skip to main |
skip to sidebar
பாதாள ரயில்வண்டி இரு நிலையங்களுக்கிடையே
வெகுநேரம் நின்றுவிடும் சமயத்தில்
சம்பாஷணை எழுகிறது, பின் மெதுவாக மங்கி
மௌனமாய் மாறுகிறது
ஒவ்வொரு முகத்தின் பின்னாலும்
சிந்தனையற்ற வெறுமை ஆழமடைகிறது
சிந்திக்க ஏதும் இல்லை என்ற
வளர்ந்துவரும் பீதி மட்டுமே எஞ்சி நிற்கிறது
- T.S.Eliot (நன்றி:- அழகும் உண்மையும்: மார்க்ஸியப் பார்வை. தமிழாக்கம் - நேத்ரா, எஸ்.வி.ராஜதுரை)
1.
உலகின் எந்த மூலையிலும், இண்டு இடுக்கிலுங் கூட இடமில்லாமற் போனதாய்.. ஒவ்வொரு அணுவாலும் புறக்கணிக்கப்படுவதாய் உணர்ந்த இரு நெஞ்சங்களின் சங்கமிப்போடு தொடர்கிறது, இன்றைய படத்துடனான இரண்டறக் கலத்தல். திரையில் பார்வையற்ற சிறுவனொருவனுக்கு - அவனது குறைபாட்டினைக் காரணங்காட்டி - அவன் வாழவிரும்பிய உலகில் இடம் மறுக்கப்படுகிறது. அன்றாடங்களின் நகர்வில் அமர்ந்து படம்பார்த்துக் கொண்டிருக்கும் என்னைப்போன்ற ஒருத்திக்கோ, பெண்ணாய் அல்லது அவர்கள் கூறுவதன்படி இரண்டாம் தரப் பிரஜையாய் பிறந்துவிட்ட காரணத்தால்.., வயது ஏற ஏற.. வருடங்கள் நகர நகர சிறுவர்களின் உலகில் இடமில்லாமற் போகிறது. அதேவேளை பெரியவர்களின் உலகிலும் - அவர்களது கயமைத்தனங்களை இயல்பாக ஏற்றுக்கொண்டு வாழத்தெரியாததால் - இடம் மறுக்கப்பட்டு விடுகிறது. இனியும் எங்கே போய்த் தேடுவது எனக்கான இடத்தை..? உடல் குறுக்கி மனம் நடுங்கி, உன் மனச்சந்தில் ஒடுங்கிக்கொண்டிருக்கும் இன்றைய பொழுதுகூட நாளை பறிபோய்விடக்கூடுமோ என்னமோ.. யார் கண்டார்? ஒரு கணம் சோர்ந்த பாதங்கள் எங்கேனும் தரித்து நின்றாலும் உடைமையாளர்களின் அலறல் வீரிட்டெழுகிறது. "போ... ஓடிப்போ இங்கிருந்து... இது உனக்கான இடமல்ல". எந்த இடமும் எனக்கானதல்லவென எனக்கும் புரிகிறதுதான். இருந்தும், அதையே சொல்லிக்காட்டி நான் அநாதரவானவளென அடிக்கடி நீங்கள் நினைவுறுத்துகின்ற போது.. தெள்ளிய ஓடைபோல என் இயலாமைகள் உங்கள் வார்த்தைகளினூடு பிரதிபலித்துத் தெறிக்கின்ற போது இன்னுமின்னுமதிகமாக உங்கள் உலகத்தினை அருவருக்க ஆரம்பிக்கிறேன்.
பால்யப் பருவத்து பசும் நினைவுகளுடன் இன்னமும் சிறகடித்துப் பறப்பவர்களைக் கண்ணுறும் போதெல்லாம் சமயங்களில் ஒருவிதப் பொறாமையுணர்வு தலைதூக்கும். நகரங்களால் தூக்கி வளர்க்கப்பட்ட எம் போன்ற குழந்தைகளுக்குக் கடந்தகாலங்களை அசைபோடுகையில் நினைவில் நிற்பதெல்லாம் தூசும் வாகனப் புகைகளும் மறைத்த சில மங்கிப்போன சம்பவக் கோர்வைகள்தான். வறண்டு போன பால்யங்களில் படித்துச் சிலிர்த்த கஸாக்கியக் கிராமங்களையும், ஸ்தெப்பிப் புல்வெளிகளையும், சணல் பூத்த வயல்களையும் பற்றியதான கனவுகள் மட்டும் இன்னமும் எஞ்சியிருந்து இன்றைய பொழுதின் வாழ்தலுக்கு வர்ணங்களேற்றிப் போகும். தனிமையின் சிலிர்ப்பில்.. மனதில் அலைமோதும் மெல்லிசையின் மிதப்பில்.. கால்கள் எனைமீறி நர்த்தனமிட்டுப் பின்னும் போதும்.., மெய்மறந்து கனம் தொலைத்து நீர்ப்பரப்பின்மீது மீன்குஞ்சென மிதந்தலையும் போதும் மூப்படையவோ, சாகவோ மறுத்தபடி லிவ் உல்மனுக்குள்ளும் எனக்குள்ளும் வாழ்ந்திருக்கும் அந்தச் சின்னஞ்சிறு பெண் உயிர்த்தெழுவதை உணர்ந்திருக்கிறேன்.
உங்களது மொழியில்.., உங்களது மதிப்பீடுகளின்படி அழகானவளல்ல நான்.., பிறை நுதற் பாவையல்ல; சேலகட்டிய விழியினளல்ல; கொவ்வைக் குமிண் சிரிப்பழகியல்ல; முதிர் கோம்புக் கொங்கையினளல்ல; அலைந்தாடும் கொடியிடைக் குமரியுமல்ல. நானொரு வெறும் பெண்... உங்கள் கனவுகளில் வளைய வருமொருத்தியின் நளினங்களுடனும், 'பெண்மை' யின் இலக்கணமான மென்மையுடனுமல்லவெனினுமேகூட.., எனதேயெனதான விழுமியங்களுடன் - மலரல்ல, நிலவல்ல, தேவதையுமல்லாத - பெண் மட்டும்தான்.
நானும் காதலிப்பேன் ஒருவனை.., ஒரு குழந்தையின் கதறலைப்போல.. நெக்குருகி நெக்குருகி.. நெஞ்சம் கசிந்து. சமயங்களில் தாயுமாவேன்.., ஒரு சிறுமி தனது விளையாட்டுப் பொம்மைக்குத் தாயாவதைப்போல.. கள்ளமற்று, கபடமற்று.. சற்றும் பிறழ்வுறாமல்.
2.
சமீபத்தில், குறுகிய காலத்திற்குள்ளாகவே சில அருமையான படங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. ஷியாம் பெனகலின் அங்கூர், Frida, இங்க்மர் பெர்க்மனின் Cries and Whispers, கிச்சான் உள்ளிட்ட இன்னும் சில குறும்படங்களென அவ்வரிசை நீளும். ஏன் அவையனைத்தையும் பற்றி எழுத என்னால் முடிவதில்லையென்ற சந்தேகம் எனக்குள்ளேயும் பலமுறை எழுவதுண்டு. உண்மையைக் கூறுவதானால் எழுதுமளவுக்கு அவற்றில் பெரும்பாலான படங்கள் மனதில் எவ்விதச் சலனங்களையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. சிறந்த படங்களனைத்தும் எம்மைப் பாதிக்கவேண்டுமென்றும், எம்மைப் பாதிக்கும் அனைத்தும் சிறந்தவையாகத்தானிருக்க வேண்டுமென்றும் நியதிகளொன்றுமில்லைதானே. வேறெவற்றையும்விட குழந்தைகளுக்கான / குழந்தைகளைப் பற்றிய எவையும் என் அகவுணர்வை அதிகமதிகம் பாதிக்கின்றன. அங்கூர் போன்ற தரமான படங்களை விடவும், நேற்றுக் கேட்ட குழந்தையொன்றின் அழுகை பற்றிச் சொல்வதற்கு என்னிடம் ஆயிரம் கதைகளிருக்கக்கூடும்.
இங்க்மர் பெர்க்மனின் Cries and Whispers இதற்கு விதிவிலக்கு. 'So let the cries and whispers die away' என படம் முடிவுற்ற பின்னரும் கூட அடிமனது அலறிக்கொண்டேதானிருந்தது. அலறல்களின் நீட்சியில் அந்நிகழ்வு குறித்த தகவல்களை வழங்கிய நண்பருக்கும் நன்றி கூறிக்கொண்டேயிருந்தேன். இத்தகைய film festivals கொழும்பில் அடிக்கடி நடைபெறுகின்றபோதும் அவைகுறித்த தகவல்கள் அனைவரையும் - குறிப்பாக இதுசார்ந்த ஆர்வமுடையவர்களுக்கு - முறையாகப் போய்ச்சேருவதில்லை. கடந்த வாரம் முழுதும் இங்க்மர் பெர்க்மனின் 6 படங்கள் திரையிடப்பட்டிருந்தும் நாளாந்த அலுவல்களின் மத்தியில் ஒரேயொரு படத்திற்கு மட்டுமே செல்லும்வாய்ப்புக் கிடைத்தமை வருந்தவைத்தாலும், அவ்வாய்ப்பினைப் பெற்றுத் தந்தமைக்காக நண்பருக்கு மிகவும் கடமைப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.
விடயத்திற்கு வருவோமாகில், ஈரான் படங்களில் மிகவும் கவர்ந்த அம்சம் தமது அதியுயர் பண்பாட்டினூடாக (rich culture) அவர்கள் குழந்தைகளைப் பேணும் / பாராட்டும் விதம்தான். பெரும்பாலான ஈரானியப் படங்கள் சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கின்றமையும், சிறுவர்களே முக்கிய கதாபாத்திரங்களாக விளங்குகின்றமையும் விதந்து நோக்கத்தக்கவை. விழிவிரித்து ஆச்சரியப்பட வைப்பது, பார்வையாளர்களை தம்மோடு ஒன்றித்துப் போகவைக்கும் அச்சிறுவர்களின் அசாத்தியமான நடிப்புத் திறமைதான். சினிமாத்துறையில் பல்லாண்டுகால அனுபவம் வாய்த்த ஆனானப்பட்ட நடிகர் திலகங்களுக்கே சாத்தியமற்றுப் போன உணர்வு வெளிப்பாடுகளை அநயாசமாகவும், மிக மிக இயல்பாகவும் அச்சிறுவர்கள் தம் முகங்களில் வெளிக்கொணர்கின்றமை மெய்சிலிர்க்க வைப்பதில் வியப்பதற்கில்லை.
மேலைத்தேய பகட்டுலகம் சிறுவர்களுக்குத் தம்மத்தியில் வழங்கியிருக்கும் ஸ்தானத்தின் போலித்தனங்கள் அவற்றிற்கு முழு எதிரிடையாகவமைந்த ஈரானியத் திரைப்படங்களைப் பார்க்கும்போதே இன்னும் தெளிவாகப் புலனாகின்றன. சிறுவர்களின் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட அதிநவீன சாகசங்களை அல்லது அசட்டு / குறும்புத்தனங்களை மாத்திரமே பதிவுசெய்துவந்த மேலைத்தேயத் திரையுலகம் ஈரானியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது எத்தனையோ. சிறுவர்களது உலகம், உணர்வுகள், எதிர்பார்க்கைகளென மேலைத்தேயம் கவனத்திற்கொள்ளாத பல விடயங்களை ஈரானியத் திரைப்படங்களில் கண்ணுற நேர்கையில் மொழி, பண்பாட்டு, புவியியல் வேறுபாடுகளுக்குமப்பால் நாமும் அவற்றுடன் ஒன்றிப்போக முடிகின்றது.
3.
சர்வதேசச் சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்பு எல்பின்ஸ்டன் திரையரங்கில் சர்வதேசச் சிறுவர் திரைப்படங்கள் இவ்வாரம் முழுவதும் - கடந்த ஞாயிறன்று இலங்கையின் 'சமனல தட்டு' படத்துடன் ஆரம்பித்து ஜேர்மானிய, பிரான்சிய, இந்திய, ஈரானிய, ரஷ்ய, சீனப்படங்களென - திரையிடப்பட்டு வருகின்றன. இன்று மஜீத் மஜீதியின் மற்றுமொரு சிறுவர் படமான 'Colour Of Paradise' னைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.

தாயையிழந்த பார்வைப் புலனற்ற சிறுவனொருவனைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள கதை தெஹ்ரானின் பார்வையற்றோர் பாடசாலையொன்றின் கோடைக்கால விடுமுறையுடன் ஆரம்பமாகின்றது. மூன்றுமாதகால விடுமுறையை முன்னிட்டு பாடசாலை மூடப்பட தன்னை அழைத்துச் செல்லவரும் அப்பாவுக்காக காத்திருக்கிறான் மொஹமட். தாமதமாக வந்துசேரும் அப்பாவோ - மனைவியுமற்ற நிலையில் குறைபாடுடைய மகனைப் பெரும் சுமையாகவே கருதும் சராசரிக் கல்வியறிவற்றவர்களில் ஒருவர்தான் அவருமாதலால் - அவனைக் கிராமத்துக்கு அழைத்துச்செல்லப் பிரியப்படவில்லை. பாடசாலை அதிபர் கைவிட, வேறுவழிகளேதுமின்றி மொஹ்மடை அழைத்துச் செல்கின்றாரெனினும் அங்கே அவன் தனது இரு தங்கைகளுடனும், பாட்டியுடனும் குதூகலமாகப் பொழுதைக் கழிப்பதை தனது அடுத்த திருமணத்திற்கான பெரும் இடையூறாகக் கருதி, தனது தாயின் பலத்த எதிர்ப்புக்களையும் மீறி ஊரிலிருந்து அவனை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு போய் ஒரு தச்சரிடம் (அவரும் பார்வையற்றவரே..) வேலைக்குச் சேர்த்துவிடுகிறார். பேரனின் பிரிவும், மகனின் நடவடிக்கைகளும் வேதனையில் ஆழ்த்த வயது முதிர்ந்த பாட்டி நோய்வாய்ப்பட்டு இறந்து போகின்றார். அத்துடன், அப்பாவின் மறுமணமும் கைவிடப்படுகின்றது. அவர் மகனை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், நதியின் குறுக்காகக் கடக்கையில்.. பாலம் உடைந்து விழுந்து மொஹமட் நீரோட்டத்துடன் அடித்துச் செல்லப்படுகிறான். இத்தனைகாலமும் மகனை சுமையாகவே கருதி வெறுத்திருந்தும் இனம்புரியாத பாசம் வந்து தாக்க, அப்பாவும் நீரில் குதிப்பதாகத் தொடர்கிறது கதை.
சிறிய கதைதானெனினும், ஒவ்வொரு காட்சி நகர்வினூடாகவும் எம்மை இலயித்துப் போகச்செய்யும் இயக்குநரின் அசாதாரண இலாவகம் வியக்கவைத்தது. மொஹமட் ஊருக்குத் திரும்பும் காட்சி அருமையாக எடுக்கப்பட்டிருந்தமையையும், இன்னகாட்சிதான் மிகவும் கவர்ந்தது / பாதித்ததென தனித்து அடையாளங்காட்ட முடியாமல் படத்தின் ஒவ்வொரு நகர்வும் மனதை அள்ளிப் போனமையையும் குறிப்பிட்டுத்தானாக வேண்டும். பார்வைப் புலனற்றவனெனினும் மொஹமடின் கேட்கும் திறமையும், பொருட்களை அவன் உணர்ந்துகொள்ளும் விதமும், அவற்றினூடாக அவன் கற்பதும் அழகாக எடுத்துக்காட்டப்பட்டிருந்தன. பறவைகள் ஒலியெழுப்புகையிலும், ஆற்றோரக் குறுங்கற்களிலும், கோதுமைத் தானியங்களிலும்.. அனைத்திலுமே தான் கற்றிருந்த பிரெய்லி எண்களையும், எழுத்துக்களையும் அவன் நினைவு கூர்கின்றமை கற்றலின் மீதான அவனது தீராத தாகத்தினை வெளிக்காட்டியிருந்தது. தங்கைமாருடன் கோதுமை வயல்களினூடாகவும், வண்ண வண்ணப் பூக்கள் மலர்ந்திருந்த வெளிகளினூடாகவும் அவன் ஓடித்திரிந்த போது, நானும் மறுபடியும் சிறுமியாய் மாறி அவர்களோடு கைகோர்க்க முடியாதாவென்ற ஏக்கம் தலைதூக்கியது. வனப்புமிகு அம்மலையோரக் கிராமத்தின் எழிலையும், மலர்களின் வண்ணச் சிதறல்களையும் அவனால் கண்டுகளிக்க முடியாதுதானெனினும் தங்கையரின் அன்பும், பாட்டியின் அரவணைப்பும் - அவை மட்டுமே அவன் வேண்டுவதென்ற வகையில் - அவனறிந்த இருட்டுலகிற்கு சுவர்க்கத்தின் நிறங்களையேற்றிச் செல்லுமென்பதை உணர்த்தியபடி படம் நகர்ந்துகொண்டிருந்தது.
அப்பா மொஹமடைத் தச்சரிடம் கொண்டுபோய் விட்டவந்நாளில்...:
"எனது ஆசிரியை சொன்னார்.., எமக்குப் பார்வையில்லையென்பதால் கடவுள் வேறெவரையும்விட எம்மை அதிகம் நேசிப்பதாய்.. ஆனால், அது பொய். எம்மை உண்மையாகவே நேசித்திருந்தால் கடவுள் எம்மை பார்வையற்றவர்களாகப் படைத்திருக்கவே மாட்டார். எனது நீட்டிய கைகளின் மூலம் தடவித் தடவி ஒருநாள் கடவுளைக் கண்டுபிடிப்பேன். அன்று அவரிடம் கேட்பதற்கென பல கேள்விகளும், அவரிடம் சொல்வதற்கென எத்தனையோ இரகசியங்களும் என்னிடம் உள்ளன.."
எனக்கூறி அவன் கேவிக் கேவி அழுதபோது இனம்புரியாதவொரு சோகம் மனதில் கவிந்துபோனது.., கூடவே ஒருவித வாஞ்சையும். அந்தக் கணத்தில் அந்தச் சுட்டிப் பையனில் என்னைக் கண்டேன்.. என் சின்னஞ்சிறு பெண்ணைக் கண்டேன். அவனைக் கட்டியணைத்து, நீயும் நானும் ஒரே இலக்கினை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோமென்று கூறவேண்டும் போலிருந்தது. நம்பிக்கைகளை மனதுள் நிறைத்தபடி மனிதத்துவத்தை எதிர்நோக்கிய பயணத்தில், அவனுடனிணைந்து நடைபோடவேண்டும் போலவுமிருந்தது.

அப்பா தான் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணைச் சந்திக்கச் செல்லும்போதான காட்சிகளின் கோமாளித்தனங்கள் படத்தின் கனதியைக் குறைத்துவிடுகின்றமை வருந்தவைத்ததெனினும் அது எந்தவிதத்திலும் இரசனையைக் குலைத்துவிடாமையும், பார்வையாளரைப் படத்துடன் ஒன்றிப்போகும் உணர்வைத் தோற்றுவித்தமையும் மஜீத் மஜீதியின் சாதனையென்றே சொல்லவேண்டும்.
4.
மிக நொய்ந்த சமூகப்பிரிவினரென்ற வகையில் சிறுவர்களை அடக்கியாள்வதற்கான உலகத்தின் முயற்சிகள் குறித்த விழிப்புணர்வு இருக்கின்றதா எம்மிடம்..?
திருகோணமலையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வெளிநாட்டு அரசுசாரா அமைப்பொன்றின் எதிரேயுள்ள ஐஸ்கிறீம் கடையொன்றில் 14 வயதே நிரம்பிய சிறுவனொருவன் வேலைசெய்வதாகவும், அவ்வமைப்பின் தொண்டர்கள் அங்கே வந்து ஐஸ்கிறீம் அருந்தி சிறுவர் உரிமைகள் பற்றிய காரசாரமான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுகின்றபோதும் அச்சிறுவனை ஏனென்று கேட்பதற்கு யாருமேயில்லாத அவலநிலையை நண்பரொருவர் எடுத்துக் கூறியிருந்தார். சிறுவர் உரிமைகள் தொடர்பான மேலைத்தேயத்தின் அக்கறை இவ்வளவும்தான்.
சில தினங்களுக்கு முன், கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எட்டு வயதே நிரம்பிய மைத்துனரொருவரை நலம் விசாரித்து வந்திருந்தேன். அண்மையில் யாழ்ப்பாணத்தில் கடையொன்றினுள் புகுந்த இனம்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதில் ஒரு இளைஞர் பலியானதுடன், அப்போதுதான் பாடசாலையிலிருந்து திரும்பிய இச்சிறுவனும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தான். முள்ளந்தண்டில் சிதிலங்கள் பாய்ந்ததில் கைகால்கள் வழங்காமல், உடல் மரத்துப்போய் படுத்த படுக்கையாகக் கிடந்த அந்தத் துருதுருச் சிறுவனைப் பார்த்தபோது மனதின் அலறல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன தெரியும் அவனுக்கு..? காலாகாலத்திற்கும் சுமந்துகொண்டிருக்க வேண்டிய இவ்வடுக்கள் அவனது குழந்தைப் பருவத்தையுமல்லவா பறித்துக்கொண்டு விட்டன.. ஏன் இப்படி... ஏன் இப்படி...
(சிந்திக்க ஏதுமற்ற பொழுதுகளைத் தூண்டிவிட்ட பால்யகாலத்து நினைவுகளுக்கு..)
சுவர்க்கம் - குழந்தைகள் - யதார்த்தம்:
வி(ழிப்/ளிம்)பு நிலை அணுகல்
எனக்குள்ளே
ஒரு சின்னஞ்சிறுபெண்
எப்போதும் இருந்து கொண்டு
ஒருபோதும்
மூப்படையவோ - சாகவோ
மறுத்தபடி வாழ்கிறாள்
- லிவ் உல்மன்

'..என் எந்த வெற்றியும் அவளைத் திருப்தி செய்வதில்லை. என் எந்த சந்தோஷமும் அவளுக்குக் கிளுகிளுப்பு ஊட்டுவதில்லை. பல அதிகாலை நேரங்களில் விழிப்பு வந்ததும் இனிமேல் 'அவளுடைய' வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானம் உருவெடுக்கும். படுக்கையில் பக்கத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் என் செல்ல மகளின் மூலமாக எனக்குள் வாழும் அந்தச் சிறுமியின் வாழ்வை வாழ்ந்துவிட ஆசை மிகக் கொள்வேன்..'
ஹோர்மோன்களும் என்னை வஞ்சித்துவிட்ட நாளொன்றில் சாளரத்தினருகேயமர்ந்து சலசலக்கும் மாமரத்து இலைகளையும், அதன் கிளைகளினூடு ஓடித்திரிந்து கொண்டிருந்த அணில்குஞ்சையும் ஏக்கத்துடன் ரசித்துக் கொண்டிருக்கையில்தான் உணர்ந்தேன், உள்ளத்தை அழுத்தும் பெண்மையின் கனத்தை. அன்று, நிர்மலமான ஆகாயத்தில் நான் வெறித்திருந்த இனம்புரியாத புள்ளியொன்றிலிருந்து தொடங்கிற்று, குழந்தைகளின் உலகத்தினிடமிருந்தான என் அந்நியப்படல். அதன்பின்னரான பொழுதுகளில்.., முடிந்ததில்லை; ஒருபோதும் முடிந்ததில்லை.. அவளது வாழ்க்கையினை வாழ்தலென்பது என்றென்றைக்குமான கனவாகிப் போயிற்று.
'..ஜன்னலருகே நின்றபடி நீ தோட்டத்தில் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அச்சமயங்களில் எனக்குத் தெரிந்த எதையும்விட நான் உனக்கு நெருக்கமானவளாகிறேன்.
நீ என்னுடைய பகுதி - முழுச்சுதந்திரம் பெற்ற பகுதி. இன்னும் கூடவேயிருந்து இன்னும் நெருக்கமாக உன்னைக் கவனித்து எப்படி உன் சுதந்திரம் உனக்குள் வாழ்கிறது என்பதை உள்வாங்க ஆசைப்படுகிறேன்.
நீ மற்ற குழந்தைகளோடு சிரிக்கும்போது - தனியே உன் ரகசிய விளையாட்டுக்களில் ஆழ்ந்துவிடும்போது - விதவிதமான வண்ணங்களும் வாசனைகளும் அழகுகளும் இன்னும் உன் உலகமாக இருக்கும்போது நான் எல்லாவற்றையும் விட்டு உன்னிடம் ஓடிவந்து உன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்துவிடத் துடிக்கின்றேன்.
நான் இடைவிடாது தேடிக்கொண்டிருக்கிற - தொலைத்துவிட்ட பால்யகாலத்து சாம்ராஜ்யம் அதுவாகவே இருக்கலாம்...'
(நன்றி:- 'நான் பேச விரும்புகிறேன்' - ச.தமிழ்ச்செல்வன்)
பெரியவர்களுக்கு மறுக்கப்பட்டுவிட்டதோர் சாம்ராஜ்யம் அது.. வாழ்தலின் வன்மங்களின் உச்சாணிக் கொம்பிலேறி கிடுகிடு பள்ளத்தினை நோக்கிப் பலவந்தமாகத் தள்ளப்படுகையில், தலைகுப்புற விழுந்துகொண்டிருக்கும் - யுகங்களாகத் தோன்றும் - அந்தக் கணத்தில் கறைபடிந்துவிட்ட பால்யகாலங்கள் நினைவெங்கும் விரிந்து சிறகடித்துப் பறக்கத்தொடங்கும். பிஞ்சுக்குழந்தையின் மாசுமறுவற்ற அறியாமையின் உலகத்தின் இதயத்தில் மௌனங்களால் நிரம்பி வழியுமொரு மூலையினைப் பெற்றுக்கொள்தல் சாத்தியமாகுமெனில்.., அதன் கபடமற்ற மனதில் நெளிந்து வளையும் பாதைகளினூடாக பயணித்தல் முடியுமெனில்.., இதம் தராத கடந்தகாலத்து நினைவுகளைச் சுமந்தபடி, வதைத்துக் கொண்டிருக்கும் நிகழ்காலத்தினூடு.. நினைப்புக்கும் நடப்பிற்குமிடையேயான இடைவெளிகளை அளந்தபடி நீண்டிருக்கும் எமது பயணங்களும் பசுமையின் முதல்துளியால் ஆசீர்வதிக்கப்படக்கூடும்.
குழந்தைகள் சுவர்க்கத்திலிருந்து தருவிக்கப்படவில்லை; மாறாக, தமது இருத்தலின்.. நடத்தைகளின் மூலம் சுவர்க்கங்களை அவர்களே உருவாக்குகிறார்கள்.
1.
சிலதினங்களுக்கு முன்னர், மற்றுமொரு பௌர்ணமி தினத்தில் - இப்போதெல்லாம் பௌர்ணமிகள் முன்னைவிடவும் அழகாகத் தோன்றுகின்றனவென்பதையும் இங்கே குறிப்பிட்டுத்தானாக வேண்டும் - கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஆதரவில் நிகரி திரைப்பட வட்டத்தினரால் (niharifilmcircle@gmail.com) திரையிடப்பட்ட Majid Majidi யின் Children Of Heaven எனும் மற்றுமொரு ஈரானியத் திரைப்படமொன்றைக் கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. மேலைத்தேயத் திரையுலகின் மெத்தனங்களுக்குச் சவால்விடுக்கும் வகையில் புதிய புதிய திரையம்சங்களுடனும் பண்பாட்டுப் பின்னணிகளுடனுமான ஈரானியப் படங்களின் வடிவமைப்புப் பாங்கு (patterns) மனதைச் சிலிர்க்கவும், பெருமிதங்கொள்ளவும் வைப்பதுடன், இவர்களது திரைப்படத் தொழினுட்ப உத்திகள் மேலைத்தேயனவற்றிலும் எந்தவிதத்திலும் சளைத்தனவல்ல என்பதற்குமப்பால் நவீன தொழினுட்பங்களை மட்டும் நம்பிக்கொண்டு படங்களையெடுத்து ஆஹா.. ஓஹோவென்ற பாராட்டுதல்களையும், கைதட்டல்களையும் பெற்றுவிடும் ஹொலிவுட்டையும், அதன் தீவிர இரசிகர்களின் இரசனைகளையும் கேள்விக்குள்ளாக்கவும் செய்கின்றன. சினிமாவும் மற்றுமொரு கலையூடகம் அல்லது கலைத்துறையென்றவகையில் - இன்னவின்ன மட்டுமே கலைகளெனக் கருதப்படக் கூடியவையென எமக்கு நாமே வரையறைகளை விதித்துக்கொள்தல் அபத்தமென்பதால் - பரந்ததோர் நோக்குடன் விமர்சனங்களுக்கப்பால் அனைத்தையும் ஏற்றுக்கொண்டும் இரசித்துக்கொண்டும் நகரவேண்டியதுதான்.

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் 1959ம் ஆண்டு பிறந்த மஜித் மஜீதி தனது 14வது வயதிலேயே அமெச்சூர் நாடகக் குழுக்களில் நடிக்கத் தொடங்கி பின்னர் நாடகக் கலை தொடர்பான கல்விநிறுவனமொன்றில் சேர்ந்து பயின்றார். ஈரானில் 1978ல் இஸ்லாமியப் புரட்சி நிகழ்ந்ததுடன் சினிமாவை நோக்கி அவரது ஈடுபாடு திசைதிரும்பலாயிற்று. அவர் முதலில் எழுதி நெறியாள்கை செய்த Baduk (1992) பல்வேறு விருதுகளையும் பெற்றது.
- துண்டுப் பிரசுரத்திலிருந்து..
உரையாடலுக்கான மிகவும் பலவீனமானதோர் ஊடகமென்றவகையில், ஒரு சிறந்த திரைப்படத்தினை இரசிப்பதற்கு மொழியொன்றும் அத்தியாவசியமான நிபந்தனையல்ல. காட்சியமைப்புக்களும், கமராக் கோணங்களும், பாத்திரங்களின் நடிப்பும் பேசாத வார்த்தைகளை வேறெந்த ஆனானப்பட்ட செம்மொழியினாலும் உணர்த்திவிட முடியாது. சகோதரர்களான அலியும், சாராவும், அவர்களுக்கிடையே கால்மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காலணிகளும்தான் Children Of Heaven படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாகவமைய, படம் முழுக்க உரையாடிக் கொண்டிருப்பது அச்சிறுவர்களின் பார்வைப் பரிமாற்றங்களும், அந்த அழுக்குக் காலணிகளுமேயொழிய அங்கு மொழியின் பிரயோகம் மிக மிகக் குறைவாகவே காணப்பட்டது.
சிறுமி சாராவின் ரோஸ் நிறக் காலணிகள் தைக்கப்படுவதிலிருந்து தொடங்கும் படம், அக்காலணிகள் அண்ணனான அலியின் கவனக்குறைவினால் தொலைந்து போக.. காலணியில்லாமல் பாடசாலைக்குச் செல்லவழியில்லாது அலியின் காலணிகளையே இருவரும் மாற்றி மாற்றிப் பாவிப்பதும், தொலைந்துவிட்ட காலணியைத் தேடும் படலம் தொடர்வதும், இனியும் அதனால் பயனில்லையெனத் தெரிந்து குற்றவுணர்ச்சியோடு புதுக்காலணி வாங்குவதற்கான வழிவகைகளை அலி திட்டமிடுவதுமென நீள்கின்றது.
சாதாரணத் தொழிலாளியான அப்பா, நோய்வாய்ப்பட்ட அம்மா, நினைத்தமாத்திரத்தில் புதிதாக காலணிகள் வாங்கவியலாதளவு வறிய குடும்பப் பின்னணி... இவற்றினூடு வெளிப்பட்டுத் தெரியும் குழந்தை மனத்தின் கபடமற்ற சகோதர பாசம் மனதை நெகிழவைத்தது. காலணிகள் தனது கவனக்குறைவினால் தொலைந்தமை வீட்டிற்குத் தெரியவந்தால் அப்பாவிடம் திட்டு வாங்க நேரிடுமென்பதால் எவரிடமும் சொல்லவேண்டாமென்றும், தனது காலணிகளைப் பயன்படுத்தும்படியும் அலி சாராவைக் கெஞ்சுவதும்.. வேறுவழியின்றி அவள் ஒத்துக்கொள்வதும்.. தங்கையின் சீவிச் சீவிக் குட்டையாகிப்போன பென்சிலுக்குப் பதிலாக அலி நீண்ட பென்சிலொன்றை அவளுக்குக் கொடுப்பதுமென காட்சிகளெங்கும் மேவித் தெரிந்தவை அக்குழந்தைகளின் மாசுமறுவற்ற உலகம்தான். அண்ணனின் காலணிகளோடு பாடசாலை செல்ல நேரும் முதல்நாளில் சாரா உணரும் குறுகுறுப்பையும், வெட்கத்தையும் இயக்குனர் பதிவுசெய்திருந்த விதம் இரசிக்கவைத்தது. தனது பாடசாலை முடிவடைந்தவுடன் மூச்சிரைக்க ஓடிவந்து அலியிடம் காலணிகளை ஒப்படைப்பதும், அலி அதனை மாற்றிக்கொண்டு மூச்சிரைக்க தனது பாடசாலைக்கு ஓடுவதுமென ஒருவித படபடப்புடனேயே படம் நகர்வது குறிப்பிடத்தக்கது.
மனதை மிகவும் கவர்ந்த, மூச்சைப்பிடித்துக் கொண்டு பார்க்கவைத்த காட்சி: இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க.. சாராவிற்கு அலியின் காலணிகள் அளவிற் பெரிதாகையால், ஒருநாள் அவள் அவசரத்துடன் பஹ்ரைன் தெருக்களில் ஓடி வருகையில் காலணியொன்று நழுவி நீர்நிறைந்த வாய்க்காலொன்றினுள் வீழ்ந்து நீரோட்டத்துடன் ஓடத் தொடங்குகையில் நெஞ்சம் அதிர்ந்து போனது. நீரோட்டத்துடன் சேர்ந்து காலணியும் ஓட ஓட, இதயத்தின் படபடப்பு எல்லை கடந்துவிட்டிருந்தது. நாற்காலியின் நுனியில் அமர்ந்து கைகளைக் குவித்துக்கொண்டு, அந்தக் காலணி மறுபடி கிடைத்துவிட வேண்டுமென்று கெஞ்சிக்கொண்டேயிருந்தேன். அன்றைய தினம் படம் பார்த்துக்கொண்டிருந்த எவரையும் அந்தக் காட்சி அப்படித்தான் உணரவைத்திருக்கும்; இல்லாவிட்டால்தான் ஆச்சரியப்பட்டிருந்திருக்க வேண்டும். வாய்க்காலில் ஓரிடத்தில் சிக்கிக்கொண்ட காலணியை சிறுமிக்குதவும் நோக்கில் ஒரு பெரியவர் எடுத்துவிட முயற்சிக்கும்போது மனம் ஆசுவாசத்துடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், அடுத்த கணம் அவரது கைகளிலிருந்து நழுவி அது மறுபடியும் நீரோட்டத்துடன் இணைந்து கொண்டபோது மூச்சு ஒருகணம் நின்றே போயிருந்தது. பின்னர் வாய்க்கால் சுத்திகரிப்பவரொருவரால் அக்காலணி காப்பாற்றப்பட்ட போது, சாராவின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்த அதே சந்தர்ப்பத்தில் எமது கண்களையும் பனிக்கவைத்த - காட்சிகளினதும் கதாபாத்திரங்களினதும் ஒவ்வொரு அசைவினூடும் எம்மையும் கரைந்துபோக/இரண்டறக் கலக்க வைத்த - இயக்குநரின் அசாத்தியத் திறமை வியக்கவைத்தது. படத்தில் பிரமிக்க வைக்கும் மற்றுமொரு விடயம், அக்குழந்தைகளின் நடிப்பு. போலித்தனங்களின் சாயல்களேதுமில்லாமல் இயல்பாக அக்கதாபாத்திரமாகவே அவர்கள் வாழ்வதைப் பார்த்தபின்னும், தமிழ்ச்சினிமாவின் சில 'நடிப்பு வீரர்' களின் சாகசங்களைச் சகித்துக்கொள்தலென்பது சந்தேகமேயில்லாமல் இயலாமைக்கு அப்பாற்பட்டதே.

தங்கைக்கு எப்படியாவது ஒரு காலணியைப் பெற்றுத்தந்துவிட வேண்டுமென்ற முனைப்பிலிருக்கும் அலியின் கண்களில் ஒரு மரதனோட்டப்போட்டி - அதில் மூன்றாவது இடத்தினைப் பெற்றுக்கொள்பவருக்கு காலணிகள் பரிசாக வழங்கப்படுமென்ற - அறிவிப்பு தென்படுகின்றது. அதைத் தங்கையிடம் வந்து தெரிவிக்கும் காட்சியும், இருவரும் குதூகலத்துடன் சோப்பு நுரைகளைக் கொண்டு விளையாடுவதும் இரசிக்கவைத்தன. ஓட்டப்போட்டியும் மிக அருமையாகப் படம்பிடிக்கப்பட்டிருந்தமையைக் குறிப்பிட்டுத்தானாக வேண்டும். முடிவை நாம் முன்கூட்டியே ஊகிக்கக்கூடியதாகவும், எப்போதுதான் முடியுமோவென பொறுமையின்றிச் சலித்துக்கொள்ள வைப்பனவாகவுமமைந்த - எமது தமிழ்த்திரைப்படங்களில் இடம்பெறுவதைப் போன்ற - மற்றுமொரு போட்டியல்ல இது. அக்காட்சி சிறிது நீண்டநேரம் நீடித்திருந்த போதும், ஒவ்வொரு கணத்திலும் சிறுவன் அலியுடன் கூடவே நாமும் ஓடிக்கொண்டிருப்பதானவோர் உணர்வு மனதை நிறைத்திருந்தது. ஒருகட்டத்தில் தான் முதலாவதாக ஓடிக்கொண்டிருந்தும் மூன்றாவது இடத்தைத்தானே பிடிக்கவேண்டுமென்ற நினைப்பு வந்து தாக்க, வேண்டுமென்றே தனது வேகத்தைக் குறைத்து இருவரைத் தன்முன்னே அனுமதிக்கும்போது, கவலை உள்ளத்தில் கவிந்துபோனது.., கூடவே ஒரு பதட்டமும்.. ஒருவேளை மூன்றாவது ஸ்தானம் கிடைக்காமல் போகுமானால்...
இறுதியாக, போட்டியில் முதலிடம் வென்று கோப்பையைத் தூக்கும்போது அலி எவ்வித சந்தோஷமுமில்லாது விக்கி விக்கி அழும்.. மூன்றாவது பரிசான காலணிகளைப் பார்த்து ஏங்கும் - அவன் போட்டியிட முன்வந்ததே சாராவுக்காகத்தானென்பதால் - காட்சி மனதைப் பிசைந்தது. இதைத்தானோ குழந்தையுள்ளம் என்கிறார்கள்..?
2.
Children Of Heaven படம் நேரடியாக எவ்வித அரசியலையும் பேசியிருக்கவில்லையெனினும், இத்தகைய படங்கள் அரசியலைப் பேசாதிருப்பது அபூர்வமே. இதன் காட்சி நகர்வுகளினூடு சாரம்சமாக மறைந்திருந்தது, பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களின் வறுமைதான். உயர்வர்க்கத்துக் குடும்பங்களின் செழிப்பையும், நகர்ப்புறத்தின் முன்னேற்றங்களையும் பஹ்ரைனின் கீழ்வர்க்கத்து மக்களின் அன்றாடப்பாடுகளின் அல்லல்களுடனும், குச்சு ஒழுங்கைகளுடனும் ஒருங்கே ஒப்புநோக்குகையில் மனதையுறுத்துவது இரு வர்க்கங்களுக்கிடையேயான பாரிய இடைவெளிதான். மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும் ஒருபுறமிருக்க, மறுபுறத்தே இடிந்த வீடுகளும் சாதாரணக் காலணிகளுக்காக துன்பப்படும் குழந்தைகளும். முதலாளித்துவ சமுதாயத்தில் பணக்காரர்கள் இன்னுமின்னும் பணக்காரர்களாகிக் கொண்டிருக்க.., ஏழைகள் இன்னுமின்னும் ஏழைகளாவது உண்மைதான் போலும்.
காலணிகளைத் தாமதமாகக் கொண்டுவந்து சேர்த்ததற்காகத் தங்கையைக் கடிந்து கொள்ளும் அண்ணன் பின்னர் அவளைச் சமாதானப்படுத்துவதற்காகவும், தன்னால்தானே அவள் சிரமப்படுகிறாளென்ற குற்றவுணர்ச்சியோடு அவளை மகிழ்விப்பதற்காகத் தனக்கு ஆசிரியரிடமிருந்து பரிசாகக் கிடைத்த விலையுயர் பேனாவை தங்கைக்குக் கொடுப்பதும்.., அப்பேனாவை சாரா தொலைத்துவிட, அதைக் கண்டெடுக்கும் விழிப்புலனற்ற பிச்சைக்காரரொருவரின் குழந்தை - அதைத் தானே வைத்துக்கொள்ளப் போகின்றதென்ற எமது எதிர்பார்ப்புக்களைப் பொய்யாக்கியபடி - பேனாவை மறுபடியும் சாராவிடம் ஒப்படைப்பதும்.. இத்தனை சிரமங்களுக்கிடையேயும் குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகத்தான் இருந்துவருகிறார்களென நிரூபித்து விடுகின்றன.
3.
"You may give them your love
But not your thoughts,
For they have their own thoughts…
You may house their bodies
But not their souls,
For their souls dwell
In the house of tomorrow,
Which you cannot visit,
Not even in your dreams.."
- Kahlil Gibran
இவையனைத்தும் ஒருபுறமிருக்க, எமதிந்தச் சுவர்க்கத்தின் சிருஷ்டிகர்த்தாக்களுக்குச் சமூகத்தில் நாம் வழங்கியிருக்கும் ஸ்தானம் யாதென ஆராயப் புகுவோமாயின் வெறுமையே மிஞ்சும். யுத்தம் தொடக்கம் வறுமை வரை சமூகத்தின் அத்தனை இயலாமைகளுக்கும், பாலியல் துஷ்பிரயோகம் / பாலியல் தொழில் போன்ற சமூகத்தின் அதீத வக்கிர மனப்பான்மைகளுக்கும் முதலில் பலியாவது குழந்தைகள்தான்.
இலங்கையின் மிக மோசமான சிறுவர் துஷ்பிரயோகமாகக் கருதப்படுவது (வட-கிழக்கில்) அவர்களை ஆயுதமேந்த வைத்தலும், படையில் சேர்த்தலும்தான். சர்வதேசரீதியாகவும் இதுசார்ந்த பிரச்சாரம் இன்றளவும் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது (அமெரிக்காவில் இராணுவத் தேவைகளின் நிமித்தம் பராயமடைந்தவர்களுக்கான வயதெல்லை குறைக்கப்பட்டமை தொடர்பில் எதுவும் பேசாதிருத்தல் நலம்.., அவற்றைக் கேள்விகேட்பதற்கு எமக்கு அருகதையில்லாததால்..?!). பராயமடையாதவர்களைப் படையில் இணைத்தலென்பதன் நியாய/அநியாயங்களை ஆராய்வதற்கு முன்னர் - பெண்களுக்கு ஆயுதமேந்துதல் மறுக்கப்பட்டிருந்த காலங்களில் பூலான்தேவி கொள்ளைராணியானதை எந்தளவு நியாயப்பாடுகளுடன் ஏற்றுக்கொள்கிறோமோ / மறுக்கிறோமோ அதேபோல - அதன் பின்னணி குறித்தும் கவனஞ்செலுத்தியேயாக வேண்டும். பலவந்தப்படுத்தல்களை விடுத்து நோக்கினால்.. தனது சகோதரி சிதைக்கப்படுவதையோ, தனது உறவினர் அல்லது நண்பர் கொல்லப்படுவதையோ நேருக்கு நேர் பார்க்கும் எந்தவொருவரும் உளவியல்ரீதியாக கடும்தாக்கத்திற்குள்ளாக்கப்பட்டு.. ஆயுதத்தினைத் தீர்விற்கானவோர் வழியாகத் தேர்ந்தெடுத்தல் தவிர்க்கமுடியாதது. அடிப்படை மூலகாரணியான இனமுரண்பாடு தீர்க்கப்பட்டாலேயொழிய இத்தகைய வன்மங்களைத் தடுத்துநிறுத்த முடியாது.
இவ்வடிப்படை யதார்த்தத்தினை விளங்கிக்கொள்ளாத சர்வதேச சமூகமும் மற்றவர்களும் பராயமடையாத ஆயுததாரிகளின் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களேயொழிய, தென்னிலங்கைச் சிறாரின் அவலநிலையை யாரும் கருத்திற்கொண்டபாடில்லை. வடகிழக்கில் ஆயுதமேந்துவதன் மூலம் 'உரிமை மறுக்கப்பட்ட' சிறுவர்களைவிடவும் பலமடங்கானோரின் உரிமை தென்னிலங்கையில் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்துமே உரிமை மறுப்புகள்தான்.., அங்கே யுத்தத்தின் பெயரால்; இங்கேயோ வறுமையின் பெயரால். எண்ணற்ற சிறுவர்கள் வறுமையின் காரணமாக - வயிற்றுப் பிழைப்பிற்காக - தமது கல்வியையும் துறந்து வீட்டு வேலைகளுக்குச் செல்கிறார்கள். உடல், உளரீதியான பாதிப்புகளின் படி நோக்குவோமாயின் துவக்கு ஏந்துவதற்கும், துடைப்பங்கட்டை ஏந்துவதற்குமிடையிலொன்றும் பாரிய வேறுபாடுகளில்லை.
அதைவிடவும் வருந்தவைப்பது பாலியல் துஷ்பிரயோகங்களதும், பராயமடையாத பாலியல் தொழிலாளர்களதும் அபரிமிதமான அதிகரிப்பு. இவற்றிற்குப் பலியாவது சிறுமிகள் மட்டும்தானென நினைத்தால், நீங்கள் ஏமாந்துபோக வேண்டியதுதான். விகிதாசார அடிப்படையில் சிறுமிகளை விடவும், சிறுவர்களே அதிகமதிகம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பராயமடையாத பாலியல் தொழிலாளர்களுக்கும், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குமிடையிலான வேறுபாடு / முரண்பாடு குறித்தும் - பொதுவாக இவ்விரண்டு பதங்களும் ஒன்றுடனொன்று சிக்கார்ந்த நூலிழை வேறுபாட்டினைக் கொண்டுள்ளநிலையில் - நாம் இங்கு கவனஞ்செலுத்த வேண்டியதாகின்றது. பாலியல் தொழிலினைத் தனது வாழ்வாதாரமாகவும், வாழ்க்கை முறையாகவுமேற்றுக்கொண்டவரே பாலியல் தொழிலாளியென அடையாளப்படுத்தப்படுகின்றார். ஒரு ஆண் / பெண் சுயவுணர்வுடனோ அல்லது சுயவுணர்வற்ற நிலையிலோ, இத்தகைய வாழ்க்கைமுறையினை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டு, காலப்போக்கில் அதுவே அவரது / அவராகவே ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்தலாகவும், தொழிலாகவும் மாற்றமடைகின்றது. ஆயினும், சிறுவர்கள் / பராயமடையாதவர்களின் நிலையினையெடுத்து நோக்கின் பலவந்தமாகவோ, சூட்சுமமாகத் திட்டமிடப்பட்ட முறையிலோ, வன்முறையினூடாகவோ அல்லது வேறுவழிகளேதுமற்றுப்போன காரணத்தினாலோ அவர்கள்மீது இத்தகைய வாழ்க்கைமுறை வளர்ந்தோரினால் திணிக்கப்படுகின்றது. பணம், வருவாய் போன்ற பொருளாதாரக் காரணிகளும், சில சமூகக் காரணிகளுமே கூட இதற்கான ஊக்குவிப்பான்களாகவமைகின்றன.
ஆனால் பாலியல் துஷ்பிரயோகத்தினைப் பொறுத்தவரை, ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் பராயமடையாதவரொருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல்களுக்குள்ளாவதையே அது குறித்து நிற்கின்றது. ஆனால் அவர் பாலியல் தொழிலாளியொருவரைப் போல 'பால்' இனை தனது வாழ்வாதாரமாகவோ, வாழ்க்கை முறையாகவோ ஏற்றுக்கொண்டவரல்ல. இத்தகைய பாலியல் துஷ்பிரயோகம் அல்லது பாலியல் ரீதியான அத்துமீறலானது பிற்பட்ட காலங்களில் சிக்கார்ந்த, மோசமான பிரச்சனைகளைத் தோற்றுவிக்கக்கூடிய அதேவேளை ஒருவரின் ஆளுமை வளர்ச்சியிலும் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். சிறுவயதில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியமை நாளடைவில் பாலியல் தொழிலாளியாக உருவெடுப்பதில் தாக்கம் செலுத்தக்கூடிய சாத்தியப்பாடுகளையும் மறுப்பதற்கில்லை.
இலங்கையைப் பொறுத்தவரை பராயமடையாதோரின் பாலியல் தொழிலானது - இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்கள், கடற்கரைகள், ஆயுர்வேத சிகிச்சை முறைகள் ஆகியவற்றுக்குச் சமானமாக - ஒரு மறைமுக Tourist Attraction ஆக வளர்ந்து வரும்நிலையில் அதுதொடர்பான அடிப்படை விழிப்புநிலைசார் அறிவு எத்தனை பேருக்கு இருக்கக்கூடுமென்பது சந்தேகத்திற்குரியதே. இதுபற்றிய பகிரங்கக் கருத்தாடல்கள் - அதுவும் அறிவுஜீவிகள் மட்டத்தினைவிடத் தாழ்ந்த மட்டங்களில் / சராசரி மக்கள் மத்தியில் - இடம்பெறுவது மிகக்குறைவு. அரசியல், பணம் மற்றும் இன்னபிறக் காரணிகளின் பின்னணியில் திட்டமிட்ட முறையில் அவை மூடிமறைக்கப்படுகின்றன. இது வெறுமனவே சமுதாயத்தின் மைய நீரோட்டத்திலிருந்து விலகிய சபிக்கப்பட்டவொரு பிரிவினரின் உரிமைகள் பற்றிய கரிசனையல்ல. மாறாக, ஒட்டுமொத்தச் சமூகக் கட்டமைப்பின் - தவிர்க்க முடியாததோர் அங்கமாக விளங்கிவருபர்களாதலால் - போக்கினைக் கேள்விக்குள்ளாக்க வேண்டிய தேவையை இந்நிலைமை உருவாக்குகின்றது.
சமூகத்துக் கயமைகளை ஊடறுத்து உள்நுழைய வழிசமைக்காதவரையில், குழந்தைகளுக்கும் சுவர்க்கத்திற்குமிடையிலான உறவு/முரண் குறித்து நாமெல்லோரும் அலட்டிக்கொண்டிருத்தல் - குழந்தைகள்=சுவர்க்கம் எனக் கொள்வோமாயின்.. அதுவே உண்மையாயினும் - அபத்தமானதில்லையா..?
(ஒரே கணத்தில் தாயாகவும், குழந்தையாகவும் உணர்தலை சாத்தியமாக்கிப்போன என் பிரிய மாதுளங்கொளுந்திற்காக..)
நன்றி: படங்கள்
One is not born a woman;
but becomes one
- சிமோன் தி பூவா
நினைவு தெரிந்த காலந்தொட்டு இன்றுவரை பெண் மற்றும் ஆண் வர்க்கம் தொடர்பாக எமது சமூகம் கட்டமைத்து வந்திருந்த விம்பங்களுடன் முரண்பட்டே வந்திருக்கின்றேன். பெண்கள் பிறப்பதில்லை.., எழுதப்படாத சமூக நியதிகளினாலும், மரபார்ந்த ஒழுக்காறுகளினாலும் அவர்கள் செதுக்கப்படுகிறார்கள். செதுக்குதலென்பது தீயனவற்றைக் களைவதை மட்டுமே குறித்து நின்ற காலங்கள் மலையேறி விட்டன. இப்போதெல்லாம்.. கலைகளும், சிற்பங்களும் செதுக்கப்படுவது வெறும் காட்சிக்காகவேயென்ற புரிதல் வந்தவுடன் விம்பங்களனைத்தும் உடைந்து சிதறத்தான் செய்யும்.
எமது உணர்வுகளைப் புறக்கணிப்பதாகவுணர்ந்த சமுதாயத்துடன் எப்படித்தான் சமரசம் செய்துகொண்டு வாழ்வது?
பாலினம் குறித்த பார்வையின்படி பெண்தன்மை (feminity) எப்படிக் கட்டமைக்கப்பட்ட தன்மையில் இயங்குகின்றதோ, அதுபோல ஆண்தன்மையும் (Masculinity) கட்டமைக்கப்படுவதே. அந்தவகையில் பெண்ணியம் 'பெண்' பற்றியதோ, 'பெண்'ணிடம் பேசுவதோ, 'பெண்'களால் பேசப்படுவதோ அல்ல. பெண்ணியம் பாலின அடிப்படையில் தொழிற்படும் ஒட்டுமொத்தச் சமூகம் பற்றியது.
- அ.மங்கை
சமுதாயம் எமக்கென்று வழங்கியிருக்குமொரு ஸ்தானத்திலிருந்து முன்னேறி, எமக்குரித்தான நிதர்சனமான ஸ்தானமொன்றினைக் கைப்பற்றிக் கொள்தலை நோக்கிய நகர்வே வாழ்தலுக்கான போராட்டமென நினைக்கின்றேன். நிலைகொண்டுள்ள இடத்திலிருந்து அசைய எத்தனிக்கும் எந்தவொன்றும், எவரொருவரும் போராடித்தானாக வேண்டும். நகர்தலென்பது.., இன்னொன்றன் வெளியினை ஆக்கிரமித்தலே...
எனினும்..,
இருளைக் கிழித்துக்கொண்டு விரையும் நடுச்சாமத்துப் புகையிரதத்தினைப்போல.. அதே படபடப்புக்களுடன், அதே அதிர்வுகளுடன் அதிகாலையின் தடித்த பனித்திரையாய் சுற்றிலும் கவிந்திருக்கும் வன்மங்களை ஊடறுத்துப் பயணிக்க முடிகின்ற ஒரு நாளில்.. அடி வயிற்றில் கனக்கும் எந்தன் மதலைக்கு எடுத்துச் சொல்வேன்..,
'என் மாதுளங் கொளுந்தே.. அக்னிக் குஞ்சாகவல்லாது, பிறந்துவிடாதே..'
1.
கடந்த திங்கட்கிழமை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நிகரி திரைப்பட வட்டத்தினர் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஆதரவில் வழங்கிய Siddiq Barmak ன் 'ஒஸாமா' திரைப்படத்தினைக் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிட்டியது.

இத்திரைப்படத்தின் நெறியாளரான சித்திக் பர்மக் தலிபான் எழுச்சிக்கு முன்னரும், அதன் பின்னரும் மிகத்தீவிரமாக ஆப்கானிய சினிமாத்துறையில் முனைப்புடன் செயற்பட்டவர். இதுவரை நான்கு குறுந்திரைப்படங்களையும், இரு ஆவணப்படங்களையும் நெறியாள்கை செய்த இவர் 1992 இலிருந்து 1996 காலப்பகுதியில் ஆப்கான் திரைப்பட நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்டுள்ளார். தலிபான் எழுச்சியினையடுத்து சிலகாலம் தலைமறைவாக பாகிஸ்தான் சென்று வாழவேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இவரது முன்னைய படைப்புக்கள் யாவும் தலிபான் ஆட்சியின்போது பறிக்கப்பட்டு விட்டனவென்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.
- துண்டுப் பிரசுரத்திலிருந்து...
காபூல் யுத்தத்தில் தந்தையை இழந்த ஒஸாமா எனும் 12 வயதுச் சிறுமியைச் சுற்றியே பின்னப்பட்டுள்ள இப்படத்தின் கதை, தலிபான் கட்டுப்பாட்டுக் காலங்களில் மதத்தின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், அக்காலப்பகுதியின் குரூரங்களையும், மக்களது அச்சங்களையும் பதிவுசெய்தபடி நகர்கின்றது.
'I can't forget; but i can forgive' எனும் மண்டேலாவின் வரிகளோடு படம் ஆரம்பிக்கும் விதமே மனதைக் கவர்ந்துவிடுகின்றமை குறிப்பிடத்தகுந்தது. கணவனையிழந்த ஒஸாமாவின் தாய் ஆஸ்பத்திரியொன்றில் பணிபுரிந்து வருகின்றார். தவிர்க்க முடியாத காரணங்களால் ஆஸ்பத்திரி மூடப்பட்டுவிட்ட நிலையில் அவரது வேலை பறிபோவதுடன், வருமானத்திற்கான மார்க்கங்களும் அடைபட்டு விடுகின்றன. ஆண்துணையின்றி பெண்கள் தெருவில் இறங்கவே தலிபான்கள் தடைவிதித்திருக்க, குடும்பத்து ஆண்களை யுத்தங்களில் பறிகொடுத்த பெண்கள் பட்டினியால் இறப்பதென்பது எழுதப்படாத விதியாயிற்று. இந்நிலையில், தன் மகள் ஒஸாமாவின் தோற்றத்தினை மாற்றுவதன் மூலம் அவளை ஒரு ஆணாக வெளியுலகத்திற்கு அடையாளப்படுத்தி தமது ஜீவிதத்தைக் கொண்டுசெல்லத் தீர்மானிக்கின்றார்கள் தாயும், ஒஸாமாவின் பாட்டியும். எதிர்பாலின அடையாளங்கள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட, அக மற்றும் புறச்சூழலின் அழுத்தங்களை ஒஸாமா எவ்வாறு எதிர்கொள்கிறாளென்பதை ஒரு அந்நியராக நின்று இனங்காண முயற்சித்திருக்கிறார், இயக்குனர். படம் பெண்ணிய பார்வையிலோ அல்லது அச்சிறுமியின் நோக்குடனோ நகரவில்லையென்ற குறைபாடுகள் ஒருபுறமிருக்க, மனிதநேயக் கண்ணோட்டத்துடன் இத்தகைய அக்கிரமங்களை வெளிக்கொணர்ந்த இயக்குனர் பாராட்டுக்குரியவரே.
இப்படத்தினைப் பற்றிய கருத்தாடல்களை விடவும், அதன் பின்புலம் பற்றிய ஆய்வே சுவாரசியமானதாகப் படுகின்றது.
2.
படம் முடிவடைந்ததும், சிறு கலந்துரையாடலொன்று இடம்பெறுவது வழக்கம். இம்முறை பங்குபற்றியவர்களனைவரும் உற்சாகமாக அவரவரது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். பொதுவான பார்வையில், பகிரப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலும் தலிபான்களையும், இஸ்லாம் மதத்தினையும் சாடுவதாகவே அமைந்திருந்தமை வருந்தவைத்தது. தலிபான்களும் மேலைத்தேயத்தின் அடக்குமுறைகளுக்கெதிராகப் போராடும் இன்னுமொரு (மதவாத) ஆயுதப்போராட்ட குழுதானென்பதை உணரத் தவறிவிட்டிருந்தார்களோ என்னமோ...

தலிபான்கள் தொடர்பான அனைத்துப் பிரதிவாதங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்கனவாயில்லை. அவர்களின் ஆட்சிக்காலத்தில் பெண்களெவரும் ஆண்துணையின்றி தெருவிலிறங்கக் கூடாதென்பது அவர்கள் வைத்த சட்டமாகவிருந்தது. ஆனால், இன்றும்கூட எத்தனையோ ஜனநாயக ஆட்சி நிலவுவதாகக் குறிப்பிடப்படும் நாடுகளில் இவை எழுதப்படாத சட்டங்களாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. நாட்டு நிலைமை, திருடர், காமுகர் மற்றும் இன்னபிற கறுப்பு மனிதர்கள் மீதான அச்சங்களைக் காரணங்காட்டிப் பெண்களை ஒடுக்குவது சர்வசாதாரணமாகவே இடம்பெற்று வருகின்றது. இவ்வெழுதப்படாத விதிகள் காலங்காலமாக மரபார்ந்த போலி விழுமியங்களின் மூலமாகவும், ஒழுக்காறுகளின் மூலமாகவும் எம்முள் ஊட்டி வளர்க்கப்படுகின்றன. இந்நிலைமை முன்னையதை விடவும் அபாயகரமானதென்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லையே...
உண்மையைக் கூறுவதானால்.., எம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தலிபான் உயிர்த்திருப்பதை எவராலும் மறுத்துவிட முடியாது.
மற்றும்படி - தமது ஆயுதப்போராட்டத்தினை வலுப்படுத்தும் முகமாக தலிபான்கள் இஸ்லாம் மதத்தின் பெயரை உபயோகப்படுத்திக் கொண்டமைக்கு - ஒரேயடியாக இஸ்லாம் மதத்தினை மட்டும் குறைகூறவும் முடியாது. மத்திய காலங்களில், ஆயிரக்கணக்கான பெண்களை சூனியக்காரிகளென முத்திரை குத்தி அழித்தொழித்த கிறிஸ்தவ மதபீடமும், இன்றும் விதவைகளைப் படாதபாடுபடுத்தி வரும் இந்துமதமும் செய்யாத அநியாயங்களையா தலிபான்கள் செய்துவிட்டனர்.. சாதியின் பெயரால் இடம்பெறும் அக்கிரமங்களும்கூட இங்கு குறிப்பிடப்பட வேண்டியவைதான். கீழ்ச்சாதிப் பெண்ணாயிருந்தால் - 'பெண்' மற்றும் 'தாழ்ந்த சாதி' எனும் - இரு அடையாளங்களையும் காவித்திரிந்துகொண்டு, இரண்டின் பெயராலும் அடக்குமுறைக்கு ஆளாகவேண்டும்.
அண்மையில் தீபா மேத்தாவின் Water படம் பார்க்கவும் சந்தர்ப்பம் வாய்த்தது. படம் தேவைக்கும் மாறாக வர்த்தகமயப்படுத்தப்பட்டுவிட்டமை ஏமாற்றமடைய வைத்தாலும், இவ்வநீதிகளை ஏதேனுமொருவகையில் வெளிக்கொணர்ந்தமைக்காக தீபா மேத்தாவைப் பாராட்டத்தான் வேண்டும்.
மதங்களொன்றும் கடவுள்களால் அருளப்பட்டவையுமல்ல.. அதேவேளை, பெண்களை இப்படி இப்படித்தான் நடத்த வேண்டுமென எந்தக் கடவுளரும் வந்து ஆணையிட்டுச் செல்லவுமில்லை. அந்தந்தக் காலத்தின் தேவைகளுக்கேற்ப மனிதர்களுள் மகத்துவம் பெற்ற ஒரு சிலரால் அவை உருவாக்கப்பெற்று பரப்பப்பட்டிருக்கலாம். அதில் தவறேதுமில்லையெனினும், ஒவ்வொரு மதமும்.. அது சார்ந்த தத்துவங்கள் மற்றும் கருத்தியல்களும் அது தோற்றம் பெற்ற காலகட்டத்தின் அதிகார வர்க்கத்தின் வெளிப்பாடுகளாகவே அமைந்திருக்க முடியும். மாறிவரும் உலகின் போக்கிற்கேற்றபடி நெகிழ்ந்துகொடுக்காத எந்தவொரு மதமும் - மதம் மட்டுமல்ல.. அனைத்துமே - காலாவதியாகிவிட வேண்டியவைதான்.
3.

படத்தில் மிக மிகப் பாதித்த ஒரு காட்சி: ஒஸாமா எனும் அச்சிறுமியின் ஆள்மாறாட்டம் பிடிபட்டுவிட, விசாரணை நடாத்தப்பெற்று (சாட்சிகளெதுவும் இல்லாமலேயே.. இதுவும் மற்றுமொரு ஒடுக்குமுறையினைத்தான் சுட்டிக்காட்டுகின்றது. ஒரு ஆண் தண்டிக்கப்படுவதற்கு முன்னர் சாட்சிகளும், ஆதாரங்களும் பொதுமக்களின் முன் வெளியிடப்படுகின்றன. ஆனால், ஒரு பெண்ணுக்கு அவை தேவையில்லையெனும் மனப்பான்மையும், கடவுளுக்குத்தான் தெரியுமென்ற ரீதியிலான அவர்களது அலட்சியப்போக்கும் புலனாகின்றன) தண்டனையாக அவள் வயது முதிர்ந்த முல்லா ஒருவருக்கு திருமணம் செய்துவைக்கப்படுகிறாள். அவ்விரவில் அவர் விதவிதமான பூட்டுக்களைக் கொண்ட ஒரு கோர்வையினை எடுத்துக்கொண்டு வந்து அவள் முன் நீட்டுவார். இதில் உனக்குப் பிடித்ததைத் தெரிவுசெய்து கொள் என்றும் வினவுவார். இறுதியாக, அலங்கரிக்கப்பட்ட சற்றுப் பெரிய பூட்டொன்றை நீட்டி.. இதுதான் உனக்குப் பொருத்தமானது.. உனக்கே உனக்கானதென்று கூறும்போது... மனம் என்னிலிருந்து நழுவி காலவெளியின் எத்தனையோ அடுக்குகளைக் கடந்துவிட்டிருந்தது.
இன்றும் உலகில் ஒவ்வொரு பெண்ணுக்கும் நிகழ்ந்துகொண்டிருப்பதும் இதுவேதான்... எனினும் மிக மிக சாமர்த்தியமான முறையில்/திட்டமிட்ட முறையில் இவ்வொடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. ஆரம்பக் கல்வி தொடக்கம் தொழில்வாய்ப்பு, திருமண பந்தமென எதை எடுத்துக்கொண்டாலும் - இவையனைத்தும்தான் இன்று பெண்விடுதலை எட்டப்பட்டுவிட்டமைக்கான அளவுகோல்களாகின்றன என்பதையும் இங்கு கவனத்திற் கொண்டாக வேண்டும் - ஒரு பூட்டுக் கோர்வையை நீட்டி.. இதில் பிடித்ததைத் தெரிவுசெய்து கொள்வதற்கான சுதந்திரம் தான் இன்று நிலவுகின்றது. இதுதானாம் இன்றைய பெண்களின் சுதந்திரம். இதற்காகத்தானாம் பெண்கள் இத்தனை காலம் போராடிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்குச் சில தசாப்தங்களுக்கு முன்புவரை பூட்டுத் தெரிதலுக்கான சுதந்திரம் கூட இல்லாமலிருந்ததையெண்ணி, நவயுக பாஞ்சாலிகள் ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம்.
கல்விமுறையாயிருந்தாலென்ன... தொழில்வாய்ப்பாயிருந்தாலென்ன... எதுவுமே பெண்களின் விடுபடலுக்கான மார்க்கங்களாக அமைவதற்கு இடங்கொடுக்காத வகையில் அவற்றைக் கட்டமைப்பதில் ஆண்மேலாதிக்கச் சமூகம் வெற்றிகண்டுள்ளது. ஒருவகையில், காலனித்துவ நாடுகளின் செயற்பாட்டிற்கு இதனை ஒப்பிடலாம். சுதந்திரம் கொடுக்கிறோம் பேர்வழியென முன்கதவால் நாட்டை விட்டு வெளியேறியவர்கள், பூகோளமயமாக்கலின் வழி பின்கதவால் மறுபடியும் நாட்டினுள் நுழைந்து, பொருளாதாரப் பண்பாட்டுச் சுரண்டலை மேற்கொண்டு வருவதற்கு ஒப்பானதுதான் ஆண்மேலாதிக்கமும். பூகோளமயமாக்கல், மார்க்ஸிசம் மற்றும் இன்னபிற ஆனானப்பட்ட கருத்தியல்களெவையும் பெண்களால் உருவாக்கப்பட்டவையல்லவென்பதால், ஜீவகர்த்தாக்களின் அதிகார ஸ்தானங்களைத் தக்கவைத்துக்கொள்ள அவை மற்றுமொரு அடக்குமுறைக்கான கருவியாகவே தொழிற்படுமென்பதில் எதுவித சந்தேகங்களுமில்லை.
கலந்துரையாடலின்போது ஒருவர் கூறிய கருத்தின்படி, இன்றைக்கு அத்தனை அரசு சாரா நிறுவனங்களும், வெளிநாட்டு அமைப்புக்களும் பெண்களை அதிகளவில் தம்மோடு இணைத்துக் கொண்டதற்கென்ன.. அவ்வமைப்புக்கள் எவற்றிலும் தீர்மானங்காளையெடுக்கக்கூடிய ஸ்தானங்களில் பெண்கள் அரிதிலும் அரிதாகவே காணப்படுகின்றனர். இத்தகைய ஸ்தாபனங்களில் பெண்கள் பயன்படுத்தப்படுவது - ஒரு கண்ணாடிப்பெட்டி பொம்மையைப் போல - தாம் பாலினச் சமத்துவத்தினைப் (Gender Equality) பேணுகின்றோமெனக் காட்டிக்கொள்ளவும், வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் மட்டும்தான். இதனை பொதுமைப்படுத்த முடியாதாதலால் இது ஒருவித Radical Thinking எனவும் கூறலாமெனினும், ஒரு தீவிரப் பெண்ணியவாதியின் பார்வையில், ஆண்கள் இத்தகைய கருத்துக்களை முன்வைப்பதென்பது சமூகத்தில் தம்மை முற்போக்குவாதிகளாகக் காட்டிக்கொள்ளவும், சிந்திக்கத் தெரிந்த பெண்களைக் கவரவும் தானெனவும் கருதிக்கொள்ள இடமுண்டு. அகச்சூழலைச் சார்ந்த இத்தகைய முரண்கள் - அலட்சியப்படுத்தவும் முடியாத.. பொதுமைப்படுத்தவும் இயலாத - இடியாப்பச் சிக்கலானவை.
4.
படத்தின் பின்னணியிலான அரசியலும் கலந்துரையாடலின்போது முக்கிய இடம்வகித்திருந்தது. இயக்குனர் தான் சார்ந்த சமூகத்தின் மீதான விமர்சனங்களை முன்வைக்கவே எத்தனிருக்கிறாரெனினும், அதனை மேலைத்தேய ஊடகங்கள் - தலிபான் எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் மறுப்புக் கோஷங்களுக்கு - சார்பாகப் பயன்படுத்திக் கொள்ளவும் இப்படம் வழிவகுத்து விட்டிருந்தது. இப்படத்திற்குச் சர்வதேச ரீதியாகப் பரவலான கவனம் வழங்கப்பட்டமையையும், சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டமையையும் இதன் நீட்சியாகக் கொள்ளலாம்.
சிவகுமார் கூறியதன்படி, படைப்பாளிகளைப் பொறுத்தவரை இது கத்தியின் நுனியில் நடக்கும் முயற்சியே.
5.
எது எவ்வாறிருப்பினும், சிறுவர்கள் மத்தியில் பாலினப் பேதங்கள் நிலவுவதில்லை; வளர்ந்தோராலேயே அவை வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றனவெனும் நிதர்சனமான உண்மையை இப்படம் எடுத்துக்காட்டுகின்றமையும், ஒஸாமாவுக்கும் அவளது தோழன் எஸ்பான்டிக்குமிடையிலான உறவு எவ்விதத்திலும் கொச்சைப்படுத்தப்படாமல், உணர்வுகளை வருடிச் சென்றமையும் குறிப்பிடத்தகுந்தன.
சிறுவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ...
ஆமைகள் பறப்பதில்லைதானெனினும்..
அவற்றுக்குப் பறக்கவே தெரியாதென
எமக்குக் கற்பித்தவர் யார்?
நான் பார்த்த ஆமைக்குச்
சிறகுகளிருந்ததென்று
எவரேனும் கூறுவாராகில்
அதை நாம் மறுப்பது எங்ஙனம்?
எம் விழிகளுக்குத் தட்டுப்படாத
ஒரேயொரு காரணத்தைக்கொண்டு
முடிந்த முடிவுக்கு வருதல்
எத்துணை நியாயம்?
அண்மையில் நண்பர் சிவகுமாரின் ஏற்பாட்டில் நிகரி திரைப்பட வட்டத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த Bahman Ghobadi யின் 'Tutles Can Fly' எனும் ஈரானியத் திரைப்படமொன்றினைக் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் கண்டுகளிக்கும் - உண்மையைக் கூறுவதானால்.. கண்டுகலங்கும் - வாய்ப்புக் கிடைத்தது. நிகரி திரைப்பட வட்டத்தினர் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இதுபோன்ற கிடைத்தற்கரிய திரைப்படங்களைத் திரையிட்டு, முடிவில் அன்றைய படம் சார்ந்த கலந்துரையாடலொன்றையும் தொடர்ந்து சில மாதங்களாக நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தகுந்தது. சராசரி தென்னிந்திய மசாலாப் படங்களின் ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடக்கும் தலைநகர்வாசிகளுக்கு - அதிலும் குறிப்பாக இளந்தலைமுறையினருக்கு - இத்தகைய கலைநயம் வாய்ந்த படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைப்பது வெகு அபூர்வம். அந்தவகையில் நிகரியினரின் முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே.
துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் பரவலாக சிறுபான்மையினமாக வாழ்ந்துவரும் குர்திஷ் இனத்தவர்களின் வரலாற்றுப் படிமங்கள் துர்ப்பாக்கிய நிலைக்குள்ளான இனக்குழுமமொன்றின் அவலநிலையினையே எடுத்துக்காட்டுகின்றன. ஈரானிய குர்திஸ்தானைச் சேர்ந்த இயக்குனர் Bahman Ghobadi தனது மூன்றாவது படமான 'Turtles Can Fly' ன் மூலம் அதனை பகுதியளவிலாயினும் ஆவணப்படுத்த முயன்றிருக்கிறார்.
அமெரிக்க - ஈராக்கிய யுத்தத்திற்குப் பின்னரான காலங்களில் ஈராக்கின் எல்லைப்புறங்களில் வாழும் குர்திஷ் இனச் சிறுவர்களின் வாழ்வியல் போராட்டங்களை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லும் இப்படத்தின் யதார்த்தத்தினை மீறிய காட்சி நகர்வுகள் சமயங்களில் சலிப்படைய வைத்தாலும், anti - Saddham கோஷத்துடன் ஆரம்பித்து anti - America குரலுடன் படம் முடிவடைந்தமை விதந்து குறிப்பிடத்தகுந்தது.
இதில் சுவாரசியமான அம்சம்.. இப்படத்தில் நடித்த சிறுவர்கள் எவருமே தொழில்ரீதியான நடிகர்களல்ல - அனைவரும் ஏதோவொரு வகையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சராசரிக் குழந்தைகள் - என்பதுதான். காட்சிகளின் ஆரம்பத்திலேயே வழங்கப்பட்டுவிடும் இத்தகவல் படத்தின் கனதியை இன்னமும் அதிகரிக்கச்செய்யும்.
அநேகமான சந்தர்ப்பங்களில் சமூகத்தின் குரூரங்களுக்கும், வக்கிரங்களுக்கும் அதிகளவில் பலியாவது சிறார்கள்தான். ஈராக்கிய இராணுவத்தினரால் பாலியல் துன்புறுத்தலுக்காளாகிய குர்திஷ் சிறுமியொருத்தியையும், அமெரிக்க - ஈராக்கிய யுத்தத்தின் விளைவாக கண்ணிவெடியொன்றில் அகப்பட்டு இரு கைகளையும் இழந்த அவளது மூத்த சகோதரனையும் முக்கிய கதாபாத்திரங்களாகக் கொண்டு கதை நகர்கின்றது.
பதின்ம வயதிலேயே வலுக்கட்டாயமாக, தாய்மைப் பொறுப்பினையேற்க வைக்கப்பட்ட சிறுமி.. வக்கிரத்தின் சின்னமான பார்வைத்திறனிழந்த தன் குழந்தையை நேசிக்கவும் தெரியாமல், வெறுத்தொதுக்கவும் முடியாமல் தத்தளிக்கின்றமை உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இறுதியாக அக்குழந்தையைக் கொல்லும் நோக்குடன் மலையொன்றின் விளிம்பில் அமரவைத்துவிட்டு, இறுகிய மனத்துடன் திரும்பி, தானும் மலையுச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறாள். இக்காட்சியிலிருந்து தொடங்கும் படம், கடந்தகாலங்களுக்கு நழுவி, சுற்றித் திரும்பி, மீண்டும் அதே சம்பவத்துடன் முடிவடைகின்றது. அவளது குழந்தை தப்பித்துக்கொள்ள, அவள் மட்டும் என்றென்றைக்குமாக மறுபடியுமொருமுறை மரணித்து விடுகின்றாள்.
இவ்விருவரதும், இவர்கள் தவிர்ந்த ஏனைய சிறார்களதும் அதிமுக்கிய பிரச்சனையாக விளங்கும் கண்ணிவெடிகளே அவர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குகின்றன. கண்ணிவெடிகளை அகழ்ந்து அதனை உள்ளூர் தரகர்களுக்கு விற்பதன் மூலம் அன்றாடச் சீவியத்தினை நடாத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளான இச்சிறுவர்களின் பால்யகாலம் யுத்தத்தினாலும், வயதினை மீறிய பொறுப்புக்களினாலும் களவாடப்பட்டு விடுகின்றமை வேதனைக்குரியதே. ஆட்சியதிகாரம் சதாமின் கைகளிலிருந்தாலென்ன.. அமெரிக்காவின் கைகளிலிருந்தாலென்ன.. இவர்களின் கதைகள் மட்டும் காலாகாலத்திற்கும் தொடரத்தான் செய்யும்.
ஒப்பீட்டு ரீதியில் நோக்கின் ஈழத்தமிழர்களது நிலையும் இதற்கு விதிவிலக்கானதல்லவே..
அனைத்தையும் தாண்டி..,
ஆமைகளுக்கும் பறக்க முடியும்.. அண்டசராசரங்களையும், வானவீதிகளையும் கடந்து எல்லைகளற்ற வெளிகளை நோக்கி பயணிக்கவும் தெரியும்..
நேற்றிருந்த வீட்டை விட்டு
நெடுந்தூரப் பயணம்
நான் செய்து கொண்டதல்ல
அது என்மீது வீசப்பட்ட ஒரு விசம்
ஆயினும் நினைக்க முடியாத எல்லைகள்
பல தாண்டியும் என் பயணம்
முற்றுப் பெறுவதாயில்லை.
என்னொரு தேசத்தை விட்டு
கானகமும் வயல்வெளிகளையும் நோக்கி
நான் எவ்வளவு தூரம்
பயணம் செய்தல் சாத்தியம்
வியாபிக்கும் நச்சிலிருந்து என் மரணம்
என்றாவது சம்பவிக்குமென்று
என்னால் காத்திருக்கவும் முடியவில்லை
உயிர்துடித்து என் மனமும்
இறந்து போகும் பொழுதும்
காத்திருப்பு தவிர்க்க முடியாதது
என்கிறார்கள்
எனக்கொரு காத்திருப்பு இனித் தேவையில்லை
அது தரும் ஏக்கமும் கண்ணீரும்
எனக்கு வேண்டாம்
நானொரு விட்டேத்தியாய்ப்
புறப்படப் போகிறேன்
என்னிலிருந்து கண்ணீர் இல்லாதபடியால்
எல்லைகளற்ற பரந்தவெளி மீது
என்னாலியன்ற
எனக்குப் பிடித்தமான பாடலை
எழுதிவிட்டுப் போகவே விரும்புகிறேன்
அது எனது சுதந்திரத்தை நோக்கியதாயினும்
உங்களுக்குள் பிரளயத்தினை
ஊட்டுவதாகவும் இருப்பின்
நான் என் செய்தல் இயலும்?
எனது சுதந்திரத்தினை
அங்கீகரிக்காத நீங்கள்
என்னிலிருந்து எதை
எதிர்பார்க்கிறீர்கள்?!
- கலா
மரத்துப் போன உணர்வுகளுடனான அந்தச் சிறுமியின் முகம் கலாவின் இந்தக் கவிதையை நினைவுறுத்தியது. உணர்வுவெளிப்பாடுகள் தேசம், இனம், மொழி, மதம், பண்பாடு அனைத்தையும் கடந்து ஒன்றிப்போகக்கூடியவையே.
(நண்பரொருவரின் வேண்டுகோளுக்கிணங்க, ஏற்கனவே பின்னூட்டமொன்றில் குறிப்பிட்டிருந்த பட அறிமுகம் சற்றே விரிவாக)