வேடிக்கை மனிதர்கள்...
இவர்கள்
பண்பாடு பறிபோவதாய்,
போலிக் கலாச்சாரம் உருக்குலைவதாய்..
கூச்சலிடும் போதெல்லாம்
காறி உமிழத் தோன்றும்..
கோபத்தில் கண்கள் சிவந்தும் போகும்.
இலக்கியங்கள் எடுத்துக்கூறும்
சிறுவர்மீதான அத்துமீறல்களும்,
பாலியல் சேட்டைகளும்
புறக்கணிக்கப்பட்டுவிட..,
இன்னமும்.. இல்லாதுபோன
புனிதத்துவத்தைக் காப்பாற்றப்
போராடிப் புண்ணாகிறார்கள்.
என்ன தெரியும் இவர்களுக்கு..?
தமிழரின்
நாகரிகங்கள்(?!) தெரிந்திருக்கும்..
வீறுகள் தெரிந்திருக்கும்..
அவற்றை மீறிய கழிசடைகளும்,
தந்திரமாய் புதைக்கப்பட்ட அசிங்கங்களும்
எத்தனை பேருக்குத் தெரியும்..
எத்தனை பேருக்குப் புரியும்..
இருக்கலாம்.. உலகின் தொன்மை வாய்ந்த பழம்பெரும் நாகரிகங்களுள் ஒன்றாய் எமதும் இருக்கலாம்.., தனக்கேயான எத்தனையோ சிறப்புக்களுடன், எத்தனை எத்தனையோ தனித்துவங்களுடன். ஆயினும், சில பிரபலங்கள் திருவாய் மலர்ந்த ஓரிரு வார்த்தைகள் காரணமாகவும்.. சில கவிஞர்கள் எழுதிவிட்ட ஓரிரு வரிகள் காரணமாகவும் - துரதிர்ஷ்டவசமாக இவர்களனைவரும் பெண்களாய்ப் பிறந்தபடியால் - தமிழர்களது முழுமொத்தப் பெருமைகளும் சீர்குலைவதாய் பல 'பண்பாட்டுப் பாதுகாவலர்கள்' புலம்பிக்கொண்டு திரிவதைக் காணநேரும் போதெல்லாம் எம் தமிழ்ச்சமூகத்தின் புனிதத்துவம் குறித்தான சந்தேகங்களும், கேள்விகளும் இன்னமும் ஆழமாக வேர்விட்டு வெளிக்கிளம்பத் தொடங்குகின்றன, என்னுள்.
தமிழிலக்கிய வரலாற்றின் வளர்ச்சிப்பாதைகளின்வழி சற்றுப்பின்னோக்கி நகர்ந்தோமானால்.. சற்றுக் கடும்பிரயத்தனத்துடன் முயன்றோமானால்.. எம் பண்பாட்டுப் புனிதங்களுக்குள் புதையுண்டுபோன சில நரகல்களையும் அடையாளங்கண்டுகொள்ளலாம். தமிழிலக்கியங்களின்வழி தெரியவரும் சங்ககால மக்களின் வாழ்வுநெறியில் முதன்மைபெறுவது அன்பினைந்திணை எனப்படும் காதலொழுக்கமும், வீரவொழுக்கமும்தான். அன்பினைந்திணைக்குக் கீழ் வருகின்ற கைக்கிளை - பெருந்திணை எனப்படுகின்ற பிரிவுகளே இங்கு கவனத்திற்கொள்ள வேண்டியவை. ஏனைய தூய, கருத்தொருமித்த காதலொழுக்கங்களைப் பற்றி இனியும் புதிதாகப் பேசுவதற்கு ஒன்றுமேயில்லை என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
கைக்கிளை - பெருந்திணை இரண்டுமே சமூக நியமங்களை மீறிய பிறழ்வுகள் அல்லது புறநடைகளெனக் கருதத்தக்கவை. "இவையிரண்டும் காணப்படும் எந்தவொரு சமுதாயமும் நாகரிகமடைந்த சமுதாயமென அழைக்கப்படுவதற்குத் தகுதியானதல்ல" என்ற பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கூற்று இங்கு மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியவொன்றாகும்.
பெருந்திணையெனப்படுவது பொருந்தாக்காமம். அதாவது மிக வயதுகூடிய ஆடவனொருவன் தன்னிலும் பலமடங்கு வயதுகுறைந்த பெண்ணொருத்தியிடம் (சிறுமி) மிக்க காமத்தனாகி அவளை அடையப்பெறாது மடலேறுதல், வரைபாய்தல் முதலிய தற்கொலை முயற்சிகளை மேற்கொள்வதாகும்* (இங்கே தற்கொலையென்பது அவ்வளவு அவசியமானவொரு நிபந்தனையல்ல).
ஒருதலைக்காமமெனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் கைக்கிளைக்குத் தொல்காப்பியம் கூறும் வரைவிலக்கணம் கீழ்வருமாறு:
கைக்கிளை ஆமாறு
காமஞ் சாலா இளமை யோள்வயின்
ஏமஞ் சாலா இடும்பை யெய்தி
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே.
(தொல்காப்பியம். சூத்திரம் - 53)
மீதூரப்பெற்ற காமத்தால் மிகு துன்பமெய்திய ஆடவனொருவன் நன்மை, தீமையினைப் பகுத்தறியும் திறனையும் இழந்தவனாய் தன்னிலும் வயதுகுறைந்த, பருவமெய்தாத பெண்ணொருத்தியுடன்.. அவளிடமிருந்து எந்தவொரு மறுவார்த்தையோ, துலங்கலையோ எதிர்பாராதவனாக பலவாறெல்லாம் சொல்லி இன்புறலே கைக்கிளையாம்.
தமிழர் வரலாற்றின் பொற்காலமெனக் கருதப்படும் சங்ககாலத்தைய தமிழர் சமுதாயத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் (child abuse) இருந்தமைக்கான தெளிவான சான்றுகளாகின்றன கைக்கிளையும், பெருந்திணையும். இன்றைய நவநாகரிக உலகில் மிகக்கேவலமான விடயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் சிறுவர் துஷ்பிரயோகத்தினை கி.பி. முதல் 3 நூற்றாண்டுகளிலிருந்தே கட்டிக்காப்பாற்றிக் கொண்டுவந்த எம் சமூகத்தின் பண்பாட்டுப் பெருமிதங்களையும்... சில ஆபாசப் பெண்கவிஞர்களின் பிடியிலிருந்து அதனைக் காப்பாற்ற முனையும் பாதுகாவலர்களையும் நினைக்கும்போது மெய்சிலிர்த்துப் போவதைத் தவிர்க்கமுடிவதில்லை!
இவை மிகச்சாதாரணமான இரு உதாரணங்கள்தான். மற்றும்படி, இடைக்காலங்களில் நிலவிய தேவதாசிமுறையையும் - இதனை சிறுவர் துஷ்பிரயோகமென அடையாளப்படுத்த முடியாவிட்டாலும்கூட - எமது தமிழினத்தின் மாபெரும் கேவலங்களில் ஒன்றாகவே கருதவேண்டும். இன்று மேற்கத்தையவர்களால்கூட போற்றப்படுகின்ற எம் பண்பாட்டுச் சின்னங்களுள் ஒன்றான பரதநாட்டியம் காலனித்துவக் காலங்களின்போது சிதைந்தொழிந்து போகாமல் காப்பாற்றப்பட்டது இந்தத் தேவதாசிகளால்தான். ஆனால் சமூகம் அவர்களுக்குக் கொடுத்திருக்கின்ற அந்தஸ்தும், கௌரவமும் ஏற உதவிய ஏணியை எட்டி உதைப்பதற்கு சமானமாகவேயிருக்கின்றது.
இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ... சற்றுப் பிரபலமான பெண்கள் கூறிய வார்த்தைகளாலும், சில கவிஞர்களின் வரிகளாலும் பண்பாடு அழிவதாகவும் தொன்றுதொட்டுவந்த பெருமைகள் சீர்குலைவதாகவும் கூக்குரலிடுவதற்கு முன் எம் சமுதாயத்தின் பலவீனங்களையும், அவலங்களையும் தெரிந்துகொள்தல் சிறிது நலம்பயக்கக்கூடும்.
இழப்பதற்கும் பெருமைகள் இருந்தாக வேண்டுமில்லையா..?
**தெரியும்,
உங்கள் சரித்திரங்களில்
எங்களுக்கு இடமில்லை.
ஆனாலும் படிப்போம்
உங்கள் அழுகல்களை..,
பாவங்களை..
மறைக்கப்பட்ட உண்மைகளைக் காண,
நிம்மதிகொள்ள.
* நன்றி:- வி.செல்வநாயகம்
**நினைவில் நின்றது
(பேராசிரியர் கா.சிவத்தம்பிக்கு சிறப்பு நன்றிகள்)
Thursday, January 12, 2006
Subscribe to:
Posts (Atom)