Tuesday, February 10, 2009

செதுக்கும் சிற்பியும் செதுக்கப்படும் கல்லும்



*இரு தெரிவுகள் எங்கள் முன்:
ஒன்றில், பயங்கரவாதியாயிருத்தல் அல்லது

பயங்கரவாதத்தை எதிர்த்தல்


எதிர்மறைத் தத்துவத்தின்படி:
ஒன்றில் B, அல்லது B அன்று

**ஒரேநேரத்தில் இரண்டாகவும் இருப்பதும் (சாத்தியமில்லை)

இரண்டாகவும் அல்லாதிருப்பதும் (சாத்தியமில்லை)


அரசியல் கற்றுக்கொடுத்தது:
பயங்கரவாத எதிர்ப்பென்ற பெயரில்

மகா பயங்கரவாதியாக.. - அல்லது

இரண்டையும் எதிர்த்தபடி
நடுநிலைமையாளனாக..

குழந்தைகள் உறங்கியபடியிருந்த ஒரு
குளிர்கால நடுநிசியில், எனதன்ப
நான் கல்லாயிருந்தேன் - நீ
என்னைச் செதுக்கும் சிற்பியாயிருந்தாய்
காதல் ஒரு செடியென
ஆத்மாவின் ஈரமுறிஞ்சி வளர
என்மீது
கோபுரங்கள் தாதுகோபங்கள் எழுந்தன
உடல் துளைத்து பாதைகள் நீண்டன
உளியின் ஆங்காரம் பொறுத்திருந்து பொறுத்திருந்து
நான் கடவுளானேன்
பூதமானேன்
மனிதனுமானேன்
பயங்கரவாதப் புழுதி மண்டியிருந்த தெரு
மனிதர்களை சிற்பங்களாக்கி விட்டிருந்தது
நெரிவுண்டு நொறுங்குண்டு
எஞ்சியிருந்த குறுணிக்கற்களும்
சிதறிக்கொண்டிருந்தவோர் நாளில்
நானொரு
சிற்பியுருவங்கொண்ட கல்லாய்ச் சமைந்து போனேன்
அல்லது, கல்லாலான சிற்பியாய் அலைந்தேன்
இரண்டுக்கும் அதிக வேறுபாடுகள் இருக்கவுமில்லை


*நன்றி: திரு.ஜோர்ஜ்.டபிள்யு.புஷ், திரு.கோத்தபாய ராஜபக்ஷ

**தத்துவவியல் இந்நிலையைப் 'போலி' என்கிறது

படம்: சல்வடோர் டாலி