Sunday, November 20, 2005

முதல் மடல்....!!

வளையங்களை அறுத்தெறியவும்... விட்டு விலகியோடவும் துடிக்கும் ஒரு உள்ளத்தின் குரல்:

இவ்வலைப்பதிவைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் தோழருக்கு இனிய வந்தனங்கள். இணையத்தளத்தில் எனக்கானவொரு அடையாளத்தைப் பெற்றுக்கொண்ட அற்புதமான இத்தருணத்தில் என் மெய்சிலிர்ப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்வடைகிறேன்.

இவ்வலைப்பதிவின் தலைப்பு உங்கள் சிந்தனைகளைக் கிளரக்கூடும். இத்தலைப்பினைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணத்தினை நானே சொல்லிவிடுகிறேன்.

கர்நாடக சங்கீதத்துடன் நெருங்கிய தொடர்புடைய தலைப்பு இது. இசையறிவுடையவர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்றுதான். "ரேகுப்தி" என்பது மோஹன ராகத்திற்கு முற்காலத்தில் வழங்கப்பட்டு வந்த பெயராகும். அதென்ன, மோஹன ராகத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறேனேயென யோசிக்காதீர்கள். இது புராதன ராகங்களிலொன்று. முல்லைப்பண் எனவும் அழைக்கப்படுகின்றது. இரவு நேரத்தில் பாடுவதற்கு மிகவும் உகந்ததாக இவ்விராகம் கருதப்படுகின்றது. மோஹனத்தின் ரஞ்சகத்தன்மைக்கு இதைவிடவும் சான்றுகள் வேண்டுமா என்ன? மேலும், தென்னிந்திய இசை தவிர பிறநாட்டு சங்கீதங்களிலும் இடம்பெறும் பெருமை இதற்கேயுரியது. மாணிக்கவாசகரின் திருவாசகம் தொன்றுதொட்டு இவ்விராகத்திலேயே பாடப்பட்டு வருவதும் இதன் தனிச்சிறப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

இவற்றையெல்லாம் வாசித்துவிட்டு இவ்வலைப்பதிவு முழுக்க முழுக்க இசை பற்றியதென்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். காலங்களையும் கடந்து நிலைபெற்றிருக்கின்ற..., சர்வ வியாபகத்தன்மை வாய்ந்த..., உள்ளம் நெகிழும் உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடிய ஒன்றன் பெயரை எந்தன் வலைப்பதிவுக்குத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்ததில் தவறில்லையே...?

மழைக்கால அந்திவேளையொன்றில் பாட மறுத்த ஊமைக்குயிலின் குரல்வளையின் ஆழத்தில் சிக்குண்ட கானங்களைப் பற்றியவை எனது பதிவுகள்... கரைசேர முன்னரே காணாமற்போன அலைகளின் ஓலங்களைப் பற்றியவை எனது பதிவுகள்...

பதிவுகளை ரசிப்பதோடு, உங்களைப் பற்றியதான தடயங்களையும் விட்டுச்செல்ல வரவேற்கிறேன்.

- நிவேதா

5 comments:

சினேகிதி said...

\\கரைசேர முன்னரே காணாமற்போன அலைகளின் ஓலங்களைப் பற்றியவை எனது பதிவுகள்...\\
ippathan ungada blog ku vanthirukiren.nalla iruku.

கொழுவி said...

தடயங்களை விட்டுச் செல்லுறது எனக்கு அவ்வளவு சரியாத் தெரியேல.

Anonymous said...

நன்றி சினேகிதி. கொழுவி, என்னுடன் கொழுவப் plan போல. உங்கள் பின்னூட்டங்களைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன். feman, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.. வரவேற்கிறேன்.

த.அகிலன் said...

பரிய சிநெகிதி நிவேதாவுக்கு ஒரு நாள்
திடீரென்று அதியசத்தைப்போல உங்கள் வலைப்பூவைப்பார்க்க நோர்ந்து. முதல் மடலிலில் இருந்து முழவதும் படிக்கும் அவா உண்டு(இன்னும் மடியவில்லை) ஆனால் உங்கள் எழுத்துக்களின் வசீகரம் என்னை விழுங்ககிறது.ராகங்களில் ஈடுபாடு என்பது ரசிக்கத்தக்கது வாழ்த்துக்கள் தங்கள் கருத்துக்கள் எனக்கு முழுவதும் உடன்பாடென்றில்லை. ஆனால் வாசிக்கிறேன் சில புதிய புரிதல்களும் ஏற்பட்துண்டு.ம் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.வாழ்த்துக்கள் தொடருங்கள்.

நிவேதா/Yalini said...

நன்றி அகிலன்! எல்லாரது கருத்துக்களுடனும் எல்லாரும் உடன்பட்டுத்தானாக வேண்டுமென்பதில்லைதானே.. அதற்கு நீங்களும் நானும்கூட விதிவிலக்கல்லவே..