டவொரு நாளில், எமது மனிதத்துவங்களைத் தூக்கியெறிந்துவிட்டுக் காடுகளுக்குள் தஞ்சம் புகுந்தோம் நாம்.., அவை காலங்காலமாக மந்திரவாதிகளால் ஆளப்பட்டு வருபவையென்பதை மறந்து...

ஒருகாலத்தில் நானுமொரு மனிதையாயிருந்தேனென்பது உண்மையெனில்.., அப்போதெல்லாம் இவர்கள் அறிவுஜீவிகளென அழைக்கப்பட்டார்களென்பதும் உண்மையே. எழுத்தாகிய மந்திரக்கோலைக்கொண்டு இவர்கள் நுழையாத இடமில்லை.. பண்ணாத அட்டகாசங்களுமில்லை. அதன் ஒவ்வொரு அசைவிலும் ஆயிரமாயிரம் சுயங்கள் அறுபட்டு வீழ்ந்தன; எண்ணற்ற ஆன்மாக்கள் காயமுற்றுச் சிதைந்தன.

அக்கோல் நான்கு கோடுகளைக் கீறிக்கொள்ளும்.. சமயங்களில் ஒருவட்டத்தை. இக்கோடுகளையோ, வட்டத்தையோ கடந்தவை.. அவை என்னவாயிருந்தாலும் நியாயத்திற்குப் புறம்பானவை அல்லது கீழ்த்தரமானவையென முத்திரை குத்தப்பட்டு காரசாரமான விவாதங்கள் இடம்பெறும்.. முளையிலேயே கிள்ளியெறியப்படும். தலை மற்றும் இருக்கை குறித்த அச்சங்களால் பீடிக்கப்பட்டவர்களெவரும் மந்திரக்கோல் வீச்சுக்களின் நியாயப்பாடுகள் குறித்து ஆராயப்புகுவதில்லை. உண்மையைக் கூறுவதானால் ஏறக்குறைய எல்லாருமே நோயில் வீழ்ந்தவர்கள்தான்.

மந்திரக்கோலாட்சியை முடிவுக்குக் கொண்டுவரவே.. நான் துடைப்பங்கட்டையேந்தி சூனியக்காரியானேனென்றால் நீங்கள் நம்பிவிடுவீர்களா, என்ன?

தடம் 02 - இளவரசர்களின் வருகை

வெண்புரவியின் மீதேறி வலம்வரும் இளவரசர்களுக்காகக் காத்திருக்காதீர்கள் பேதைகளே.. இப்போதெல்லாம் இளவரசர்கள் கட்டெறும்புகளின் மீதுதான் பயணிக்கிறார்கள். மந்திரவாதிகள் பறக்கும் கம்பளங்களில் உலாப்போகத் தொடங்கியபின், இளவரசர்கள் குதிரையேறுதல் எங்ஙனம்..?

ராஜ்யத்தையும், ராணிகளையும் கடவுளரிடம் பறிகொடுத்துவிட்டு காடுகளை நாடிவந்தார்கள்.., எமது இளவரசர்கள். என்னே, பரிதாபம்! கடவுளரால் கைப்பற்றப்பட்ட தேசங்களைவிடவும், காடுகளில் கொடுங்கோலாட்சி நிலவிவந்தது... மந்திரக்கோல்களின் கொடுங்கோலாட்சி.

சூரியன் அஸ்தமிக்காத காடுகளிலெல்லாம், மான்கள் மனிதர்களை வேட்டையாடுகின்றனவாம்.

தடம் 03 - இறுதியாய் ஒரு மன்றாடல்

சூனியக்காரியாய்ப் பிறந்தவளில்லை, நான். எனினும் காடுகள் எனது 'என்னை' அனுமதிக்காதபடியால், அவ்வாறு வாழ நிர்ப்பந்திக்கப்பட்டேன். சிண்டு விழுந்த பரட்டைச் சடையும், வெறிகொண்ட விழிகளும், கோரைப்பற்களினூடு வழியும் குரூரப் புன்னகையும், எக்காளச் சிரிப்பும் வெறுப்பிற்குரியவைதான்.

ஆனாலும், சூனியக்காரிகளுக்குக் கால்கள்தான் இல்லாமலிருக்கலாம்.. இதயங்கள் கூடவா இல்லாமற் போகும்?

அன்று நானும் அவனைப் பார்த்தேன்.., அரியணையில் அமர்ந்த நிலையில்.. வாட்களின் முனைகளில் நழுவிய கிரீடத்துடன். ராஜ்யத்தையும், ராணிகளையும் இழந்துவிட்டதாக வருந்திக்கொண்டிருந்தவனின் தலைமயிரினிடை விரல் நுழைத்து.., கன்னவெளியெங்கும் தென்றலாய்த் தவழ்ந்து... கவிதையெழுதிவிடத் தவித்தது மனம்.

நானொன்றும் கவிஞையில்லைதான்... இருந்தாலும், சூனியக்காரியாகவேனும் அருகிலிருக்க அனுமதிப்பாயா, என்னை?