சுய ஆதிக்கத்திலிருந்து
மனம் நழுவிப் போன தருணங்களில்
உணர்ந்திருக்கிறேன்
கணங்களின் மகத்துவத்தை...
ஏதோவொரு புள்ளியில்
பிரக்ஞையும் தொலைந்துவிட
நினைவுகளின் பிரவாகிப்பில்
ஆன்மாவின் ஒவ்வோர் அணுவும்
அள்ளுண்டு போவதை
குரூரங் கலந்த சந்தோஷத்துடன்
ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்திருக்கிறேன்
துள்ளித் திரிந்த பருவமதில்
ஏதோ ஹோர்மோன் மாற்றத்தைச்
சாட்டாகக் கொண்டு
எல்லைகள் குறுக்கப்பட்ட போதும்...
இன்னமும்
ஆண்களுக்கே உரித்தாயிருக்கும் இப்பூமியின்
ஒவ்வொரு சதுர அடியிலும்
உரிமைகள் மறுக்கப்பட்ட போதும்...
செருக்கோடு தலைநிமிர வைத்த
புனிதமான பெண்மையே
'கற்பு' என்ற பெயரில்
பலவீனமாக்கப்பட்ட போதும்...
பாதுகாப்பென்றும்,
இன்னபிற காரணங்களென்றும்,
போலி அரிதாரங்களுக்குள்
தேவைகளும் விருப்பங்களும் முடக்கப்பட்ட போதும்...
இவர்களின்
பெண்ணென்ற வெறும் உடல் பிண்டத்துக்குள்
ஆளுமையும், தனித்துவமும்
வெளித்தெரிய முடியாதபடி புதையுண்ட போதும்...
விடுபடலுக்கான எத்தனிப்பின்
ஒவ்வொரு
தோல்வியின் முடிவிலும்
கட்டுக்கள் மேலும் இறுக்கப்பட்ட போதும்...
இதே போல்... இதையே போல்
கைகட்டி வாய்பொத்தி
வெறுமனே வேடிக்கை பார்த்தவாறு
நின்றிருந்திருக்கிறேன்
களங்கமற்ற புன்னகைகள்
களவாடப்படுகையிலும்...
கறைபடியாக் கனவுகள்
சிதைந்தே போகையிலும்...
சில ஆணாதிக்க முதலைகளை
சந்திக்க நேர்கையிலும்...
அறியாமையில் சிக்குண்ட
அபலைகளை எண்ணுகையிலும்...
என் கையாலாகாத்தனத்தை நொந்து
உள்ளம் வெதும்பியிருக்கிறேன்
பெண் சுதந்திரம்
வெறும் படபடக்கும்
காகிதக் குவியல்களால்
தீர்மானிக்கப்படுவதையும்...
எமது அறிவும், ஆற்றலும்
அர்த்தமற்ற சில எண்களால்
மதிப்பிடப்படுவதையும்...
குனிந்த தலையுடன்
மௌனமாகவே அங்கீகரித்திருந்திருக்கிறேன்
உள்ளத்தின் தகிப்பு...
உணர்வுகளின் உக்கிரம்...
விழிச் சாளரங்களினூடாக வடிந்தொழுகுகிறது
வெறும் நீர்த்துளிகளாகவல்ல..,
சுட்டெரிக்கும் அக்னித்துளிகளாய்...
விழிநீருக்கே இத்தனை வெம்மை வாய்த்திருக்கையில்
என் அடிமனத்து ஆழங்களில்
இன்னும் எத்தனை ஆயிரம் அக்னிப் பிளம்புகள்
நர்த்தனமாடிக் கொண்டிருக்க வேண்டும்..?
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கவிதையென்றெண்ணி எதையாவது எழுதுபவர்கள், கண்டிப்பாக ஒருமுறை இதை வாசிக்கவேண்டும்...
வாசிக்கையிலேயே... வெம்மை தகிக்கிறது.
உண்மைதான் பெண்மதி.. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அன்பு, பாராட்டுக்களுக்கு நன்றி.
Post a Comment