Showing posts with label Reading. Show all posts
Showing posts with label Reading. Show all posts

Thursday, November 08, 2007

பிரதிகளை மீளப் பதிதல் - 2

Baudolino
by Umberto Eco


1.

வரலாறு நமக்குத் தேவைதான், ஆனால் அறிவின் தோட்டத்தில் சீரழிந்து, நோக்கமின்றித் திரியும் தறுதலைக்குத் தேவைப்படும் விதத்தில் அல்ல.
- நீட்ஷே (Nietzsche, Of The Use And Abuse Of History)


இந்த வரலாற்று மற்றும் மர்ம நாவல்கள் மீதான மோகம் அக்காவிடமிருந்து தொற்றிக் கொண்டதாயிருக்க வேண்டும். பெரிய பெரிய புத்தகங்களை வாசிக்கப் பழகியிராத வயதுகளில், விழிகளை உருட்டி உருட்டி அக்கா கதைசொல்லும்போது வாய் பிளந்தபடி நானுமொரு கதாபாத்திரமாய் அந்தக் கதைகளுக்குள் வாழ்ந்திருக்கிறேன். அவளொரு சிறந்த கதைசொல்லி. சம்பவங்களை விழிமுன் படமென விரியச் செய்வதிலும், வரைபடங்கள் வரைந்து சமயங்களில் நடித்தும் காட்டுவதிலும் அவளை மிஞ்ச யாருமில்லை. கதை கேட்கும் ஆர்வத்துக்காகவே புத்தகம் வாசித்து முடிக்கும்வரை காத்திருந்து, கதை சொல்லி முடியும்வரை நல்ல பிள்ளையாக சொன்னபடியெல்லாம் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். அதெல்லாம் ஒரு காலம்.

ஒன்பதோ பத்து வயதில் வாசித்த பொன்னியின் செல்வனிலிருந்து வரலாறும் அதன் மர்மங்களும் மிகவும் ஈர்க்கத் தொடங்கின. ஆதித்த கரிகாலனின் கொலை குறித்து அக்காவுடனும், தோழிகளுடனும் மணிக்கணக்காய் விவாதித்துக் கொண்டிருந்ததாய் நினைவு. அதைத் தொடர்ந்து வாசிக்க நேர்ந்த வரலாற்று நாவல்களில் மனதில் இன்னும் நிலைத்திருப்பது Paul Doherty யின் The House of Death - மாவீரன் அலெக்ஸாண்டரினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முற்றுகையைப் பற்றியது. மன்னர்களின் பலவீனங்களை, தகிடுதத்தங்களை அம்பலப்படுத்தும் ஒரு மர்ம வரலாற்று நாவல். மற்றும் சில படங்கள் - ராஜராஜசோழன் வகையறா தமிழ்ப்படங்களல்ல - First Knight, Brave Heart, Troy போன்ற ஹொலிவுட் வணிகப் படங்களும், The Grief of The Yellow River (2ம் உலகமகாயுத்தத்தின் போதான சீனாவைக் கதைக்களமாகக் கொண்டதோர் படம்), Les miserables, Anna and The King போன்ற கொஞ்சம் நடுத்தரப் படங்களும், Europa Europa, Sabiha Sumar ன் Silent Waters, Lumumba போன்ற குறிப்பிடத்தக்கனவும், இன்னும் பெயர் நினைவுக்கு வராத சிலவும் ஏதோவொரு வகையில் வரலாறும் மானுடமும் பற்றிய புரிதலுக்கு வழிவகுத்தன.

இவை அனைத்திலுமிருந்து வரலாறு குறித்த சில முடிவுகளுக்கு வர முடிந்தது:
- மானுட குல வரலாற்று அத்தியாயங்கள் பெரும்பாலும் கறைபடிந்தவை. அல்லது, கறைபடிந்தவை மட்டுமே அழியாக் காவியங்களாக வரலாற்றில் நீங்கா இடம்பிடிக்கின்றன.
ஒன்று மட்டும் புரியவில்லை. எல்லாமே அழிந்து கொண்டிருக்க அழிவு மட்டும் எப்படி அழியாது நிலைத்திருக்கிறது? வரலாற்றின் இந்தக் கறைபடிந்த அத்தியாயங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன? அவை எமக்கு எதைப் போதித்தன? ஆக்கத்தைவிட - மாபெரும் நகரங்களின், நாகரிகங்களின், கணக்கற்ற மானிடவுயிர்களின் - அழிவுதான் புகழ்ந்து போற்றப்படுகிறது; வீரமென்று மதிக்கப்படுகிறது. இந்த 'வீரம்' என்பதன் வரைவிலக்கணம் என்ன? 'அழிவு' என்பதா? அதில் பெருமைப்படுவதற்கும் போற்றப்படுவதற்கும் என்ன இருக்கிறது?

- வரலாறென்பது பாதி புனைவும், மீதி உருட்டுப் புரட்டுகளும் கலந்தது.
இந்தப் பொறுப்பு வரலாற்றாசிரியர்களைச் சார்ந்தது. வரலாறும், கடந்தகாலமும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவையென்கிறார் ஜோன்.எச்.அர்னோல்ட் (History: A Very Short Introduction). வரலாறு கடந்தகாலத்தை முழுமையாக வெளிப்படுத்தாது ஒரு பகுதியை மட்டுமே பிரதிபலிக்கும் அதேவேளை, கடந்தகாலமென்பது எண்ணற்ற ரகசியங்களின் புதைகுழியென வரலாற்றின் எல்லைகளைத் தாண்டியும் விசாலமான வெளியினை நோக்கி விரிந்திருப்பது. அதிகார வர்க்கத்தினரின் நலன்களைச் சார்ந்தவையும், அவற்றுடன் முரண்படாதவையும் மட்டுமே பெரும்பாலும் வரலாற்றில் தொகுக்கப்படுகின்றன. எங்கிருந்தாவது ஒன்றிரண்டு ஈனஸ்வரத்தில் ஒலிக்கும் ஒடுக்கப்பட்ட குரல்களைக் கணக்கிலெடுக்காது பார்த்தால், இன்று எம்மால் வரலாறெனப்படுவது ஒருவகையில் அதிகார வர்க்கத்தினரின் வரலாறு மட்டுமேயெனலாம். அதிலும் திணிக்கப்படுவதும், திரிக்கப்படுவதும் அநேகம். இலங்கையின் வரலாறு இதற்குத் தக்க சான்று.

உம்பர்த்தோ ஈகோவின் Baudolino வினை இவ்வாறு வரலாற்றின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் அதே 'வரலாற்று' நாவலாகக் கொள்ளலாம். இக்கதையினூடாக ஆசிரியர் மத்தியகாலத்து வரலாறென நாம் அறிந்ததை/ நம்பிக் கொண்டிருப்பதைக் கட்டுடைக்கிறார்.


2.


"It's not the truth, but in a great history little truths can be altered so that the greater truth emerges. You must tell the true story of the empire of the Romans, not a little adventure that was born in a far-off swamp, in barbarian lands, among barbarian peoples..."

"It was a beautiful story. Too bad no one will find out about it."

"You surely don't belive you're the only writer of stories in this world. Sooner or later, someone - a greater liar than Baudolino - will tell it."
(pg.521)


பிரதியின் சாராம்சத்தை விளங்கிக்கொள்ள எப்போதும் இறுதிப் பக்கத்திலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது, இதுவே இந்நாவலை இதுவரை வாசித்திராதவர்களின் சுவாரசியத்தை போக்கி விடக்கூடுமென்றாலும்..

1204ம் ஆண்டின் ஏப்ரல் மாதம். பட்டு மற்றும் வாசனைத் திரவியங்களின் பாதையில் (Silk and Spice Route) கேந்திர நிலையமான கொன்ஸ்தாந்து நோபிள் நகரம் 4வது சிலுவைப்போரை முன்னின்று நடத்தும் தளபதிகளால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கீழை ரோமப் பேரரசின் (Byzantine Empire) முக்கிய வரலாற்றாசிரியரொருவரை (Niketas) போர்வீரர்களிடமிருந்து காப்பாற்றும் Baudolino தனது சுய வரலாற்றினை அவரிடம் சொல்லத் தொடங்குகிறான்.

இத்தாலியின் பின்தங்கிய கிராமமொன்றில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த Baudolino வுக்கு இரண்டு அற்புதமான வரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன: ஒன்று, எந்த மொழியினையும் இலகுவில் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல், மற்றையது பொய் சொல்லும் திறமை. சிறு வயதிலேயே இவனது துடிதுடிப்பையும், ஆற்றலையும் கண்டு வியந்து பேரரசர் Frederick Barbarossa அவனைத் தனது வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டு பாரிஸுக்கு அனுப்பி கல்விகற்கச் செய்கிறார்.

இடைநடுவே தனது வளர்ப்புத் தந்தையின் துணைவியாரின் மீது Baudolino காதல் கொள்வதும், சிலுவைப் போர்களும், தனது பிறந்த கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களால் பேரரசருக்கு எதிராகக் கட்டியெழுப்பப்பட்ட நகரமொன்றை அழிக்கவென முற்றுகையிடும் அரசரிடமிருந்து அதனை தனது அசாத்தியத் திறமையால் காப்பாற்றுவதும், அரசரின் பெரு விருப்புக்குரியவனாக விளங்குவதால் வரலாற்றையே புரட்டிப்போடும் வல்லமையை நண்பர்களுடனிணைந்து பரீட்சித்துப் பார்ப்பதுமென நகர்கிறது கதை. இவையனைத்துக்குமிடையில் அரசர் ஜெருசலேம் மீதான படையெடுப்பின்போது வழியில் தற்செயல் விபத்தொன்றில் இறந்துவிட, Baudolino மன்னருக்களித்த வாக்குறுதியின் பேரில் தனது நண்பர்களுடன் Prester John எனும் மதகுருவால் ஆளப்படும் கனவுத் தேசமொன்றைத் தேடி (இந்தியா) கீழை நாடுகளை நோக்கிப் பயணிக்கிறான்.

உயர்ந்த அறிவும், ஞானமும் கொண்ட பெண்கள் மக்களது மத நம்பிக்கையைக் கெடுத்து விடுவார்களென்ற பயத்தில் சூனியக்காரிகளென முத்திரை குத்தப்பட்டு அழிக்கப்பட்டமையும் நாவலில் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு அழிக்கப்பட்ட Hipatia எனும் பெண்ணொருவரின் சிஷ்யைகள் கீழைத்தேசத்துக்கு தப்பியோடி, தமது குருவின் வழிநின்று பெண்களால் மட்டுமேயான சமூகமொன்றைக் கட்டமைத்து வாழ்ந்து வருவதும் ஒரு குறிப்பாக இடம்பெறுகிறது. இனப்பெருக்கத்துக்கு அவர்கள் வேறேதோ creatures ஐ நாடுவதால் தனி மனிதப் பிறவிகளாயல்லாமல், மனிதவுருவமும் இடுப்புக்குக் கீழே ஆட்டினையொத்த உருவத்துடனும் காணப்படுகின்றனர். Prester John ன் தேசத்தைத் தேடிப்போகும் நண்பர்கள் தலைகளற்ற, ஒற்றைக் கால்களுடனான, முழந்தாள் வரை தொங்கும் காதுகளையுடைய மனிதவுருவங்களைக் காண்கின்றனர். அம்மனிதர்கள் வெவ்வேறு நம்பிக்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களாக - சிலர் இயேசு மனிதவுயிராக அவதரித்தாரென்பதை நம்புபவர்களாகவும், சிலர் அதை மறுப்பவர்களாகவும், சிலர் தூய ஆவி வடிவத்தினை மட்டுமே நம்புபவர்களாகவும் - காணப்படுகின்றனர். இந்த மனிதர்கள் மேற்குலகு குறித்த அற்புதக் கனவுகளுடனும், அளப்பரிய ஆர்வத்துடனுமிருப்பதைக் காணும் நண்பர்கள் கீழைத்தேசம் குறித்து தாம் கொண்டிருந்த கனவுகளையும் அதன் இயல்பு நிலையினையும் நினைத்து ஏமாற்றத்துக்குள்ளாகின்றனர்.

பயணம் வெற்றியென்றும், தோல்வியென்றும் கூறமுடியாத நிலையில் முடிந்துவிட, பன்னிரண்டு நண்பர்களில் ஆறுபேரை இழந்து மீதி ஆறுபேர் மட்டுமே ஊர் திரும்ப முடிகிறது. சில சச்சரவுகளால் நண்பர்கள் பிரிய நேர்ந்துவிட்டாலும், Niketas இடம் கதைகூறி முடிந்ததும், தனது சில வாக்குறுதிகளைக் காப்பாற்றும் பொருட்டு தனியொருவனாக Baudolino மீண்டும் கீழை நாடுகளுக்குப் பயணமாகிறான்.

இங்கு Baudolino வின் உள்ளார்ந்த சிக்கல்களையும் குறிப்பிட்டாக வேண்டும். மிகவும் நேசித்த தன் வளர்ப்புத் தந்தையின் மரணத்துக்கு ஒருவகையில் தான் தான் காரணமென்ற உண்மை அவனைப் படுமோசமாக உறுத்தியமையே தந்தைக்காக, மறுபடியும் அந்தக் கனவு தேசத்தினை நாடிப் போவதற்கு அவனைத் தூண்டியதெனலாம். தன்னைப் பெற்றெடுத்த தாய்க்கும், தந்தைக்கும் ஒரு உண்மையான மகனாக அவனால் இருக்க முடியாமற் போனமை, தாய் இறக்கும் தறுவாயில் கூட அவளருகே நிற்க முடியாமற் போனமை தனது கடமையிலிருந்து தவறிவிட்ட குற்றவுணர்ச்சிக்கு அவனை ஆளாக்குகிறது. மறுபுறம் அவனது பிரியத்துக்குரிய பெண்கள் மூவர்: முதலாவது பெண், அவனது வளர்ப்புத் தந்தையின் துணைவி. பதின்மங்களில் ஆரம்பித்த அவள் மீதான மோகம் பின்னர் தந்தைக்கு துரோகம் செய்கிறோமோவென கவலைப்பட வைத்ததில் நீர்த்துப் போனது. அடுத்தவள், அவனது மனைவி. அவனை விட மிகவும் இளையவள். கர்ப்பமுற்றிருக்கும் போது ஒரு விபத்தில் உயிர்துறக்கிறாள். தன்னை முழுமையாக நேசித்த ஒரு பெண்ணுக்கு நல்ல துணைவனாகத் தானிருக்கவில்லையே என்பது இறுதிவரை அவனை வாட்டுகிறது. மூன்றாமவள், கீழைத்தேசத்தில் அவன் கண்ட Hipatia சமூகத்தைச் சேர்ந்தவொரு பெண். அவன் மறுபடியும் கீழைநாடுகளுக்கு பயணிப்பதற்கு அவளும் காரணமாகிறாள்.

இவ்வாறு, அவன் கூறிய கதையில் எது உண்மை எது பொய்யென என குழப்பமடையும் Niketas அவனது வரலாற்றையும் கதையாக எழுத விரும்பி நண்பருடன் உரையாடும் பகுதியே மேற்குறிப்பிட்டது.


3.

மத்தியகாலத்தில் கத்தோலிக்கத் திருச்சபைக்கும், அரசர்களுக்குமிடையே நிலவிய அதிகாரம் சார் போட்டியினை கதையோட்டத்தின் வழி அறிந்து கொள்ளமுடிகிறது. அரசு பற்றிய கோட்பாடுகள் மாறுதலடையத் தொடங்கிய அக்காலகட்டத்தில் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை முன்வைத்து அரசர்களும் திருச்சபையும் முரண்படத் தொடங்கினர். அரச அதிகாரமானது இறைவனிடமிருந்து மன்னனுக்கு நேரடியாக வழங்கப்படுகிறதென மன்னர்கள் எடுத்துக்கூற, அதிகாரம் இறைவனிடமிருந்து திருச்சபைக்கும் திருச்சபையின் வழியே மன்னர்களுக்கும் கடத்தப்படுவதாக திருச்சபையினர் எதிர்க்கருத்தினை முவைக்கலாயினர். இங்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இறைவனுக்கும் தமக்குமிடையிலான நெருக்கத்தினை நிரூபிக்க வேண்டிய தேவையும், கடப்பாடும் மன்னர்களுக்கும், திருச்சபைக்கும் அவசியமாயிற்று. இதற்குச் சிறந்த உபகரணமாகப் பயன்பட்டவை திருச்சின்னங்கள்/ வரலாற்றுச் சின்னங்கள் (Relics). புனிதர்களின் உடலின் பகுதிகளையும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும், இயேசுவுக்குச் சொந்தமானதென நம்பப்பட்ட பொருட்களையும் வைத்திருப்பது அதிகாரத்தைத் தக்க வைத்திருப்பதற்கும், மக்களது நம்பிக்கையைத் தம்பால் இழுப்பதற்கும் இவர்களுக்கு உதவியது (இலங்கை வரலாற்றில் புத்தரின் புனித தந்ததாதுவுக்கு நேர்ந்த அதே கதி). இதன் விளைவாக பல போலிப் பிரதியெடுப்புக்களும் உலாவத் தொடங்கியதுடன், உண்மையான நினைவுச் சின்னத்துக்கும் போலிச் சின்னங்களுக்குமிடையிலான வேறுபாட்டைக் கண்டறிய முடியாதளவு அவை பரவலாகவும் தொடங்கின.

கைப்பற்றப்பற்ற இத்தாலிய நகரமொன்றின் தேவாலயத்திலிருந்து, இயேசு பிறந்தவன்று அவரைச் சந்தித்த மூன்று அறிஞர்களின் பதப்படுத்தப்பட்ட உடல் Baudolino வுக்கு கிடைக்கப் பெறுகிறது. அதை மக்களுக்கு காட்சிப்படுத்தவெனக் கிளம்பும்போது அரசரின் தலைமை மதகுரு தடுத்து, இவ்வுடல்களைப் போர்த்தியிருக்கும் உடைகள் சற்று தராதரம் குறைந்தவையாகக் காணப்படுகின்றனவெனக் கூறியதையடுத்து கீழ்த்திசையிலிருந்து வந்த அந்த அறிஞர்களுக்கு இத்தாலிய தலைமைக் குருமார் (Archbishops) அணியும் ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. இறுதியில் அந்த 'அறிஞர்கள்' கீழை நாடுகளிலிருந்து வந்த கத்தோலிக்க மதகுருக்களாகிப் போகின்றனர்.

இதற்கிடையில் போப்பாண்டவருக்கும் Frederick Barbarossa வுக்குமிடையே கடும் போட்டி உருவாகிறது (இந்தவிடத்தில் கதை சற்றுத் தெளிவாகப் புரியவில்லை. Anti-Pope என இன்னுமொருவர் குறிப்பிடப்படுகிறார். இவரைத் தமது ஏகாதிபத்திய நலன்களுக்கென அரசரது தலைமை மதகுருவே இரகசியமாக நியமித்ததாகவும் கூறப்படுகிறது). போப்பாண்டவரையும் விட மன்னரை அதிகாரம் மிகுந்தவராக எடுத்துக்காட்டும் பொறுப்பு Baudolino விடம் ஒப்படைக்கப்படுகிறது. Baudolino வின் ஆரம்பகால குரு Otto தான் இறக்கும் தறுவாயில், Prester John இன் சாம்ராஜ்யத்தை Frederick கண்டுபிடித்து அந்த மன்னருடன் தொடர்புகொள்வதன் மூலமே அவர் எதிர்பார்க்கும் உயரிய நிலையை அடைய முடியுமெனவும், அதற்கு உதவும்படியும் Baudolino விடம் கூறுகிறார். அப்படியொரு சாம்ராஜ்யம், பொன்னும் மணிகளும் தவழும், பாலாறும் தேனாறும் பெருக்கெடுத்து ஓடும் வளம் பொருந்திய கனவுத் தேசமொன்று மிகத் தொலைவில் கீழைநாடுகளில் காணப்படுகின்றதென்ற நம்பிக்கை, அது இறைவனின் நேரடி வரம் பெற்ற கத்தோலிக்க மதகுரு/ அரசரொருவராலேயே ஆளப்படுகிறதென்ற எண்ணம் மக்களிடையே ஆழமாக வேரூன்றியிருந்தது.

இதை மனதிற்கொண்ட Baudolino தனது நண்பர்களுடனிணைந்து Prester John, Frederick க்கு அனுப்புவதாக ஒரு கடிதமொன்றைத் தயாரிக்கிறான். இக்கடிதம் மன்னருக்கு பெரும் புகழையும், மதிப்பையும் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, ஏனைய அரசர்கள் மத்தியிலும் பெற்றுத்தரக்கூடும். போப்பாண்டவரும் கூட தவிர்க்கவே முடியாமல் மன்னரை மதிக்க வேண்டி நேரிடும். ஆனால், அக்கடிதம் Baudolino வின் கவனயீனத்தினால் பைசாந்திய (Byzantine) உளவாளியொருவரின் கையில் அகப்படுகிறது. அதை உண்மையான கடிதமென அவ்வுளவாளி நம்பியதன் விளைவு, Baudolino வின் கற்பனைத் திறமையில் உருவான அக்கடிதத்தை Frederick பகிரங்கப்படுத்துவதற்கு முன்பே, பைசாந்திய மன்னரிடமிருந்து Prester John தனக்கெழுதியதாக இதே கடிதம் அச்சு அசலாக Frederick க்கிடம் திரும்பி வருகிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீள்வதற்குள், போப்பாண்டவரும் Prester John தனக்கெழுதியதாக ஒரு கடிதத்தைக் காண்பித்து, அதற்குத் தானனுப்பிய பதிலையும் காட்சிப்படுத்துகிறார். அத்தகைய சாம்ராஜ்யமொன்றின் இருப்பே சந்தேகத்திற்காளாகியிருந்த நிலையில், இக்கடிதப் பரிமாற்றம் நிகழ்வது Baudolino வுக்கு பெரும் வேடிக்கையாகத் தோன்றுகிறது.

கடிதமனுப்பும் முயற்சியும் தோல்வியடைந்த நிலையில் மன்னரின் புகழை நிலைநிறுத்தும் பொருட்டு வழி தேடியலையும் நண்பர்களின் கவனத்தையீர்க்கிறது, இறுதி இராப்போசனத்தன்று இயேசு மதுவருந்திய கிண்ணம். அது பாலஸ்தீனிய அரசரொருவரின் வசமிருந்ததாகக் கேள்விப்பட்டு நண்பர்கள் அதைத் தேடத் தொடங்க, Baudolino தனது சொந்தத் தந்தையிடம் அவர் இறக்கும் தறுவாயில் அந்தக் கிண்ணத்தை விவரிக்கிறான். அது ஆயிரம் மணிகளின் ஒளிபொருந்திய பிரகாசத்துடனும், அரிய வாசனைத் திரவியங்களின் நறுமணத்துடனும் திகழுமென இவன் கதைசொல்ல இடைமறித்த அந்தக் கிழக்குடியானவத் தந்தை, ஒரு தச்சனின் மகன் மணிகள் பதிக்கப்பட்ட கிண்ணமொன்றில் மதுவருந்தியதாக எனக்குக் கதை சொல்கிறாயா எனத் திட்டத் தொடங்குகிறார். அந்தவுண்மை அப்போதுதான் உறைக்கிறது அவனுக்கும். தனது தந்தை இறந்த பிற்பாடு அவர் உபயோகித்திருந்த பழைய கிண்ணமொன்றைத் துடைத்தெடுத்து அதுதான் இயேசு பயன்படுத்திய Holy Grasal என்று மன்னர் தொடக்கம் அனைவரையும் நம்பவைத்து விடுகிறான். சிலர் அதிலிருந்து ஆயிரம் சூரியன்களின் ஒளி பரவுவதைக் கண்டதாகவும், அரிய வாசனைத் திரவியங்களின் நறுமணம் கமழ்வதாகவும் கூறித் திரியத் தொடங்கினர். இது அதனை உரியதாக்கியிருந்த மன்னரின் புகழை ஒரேயடியாக உயர்த்தி விடுவதுடன், அரும் பெரும் பொக்கிஷமாக தான் செல்லுமிடமெங்கும் அதனைக் காவிச்செல்லுமளவு மன்னரும் அதை மதிக்கிறார். பிற்காலங்களில் ஏராளம் மனக்கசப்புகளுக்கும், பிரச்சனைகளுக்கும் அக்குடியானவனின் வெறும் கிண்ணமே காரணியாவது வேறுவிடயம்.

Prester John ன் சாம்ராஜ்யத்தைக் கண்டடைய முடியாது திரும்பும் நண்பர்கள் ஊர் திரும்புவதற்கு முதல் பணமும் புகழும் சேர்க்க, திருச்சின்னங்களைத் தாமே உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். தொழுநோயாளியின் முகம் பதித்த துணி, இயேசுவின் திருமுகம் பதித்த திரைச்சீலையாகிறது; கொல்லைப்புறத்தில் கிடக்கும் சாதாரண துருவேறிய ஆணி இயேசுவைச் சிலுவையில் அறைந்த ஆணியாகிறது; இடுகாடொன்றில் தோண்டியெடுக்கப்பட்ட எலும்புத் துண்டு புனிதரொருவரின் உடலின் ஒரு பகுதியாகிறது. கத்தோலிக்க தேவாலயங்களும் உயர் குடும்பத்தினரும் இத்தகைய நினைவுச் சின்னங்களை வாங்குவதற்குப் பெரும் பணத்தினைச் செலவளிக்கத் தயாராகவிருந்த நிலையில் இது செல்வம் கொழிக்கும் வியாபாரமாகத் திகழ்கிறது.

இவையனைத்தும் வரலாற்றுச் சின்னங்களதும், சம்பவங்களதும் நம்பகத்தன்மை குறித்து சிந்தனையைத் தூண்டுவதாக அமைகின்ற நாவலின் சில பகுதிகள் மட்டுமே.


4.

மிக எளிய வார்த்தைகளுள் கூறுவதானால், 'ஒரு பொய்யை நாம் தீவிரமாக நம்பத் தொடங்கும் போது அது உண்மையாகி விடுகிறது' என்பதே இந்நாவலின் தத்துவசாரமென நினைக்கிறேன். கதையின் ஒவ்வொரு சிறுசிறு சம்பவங்களிலும், கதையோட்டத்திலுமே கூட அதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

"Believing a relic true, you catch its scent. We believe that we, only we, need God, but often God needs us. At that moment I believed it was necessary to help him. That cup must truly have existed, if Our Lord had used it. If it had been lost, it had been through the fault of some worthless man. I was restroing the Grasal to Christianity. God would not have contradicted me."
(pg.280)

திருவள்ளுவரும் இதைத்தான் சொல்லிப் போனார் போலும்.

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்

(அதி.292)

ஆனால், தத்துவங்கள் இடம்பார்த்து பிரயோகிக்கப்பட வேண்டியது அவசியம். இது வரலாற்றிலும் பிரயோகிக்கப்படும்போது அதன் விளைவுகள் என்னவாயிருக்கும்? ஆடம்பரமான கற்பனைகளையல்ல, திடமான உண்மைகளுக்கிடையேயுள்ள உறவுகளை முதன்மைப்படுத்துவதே வரலாற்றின் நோக்கமாயிருக்க வேண்டும். இது வரலாற்றாசிரியர்களின் கடமையும் கூட. அதிலிருந்து தவறுமிடத்து, வருங்காலத்தையே ஒரு தவறான பாதையில் வழிநடத்திச் செல்வதைத் தவிர அது சாதிக்கப் போவது வேறொன்றுமில்லை. வரலாறென்பது வெறும் கட்டுக்கதைகளின் மூட்டையெனக் கருதப்படுமிடத்து, வரலாற்று முதல்வாதம் போன்ற அணுகுமுறைகளின்மீதும் ஐயங்கொள்ள வேண்டியதாகிறது. விடயமொன்றன் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் வரலாற்றை அறிந்துகொள்வதன் மூலமே அவ்விடயங் குறித்த தெளிந்த ஆழமான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாமென்ற அரிஸ்டோட்டிலின் கருத்து காலப்போக்கில் காலாவதியாகிவிடுமென்றே தோன்றுகிறது.

Monday, October 15, 2007

பிரதிகளை மீளப் பதிதல் - 1

-The God of Small Things

1.

மிகவும் வசீகரித்த புத்தகமொன்றைப் பற்றி குறிப்பெழுதவென உட்காரும்போது எங்கிருந்து தொடங்குவதென்ற கேள்வியெழும். முதல் அத்தியாயத்திலிருந்து தொடங்க முடியாது. காரணம், இந்தக் கதை காலங்களுக்கிடையே முன்னும் பின்னுமாக மிக மிக வேகமாக நகர்ந்துகொண்டிருப்பது, சில அபாயகரமான இராட்டினங்களைப் போல.

அண்மையில், அவிசாவளையில் அமைந்திருக்கும் Leisure World க்கு தோழிகள் சிலர் போயிருந்தோம். Space Ship என்ற பெயரில் ஒரு இராட்டினம். விஷயம் தெரிந்தவர்கள் புத்திசாலித்தனமாக நழுவிக் கொண்டார்கள், தலைசுற்றுகிறதென்று. பெயருக்கேற்ற மாதிரி ஒரு கூண்டு. முழுக்க முழுக்க கம்பிகளால் அடைக்கப்பட்டு, போதாக்குறைக்கு இறுக்கமான சீட் பெல்ட்களுடன். இரண்டு கூண்டுகள். ஒன்று கீழேயிருக்கும். மற்றையது பனையளவு உயரத்தில் இதற்கு நேர்மேலே இருக்கும். ஒரு கூண்டில் நான்கு பேர் வீதம் (இருவர் இருவராக) ஒரே நேரத்தில் எட்டுப்பேர் பயணிக்கலாம். அந்தக் கூண்டு பூமியைப்போல தன்னைத்தானேயும் சுற்றும் (அப்படி சுற்றும்போது நாங்கள் தலைகீழாக இருப்போம் கூண்டுக்குள்), மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும், முன்னுக்கும் பின்னுக்கும் சுற்றும்.

இருக்குமிடத்திலிருந்து மெதுவாக முன்னேறுவதைப் போலிருக்கும், திடீரென்று வேகமெடுத்து ஒரு உலுக்கு உலுக்கி திசைதிரும்பி மறுபடியும் வேகம் குறையும். அடுத்தகணம், ஒரே வீச்சில் பின்புறமாக சுழலத்தொடங்கும். இடம் வலம் மறந்து திசைகள் பற்றிய பிரக்ஞையற்று தலைசுழல அமர்ந்திருப்போம். அதே அனுபவம் இப்பிரதியை வாசிக்கும்போதும்.. நிகழ்காலத்தில் தொடங்கும் கதை, கடந்தகாலங்களுக்குச் சட்டென்று தாவி, நிகழ்காலத்துக்கும், கடந்தகாலத்தின் கடந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களுக்குமிடையே ஊடாடி மாறி மாறிப் பயணித்து, இறுதியாக கடந்தகாலத்தின் ஏதோவொரு புள்ளியில் சடுதியாக வந்து நின்றுவிடுகிறது.

அது அருந்ததி ரோயின், The God of Small Things.

2.
Once he was inside her, fear was derailed and biology took over. The cost of living climbed to unaffordable heights; though later Baby Kochamma would say it was a Small Price to Pay.
Was it?
Two lives. Two children's childhoods.
And a history lesson for future offenders.

(pg.318)

இறுதி அத்தியாயத்திலிருந்து தொடங்குவதுதான் மிகப் பொருத்தமாயிருக்கக்கூடும். சிறிய குடும்பம், சிறிய விடயங்கள், சிறிய தவறுகள்.. ஆனால், அவற்றுக்கு விலையாகக் கொடுக்க நேர்ந்ததோ, இரண்டு உயிர்களும், இரு குழந்தைகளின் குழந்தைமையும்.

Estha, Rahel - ஐந்து அல்லது ஆறு வயது நிரம்பிய (ஆண்,பெண்) இரட்டைக் குழந்தைகள், அவர்களது விவாகரத்துப் பெற்ற அம்மா மூவரையும் முக்கிய கதாபாத்திரங்களாகவும், கேரளாவின் Ayemenem எனும் ஊரைக் களமாகவும் கொண்டு நகர்கிறது கதை. இங்கு, The God of Small Things எனக் குறிப்பிடப்படும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் அம்மாவுடன் தொடர்புவைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆண்நண்பராகிய Velutha வும் முக்கிய இடம்பெறுகிறார். பிரதியைப் புறக்கணித்து, காலமாற்றங்களின் அகரவரிசைப்படி கதையைச் சுருக்கமாகக் கூறுவதானால்,

பரம்பரை பரம்பரையாக ஊரில் பேரும் புகழும் பெற்ற ஒரு கிறிஸ்தவக் (Syrian Christians) குடும்பம். அதில், கதையின்படி நான்காவது தலைமுறை அம்மாவும், Chacko வும். அம்மா சிறிய வயதிலேயே வீட்டை விட்டுப்போய் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் முடித்து கல்கத்தாவில் குடியேறுகிறார். அளவுமீறிய குடிப்பழக்கமுடைய கணவன், ஏதோவொரு தவறில் வேலையை இழக்கும் நிலைக்காளாகிறார். கணவரது மேலதிகாரி, அவரது அழகான மனைவியின் மீதுள்ள நெடுநாள் நாட்டத்தில் வேலை இழப்பைத் தவிர்ப்பதாயின் மனைவியைச் சிலகாலம் தன்னுடன் தங்க அனுமதிக்கும்படி யோசனை கூறுகிறார். கணவரும் இதே யோசனையை அம்மாவிடம் எடுத்துரைக்க, இயலாத கட்டத்தில் அம்மா விவாகரத்துப் பெற்று பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தன் பெற்றோரின் ஊருக்குத் திரும்பி வருகிறார். ஆண்குழந்தையை கணவரிடமே விட்டுவிட அம்மா விரும்பினாலும், பிள்ளைகள் எப்போதுமே தாயின் பொறுப்பாக (சட்டரீதியான குழந்தையாயிருந்தாலென்ன, சட்டத்துக்குப் புறம்பானதாயிருந்தாலென்ன) மட்டுமே கருதப்படுமொரு சமூகத்தில் அது இயலாததாகிவிடுகிறது.

அம்மாவின் அண்ணா Chacko, Oxford பல்கலைக்கழகத்தில் பட்டதாரிப் படிப்பு முடித்து, அங்கேயே ஆங்கிலேயப் பெண்ணொருவரையும் திருமணம் முடித்து, ஒரு பெண் குழந்தையும் பிறந்திருந்த நிலையில், மனைவி விவாகரத்து வேண்டிவிட ஊருக்குத் திரும்பி வந்து, தனது அம்மாவின் ஊறுகாய், மற்றும் பதப்படுத்திய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைப் (Paradise Pickles & Preserves) பொறுப்பேற்று நடத்துகிறார்.

அது கம்யூனிஸம் கேரளாவில் பரவத் தொடங்கியிருந்த காலகட்டம். Chacko நிறுவனமொன்றின் முதலாளியெனினும், Oxford காலத்திலிருந்தே கம்யூனிஸத்தின் தீவிர ஆதரவாளர். சாதி வேறுபாடுகளை மறுப்பவர் (ஆனால், தனது வீட்டுக்குள் தாழ்ந்த சாதியினரை அனுமதிக்க மாட்டாதது வேறுவிடயம்). பாட்டி, Baby Kochamma, வேலைசெய்யும் Kochu Maria உட்பட 7 பேரைக்கொண்ட குடும்பத்தில் நாட்கள் வெகு சாதாரணமாக நகர்ந்து கொண்டிருக்க, திடீர் திருப்பம் Chacko வின் ஆங்கிலேய மனைவி Margaret மற்றும் மகள் Sophie Mol வருகையுடன் நிகழ்கிறது. Margaret தனது இரண்டாவது கணவர் விபத்தொன்றில் இறந்ததையடுத்து, அதனை மறப்பதற்காகவும், கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கழிக்கும் நோக்கிலும் மகளுடன் கேரளா வருகிறார். அவர்கள் வந்து சில வாரங்களில் அம்மாவுக்கும், தச்சுவேலை செய்துவரும் தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த Velutha வுக்குமிடையிலான தொடர்பு வீட்டாருக்குத் தெரியவருவதுடன் (இது Velutha வின் மரணத்துக்கு வழிகோலுகிறது), எதிர்பாரா விபத்தொன்றில் Chacko வின் மகள் Sophie Mol இறக்கவும் நேரிடுகிறது. உயிருக்குயிராய் நேசித்திருந்த மகளை இழந்த Chacko வின் துயரம், ஒருவகையில் அம்மாதான் அதற்குக் காரணமென Baby Kochamma நம்பவைத்துவிட அம்மாவின் மீதான கோபமாக மாறி, அம்மாவையும் குழந்தைகளையும் வீட்டை விட்டுத் துரத்த வைத்துவிடுகிறது.

தொடர்வது, அழகிய குடும்பமொன்றின் சிதைவு. தம்மை ஒருவரிலிருந்து மற்றொருவரென வேறுபிரித்துப் பார்த்திராத, எப்போதும் நான், அவள்/ன் எனக் கருதாது 'நாம்' எனவே சிந்தித்துப் பழக்கப்பட்ட Estha வும், Rahel ம் பிரிய வேண்டிய நிர்ப்பந்தம். Estha அப்பாவிடம் கல்கத்தாவுக்கு அனுப்பப்படுகிறான். Rahel ஊரிலேயே தங்க அனுமதிக்கப்படுகிறாள். அம்மா வீட்டை விட்டு அனுப்பப்படுகிறார். குழந்தைகளைப் பராமரிக்கப் போதுமான ஊதியத்தைத் தரக்கூடிய வேலையொன்றை அம்மா பெற்றுக்கொண்டதன் பின்னர் அனைவரும் மறுபடியும் ஒன்றாக வாழலாமென்ற நம்பிக்கையுடன் மூன்றுபேரைக்கொண்ட அச்சிறிய அன்பால் பிணைக்கப்பட்ட குடும்பம் பிரிகிறது.

அவர்கள் மறுபடியும் இணைவதற்கான சந்தர்ப்பம் கிட்டுவதற்கு முன்னரே அம்மா - 31 வயதளவில்.. Not old. Not young. But a viable die-able age. இறந்துவிடுகிறார் (இறுதிவரை அப்படிப்பட்டதொரு வேலை அவருக்குக் கிடைக்கவேயில்லை, பாடசாலையொன்றை நடாத்த வேண்டுமென்ற அவரது கனவும் நிறைவேறவில்லை).

Rahel திருமணம் முடித்து அமெரிக்காவில் குடியேறுகிறாள். ஏறத்தாழ இருபது, இருபத்துமூன்று வருடங்கள் இப்படியே கடந்து போக, இவர்களின் அப்பா அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வதற்கு முன்னர், இனியும் தனது மகனைத் தன்னால் பராமரிக்க முடியாதெனக் கூறி திரும்ப ஊருக்கு அனுப்பி விடுகிறார். Estha ஊருக்கு வந்ததை அறிந்துகொண்ட Rahel (தற்போது கணவரை விட்டுப் பிரிந்தாயிற்று) அமெரிக்காவிலிருந்து ஊருக்குத் திரும்பி வந்து காலவோட்டத்தில் அசாதாரணமான முறையில் அமைதியாகிப்போன சகோதரனைக் காண்கிறாள். தற்போது அவர்கள் - two-egg twins - முற்றிலும் மாறுபட்டவர்கள், அவள் மீள்நிரப்பமுடியா வெறுமையுடனும், அவன் அசாதாரணமான அமைதியுடனும்.

இது சிக்கார்ந்த கதையின் மிக மிக எளிமையாக்கப்பட்ட சுருக்க வடிவம். உண்மையான பிரதி இப்படித் தொடங்கி, இதேபோல முடிவதல்ல; இது மட்டுமேயல்ல.


3.
வியக்க வைக்கும் அம்சம் பாத்திர வடிவமைப்பும் வர்ணனையும். ஒவ்வொரு மனிதரையும் செதுக்கியெடுத்திருக்கிறார் ரோய். அவர்களது தோற்றம், நடத்தை, சிந்தனைகளென்பன உருவத்துடன் மறுவிம்பமாக மனதில் விரியும் அதேவேளை உருவமற்ற எண்ணங்களின் அதிர்வுகளுக்கு வடிவங்கொடுத்தவாறும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அம்மாவின் கனவில் வந்த ஒற்றைக்கை மனிதனைப் பற்றிய விவரணையில்,

The God of Loss.
The God of Small Things.
The God of Goosebumps and Sudden Smiles.
He could do only one thing at a time.

If he touched her, he couldn't talk to her, if he loved her he couldn't leave, if he spoke he couldn't listen, if he fought he couldn't win.
(pg.312)


அம்மாவையும், சகோதரனையும் விட்டு விலகியிருந்த நாட்களில் Rahel பல பாடசாலைகளுக்கு தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கிறாள். ஆசிரியையொருத்தியின் வாசலுக்கு வெளியே பசுமாட்டின் சாணத்தை பூக்களால் அலங்கரித்துக் கொண்டிருந்தமைக்காகவும், கதவுகளுக்குப் பின்னால் ஒளிந்திருந்தமைக்காகவும், மூத்த மாணவிகளுடன் முரண்பட்டமைக்காகவும், தலைமையாசிரியையால் கண்டிக்கப்படுகிறாள். காரணம் கேட்டபோது, தனது மார்புகள் நோகுமா என்பதைப் பரிசீலிப்பதற்காகவே அப்படிச் செய்ததாக ஒப்புக்கொள்கிறாள். கிறிஸ்தவ நிறுவனங்களைப் பொறுத்தவரை மார்புகளின் இருப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையாதலாலும், புகை பிடித்தமைக்காகவும், வகுப்பாசிரியையின் பொய்த் தலைமுடியை எரித்தமைக்காகவும் பாடசாலையை விட்டு விலக்கப்படுகிறாள்.

She remained free to make her own inquiries: into breasts and how much they hurt. Into false hair buns and how well they burned. Into life and how it ought to be lived.
(pg.18)


இருந்தபோதும், காலம் அவளை வெறுமையின் உறைவிடமாக மாற்றிவிடுகிறது. அமெரிக்காவிலிருந்து வளர்ந்த பெண்ணாக வெறுமையையும் கூடவே அழைத்துக்கொண்டு அவள் திரும்பி வருகையில், அவளது சகோதரன் Estha ஒரு கிழவனின் வாயுடன் கூடிய இளைஞனாக வாழ்ந்துகொண்டிருப்பதைக் காண்கிறாள்.

He carried inside him the memory of a young man with an old man's mouth. The memory of a swollen face and a smashed, upside-down smile. Of a spreading pool of clear liquid with a bare bulb reflected in it. Of a bloodshot eye that had opened, wandered and then fixed its gaze on him. Estha.
(pg.32)


காலமும், அனுபவங்களும், தொலைந்துவிட்ட குழந்தைமையும் அவர்களை அவ்விதம் மாற்றிவிட்டிருந்தன. The Quietness & The Emptiness.

அம்மாவின் உணர்வுகள் எடுத்துக்காட்டப்படும் விதமும் மிகச் சிறப்பானது. தன் குழந்தைகளின் மீது அளவுகடந்த பிரியம் வைத்திருந்த போதும், சமயங்களில் தனது உணர்வுகளை முன்னிலைப்படுத்துவதில் அவள் தயக்கம் காட்டவில்லை. பகல் கனவொன்றின் போது ஒற்றைக் கை மனிதனுடன் கடற்கரையோரத்தில் அவள் தனித்து அலைகிறாள், அந்தக் கனவில் தனது குழந்தைகளை விட்டு அவள் வெகுதூரம் விலகிவிட்டிருந்த போதும் அந்தக் கனவு மனிதனின் மீதான நேசத்தையும் விட்டுக்கொடுத்தாளில்லை. குழந்தைகள் அவளது வயிற்றின் பிரசவக் கோடுகளையும், தையல் தடங்களையும் தடவிக்கொடுத்து முத்தமிடுகையில்கூட அதை மூர்க்கமாகப் புறக்கணிக்கிறாள்.

Ammu grew tired of their proprietary handling of her. She wanted her body back. It was hers. She shrugged her children off the way a bitch shrugs off her pups when she'd had enough of them.
(pg.211)


இது அம்மாமாரின் மற்றும் தாய்மையின் புனிதம் பற்றி காலங்காலமாக நாம் கொண்டிருந்த கற்பிதங்களைத் தகர்த்தெறிவதாகவுள்ளது. தனது உடல் குறித்தான கரிசனை கொண்டவளாக Estha, Rahel ன் அம்மா சித்தரிக்கப்படுகிறாள்; ஒரு பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிடவும்படுகிறாள். அம்மாமாரைக் கடவுளரின் மறுவுருவமாகவல்லாது (தந்தைவழிச் சமூகத்தின் நலன்களைப் பேணுவதும், பெண்களின் கருப்பையைக் கட்டுப்படுத்துவதுமே இந்தக் கடவுளர் மயமாக்கலின் அடிப்படை நோக்கம்), சராசரி உணர்வுகளுடன் கூடிய மனுசியாக அணுகுமிந்தப் பார்வை இன்னமும் விரிவாக நோக்கப்பட வேண்டும். சட்டத்துக்குப் புறம்பான உறவு வீட்டாருக்குத் தெரியவந்து அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பொழுதில் நடந்தது புரியாமல் திகைத்து நிற்கும் குழந்தைகளைப் பார்த்து அவள் கத்துகிறாள்:

If it wasn't for you I wouldn't be here. None of this would have happened. I would have been free. I should have dumped you in an orphanage the day you were born. You're the millstones round my neck.
(pg.240)


அவளது இந்த வார்த்தைகள் வெளிப்படுத்தும் உணர்வே இங்கு முக்கியம் பெறுகிறது. நீங்களில்லாவிடில் இந்த இடத்தில் நானிருந்திருக்கவும் மாட்டேன்; இப்படியெல்லாம் அவமானப்பட்டிருந்திருக்கவும் மாட்டேன்; சுதந்திரமாக இருந்திருப்பேன் என்கிறாள். குழந்தைகளைப் பொக்கிஷமாகக் கருதும் எமது ideal தாய்மாருடன் ஒப்பிடுகையில் குழந்தைகளைச் சுமையெனத் திட்டும் இவளை எங்கே கொண்டுபோய் வைப்பது? ஆனால், யதார்த்தம் பெரும்பாலும் இப்படித்தானிருக்கிறது. குழந்தைகள் தாயின் பொறுப்பாக சுமத்தப்படுவது அவளது சுதந்திரத்துக்கான தடைக்கல்லாக அக்குழந்தைகளை மாற்றிவிடுகிறது. அதேயிடத்தில் ஆனானப்பட்ட தாய்மையின் 'புனிதம்' வெறும் myth ஆகிவிடுகிறது. But, she's the real woman.

4.

நாவலில் அதிகம் ரசிக்க வைப்பது அருந்ததி ரோயின் மொழிநடையும் கதை சொல்லும் பாணியும். சிறுவர்களின் உலகை மிக மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளார் அல்லது வாழ்ந்து காட்டியுள்ளாரெனலாம். சமயங்களில், சிறுவர்களது சிந்தனை வியக்க வைப்பது. நாம் சற்றும் எதிர்பார்த்திராத அதிக கவனம் பெற்றிராத மிகச் சிறிய விடயங்கள் கூட சிறுவர்களால் மிக உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றன. அவர்களுடன் பழகுவதை நாம் இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். அவர்களது கேள்விகளுக்கு அலட்சியமாகப் பதில் சொல்கிறோம். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் எமக்கு பலதையும் கற்றுக் கொடுப்பவர்களாகவும், தம் சந்தேகங்களால் எம்மை அசைத்துவிடக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களது கேள்விகளை சிடுசிடுத்துக்கொண்டு புறக்கணிப்பதற்கு முக்கிய காரணம் அதற்கான பதில் எமக்குத் தெரிந்திராமைதான். சிறுவயதில் அத்துணை சாமர்த்தியசாலிகளாகவிருப்பவர்கள் வளர்ந்ததும் வெகு சாதாரண மனிதர்களாகி விடுகின்றமைக்கு அவர்களது அலட்சியத்துடன் எதிர்நோக்கப்பட்ட கேள்விகளும் பெரியவர்களது புறக்கணிப்புக்களுமே காரணமாகவிருக்கலாம். அல்லது 'சின்னத்தனங்களிலிருந்து' விடுபட்டு பெரியவர்களின் உலகுக்குள் நுழையும் பேரவாவில் தாமாகவே தமது சிந்தனையைச் சுருக்கிட்டுக் கொண்டதாகவும் கருதலாம். எம்மால், சிறுபிள்ளைத்தனங்கள் எனக்குறிப்பிடப்படுபவை உண்மையில் சிறுபிள்ளைத்தனமானவையா என்ற கேள்வியும் எழுகிறது.

Sopie Mol ஐ ரோய் இப்படி விபரிக்கிறார்,

The seeker of small wisdoms: Where do old birds go to die? Why don't dead ones fall like stones from the sky?
The harbinger of harsh reality: You're both whole wogs and I'm a half one.
The guru of gore: I've seen a man in an accident with his eyeball swinging on the end of a nerve, like a yo-yo
(pg.17)

மற்றையது, சில விடயங்களை அவர் எடுத்துச் சொல்லும் பாணி,

While other children of their age learned other things, Estha and Rahel learned how history negotiates its terms and collects its dues from those who break its laws. They heard its sickening thud. They smelled its smell and never forget it.
History's smell.
Like old roses on a breeze.
It would lurk forever in ordinary things. In coat hangers. Tomatoes. In the tar on roads. In certain colors. In the plates at a restaurant. In the absence of words. And the emptiness in eyes.
(pg.54)
வரலாற்றின் தன்மை, Estha, Rahel ன் அம்மா சமூகத்தின் (வரலாற்றின்) விதிகளை மீறியதை அந்தக் குழந்தைகள் உணரும் விதம்..

அவர்களது வாழ்வு இப்படித் தடம்புரண்டு போனமைக்கு Sopie Mol ன் வருகையும், அவள் இறந்தமையும்தான் காரணமென்பது வெறுமனவே ஒருபக்கத்தால் மட்டும் அவ்விடயத்தை அணுகுமொரு முறைதான். உண்மையில் இவையனைத்தும் இந்தக் கதை நடந்துகொண்டிருக்கும் காலப்பகுதிக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டிருந்தன.

That it really began in the days when the love laws were made. The laws that lay down who should be loved, and how. And how much.
(pg.33)


யார், எப்படி, எந்தளவு நேசிக்கப்பட வேண்டும் என்ற அன்பின் விதிகள் உருவாக்கப்பட்ட நாளிலிருந்தே இந்தப் பிரச்சனைகள் முளைவிடத் தொடங்கிவிட்டிருந்தன. அம்மா இந்த விதிகளை மீறினார். யார் யார் நேசிக்கப்படத் தகுந்தவர்களென்ற பட்டியலில் இடம்பெற்றிராத தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவரை அவர் நேசித்தார். அத்தகையவர்களை எப்படி நேசிக்கவேண்டுமென்ற விதிகளைக் கடந்து, எந்தளவு நேசிக்கவேண்டுமென்ற அளவு கடந்து எல்லைதாண்டி நேசித்தார். அவரது அந்த நேசம் அவரால் நேசிக்கப்பட்டவரின் உயிரையும், அவர் குழந்தைகளின் குழந்தைமையையும் விலையாகப் பெற்றுக்கொண்டது. ரோய் சொல்வது போல, however, for practical purposes, in a hopelessly practical world... (pg.34)

ஆண்குழந்தை Estha தியேட்டரொன்றில் வைத்து குளிர்பான விற்பனையாளனொருவனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்காளாக்கப்படுகிறான். அவ்விற்பனையாளனின் ஆணுறுப்பைக் கையில் பிடித்திருப்பதற்குப் பரிசாக குளிர்பானமொன்று அவனுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தான் துஷ்பிரயோகத்துக்காளாவது புரியும் வயதில் அவனில்லையெனினும், அந்த அருவருப்பு, அச்சம்பவம் அவனில் ஏற்படுத்திய தாக்கம், இது தெரியவந்தால் அம்மா தன்னை வெறுத்துவிடுவாரோ என்ற பயம் (குழந்தைகள் எப்போதும் தாம் நேசிக்கப்பட வேண்டுமென எதிர்பார்ப்பவர்கள்), அந்த மனிதனை மறுபடியுமொருமுறை சந்திக்க நேருமோ என்ற கலக்கம், அதேநேரம் தனது சகோதரியை அந்த மனிதனிடமிருந்து பாதுகாக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வு அனைத்துமிணைந்து வீட்டை விடப் பாதுகாப்பானதோர் இடத்தை ஆற்றுக்கு அப்பால் தேர்ந்தெடுக்க அவனை வழிநடத்துகின்றன. ஒருவகையில் இதுவே Sopie Mol ன் மரணத்துக்கும் காரணமாயமைகிறது. பிற்காலத்தில் அவனது ஆளுமையிலும் பாரிய மாற்றத்தையேற்படுத்துகிறது. சிறிய, சாதாரணமாகத் தோற்றமளிக்கின்ற விடயங்கள் எப்போதும் அதனையொத்த விளைவுகளை மட்டுமே தந்துவிடுவதில்லையென்பதை இது உணர்த்திச் செல்கிறது.

சமூகத்தில் ஆண்களையும் பெண்களையும் நடாத்தும் விதத்திலுள்ள பாரிய வேறுபாட்டையும் இந்நாவல் கேள்விக்குள்ளாக்குகிறது. விவாகரத்துப் பெற்றுக்கொண்ட Chacko வின் Men's needs னைப் புரிந்துகொண்ட அவரது அம்மா (மம்மாச்சி) பெண்கள் தொந்தரவின்றியும், யார் கண்ணிலும் படாமலும் அவரது அறைக்கு பின்புறமாக வந்து செல்லக்கூடியவாறு புதிய வாயிலொன்றையும் அமைக்கிறார். உணவுக்காகக் காத்திருக்கும் பிள்ளைகளையும், குடிகாரக் கணவன்மாரையும் கொண்ட தொழிற்சாலைப் பெண்கள் பணத்துக்காக தாராளமாக அங்கு வந்து போயினர். ஆனால், அதேவேளை அதேபோல விவாகரத்துப் பெற்ற அம்மாவின் Women's needs புரிந்து கொள்ளப்படாதது ஆச்சரியத்துக்குரியதே. அம்மாவுக்கும் வேலுதாவுக்குமிடையேயான தொடர்பு தெரியவந்ததும் சீறிப்பாயும் மம்மாச்சி அம்மாவை அறையொன்றினுள் அடைத்து வைக்குமளவு கோபம் கொண்டமையும், இது வெளியில் தெரியவந்தால் குடும்பத்தின் மானம் மரியாதை என்னாகுமென்று வருந்துவதும் கவனிக்கத்தக்கது. குடும்பத்திலுள்ள ஆண் என்ன செய்தாலும் தொலையாத மானமும், மரியாதையும் பெண் என்றவுடன் கண்காணாத் தொலைவுக்குப் பறந்து விடுகின்றன. இங்கு மறுபடியும் 'அன்பின் விதிகளின்' (யார் நேசிக்கப்பட வேண்டும், எப்படி & எந்தளவு) ஆட்டம் தொடங்குகிறது.


5.

கேரளாவில் அப்போது பரவிக்கொண்டிருந்த மார்க்ஸிஸம் மற்றும் பூகோளமயமாக்கலுக்கெதிரான வலிமையான விமர்சனம் நாவலினூடு முன்வைக்கப்படுகிறது. இந்தியாவின் வேறெந்தப் பாகத்தையும்விட கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி அதிகளவு பலம் பொருந்தியதாக விளங்கியமைக்கு அங்கு கிறிஸ்தவர்கள் அதிகளவில் வாழ்ந்தமையையும் ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது. மார்க்ஸிஸத்தை கிறிஸ்தவத்துடன் ஒப்பிடும் ரோய் கிறிஸ்தவமும் மார்க்ஸியமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒத்த தன்மைகளைக் (similar characteristics) கொண்டிருப்பதனால், இந்துக்களை விட கிறிஸ்தவர்கள் அதில் அதிக ஈடுபாடு காட்டுவதற்கு வாய்ப்புண்டாகியிருக்கலாமென்கிறார்.

Marxism was a simple substitute for Christianity. Replace God with Marx, Satan with the bourgeoisie, Heaven with a classless society, the Church with the Party, and the form and the purpose of the journey remained similar. An obstacle race, with a prize at the end.
(pg.64)


ஆனாலும், இந்தக் கோட்பாட்டிலிருந்த குழப்பம் யாதெனில் கேரளாவின் சிரியன் கிறிஸ்தவர்கள் யாவரும் பெரும்பாலும் தோட்டங்கள், தொழிற்சாலைகளுக்குச் சொந்தக்காரர்களான நிலப்பிரபுக்களாகவே இருந்தமை; மரணத்தை விடப் பயங்கரமான விடயமாக கம்யூனிஸத்தைக் கருதும் இந்தக் கிறிஸ்தவர்கள் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்தும் வந்தமை. கேரளாவில் கல்வியறிவு உயர்நிலையில் காணப்பட்டமையும் கம்யூனிஸத்தின் பரவலுக்கு ஒரு காரணமாகக் கருதப்பட்டது. ஆனாலும் உண்மையில், சாதிப்பாகுபாடுகளுக்குள்ளான, மரபார்ந்த விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்ற சமூகத்தை ஒருபோதும் கேள்வி கேட்காத மறுசீரமைக்கும் அமைப்பாக மட்டுமே கம்யூனிஸம் கேரளாவில் அறிமுகமானதெனலாம். அதன் ஆதரவாளர்களும் சாதிப் பாகுபாடுகளுக்குட்பட்டே செயற்பட்டமையும் குறிப்பிடத்தகுந்தது.

The Marxists worked from within the communal divides, never challenging them, never appearing not to. They offered a cocktail revolution. A heady mix of Eastern Marxism and orthodox Hinduism, spiked with a shot of democracy.
(pg.64)

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக விளங்கிய நம்பூதிரிபாட் தேர்தல்களில் பங்குபெறுவதிலும், தேர்தல் மூலம் ஆட்சியை கைப்பற்றுவதிலும் நம்பிக்கை கொண்டிருந்தமையும், அதன் விளைவாகக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டமையும், தீவிரவாதப் பிரிவினர் நக்ஸலைட்டுகளாகச் செயலாற்றத் தொடங்கியமையும் மேலும் கவனத்திற்கொள்ளத்தக்கன.

கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக (card holding member) இருந்த வேலுதாவின் மீது அம்மாவின் குடும்பத்தினர் பொய்யான குற்றப்பதிவு தாக்கல் செய்தபோது, தனிப்பட்ட விடயங்களில் தலையிட முடியாதென கட்சியும் அவனைக் கைவிட்டு விடுகிறது. இறுதியில் பொலிசாரினால் அடித்து நொறுக்கப்பட்டு இறக்கும் தறுவாயில், இதுவரைகாலமும் கடவுளாலும், வரலாற்றாலும் கைவிடப்பட்ட சாதியைச் சேர்ந்தவனை இப்போது மார்க்ஸும் கைவிட்டுவிட்டாரென்கிறார் ரோய்.

பூகோளமயமாக்கலின் விளைவுகளுக்குச் சிறந்த உதாரணமாக, கதைநிகழ் காலத்தைய Baby Kochamma வும், வேலைக்காரி Kochu Maria வும் திகழ்கின்றனர். செய்மதித் தொலைக்காட்சி மூலம் உலகத்தில் ஒளிபரப்பாகும் அத்தனை நிகழ்வுகளையும் நாள் முழுதும் அறைக்குள்ளிருந்தே கண்டுகளிப்பதுடன், அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொண்டு இரு தடவை வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் இருவரும். Baby Kochamma தனது வீட்டிலிருக்கும் தளபாடங்கள் பொருட்கள் மீது அளவற்ற பிரியம் கொண்டவர்.அவரது மார்க்ஸிய - லெனினிஸம் மற்றும் புரட்சி பற்றிய பழைய பயங்கள், BBC யில் ஒளிபரப்பப்படும் வறுமை, யுத்தங்கள் பற்றிய செய்திகளால் மீள்வடிவம் பெறுகின்றன. வறுமையும், படுகொலைகளும் அவருக்குத் தனது வீட்டுத் தளபாடங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் விளைவிக்கும் காரணிகளாகவே தோற்றமளிக்கின்றன. எந்தக் கணத்திலும், தொலைக்காட்சியில் தென்படும் யாரேனுமோர் வறியவன் தனது பொருட்களைத் திருடிக்கொண்டு விடலாமென்ற பயத்தில் யன்னல்களைக் கூட எப்போதும் மூடியே வைக்கிறார். மெய்மறந்து தொலைக்காட்சியை இரசிக்கும் நேரங்களில் Baby Kochamma வும், வேலைக்காரி Kochu Maria வும் ஒரே கிண்ணத்திலிருந்து வேர்க்கடலையை அள்ளியெடுத்து வாய்க்குள் போட்டுக்கொள்வது, பூகோளமயமாக்கமும், செய்மதித் தொலைக்காட்சி நிகழ்வுகளும் அந்தப் பழைய வீட்டிலும் சமத்துவத்தைக் கொண்டுவந்து விட்டனவெனக் கிண்டல் தொனியுடன் குறிப்பிடப்படுகிறது.

சுருக்கமாகக் கூறுவதாயின், அருந்ததி ரோயின் இந்த நாவல், தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாததும், தன்னால் போற்றப்பட முடியாததுமானவற்றை அழிப்பதற்கு மனிதருக்குள்ள தீராத ஆவலை எடுத்து விளம்புவதாகவுள்ளது.

Feelings of contempt born of inchocate, unacknowledged fear - civilization's fear of nature, men's fear of women, power's fear of powerlessness.
Man's subliminal urge to destroy what he could neither subdue nor deify.
Men's Needs.

(pg.292)


இங்கு விலையாகக் கொடுக்கப்பட்டவை (மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கு மீள்கிறோம்):

இரு குழந்தைகளின் குழந்தைமை
பெண்ணின் நேசம்
மற்றும், The God of Small Things


வரலாற்றின் விதிகளை மீறுபவர்களுக்கு இது மிகச் சாதாரணமான தண்டனையாக/ விலையாகத் தோன்றலாம்.
ஆனால்..,
நிச்சயமாக அது சாதாரணமானது தானா??


(நன்றி:- புத்தகத்தை அன்பளித்த தோழனுக்கு...)