Thursday, November 24, 2005

கனத்துப்போன நினைவுகள்...

"எனை உறுத்தும் நினைவுகளைச் சொல்வேன்
நொந்துபோன என் நாட்களின்
வேதனைச் சுமையினைச் சொல்வேன்
சிதழூறும் காயங்கள் பேசும் மொழியினில்
என்னைப் பேசவிடுங்கள்"
- அஸ்வகோஸ்

இந்த மனிதர்களுக்கும் எனக்குமிடையிலான உறவு எப்போது ஆரம்பமானது? கருவறைக் காலத்திற்கும் முன்பாய் இருக்கலாம். இவர்கள் புகைத்தெறிந்த சிகரட்டைச் சுற்றியிருந்த காகிதத்தைத் தயாரிக்கப் பயன்பட்ட, வைக்கோலாய் இருந்திருப்பேனோ நான்.......?! வார் அறுந்ததென இவர்கள் வீசியெறிந்த செருப்பு என் தோலால் செய்யப்பட்டிருந்திருக்குமோ.......?! fashion போய்விட்டதென இவர்களால் வெறுத்தொதுக்கப்பட்ட மேற்சட்டையின், உற்பத்திக்கு ஆதாரமாயிருந்த பருத்திப் பூவோ நான்.......?! வைக்கோலாய்...., மிருகமாய்...., பருத்திப் பூவாய் நானிருந்தபோது இவர்கள் இப்போதிருக்கும் இதே மனிதர்களாகத்தான் இருந்தார்களா அல்லது இவர்களுடனான சில கசந்துபோன அனுபவங்கள்தான் என் சிந்தனையை இவ்வாறெல்லாம் தூண்டுகின்றனவா?

எல்லாப் பெண்களையும் போல நானும் நேசித்தேன் ஒருவனை, உயிருக்குயிராய்... எதனிலும் மேலாய். ஆனால், என் மிகையான வெறுப்புக்கு இலக்காகியிருந்த ஆணாதிக்க வர்க்கத்தின் பிரதிநிதிகளில் அவனும் ஒருவனென்பதை நான் மறந்துவிட்டிருந்தேன். எனதேயெனதான உலகினில் வாழ்வதற்கான என் உரிமையை மறுத்த கயவர்களில் ஒருவன் அவனென்பதையும் உணரத் தவறிவிட்டிருந்தேன். ஆணாதிக்கத்தின் விஷவேர் அவனது அடிமனத்திலும் ஆழ ஊடுருவியிருந்தது. எம் சமூகத்தின் மரபார்ந்த போலி விழுமியங்களும், மூடக்கொள்கைகளும் அவனது இரத்தத்திலும் இரண்டறக் கலந்திருந்தன. இறுதிவரை அவனது தேவைகளும், எதிர்பார்ப்புகளும் என்னாலும் எனது உணர்வுகளும், ஏக்கங்களும் அவனாலும் புரிந்துகொள்ளப்படாமலே போயின. தூய, வெண்மையானதென நான் கருதியிருந்த அவனது ஆன்மாவில் ஆணாதிக்கப் புழுதிகள் படிந்தன... பின்னென்ன...., பிரிவது நிச்சயமாயிற்று.

இப்படித்தான் இன்னுமின்னும் அதிகமாக ஆண்களை வெறுக்கப் பழகிக் கொண்டேன், நான்.

மற்றுமொருநாள், நெரிசலான பேருந்துப் பயணத்தினூடு என் வயதொத்த இளைஞனொருவனின் வேண்டாத சில்மிஷங்கள் எல்லைமீறவும் அனிச்சையாய் ஓங்கிய என் கையைத் தடுத்து நிறுத்தின அவனது வார்த்தைகள்: "இவ்வளோ பத்தினிப் பொம்பளையா இருந்தா, பேசாம ஹெலிகொப்டரில போயிருக்க வேண்டியதுதானே." ஒருகணம் அதிர்ந்தே போனேன். என் விருப்பத்தைக் கேளாமலேயே தொங்கிப் போனதென் தலை. அவமானத்தினாலா அல்லது இயலாமையினாலா என்பதை ஆராயும் நிலையில் நானிருக்கவில்லை. ஆனாலும், பத்தினிப் பெண்கள் அனைவருமே பணக்காரிகளல்லர் என்பதை எப்படிப் புரியவைப்பேன், அவனுக்கு? 'ஹெலிகொப்டரில் போகுமளவுக்கு வசதி படைத்த பணக்காரிகள் மட்டும்தான் பத்தினிப் பெண்களாயிருக்க முடியும்; உலகத்திற்கு முகங்கொடுக்கத் துணிந்த பேருந்தில் பயணிக்கவும், தெருவில் நடந்து செல்லவும் முன்வருகின்ற ஏனைய பெண்கள் விபச்சாரிகளாகவேயிருந்தாக வேண்டும்' என்ற அவனது கருத்தியலின் நியாயத்திற்குப் புறம்பான தன்மையையும், அதை ஏற்றுக்கொள்ள முடியாத என் போன்ற மத்திய வர்க்கத்துப் பெண்களின் இயலாமையையும் எப்படித்தான் எடுத்துரைப்பேன், அவனிடம்?

இவ்வாறுதான் மனிதர்களைக்கண்டு அருவருப்படையத் தொடங்கினேன், நான்.

பாட்டியின் இறுதிக்கிரியைகள் நடந்தேறிய நாள். அதில் கலந்துகொள்ளுமுகமாக நகரத்து நெரிசல்களிலிருந்து விடுபட்ட நிம்மதியுடனும், மிகவும் பிரியத்திற்குரிய பாட்டியைத் தொலைத்துவிட்ட வேதனையுடனும் நெடுங்காலத்துக்குப் பின்னர் என் பிறந்தகமான அந்தப் பிற்பட்ட விவசாயக் கிராமத்திற்குப் போய்ச்சேர்ந்தேன். நான் பிறந்த சிலமாதங்களுக்குள்ளாகவே என் பெற்றோர் சொந்த ஊரிடமிருந்து விடைபெற்றுவிட்டபடியால் கிராமத்து வாசனையறியாமலேயே வளர்ந்திருந்தேன். ஆகையால் எத்தனையோ எதிர்பார்ப்புகளாலும், நெஞ்சுகொள்ளாக் கவலைகளாலும் நிறைந்திருந்தது மனம். வீட்டில் செய்யவேண்டிய சடங்குகள் முடிந்ததும், தகனக்கிரியைகளுக்காக பாட்டியின் உடல் சுடலைக்கு எடுத்துச்செல்லப்படுகையில் பெண்ணென்ற ஒரே காரணத்திற்காக அவரது உடலைப் பின்தொடர்வதற்கான அனுமதி எனக்கு மறுக்கப்பட்டது. பாடையில் செல்வது பெண்ணாயிருந்தும் பாடையைத் தொடர்ந்துசெல்லப் பெண்களுக்கு அனுமதியில்லை. வேடிக்கைதான்... ஆனாலும் இவை தெய்வநியதிகள்; நூற்றாண்டுகாலமாகத் தொடர்ந்துவரும், எம் சமூகத்தினரின் புனிதமான நம்பிக்கைகள்... சம்பிரதாயங்கள். எதிர்த்துக் கேள்விகேட்க எனக்கென்ன தகுதியிருக்கின்றது? இருந்தும்... என்னையும், எனது பெண்மையையும் மதிக்கத் தெரியாத சமூகத்தையும், அதன் நியதிகளையும் நான் மட்டும் மதிக்கவேண்டுமென அவர்கள் எவ்வாறு எதிர்பார்க்கலாம்?

ஆகையினால்தான் இந்தப் போலி அரிதாரங்களையெல்லாம் அலட்சியப்படுத்த ஆரம்பித்தேன், நான்.

ஆழிப்பேரலையின் கோரதாண்டவம் அரங்கேறி முடிந்த சிலதினங்களுக்குப்பின் சேகரித்த நிவாரணப்பொருட்களோடு இலங்கையில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசமாகிய மட்டக்களப்பிற்கு சில NGO நண்பர்களோடு பயணமானேன். அங்கே ஒரு அகதிமுகாமில், விநியோகிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களைப் பெறுவதில் ஒரு கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்க, அந்தச் சந்தடிகளுக்கப்பால் சில சிறுவர் எதிலும் கலந்துகொள்ளாமல் கனத்தமௌனத்துடன் வேடிக்கைபார்த்திருந்தமை உள்ளத்தை உறுத்த, சற்று நகர்ந்து அவர்களிடம் பேச்சுக்கொடுக்கலானேன். கடல்கொந்தளிப்பில் பெற்றோரிருவரையுமிழந்து 3 வயதுத் தம்பியுடன் அமர்ந்திருந்த சரண்யா என்ற 11 வயதேயான சிறுமியிடம் ஏதாவது வேண்டுமாவென்று கேட்டதற்கு, "ஒன்றுமே வேண்டாம் அக்கா, நீங்க கேட்டதே போதும்" என்ற அவளது பதில் எந்தக் கல்நெஞ்சத்தையும் அக்கணம் உருகச்செய்திருக்கும்.

ஒருபக்கத்தில், ஒருவேளை உணவுக்கே அடுத்தவர் கையையெதிர்பார்த்திருக்கும் இவ்வகதிகள். மறுபக்கத்திலோ, உண்டுகொழுத்த தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சி நிலையங்களைநாடி பணத்தையும், சக்தியையும் விரயமாக்கும் உயர்வர்க்கத்தினர். எல்லாமே இருந்தும் திருப்தியடையா உள்ளத்தோடு மேலும் மேலும் அப்பாவி மக்களைச் சுரண்டியும், ஏய்த்தும் பொருள்சேர்க்கும் முதலாளிகள் ஒருபுறம். மறுபுறத்திலோ, உயிரைத்தவிர எல்லாவற்றையும் கடல்கொண்டு போனபின்பும் சில ஆறுதல்வார்த்தைகளோடு திருப்திகண்ட இந்தச்சிறுமி. ஒருபுறம் சுனாமியால் உடைமைகளனைத்தையுமிழந்து அன்றாடப் பிழைப்பிற்கே அல்லலுறும் மக்கள், மறுபுறம் எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபமென எவரோ கொடுத்த நிவாரண உதவிகளையும் கூட சுருட்ட முயலும் அரசியல்வாதிகள்.

அன்றிலிருந்துதான் கடவுளரின் இருப்பையும் சந்தேகிக்கத் தொடங்கினேன், நான்.

இப்படித்தான்... இப்படித்தான் சமூகவிரோதிகள் உருவாகின்றார்கள். அவர்கள் தாமாகவே அவதரிப்பதில்லை. மனிதவரலாற்றின் வளர்ச்சிக் கட்டங்களில் மனிதத்திற்கான தேவைகள் மலியும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சூழ்நிலைகளாலும், இன்னுமின்னும் பல்வேறு காரணங்களாலும் இப்படித்தான் அவர்கள் கொஞ்சங்கொஞ்சமாக உருவாக்கப்படுகிறார்கள். சமூகத்தின் அங்கத்தவர்களென்றவகையில் நாமனைவரும் இதற்குப் பொறுப்பேற்றேயாகவேண்டும்..!!

Monday, November 21, 2005

பெண்மையின் வெம்மை

சுய ஆதிக்கத்திலிருந்து
மனம் நழுவிப் போன தருணங்களில்
உணர்ந்திருக்கிறேன்
கணங்களின் மகத்துவத்தை...

ஏதோவொரு புள்ளியில்
பிரக்ஞையும் தொலைந்துவிட
நினைவுகளின் பிரவாகிப்பில்
ஆன்மாவின் ஒவ்வோர் அணுவும்
அள்ளுண்டு போவதை
குரூரங் கலந்த சந்தோஷத்துடன்
ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்திருக்கிறேன்

துள்ளித் திரிந்த பருவமதில்
ஏதோ ஹோர்மோன் மாற்றத்தைச்
சாட்டாகக் கொண்டு
எல்லைகள் குறுக்கப்பட்ட போதும்...

இன்னமும்
ஆண்களுக்கே உரித்தாயிருக்கும் இப்பூமியின்
ஒவ்வொரு சதுர அடியிலும்
உரிமைகள் மறுக்கப்பட்ட போதும்...

செருக்கோடு தலைநிமிர வைத்த
புனிதமான பெண்மையே
'கற்பு' என்ற பெயரில்
பலவீனமாக்கப்பட்ட போதும்...

பாதுகாப்பென்றும்,
இன்னபிற காரணங்களென்றும்,
போலி அரிதாரங்களுக்குள்
தேவைகளும் விருப்பங்களும் முடக்கப்பட்ட போதும்...

இவர்களின்
பெண்ணென்ற வெறும் உடல் பிண்டத்துக்குள்
ஆளுமையும், தனித்துவமும்
வெளித்தெரிய முடியாதபடி புதையுண்ட போதும்...

விடுபடலுக்கான எத்தனிப்பின்
ஒவ்வொரு
தோல்வியின் முடிவிலும்
கட்டுக்கள் மேலும் இறுக்கப்பட்ட போதும்...

இதே போல்... இதையே போல்
கைகட்டி வாய்பொத்தி
வெறுமனே வேடிக்கை பார்த்தவாறு
நின்றிருந்திருக்கிறேன்

களங்கமற்ற புன்னகைகள்
களவாடப்படுகையிலும்...
கறைபடியாக் கனவுகள்
சிதைந்தே போகையிலும்...
சில ஆணாதிக்க முதலைகளை
சந்திக்க நேர்கையிலும்...
அறியாமையில் சிக்குண்ட
அபலைகளை எண்ணுகையிலும்...

என் கையாலாகாத்தனத்தை நொந்து
உள்ளம் வெதும்பியிருக்கிறேன்

பெண் சுதந்திரம்
வெறும் படபடக்கும்
காகிதக் குவியல்களால்
தீர்மானிக்கப்படுவதையும்...
எமது அறிவும், ஆற்றலும்
அர்த்தமற்ற சில எண்களால்
மதிப்பிடப்படுவதையும்...

குனிந்த தலையுடன்
மௌனமாகவே அங்கீகரித்திருந்திருக்கிறேன்

உள்ளத்தின் தகிப்பு...
உணர்வுகளின் உக்கிரம்...
விழிச் சாளரங்களினூடாக வடிந்தொழுகுகிறது
வெறும் நீர்த்துளிகளாகவல்ல..,
சுட்டெரிக்கும் அக்னித்துளிகளாய்...
விழிநீருக்கே இத்தனை வெம்மை வாய்த்திருக்கையில்
என் அடிமனத்து ஆழங்களில்
இன்னும் எத்தனை ஆயிரம் அக்னிப் பிளம்புகள்
நர்த்தனமாடிக் கொண்டிருக்க வேண்டும்..?

Sunday, November 20, 2005

முதல் மடல்....!!

வளையங்களை அறுத்தெறியவும்... விட்டு விலகியோடவும் துடிக்கும் ஒரு உள்ளத்தின் குரல்:

இவ்வலைப்பதிவைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் தோழருக்கு இனிய வந்தனங்கள். இணையத்தளத்தில் எனக்கானவொரு அடையாளத்தைப் பெற்றுக்கொண்ட அற்புதமான இத்தருணத்தில் என் மெய்சிலிர்ப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்வடைகிறேன்.

இவ்வலைப்பதிவின் தலைப்பு உங்கள் சிந்தனைகளைக் கிளரக்கூடும். இத்தலைப்பினைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணத்தினை நானே சொல்லிவிடுகிறேன்.

கர்நாடக சங்கீதத்துடன் நெருங்கிய தொடர்புடைய தலைப்பு இது. இசையறிவுடையவர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்றுதான். "ரேகுப்தி" என்பது மோஹன ராகத்திற்கு முற்காலத்தில் வழங்கப்பட்டு வந்த பெயராகும். அதென்ன, மோஹன ராகத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறேனேயென யோசிக்காதீர்கள். இது புராதன ராகங்களிலொன்று. முல்லைப்பண் எனவும் அழைக்கப்படுகின்றது. இரவு நேரத்தில் பாடுவதற்கு மிகவும் உகந்ததாக இவ்விராகம் கருதப்படுகின்றது. மோஹனத்தின் ரஞ்சகத்தன்மைக்கு இதைவிடவும் சான்றுகள் வேண்டுமா என்ன? மேலும், தென்னிந்திய இசை தவிர பிறநாட்டு சங்கீதங்களிலும் இடம்பெறும் பெருமை இதற்கேயுரியது. மாணிக்கவாசகரின் திருவாசகம் தொன்றுதொட்டு இவ்விராகத்திலேயே பாடப்பட்டு வருவதும் இதன் தனிச்சிறப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

இவற்றையெல்லாம் வாசித்துவிட்டு இவ்வலைப்பதிவு முழுக்க முழுக்க இசை பற்றியதென்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். காலங்களையும் கடந்து நிலைபெற்றிருக்கின்ற..., சர்வ வியாபகத்தன்மை வாய்ந்த..., உள்ளம் நெகிழும் உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடிய ஒன்றன் பெயரை எந்தன் வலைப்பதிவுக்குத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்ததில் தவறில்லையே...?

மழைக்கால அந்திவேளையொன்றில் பாட மறுத்த ஊமைக்குயிலின் குரல்வளையின் ஆழத்தில் சிக்குண்ட கானங்களைப் பற்றியவை எனது பதிவுகள்... கரைசேர முன்னரே காணாமற்போன அலைகளின் ஓலங்களைப் பற்றியவை எனது பதிவுகள்...

பதிவுகளை ரசிப்பதோடு, உங்களைப் பற்றியதான தடயங்களையும் விட்டுச்செல்ல வரவேற்கிறேன்.

- நிவேதா