Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

Friday, February 16, 2007

பிரதிகளினூடு ஒரு பயணம்.., யதார்த்தத்தை நோக்கி

'எழுதுவது என்பது ஒரு நெருப்புக் குளியல்.
எழுத்துத் தீ,
கருத்துக்களின் பெருங்குழப்பத்தை மேலே உயர்த்தி
படிமங்களின் கூட்டத்தைப் பிரகாசமாக எரிக்கிறது;
அவை சடசடக்கும் தணல்களாக,
உதிரும் சாம்பலாக மாறும் வரை...
ஆனால்,
இந்தத் தீயின் தன் விருப்பம் போல் எரியும் குணம் மர்மமானது.
எழுதுவது என்பது உயிரோடு எரிவது.
ஆனால்,
அதே நேரத்தில் சாம்பலிலிருந்து மீண்டும் பிறப்பதுமாகும்.

எழுதுவது என்பது ஒரு சுரங்கத் தொழிலாளியைப் போல்,
நெற்றியில் பொருத்திய விளக்கோடு
சுரங்கத்தின் ஆழத்திற்குள் இறங்குவதாகும்.
அந்த விளக்கின் தெளிவற்ற ஒளி
ஒவ்வொரு பொருளையும் உருமாற்றிக் காட்டக் கூடியது.
அதன் சுடர் எப்போதும் வெடிக்கும் ஆபத்திலிருப்பது.
கரித் தூசியில் அதன் இமைப்பொளி
கண்களை அரித்துச் சிதைக்கக்கூடியது.'

- Blaise Sendrars

இன்றைய பொழுதில் எழுதுபவர்களில் எத்தனைபேர் இத்தகைய புரிதலுடன் எழுதுகிறார்கள்.. எழுத்தின் மதிப்பையும், மகிமையையும் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.. வாசிப்பவர்களனைவரும் கடைந்தெடுத்த மூடர்களென்ற நம்பிக்கையில் எழுதிக்கொண்டிருப்பவர்களே அநேகமென்று தோன்றுகிறது.

வாசிப்பென்பது என்னைப் பொறுத்தவரை ஒரு தியானம், எழுத்தைப் போலவே. அதுவொரு தவம். மன நிம்மதியை வேண்டுவதற்கான தியானமே குழப்பத்தை விளைவிக்கும் அதிசயம் உணர்ந்திருக்கிறீர்களா, எப்போதாவது? பொ.கருணாகரமூர்த்தியின் 'பெர்லின் இரவுகள்' மற்றும் கனிமொழியின் 'கருவறை வாசனை' யும்தான் அந்தக் கைங்கரியத்தைப் புரிந்தவை. பெர்லின் இரவுகள் - ஒரு காரோட்டியின் கண்கள் வழியே பெர்லின் நகர இரவு வாழ்க்கையைச் சித்தரிக்கும் நூல். கருவறை வாசனை - கனிமொழியின் முதலாவது கவிதைத் தொகுதி.

1.

ஒரு நகரின் இரவு வாழ்க்கையெனும்போது அங்கு பாலியல் தொழிலாளர்கள் தவிர்க்க முடியாதவர்கள். அவர்களது உலகம் விழித்துக்கொள்வது பெரும்பாலும் இரவில்தான். ஒரு காரோட்டியாக தனது பார்வையில் இரவு வாழ்க்கையின் பெரும் பகுதியினை ஆக்கிரமித்திருக்கும் இப்பெண்களைப் பற்றிய தனது அனுபவங்களை சுவைபட எடுத்துக் கூறியிருக்கிறார், கருணாகரமூர்த்தி. புத்தகத்தை விரித்த நிமிடத்திலிருந்து வாசித்துமுடிக்கும்வரை கீழே வைக்கவிடாத வண்ணம் வாசகரைக் கட்டிப்போடும் சுவாரசியமான மொழிநடை அவருக்கு வாய்த்திருக்கிறதென்பதென்னமோ உண்மைதான். எனினும் மனதை உறுத்தியது, தனது 'அங்கதம் தோய்ந்த நடையினூடாக' (கவனிக்க: இது நான் கூறியதல்ல, அவரைப்பற்றிய அறிமுகத்தில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது) அவர் கூற விரும்பும் விடயம் என்னவென்பதுதான்.

இந்த அங்கதப்பாணியைக் கையாளுவதென்பது கத்திமேல் நடப்பதையொத்த சற்று ரிஸ்க்கான சமாச்சாரம்.., அது எழுத்தாயிருந்தாலென்ன.. சாதாரண உரையாடலாயிருந்தாலென்ன. மனிதர்கள் தனித்துவமானவர்களென்பது உண்மையாயின், ஒருவருக்கு வேடிக்கையாகப் படுவது இன்னுமொருவருக்கு வேதனையாகவும் போய்விடக்கூடும். அந்தவகையில், பெர்லின் இரவுகளை வாசித்துக்கொண்டிருக்கையில் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தது கமலஹாசனின் முழுநீள நகைச்சுவைப்படம் 'தெனாலி' தான். அது நல்லதொரு பொழுதுபோக்குப் படம்.. சுவையாக எடுக்கப்பட்டிருந்தது.. ஏனைய அறுவைப் படங்களைவிட பார்க்கலாம். என்றாலும், யாழ்ப்பாணப் பேச்சுவழக்கை கேலிக்கூத்தாக்கியதும், எமது மக்களின் அவலங்களை வைத்து சிறந்த நகைச்சுவைப் படமொன்றை இயக்கலாமென்பதை உணர்த்தியதும்கூட அதேபடம்தான். பெர்லின் இரவுகளில் நகைச்சுவையாக / அங்கதமாக கருணாகரமூர்த்தி எடுத்துக் காட்டியிருக்கும் சில விடயங்கள் விளிம்புநிலைச் சமூகமொன்றின் அன்றாட அவலங்களென்பதை அவர் உணர்ந்திராமைக்காக அவரைக் குற்றம் சாட்டுவதும் அவ்வளவு நல்லதில்லை.. காரணம், யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு இவ்வளவுதூரம் பிரபலப்படுத்தப்படுகிறதேயென்ற பெருமிதத்துடன் வாய்பிளந்துகொண்டு தெனாலியை இரசித்தவர்களல்லவா நாங்கள்..?

மனிதர்களின் பிறழ்வுநிலைக் குணங்களை / விசித்திரப் போக்குகளை படம்பிடித்துக் காட்டியிருக்கிறது, பெர்லின் இரவுகள். சில சம்பவங்கள் உண்மையிலேயே சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டினவெனினும், பாலியல் தொழிலாளர்களைப் பற்றிக் கூறுகையில் ஒரு மூன்றாம் மனிதர் / கதைசொல்லியென்ற தனது புறவயத் தன்மையிலிருந்து பிறழ்வுற்று தன்னையும் மீறிய ஒருவிதக் காழ்ப்புணர்வை அவர் வெளிக்காட்டியிருப்பது இதன் நடுநிலைமை குறித்த சந்தேகங்களைக் கிளப்புகிறது.

ஒரு படைப்பாளி இப்படி இப்படித்தான் எழுதவேண்டுமென்ற கட்டுப்பாடுகளை எவரும் விதித்துவிட முடியாததென்பதென்னமோ உண்மைதான். அதுவும் ஒரு அல்புனைவுப் படைப்பு (அப்படித்தானென்று நினைக்கிறேன்) நிபந்தனைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டதாகவேயிருத்தல் வேண்டும். எனினும், சம்பவங்களை ஒளிவுமறைவில்லாமல் / தணிக்கைகளில்லாமல் எடுத்துக்கூறியபடி நகருமொரு எழுத்து நடையினூடாக தனது புனிதத்துவத்தை நிலைநாட்ட வேண்டியதன் அவசியம்தான் என்னவோ..?

பாலியல் தொழிலாளியொருவர் தனக்கு அழைப்பு விடுத்தபோது அவரது பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள தான் படாத பாடுபட்டதாகவும், ஒருவழியாய் தப்பியோடி வரும்வழியில் தனது சிந்தனை இவ்வாறு சென்றதாகவும் குறிப்பிடுகிறார்:

'சோரமும், மிடிமையும் இங்கில்லை என்னுமோர் உலகு வேண்டும்.' பாரதியின் கனவு கனவேதான். அவ்வாறு ரம்யமானதொரு உலகை நிர்மாணிக்க என் கையிலுள்ள ஒற்றைச் செங்கல்லை நான் எங்கு நாட்டவேண்டும்? மூளை கபாலத்துள் கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது...
(பெர்லின் இரவுகள் - பக்.96)

என்னைக் கேட்டிருந்தால், அந்தச் செங்கல்லை இவ்வுலகின் ரம்யத்தினைப் பாதுகாக்கும் பொருட்டு உங்கள் தலையிலேயே போட்டுக்கொள்ளுங்களென ஆலோசனை கூறியிருப்பேன். இது விதண்டாவாதமல்ல.. ஒரு ஆதங்கம்! பாலியல் தொழில் இன்று நேற்று உருவானதல்ல.. சரித்திரத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அது நடைமுறையிலிருந்து வந்திருக்க வேண்டும். இந்நிலையில் எந்தவிதத்தில் அது உலகின் ரம்யத்தினைக் குறைத்ததென்பது மட்டும் புரியவேயில்லை. தவிரவும், தகவல் தொழிநுட்பம் போன்ற உயர்படிப்புப் படிப்பவர்கள் செக்ஸ் பாருக்குப் போவதேனென்ற கேள்வி, அத்தகைய இடங்களுக்குப் போனால் அவர்கள் அங்கே சுத்தம் செய்யும் வேலை செய்வதாயிருந்தால்கூட 'தப்பாகத்தான்' (அதிலென்ன தப்பான புரிதல் வேண்டியிருக்கிறதோ..) புரிந்துகொள்ளப்படுவதென நீளும் ஆதங்கங்களுக்கு மத்தியில் பாலியல் தொழிலாளியொருவருடனான சந்திப்பைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். மனிதர்களுக்குப் பாலியல் வேட்கையுள்ள வரையும் பாலியல் தொழிலுமிருக்குமென்ற அப்பெண்ணின் கூற்று..., ஒழுக்கம், விழுமியம், நெறிகளனைத்தும் மனிதன் தனக்குத்தானே சூடிக்கொண்ட போலிக் கிரீடங்கள் மட்டும்தானென்ற அவரது வாதம் இவையனைத்தும் கூடவே இந்நூலில் இடம்பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கதே.

எனினும், இந்த நக்கல் தொனி பெரும்பாலானோருக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுவது குறித்த விழிப்புணர்வும், எச்சரிக்கையும் இத்தகைய புத்தகங்களை வாசிக்கையில் வாசகருக்கு வேண்டியிருக்கிறது. முற்போக்குவாதிகளாக / யதார்த்தவாதிகளாக தம்மைக் காட்டிக்கொள்ள விரும்புபவர்கள் அங்கதப்பாணியின் திரைமறைவில் தனது சுயத்தை - அதன் வக்கிரங்களுடன் - சாதுர்யமாக ஒளித்துக்கொள்ளவும் இங்கு வாய்ப்புக்கள் பலவுண்டு.

தனது அறையில் தன்னிடம் படிக்கவந்தவொரு பெண்ணுக்குச் 'சுக்கிலாபிஷேகம்' செய்த சூரனான நண்பனுடன் முரண்படுகையில் அவன் கூறியதாகக் குறிப்பிடுவது,

"கவிதையில் இன்பம், காணாததில் இன்பமென்று சதா கனவில மிதக்கிற நீங்களெல்லாம் இந்த உலகத்துக்கு 'பிட்' இல்லாத பேர்வழியள்... சய்க்!"
பெம்மான் இன்னும் ஏதேதோவெல்லாம் சொல்லி வைது கொண்டிருந்தான்.
(பக்.102)

இதன்மூலம் அவர் கூறவிரும்புவதென்ன.. இந்தக் கேலி உணர்த்துவதென்ன.. தான் செய்வதுதான் சரியென்ற நினைப்பில் அவன் வைது கொண்டிருக்கிறான்.. சீ.. இவனெல்லாம் என்ன பேர்வழி.. என விரித்துப் பொருள்கொள்ளலாமா.. அப்படியாயின், நான் அவ்வாறில்லையென்ற பெருமூச்சொன்றும் இதற்குள் தொக்கி நிற்பதாகவே படுகிறது.

பாலியல் தொழிலாளியுடனான சந்திப்பைப் பற்றிய குறிப்பு இவ்வாறு முடிவடைகின்றது:

...என்றவள் தொள்ளாயிரத்து இருபத்தேழாவது தடவையாகக் கூந்தலைப் பின்னே தள்ளிவிட்டுத் தன் விரல் நகங்களுக்குப் பொலிஷ் போட ஆரம்பித்தாள்.
(பக்.70)

இந்தக் அங்கதத்தின் பின்னணி புரிவதற்கு அதற்கு முன்னரான சந்திப்பு பற்றிய விபரங்களையும் குறிப்பிட்டாக வேண்டும். பேட்டியின்போது அப்பெண் கூறியவற்றின் சுருக்கம்: இத்தொழிலின்மூலம் குறுகிய காலத்தில் நிறைய சம்பாதிக்கலாம்.. தேவையானளவு சம்பாதித்ததன் பின்னர் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவதால் ஒன்றும் கெட்டுப்போகப் போவதில்லை.. ஆணுலகம் தம்மைக் கற்புடைமைக் கோட்பாட்டின் காவலர்களென்ற போலியான புனிதப் பார்வையுடன் எம்மைப் பார்க்கிறது.. எனது மோரல் டமேஜ் பற்றிப் பேசுவதற்கு எவருக்கும் உரிமையில்லை.. வெறும் தத்துவங்களும் கோட்பாடுகளும் வயித்துக்கு எப்போதும் பதில் சொல்வதில்லை.. இது இயல்பான விஷயம், சரி தவறென விசாரம் பண்ண எதுவுமேயில்லை.. பெண்ணியவாதிகளை விடவும் நாங்கள் அறிவும், பிரக்ஞையுமுடையவர்கள்.. எங்கள் மீது புனிதநீரைக் கொட்டுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை..

இவ்வளவற்றின் இறுதியில் அவ்வாக்கியம் வருகின்றது. ஆக மொத்தத்தில் தெரிவதென்ன.. இவர்கள் பேட்டியையோ, அப்பெண்ணின் கருத்துக்களையோ செவிமடுப்பதைவிட அவள் எத்தனை தடவை தனது கூந்தலை நளினமாகப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டிருந்தாளென்பதை எண்ணுவதிலேயே / கணக்கிடுவதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள். இவ் அலட்சிய மனப்பான்மை குறிப்பிட வருவது யாது? அவளொரு பாலியல் தொழிலாளி.. (இவ்வலட்சியம் பிறப்பது அந்தஸ்திலிருந்து.. இதையே ஒரு பேராசிரியர் கூறிக்கொண்டிருந்தால் இவர்களது கவனம் எப்படியிருந்திருக்குமென்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்..) அவள் சொல்வதை நாமென்ன கேட்பது.. என்ற எண்ணமோ..?

இது வெறும் நகைச்சுவைதானே.. எழுதியவரே இப்படியெல்லாம் யோசித்திருப்பாரோ என்னமோ.. ஒற்றை வரியில் எத்தனை குறை கண்டுபிடிக்கிறாளவையென உங்களில் யாராவது முறைக்கக்கூடும். இந்தப் விழிப்புணர்வை / பிரக்ஞையைத் தொலைத்துவிட்டபடியால்தான் இன்று இப்படியிருக்கிறோமென்பதை அவ்வளவு இலகுவில் மறுத்துவிட முடியுமா என்ன..

இப்படி சில (உண்மையில் பல) விடயங்களை விடுத்துப்பார்த்தால் பெர்லின் இரவுகள் - பெர்லின் நகரத்து இரவு வாழ்க்கையையும், மனிதர்களையும், அவர்களது தனித்துவமான அம்சங்களையும் மனக்கண் முன் படமென விரியச்செய்யும் - ஒரு சுவையான புத்தகம்தான்.

2.

மற்றையது, கனிமொழியின் கருவறை வாசனை..

ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுப்பது தவறென்றால் அத்தவறை நாங்கள் மீண்டும் மீண்டும் செய்யத் தயாராக இருக்கிறோமென துணிந்து கூறிய கனிமொழியின் மீது அளவுகடந்த மதிப்புண்டு. அதன் பின்னணியிலான அரசியல் குறித்தோ, கருணாநிதியின் காய்நகர்த்தல் குறித்தோ அலசி ஆராய விருப்பமில்லையெனினும், ஸ்டாலினைத் தனது அரசியல் வாரிசாகக் களமிறக்கியதற்குப் பதிலாகக் கனிமொழியை இறக்கியிருந்தால் (அவரது அரசியல் நாட்டம் ஒருபுறமிருக்க) நிலைமை வேறுவிதமாகவிருந்திருக்குமென்பதில் சந்தேகமேயில்லைதான்.

'அகத்திணை' யை வாசித்தபோது மேலும் உயர்ந்த அம்மதிப்பு, அவரது முதல் தொகுப்பான 'கருவறை வாசனை' (தற்போதுதான் வாசிக்கக் கிடைத்தது) யைப் பார்த்தபோது வியப்பாக மாறியது. முன்னட்டையில் 'கனிமொழி கருணாநிதி' என குறிப்பிடப்பட்டிருந்தது, முதல் வியப்பு.. பின்னட்டையைத் திருப்பியபோது தோன்றியது வியப்பல்ல, கோபம். கல்யாண்ஜி (வண்ணதாசன்) என்றொருவர் பின்னட்டைக் குறிப்பெழுதியிருக்கிறார். கருணாநிதியின் தொண்டரடிப் பொடியாகவிருக்க வேண்டும்.. அப்படித்தான் நினைத்துக்கொள்ளத் தோன்றியது. புத்தகம் கனிமொயினுடையது, ஆனால் புராணம் முழுக்க கருணாநிதியைப் பற்றியிருந்தது. இதை வைத்துக்கொண்டு எனக்குக் கருணாநிதியின்மேல் என்னமோ தீவிரப் பகையென எவரும் எடைபோட்டுவிடக் கூடாது. எடைபோட்டாலுமே கூட அதனால் எனக்கோ, அவருக்கோ எதுவித நட்டமும் வரப்போவதில்லையென்பது வேறுவிடயம்.

கனிமொழி வெறும் கனிமொழி மட்டுமே அல்ல. கலைஞர் கருணாநிதியின் புதல்வி.
(கருவறை வாசனை - பின்னட்டை)

எவராவது கேட்டார்களா.. ஏன் வெறும் கனிமொழியாக அவர் இருந்துவிடக் கூடாதா.. கருணாநிதியின் புதல்வியென்றால் போகுமிடமெல்லாம் அவ்வடையாளத்தைக் காவிக்கொண்டே திரியவேண்டுமென்ற கட்டாயமெதுவுமிருக்கிறதா என்ன..

கலைஞரே ஒரு கவிதை. அவர் எழுதிய கவிதை கனிமொழி. ஆயிரம் கவிஞர்களுக்கு முகவரி தந்தவர் இன்று தன் முகவரியிலிருந்து ஒரு கவிஞரை தமிழுக்குத் தருகிறார்.
(பதிப்புரையில் குறிப்பிடப்பட்டிருப்பது..)

கலைஞருக்கு வால் பிடிக்கும் வேலை.. ஒரு இலக்கிய ஆளுமை எவராலும் வலிந்து உருவாக்கப்படுவதில்லை.. கனிமொழியின் ஆளுமை வளர்ச்சியில் கலைஞரின் தாக்கமிருக்கக்கூடும்.. ஆனால், அவர்தான் ஒரே ஆதாரமாக / கனிமொழியென்ற ஒரு இலக்கிய ஆளுமையை தோற்றுவித்த 'கடவுளாக' இருந்துவிட முடியாது ஒருபோதும். தனது ஏனைய புதல்வர்களை கலைஞரால் இதே ஆளுமையுடன் வளர்க்க முடியாமற் போனது நினைவிருக்குமானால், கனிமொழியின் வளர்ச்சியிலும் அவரது பங்கு மிகக்குறைவாகவே இருந்திருக்க வேண்டுமென்பது தெளிவு.

இன்னொருவரது பெயரால் (தந்தை, துணைவர்) அடையாளப்படுத்தப்படுவதன் வலி அதனை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியக்கூடும். பெரும்பாலும் இவ்வாயுதம் பெண்களை இலக்கு வைத்துத்தான் எறியப்படுவது குறிப்பிடத்தக்கதே. அதன்மூலம் அவளது சுயத்தை இன்னொருவரது - பெரும்பாலும் ஒரு ஆணினுடையதன் - பின்தொடரலாக / தொடர்ச்சியாக உருவகப்படுத்துவதன்மூலம் அவளது தனித்துவத்தை, திறனை மட்டந்தட்டும் / அழித்தொழிக்கும் முயற்சியே இது. அத்தகைய விம்பங்கள் மற்றும் முன்மதிப்பீடுகளிலிருந்து விடுபட விரும்புபவர்கள் ஏனையவர்களை விடவும் அதியுச்ச வினைத்திறனுடன் செயற்பட வேண்டியிருக்கிறது. எனினும், 'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' என்றெல்லாம் எடுத்துக்கூறி - அவர்களை வெறும் கட்டுத்தறியாகவே மதிப்பிட்டு - ஆன்மவலிமையை முடக்கிவிடக் காத்துக்கொண்டிருக்கும் சமூகத்தில் இது மிகப்பெரிய சவால்தான். ஆணாதிக்கவுலகில் தனக்கானதொரு ஸ்தானத்தைக் கைப்பற்றிக் கொள்வதேயொரு பெரும் போராட்டமாயிருக்க, இன்னொரு ஆணின் பெயரால் தன்னைச் சுற்றிப் பிணைக்கப்பட்டிருக்கும் வளையங்களை அறுத்தெறிந்துவிட்டுத்தான் அப்போராட்டத்தினை எதிர்கொள்ள வேண்டியிருப்பது இரட்டைச் சுமையாகவே அமைவது கனிமொழி போன்ற இன்னும் பலரது அவலமே.

தன்னை, தனது சுயத்தை அவமானப்படுத்தும் இத்தகைய வெத்துவேட்டு வேஷங்களையெல்லாம் கனிமொழி தனது புத்தகத்தில் ஏன் அனுமதித்தாரென்ற கேள்வி மனதைக் குடைந்துகொண்டேயிருந்தது. எனினும், முதல் கவிதையை வாசித்ததுமே மனம் திருப்தியில் நிறைந்ததையும் குறிப்பிடத்தான் வேண்டும். முன்னைய பக்கங்களின் வேஷங்களையெல்லாம் கிழித்தெறிவதாக அமைந்திருந்தது அக்கவிதை.

எனக்கு என்று
சொற்கள் இல்லை.
மொழி எம்மை
இணைத்துக் கொள்வதுமில்லை.
உமது கதைகளில்
யாம் இல்லை,
எனக்கென்று சரித்திரமில்லை.
நீங்கள் கற்றுத் தந்ததே நான்
வார்த்துத் தந்ததே நிஜம்.
எனக்கென்று கண்களோ,
செவிகளோ, கால்களோ,
இல்லை.
அவ்வப்போது நீ இரவலாய்
தருவதைத் தவிர.
(பக்.15)

அகத்திணையின் அளவுக்கு இத்தொகுதி மனதை வசீகரிக்கவில்லையெனினும், ஒருசில கவிதைகள் - கருவறை வாசனை உட்பட - குறிப்பிட்டுச் சொல்லத்தக்கனவாகவே அமைந்திருந்தன. தொகுப்பின் இறுதியில் இடம்பெற்றிருந்த கனிமொழியுடனான சிறு உரையாடல், என்னவொரு துணிவான ஆளுமை படைத்த பெண்ணென வியக்க வைத்தது, ஒருகணம்.

(நன்றி: தொலைதூரத்துத் தோழனுக்கும், அன்பு மைத்துனனுக்கும் தொகுப்புக்களுக்காக..)

Monday, January 08, 2007

'லங்கா ராணி: A Land Like No Other'


'எங்களைவிட எளிமையானவர்களாயும், எங்களைவிட அதிகப் பெருமிதத்தோடும், அல்லது குறைவான கண்ணீர்த்துளிகளோடும் இருப்பவர் யாருமில்லை'

நம்முடைய இதயங்கள் அதை ஒரு 'தாய'த்தாக
அணிந்துகொள்ளவில்லை.
கவிஞரின் கையின் கீழ் அது தேம்பியழவில்லை.
நம்முடைய கசப்பான தூக்கத்திலும் மறக்கவியலாத
அந்தக் காயங்களை எரிச்சலூட்டுவதும் இல்லை.
'அது உறுதியளிக்கப்பட்ட தேவலோகம்' அல்ல.
நம்முடைய ஆன்மாக்கள் அதன் மதிப்பை
விற்கவும், வாங்கவுமான ஒரு நுகர்பொருளாய்
கணக்கிடுவதில்லை.
நோய்மையும், ஏழ்மையுமாய், இந்த பூமியில்
மௌனமாய் இருந்துவரும் 'அதை'
பல நேரங்களில் நாம்
பொருட்படுத்தாமலே இருந்து வருகிறோம்,
ஆம், நம்மைப் பொறுத்தவரை அது எமது
புதைமிதியடிகளின் மீதான அழுக்கு,
ஆம், எம்மைப் பொருத்தவரை, அது எம்முடைய
பற்களுக்கு இடையிலான நறநறப்பு.
புழுதி, நாம் அதை அழுந்த மிதிக்கிறோம்.
நொறுக்குகிறோம், தேய்த்துப் பொடியாக்குகிறோம்,
மென்மையானதும், சிக்கலற்றதுமான பூமியை.
ஆனால் நாம் அதில் அமிழ்ந்திருப்போம்.
அதன் கிளைகளாகவும், மலர்களாகவும் மாறுவோம்,
ஆகவே அவமானமின்றிக் கூறுகிறோம் அதை -
நம்முடையதென்று.
- அன்னா அக்மதோவா


தற்பிரலாபங்களும் பின்புலத்துப் பரிகாசங்களும்

கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசமான காலிமுகத்திடலிலிருந்து இலங்கையின் மற்றுமொரு பிரபல்யமான தென்கரையோரத்து நகரமாகிய காலி வரை நீளும் காலிவீதியின் நெடுகே பயணிக்கையில் அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் கழிந்து இன்னும் சில கட்டடங்களைத் தாண்டினால் ஒரு உயர்ந்த கட்டடம் - முகப்பில் சிகிரியா ஓவியம், 'A Land Like No Other' என்ற வார்த்தைகள் மற்றும் அழகிய நாவல் நிற மலரொன்றின் உருவத்துடனுமான - மாபெரும் சுவரோவியமொன்றுடன் நிமிர்ந்திருப்பதைக் காணலாம். இதுதான், Ceylon Tourist Board.

காலி வீதி கொழும்பு மாநகரின் பரிதாபத்திற்குரிய வீதிகளுலொன்று. நெரிசலான நேரங்களில் அவ்வீதியின் பதினைந்து நிமிடங்களில் கடக்கவேண்டிய தூரத்தைத் தாண்ட சமயங்களில் ஒன்றரை மணிநேரமும் எடுக்கலாமென்பதால் எமது காவல்துறையினர் - அந்நெரிசலினூடே தலைநகரின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் வகையில் என்னவும் நடந்துவிடக் கூடுமென்ற பயத்தில் - போக்குவரத்து விதிகளை வாரத்துக்கொன்று என்ற நிலை மாறி, தற்போது நாளுக்கொன்றாய் மாற்றிவருகின்றமை வேறுகதை. இந்தச் சுற்றுலாச் சபையைக் கடக்கும்போதெல்லாம் கொட்டையெழுத்துக்களில் தெரிகின்ற A Land Like No Other என்ற வார்த்தைகள் முகத்தில் புன்னகையை நிரப்பிவிடத் தவறுவதில்லை.., 'துன்பம் வருங்கால் நகுக..' வென எவரோ கூறிவிட்டுச் சென்றமைக்கு இயைபாக.


1.

சதாமின் மரணம்: உலகை உலுக்கிவிட்டதென்பதெல்லாம் வெறும் மிகைப்பேச்சு.., எதிர்பார்த்ததுதான். எவருக்கும் இலகுவில் வளைந்து கொடுக்காத, கொள்கையுறுதியுடைய, உலகறிந்த (தேசியப் பற்றின் பொருட்டு சொந்த மருமகன்மாரையே கொலைசெய்த) தேசியவாதியொருவரின் இறப்பு வெறும் வாய்க்கு அவல் கிடைத்தாற்போல ஆளாளுக்கு
அபிப்ராயம் கூறுமளவுக்கு கேலிக்கூத்தாய்ப் போனதுதான் வேதனை. சரி, பிழைகள் பற்றியதான வாதப் பிரதிவாதங்களுக்கு முன் அத்தீர்ப்பின் நியாய / அநியாயங்கள் குறித்தும் கவனஞ்செலுத்த வேண்டியமை இங்கு தவிர்க்க முடியாததாகின்றது.., இன்னும் சில பின்புலக் காரணிகள் / மறைவுண்டுபோன சாராம்சங்கள் குறித்தும். ஈராக்கில் நிலவுவது அமெரிக்காவின் தலைமையிலான பொம்மையரசாங்கமென்ற வகையில் ஈராக்கிய நீதிமன்றம் வழங்கிய
தீர்ப்பின் திரைமறைவில் அமெரிக்காவின் அழுத்தமிருந்தமை அனைவருக்கும் தெரிந்ததே. சதாமிற்குத் தண்டனை வழங்க புஷ்ஷிற்கு யார், என்ன அதிகாரத்தைக் கொடுத்ததென்ற கேள்வி எழுவதும் இங்கு இயல்பானதெனினும் ஆழ நோக்குவோமானால், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சியின்போது இலங்கை உயர்நீதிமன்றம்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு 200 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட 'ஆயுள்' தண்டனை வழங்கியமைக்கு சற்றும் சளைத்ததல்ல இத்தீர்ப்பும்.

சதாமிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் பின்னணியிலான சில (அ)நியாயங்கள்:

- தன்னுடைய நாட்டின் இறைமைக்கு நேரடியாகப் பங்கமேற்படுத்தாத நாடொன்றை அமெரிக்கா ஆக்கிரமித்தமை. ஈராக்கில் இரசாயன ஆயுதங்களிருப்பதாகக் குற்றச்சாட்டுகளிருந்தாலுமேகூட அது ஐ.நாவின் பொறுப்பு. தவிரவும், ஈராக்கிற்கு அவை எப்படிக் கிடைத்தனவென்பதையும்.. வளைகுடா யுத்தத்தினையும் தற்போதைக்கு மறந்துவிடல் நலம்.

- ஈராக் மக்களை சதாமின் கொடூர ஆட்சியிலிருந்து விடுவிக்கும் ஒரு இரட்சகனாக - ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி - அமெரிக்கா கிளம்பியிருந்தால் அந்தத் தலையாய கடமையைப் பொறுப்பளித்தது யாரென்ற கேள்வி.. (சதாம் செங்கோலனோ, கொடுங்கோலனோ) உள்நாட்டுப் பிரச்சனைகளுக்குள் அமெரிக்கா தலையிட வேண்டுமென எந்தவொரு ஈராக்கியனாவது
வெள்ளைமாளிகையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தானாவென்ற சந்தேகம்..

- ஒரு நாட்டின் முன்னாள் தலைவரை, அவர் எத்தகைய படுகொலைகளுக்குக் காரணமாயிருந்தாலும், விசாரிக்கவென சர்வதேச மன்னிப்புச் சபை தோற்றுவிக்கப்பட்டிருக்க, (அதன் தீர்ப்பு எந்தளவு நியாயமாயிருக்கக்கூடுமென்ற கேள்விகள் எழுந்தாலும், அதுவே முறையென்றவகையில்) ஈராக்கிய நீதிமன்றம் இது உள்நாட்டுப் பிரச்சனையென்றபடி தான் பொறுப்பெடுத்தமை எந்தளவு ஏற்றுக்கொள்ளத்தக்கது..


இவை வெறுமனவே தீர்ப்பு பற்றிய விசனங்கள் மட்டும்தான். தீர்ப்பு நிறைவேற்றப்பட்ட விதம் தொடர்பாக இன்னும் பல கேள்விகளை எழுப்பலாம், எம்மால் முடிந்ததெல்லாம் அவ்வளவும்தானென கையாலாகாத்தனத்தை நொந்தபடி. மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களில் மதவாதத்திலிருந்து விடுபட்ட தேசியவாதத்துடன், தாம் கொண்ட கொள்கை நெறியினின்றும் இறுதிவரை விலகாதவர்கள் யசீர் அரபாத், சதாம் ஹ¤சேன், கேணல் கடாபி மூவருமே. இருப்பினும், முன்னவர்களின் மரணத்துடன் (யசீர் அரபாத்தின் இறப்பின் பின்னணியில் சதிமுயற்சியொன்றிருப்பதாக ஊகங்கள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தகுந்தது) கேணல் கடாபி நெகிழத் தொடங்கியுள்ளார்.

இவையனைத்தும் ஒருபுறமிருக்க, கொழும்புத் தெருக்களில் சில நாட்களாக ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும், கண்டனப் பேரணிகளும், சுவர்களை நிறைக்கும் போஸ்டர்களும்.. உத்தியோகபூர்வமாக அரசாங்கம் கண்டனமெதுவும் தெரிவிக்காத போதும் (இவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லையென யாரும் வருந்தவும் போவதில்லைதானெனினும்..) அரசியல் தலைவர்கள் பலர் சதாமின் கொலையைக் கண்டித்திருந்தனர். உண்மைதான், சதாம் இலகுவில் விலைபோகாத, தேசியத்திற்காக எதையும் செய்யத்துணிகின்ற, ஈராக்கின் நலனையே ஒரே இலக்காகக்கொண்ட தேசியத்தலைவர். குர்திஷ் இனப்படுகொலைகளை மேற்கொண்டமைகூட ஈராக்கைக் காப்பாற்ற தனக்கு வேறு தெரிவுகளில்லாமற் போனமையினாலேதானென ஒரு சந்தர்ப்பத்தில் அவர் கூறவும் செய்தார். தூரத்திலிருந்த ஒரு தேசியவாதியை எம் தலைவர்களால் புரிந்துகொள்ள முடியும்.., அவரது இழப்புக் குறித்து வருந்தவும் தெரியும்.., அதற்குக் காரணமானவர்களை வசைபாடவும் தெரியும்.. ஆனால், பக்கத்திலேயே இருப்பவர்கள் குறித்து எதுவித சலனமுமில்லை. ஏனெனில், அவர்கள் பயங்கரவாதிகள்!

வேடிக்கைதான். தினம் தினம் வடகிழக்கில் யுத்தத்தினாலும், பட்டினியினாலும் இறந்து கொண்டிருக்கும் உயிர்கள் குறித்து கண்டனம் தெரிவிக்க யாருமில்லை. இலுப்பைக் கடவையில் இறந்துபோன குழந்தைகள் பற்றிய கரிசனை எவருக்குமில்லை. ஆனால், சதாமின் கொலை மகா அநியாயம். இலுப்பைக் கடவையில் தாம் இலக்குவைத்துத் தாக்கியது விடுதலைப் புலிகளின் நிலைகளை மட்டுமேயென இராணுவப் பேச்சாளர் செய்திவெளியிட்டுள்ளார். தமது தளங்களுக்கு அருகே மக்களையும் அவர்கள் குடியமர்த்தி வைத்திருக்கிறார்களெனவே இழப்புக்கள் தவிர்க்க முடியாதனவாம். தாக்கப்பட்ட மக்களின் குடிசைகளுக்கருகே விடுதலைப் புலிகளின் தளமெதுவுமில்லையென யாழ்.ஆயர் கூறியிருந்தும், அதற்கான பதில் தென்னிலங்கையிடமில்லை. சிலவேளைகளில், மேலேயிருந்து பார்க்கும்போது குடிசைகள் 'காம்ப்' கள் போலத் தோற்றமளித்தனவென இராணுவப்
பேச்சாளர் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


2.

தொடர் பேருந்து குண்டுவெடிப்புக்கள் நிட்டம்புவவிலும், காலி ஹிக்கடுவையிலும். தலைநகரில் பதற்றம் அதிகரித்து அனைத்து வண்டிகளும் சல்லடையிட்டுச் சோதிக்கப்படுகின்றனவெனினும் என்னதான் பயன்? கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்துள்ளடங்குகின்ற லிபர்ட்டி சதுக்கத்திற்கருகில் இரண்டடிக்கொரு இராணுவத்தினரை வேகாத வெயிலுக்குள் நிறுத்தி வைத்திருந்தாலும், குண்டுவெடிப்புகளுக்கொன்றும் குறைச்சலில்லை. பாகிஸ்தானியத் தூதுவர் முதல் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரான மகிந்தவின் தம்பி கோத்தபாய ராஜபக்ஷ ஈறாக அனைவரையும் இலக்குவைத்து அங்கேதான் தாக்குதல் நடாத்தப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலையின்போதும் இப்படித்தான் விழிவிரிக்க நேர்ந்தது. பத்தடிகொரு பரிசோதனை நிலையத்தை அமைத்து அப்படி எதைத்தான் சோதிக்கிறார்கள்?
குண்டுகளையும், துவக்குகளையும் தவிர மிச்சமனைத்தையுமாக்கும். பற்றாக்குறைக்கு துப்புத் துலக்க ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸாரின் தயவு தேவைப்படுகிறதாம். நாளைக்கு அவர்கள் தரும் அறிக்கை பாதுகாப்பலுவலகத்தின் குப்பைத் தொட்டிக்குள் கண்டுபிடிக்கப்படும். ஆக மொத்தத்தில் அனைத்துமே வெறும் கண்துடைப்புத்தான். இதையும் நம்பிக்கொண்டுதானிருக்கிறார்கள், அப்பாவிச் சிங்களவர்கள்.

பேருந்துகளில் தொடர்ந்து குண்டுவெடித்ததைத் தொடர்ந்து தென்னிலங்கையின் சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் திசையெங்கும் பரவுகின்றன: பிரபாகரனுக்கு இரத்த வெறி அதிகரித்து விட்டது.. சமாதானப் பாதையில் தொடர்ந்து நின்றுவரும் அரசாங்கத்தின் பொறுமையைப் புலிகள்
சோதிக்கிறார்கள்.. மக்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் உறுதிசெய்யும் பொருட்டு சர்வதேசம் அவர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் செலுத்தவேண்டும்..
இன்னபிற...

கடந்த ஞாயிறன்று, கொழும்பின் பிரசித்தி பெற்ற தேவாலயமொன்றில் பிரார்த்தனைக்குப் பின்னரான பிரசங்கத்தின் இறுதியில் பாதிரியார் கூறுகின்றார்: எல்லாம் வல்ல இறைவன் இரத்தவெறி பிடித்தலையும் இந்தப் பாவிகளை மன்னித்து அவர்களுக்கு இரக்க சிந்தையைக் கொடுத்தருள்வாராக...


3.

சில நாட்களாக கொழும்பைப் பரபரப்பிற்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன, அரசாங்கத்தின் திடீர் நடவடிக்கைகள். 20 மைக்ரேனுக்குக் குறைந்த பொலித்தீன் பாவனை முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. தடுமாறிப் போனவர்கள், பொதுமக்களும் சில்லறை வியாபாரிகளும்தான். தற்போதைக்கு இருப்பிலிருப்பவற்றை ஒன்றும் செய்ய இயலாதாகையால் மூன்றுமாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சூழல் மாசடைதலைக் கருத்திற்கொண்டால் இதுவொரு நல்ல தீர்மானம்தான். என்றாலும், நாடு கிடக்கும் கேட்டிற்கு இதொன்றுதான் குறைச்சலென்றே சிந்திக்கத் தோன்றுகின்றது.

நாட்டில் பணவீக்கம் படுமோசமான நிலையை எட்டியுள்ளது. பச்சைத்தாளென ஒருகாலத்தில் வாய்பிளந்த ஆயிரம் ரூபாய்த்தாள்கூட சட்டென்று பெறுமதியிழந்துவிட்டது. சிலகாலங்களுக்கு முன்புவரை, பேருந்துகளில் நூறு ரூபாய்த்தாளை நீட்டினால் நடத்துனர் சினந்துகொண்டு சமயங்களில் நடுவழியில் இறக்கியும் விடுவார்.. இப்போதெல்லாம் சர்வசாதாரணமாக
வாங்கி மாற்றிக் கொடுக்குமளவுக்கு பேருந்துக் கட்டணங்களும் எகிறிப் போயின. போதாக்குறைக்கு பேருந்துகளில் கட்டாயம் பயணச்சீட்டு வழங்கப்படவேண்டுமெனவும் சட்டம் கொண்டுவரப்பட்டதில் நடத்துனர்களின் நிலைதான் பாவம். பேப்பர் விற்கும் விலை அரசாங்கத்திற்கெங்கே தெரியும்.. மிச்சம் பிடிக்கவென்றிருந்த கடைசி மார்க்கமும் கைநழுவிப்
போயிற்று. கொழும்பு, நீர்கொழும்புப் பகுதிகளில் பயணச்சீட்டு கொடுக்காத 81 பேருந்துகள் சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை கொசுறுத் தகவல்.

இத்தகைய அல்லல்களுக்கு மத்தியிலும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வுப் (அடிப்படைச் சம்பளமான 120 ரூபாயை 300 ரூபாயாக உயர்த்த வேண்டி) போராட்டம் முடக்கப்பட்டமையானது அரசியல் தலைவர்களின் சாதனைதான். இலங்கை உண்மையிலேயே வனப்பு மிக்கதோர் நாடுதான். எழில்கொஞ்சும் கடற்கரைகள் மற்றும்
பசுந்தேயிலைத் தோட்டங்களுடன். நாட்டின் அந்நிய செலாவணியைப் பொறுத்தவரை இரண்டாவது அதிகூடிய ஸ்தானத்தைப் பெற்றிருப்பது தேயிலை ஏற்றுமதியே. முதலிடத்தை தைத்த ஆடைகள் பெற்றிருப்பதும், அடுத்தடுத்த இடங்களை தேயிலை ஏற்றுமதி மற்றும் மத்திய கிழக்குப் பணியாளர்கள் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தகுந்தன. கோட்டா
முறை முடிவடையத் தொடங்கியதிலிருந்து தைத்த ஆடைகளுக்கான ஏற்றுமதி வருமானம் தளம்பலடையத் தொடங்க இலங்கையின் பொருளாதாரம் பெருமளவு தேயிலை உற்பத்தியினையே சார்ந்திருக்கின்றது.

இருந்தபோதுமே கூட இத்தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் நிலை குறித்த அக்கறை அரசியல்வாதிகளுக்கோ ஏன் தொழிற்சங்கங்களுக்கோ கூட இருப்பதாகத் தெரியவில்லை. நாட்டின் ஏனைய தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவில் வர்க்க ரீதியான சுரண்டல்களுக்குள்ளாகும் இவர்கள் போதாக்குறைக்கு
மலையகத் தமிழர்களென்ற வகையில் இனரீதியான ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகின்றார்கள். மலையகத்தின் புவியியலமைவே இம்மக்களது ஒன்றுபடலுக்கும், எழுச்சிக்கும் பெருந்தடையாக அமைகின்றது. அதையும் மீறி போராடப் புகுந்தால் எங்கிருந்தாவது வந்து நுழையும் அரசியல்வாதிகள் தமது சுயநலத்திற்காக மக்களது வாழ்வாதாரத்தை விலைபேசி
அமுக்கிவிடுவார்கள். கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளே பூர்த்தி செய்யப்படாத நிலையில் சுதந்திர இலங்கையின் மிகக் கேவலமான அடிமைகளாக வாழ்ந்திருக்கும் இவர்கள் கேட்பதென்னமோ ஒரு முந்நூறு ரூபாய்தான். ஒரு இறாத்தல் பாண் 23 ரூபா.. ஒரு கிலோ அரிசி (மிக மட்டமானதுகூட 40 ரூபாய்க்குக் குறையாது) 45 ரூபாய்.. எந்தவொரு
மரக்கறியுமே கால்கிலோ 20 ரூபாய்க்குக் குறைத்து வாங்கிவிட முடியாது. ஐந்துபேர் கொண்ட சிறிய குடும்பமாயிருந்தாலும், ஒருவேளை உணவுக்கு இவையனைத்தும் போதாதென்பது ஒருபுறமிருக்க, நூற்றிருபது ரூபாயைக்கொண்டு கஞ்சி கூடக் காய்ச்சமுடியாதென்பதுதான் உண்மையிலும் உண்மை.

உணவுப் பிரச்சனைக்கும், எகிறிவரும் விலைவாசிக்கும் வழிகாணமுடியாதவர்களுக்கு தேவைதான்... பொலித்தீன் பையால் விளையும் சூழல் மாசடைவும், பயணச்சீட்டுகளும்.., தமது கையாலாகாத்தனத்தை மறைப்பதற்காவது.


............


எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ
எங்கே தலை கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவு சுதந்திரமாய் சஞ்சரிக்கிறதோ
எங்கே சொற்கள் உண்மையின்
அடித்தளத்திலிருந்து பிறக்கின்றனவோ
எங்கே உலகம் சாதி மதப் பிளவுகளால்
உடையாமலிருக்கிறதோ
எங்கே இரக்கமும் செயல் முயற்சியும்
முழுமையை நோக்கி கைகளை நீட்டுகின்றனவோ
எங்கே தெள்ளிய நீரோடைகள்
மாண்டொழிந்து போன பழக்கவழக்கமெனும்
பாலைநிலம் வழியே செல்லாமலிருக்கின்றனவோ
அந்த சொர்க்கபூமியை நோக்கி - என் தந்தையே
என் நாடு விழித்தெழட்டும்!
- ரவீந்திரநாத் தாகூர்


கனவுலகப் பொருண்மைகளைப் பிதுக்கி வெளியேறும் யதார்த்தம்

சமீபத்தில், மிக நீண்ட காலத்திற்கு முன் அருளரால் எழுதப்பட்ட 'லங்கா ராணி' நாவல் வாசிக்கக் கிடைத்தது. 1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற இனக்கலவரத்தின்போது பாதிக்கப்பட்டு கொழும்பின் அகதிமுகாம்களில் நிறைந்துவழிந்த தமிழர்களை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணத்திற்குப் பயணித்த கப்பலின் பெயரே இது. நாவலும் அக்கப்பலின்
மூன்று நாள் பயணத்தின்போதான நிகழ்வுகளை விழிமுன் நிறுத்துவதாகவும், இனப்பிரச்சனையின் வரலாற்றை ஆவணப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. கடந்த காலங்களிலிருந்து எவற்றையும் கற்றுக்கொள்ளுமளவுக்கு எமது
வரலாறுகள் உவப்பானதாகவில்லையெனும் யதார்த்தம் மறுபடியுமொருமுறை மனதிலறைந்துவிட்டுச் செல்ல.. 58, 77 இனக்கலவரங்களை முழுமையாகப் புரிந்துகொண்டிருந்தால் 83 த் தவிர்த்திருக்கலாமென பெருமூச்சுவிட மட்டுமே முடிந்தது.

ஆங்கிலேயரின் வருகையிலிருந்துதான் அனைத்துமே ஆரம்பிக்கின்றன. தமது செலவுகளைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு கோட்டை, கண்டி, யாழ்ப்பாணமென்ற மூன்று பெரும் பிரதேசங்களையுமிணைத்து ஒரே நிர்வாகத்திற்குக் கீழ் அவர்கள் கொண்டுவந்தனர். சிறுபான்மையினரான தமிழர் அரசாங்கத்தின் பெரும்பான்மையான பதவிகளைக் கைப்பற்றிக்
கொள்ள, 1948ல் ஆங்கிலேயர் நாட்டை விட்டுப் போனதும் முறுகல் வலுக்கத் தொடங்குகின்றது. இது கலிங்க மகான், எல்லாளன் காலத்து அத்துமீறலென்ற உணர்வு சிங்களவர் மத்தியில் புகட்டப்பட.. தமிழ்த் தலைவர்கள் பராக்கிரமபாகுவும்,
துட்டகைமுனுவும் இறந்துவிட்டனரென்ற நம்பிக்கையுடன் வாளாவிருந்தனர்.

மனிதர்கள் எப்போதுமே மனிதர்கள்தான். இந்தியாவில் நிகழ்ந்ததைப் போன்றதோர் விடுதலைப் போராட்டம் பிரித்தானியர்களுக்கெதிராக இலங்கையில் நடவாதமைக்கான காரணமென்ன..? ஆராயப் புகுந்தால் தெளிவாகும் பல. இண்டர்லெக்ஷ¤வல் வியாபாரிகள் தமது சுயநலன்களுக்காக மக்களது போராட்டத்தையே விலைபேசக் கூடியவர்கள்.
அன்றைய அருணாசலம், இராமனாதன் தொடக்கம்.. இன்றைய அறிவுஜீவிகள் பலரும் செய்துகொண்டிருப்பது அதைத்தான். படித்தவர்களுக்கு சித்தாந்த ரீதியாக ஆயிரம் கேள்விகளிருக்கும்.. பத்தாயிரம் சந்தேகங்களிருக்கும்.. எனினும், சாதாரண
மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர்கள் வெகு சிலரே.

இவையனைத்தும் ஒருபுறமிருக்க, 'இன்னுமொரு துட்டகைமுனு..' என்ற சிங்கள வாசகங்களுடன் கொழும்பு நகர மண்டபத்து சுற்றுவட்டத்தில் காணப்படும் ஜனாதிபதி மகிந்தவின் தென்னைமர உயரத்து போஸ்டரை சமயங்களில் பேருந்தில் கடந்து செல்ல நேர்கையில்.., A Land Like No Other ம், லங்கா ராணியும் நினைவுக்கு வருவதை மட்டும் ஏனோ தவிர்க்கவே முடிவதில்லை.

இறுகிப்போன கணங்களை முன்னிட்டு...

நன்றி: தமிழ்நதி (அன்னா அக்மதோவாவுக்காக..)