Wednesday, February 18, 2009
முகம்வழி நுரைத்தொழுகும் சூனியம்
1.
பிரியங்களின் மென் ஸ்பரிசங்கள் மீது
கரும்போர்வை விரித்து
கேள்விகளும் குழப்பங்களும்
சயனித்துக் கொண்டிருக்கின்றன
புத்தனைப் போல
நானோ போதிமரக்கிளையேந்திய சங்கமித்தையாய்
அலைந்து கொண்டிருக்கிறேன் ரணங்களைக் காவிக்கொண்டு
2.
எங்கிருந்தோ வந்து தவறுதலாக அறைக்குள் அடைபட்டுவிட்ட
மாட்டிலையானின் ஓல ரீங்காரம்
தலையைச் சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கும்
ஆயிரமாயிரம் வெளின்ற ஈசல்களின் வன்மத்தை
நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது
நான் விட்டுச்செல்ல விரும்புகிறேன்,
என் காலடியின்கீழ் துளிர்விடும் அரும்பொன்றை
அதில் துளிக்கும் நேசத்தை
3.
மாறிக்கொண்டிருக்கும் நிலப்பரப்புகள்
வேரோடு பிடுங்கப்பட்டு
மாற்றான் தோட்டத்தில் நடப்பட்டதாய்
சற்றும் தகவமையா வாழ்வு
'இதைவிட வடிவானதென் தோட்டம்
இதைவிடப் பரந்தது'
வரண்டு வெடித்து வாய்பிளந்த நாடுவிட்டு
வலசை வந்த பறவைகளின் ஏக்கம்
பனிப்புலத்தை உருக்கி உருவழிக்கும்
பைன் மரங்களும் பூச்சாடிகளும்
மிகுதயக்கத்துடன் முணுமுணுத்திருக்க
கால்கள் சிறகுகளற்ற வெண்ணிலத்து செடிகள்
தலையசைத்தெதிர்க்கும் - சந்தர்ப்பங்கள்
தங்களைத் தாங்களே நிகழ்த்திக்கொண்ட
குளிர்காலப் பகற்பொழுதொன்றில்
நான் நானற்றவளாயானேன்
Subscribe to:
Posts (Atom)