Tuesday, March 27, 2007

தவறவிடப்படக்கூடாத சாட்சியங்கள்...

1.

மின்சாரத்தடை
சுற்றிவளைப்பு
தேடுதல்..

நாய்களின் ஓலம்
பூட்ஸ்களின் தடதடப்பு
நெரிபடும் சருகுகள்..

விமானத்தாக்குதலின் பின்னரான இரவு
இப்படித்தான் கழிந்து கொண்டிருந்தது
ஒவ்வொரு கணத்தின் கணமும்
நூற்றாண்டுகளாய்..

மணலுக்குள் தலைபுதைத்து நின்று
ஆசுவாசப் பெருமூச்செறியும்
தீக்கோழியென எனதிருப்பும்..
தலையணையின் அடியில்
குழிதோண்டி முகம் பதித்து
கருவறையுள் மீண்டதான
கனவுகளுடன்.

சாளரங்களுக்கப்பால்..,
ஓங்கிவளர்ந்து
அகலக் கிளைவிரித்து
கரும் பூதமென
ஓவென்று நின்றிருக்கும்
மாமரம் மட்டும்
அனைத்துக்குமான சாட்சியமாய்..


2.

'அந்த அங்கிள்மார்
குண்டு போடுறதுக்கு முதல்
தமிழாக்களுக்கெல்லாம் சொல்லுவாங்களாம்
அம்மா சொன்னா..
உங்களுக்கு தெரிந்தால்
எனக்கும் சொல்லுங்கோ,
ஒண்டாய் ஓடி ஒளியலாம்
அபி அம்ப யாளுவோ நேத'

'என்ன இல்லையென்று
இப்படி சண்டை பிடிக்கிறாங்கள்'

பரிதாபத்துடன் பார்க்கிறேன்
அந்தச் சின்னப் பெண்ணை..

எதையும்
சொல்லிக்காட்டிக் கொண்டிருக்க
விருப்பமில்லை எனக்கு.
புளித்துப்போன கதைகளவை..
யாழ்நூலக எரிப்பு
செம்மணி
சூரியகந்த
83'

அவள் குழந்தை.
சிங்களத்திதானென்றாலும்,
அவளுக்குத் தெரியவேண்டாம்
பெரியவர்களின் வக்கிரங்கள்

இருந்தும்,
சொல்லாமலிருக்க முடியவில்லை..
பாடசாலைவிட்டு வரும் வழியில்
துவக்குச் சூடு பட்டு விழுந்த
மைத்துனனைப் பற்றி..,
கிழக்கே
பசியால் உயிர்துறந்து கொண்டிருக்கும்
அவள்போன்ற ஆயிரமாயிரம்
சிறுவர்களைப் பற்றி..

வியப்பால் விழிவிரித்துக்
கேட்டுக் கொண்டிருந்தவளின்
கன்னங்கிள்ளி
புன்னகைத்தேன்

'நான் சொல்வது இருக்கட்டும்..
இன்னொரு 83ன்போது
என்னை நீ பாதுகாப்பாயா..'

சின்னக் குழந்தை
கேட்டிருக்கக்கூடாதோ..

புரிந்ததோ இல்லையோ
தலையை ஆட்டினாள்
ஓவென்று..

படபடக்கும் அவள் விழிகளிலிருந்து
விரிந்தன எல்லாமே..
இலங்கையில் இனப்பிரச்சனையா..
எவர் சொன்னது..?


(வலைப்பதிவை மெருகூட்டித் தந்த நண்பனுக்கு..)