Wednesday, September 06, 2006

கட்டங்கள் மற்றும் வட்டங்களுக்குள் வாழ்தல்...

நாளை நன்றாக விடியட்டும் என் பிரிய பெண்ணுக்கு..!

வட்டங்கள்! (01)

"வாத்திட ரெண்டாவது பெட்டையை மூன்று நாளாக் காணேல்லையாம்.."

சபிக்கப்பட்ட பொழுதொன்று விடிகின்றது.., மௌனங்களைக் கலைத்துப் போட்டபடியும், கிரணங்களைச் சிதறவிட்டபடியும். தாயின் கர்ப்பப்பைக்குள் அவள் தவழ்ந்திருந்த காலத்திலிருந்தே எனக்கு அவளைத் தெரியும். துடுக்குப் பெண். வாயால் அனைவரையும் அடக்கியாள்பவள். வங்காள விரிகுடா வாயை அகலத் திறந்து அழத்தொடங்கினால் போதும். அவள் வேண்டும் விதத்தில் அணைத்து ஆறுதல் கூறினாலேயொழிய கேவிக்கேவி மூக்கை உறிஞ்சுவதை நிறுத்த மாட்டாள்.. ரயில் எஞ்சின் ஸ்டேஷனில் இழுத்து இழுத்துப் பிடித்து ஒருவழியாய் நிற்குமே அதேபோல. சாவது ஒரு கலையென்று சில்வியா பிளாத் சொன்னாலும் சொன்னார், அழுவதும் ஒரு கலையென்று இவளைப் பார்த்த பிறகுதான் யாரும் நம்புவார்கள். சந்தர்ப்பம் பார்த்து உருண்டோடி விழும் கண்ணீர்.., எதிரேயிருப்பவர்களை ஒரு கணம் உருக்கி.. நெகிழச்செய்யும்படி. செய்த கள்ளத்தை மறைக்க, திட்டு வாங்கிக் கொள்ளாது தந்திரமாய் தப்ப, பார்க்கிறவர்களெல்லாம் "ஐயோ பாவம்" என்று பரிதாபப்படவைக்க.. இன்னும் என்னென்னத்துக்கோவெல்லாம் அவளது கண்ணீர் பயன்பட்டது.

அந்தப் பெண்ணும் ஒருநாள் அழுகையை நிறுத்துவாளென்று யார்தான் எதிர்பார்த்தார்?

புதன்கிழமை பின்னேரம் வகுப்புக்குப் போகிறேனென்று கிளம்பியவள்தான். ஏழெட்டு மணிக்கெல்லாம் "அம்மா பசிக்குது" என்றபடி டாணென்று வீட்டில் நிற்பவள் அன்றைக்கு வீடு திரும்பவேயில்லை. எங்கும் தேடியாயிற்று.. வகுப்பு நிலையம், நண்பிகள் வீடு, நூலகம், அவள் அடிக்கடி போகும் சில இடங்களென.. கடற்கரையும்கூட அதில் அடங்கும்தான்..


கட்டங்கள்! (01)

தேடல்கள்.. காத்திருப்புக்கள்.. எதிர்பார்ப்புக்கள்.. நிராசைகள்..

பாடப்புத்தகத்தை இலக்கேதுமின்றி புரட்டுகிறேன்.. விதிகள், தத்துவங்கள்.. வாதங்கள், வாய்ப்புக்கள்.. நியமங்கள், போலிகள்.. எடுப்பு, பதம்.. இன்னுமின்னும் என்னென்னமோ.. பக்கங்களின் நடுவே ஞானஸ்நானம் பெறும் இயேசுவின் ஓவியம்.. இடுப்பைச் சுற்றியிருக்கும் ஒற்றையாடையோடு.. பவுலோ யாரோ பெயர் நினைவில்லை.. ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.. சுற்றிலும் பெண்கள்.. பெண்கள் மட்டும்தான்.. காகிதங்கள் நழுவுகின்றன விரல்களிலிருந்து.. மறுபடியும், கருத்துக் குறிப்பு.. அகலக் குறிப்பு.. அனுமானங்கள், எண்ணக்கருக்கள்.. தீர்மானங்கள்.. முதல் பக்கம்.. 'பொய்யில் நீக்கி எனை மெய்யில் நடத்துக.. இருளில் நீக்கி எனை ஒளியில் நடத்துக..' எப்போதோ எங்கேயோ வாசித்திருந்த உபநிடதமொன்றின் வரிகள்.. நினைவில் நின்றுவிட, புத்தகத்தில் எழுதிவைத்தது.. சட்டென்று என்னமோ தோன்ற இறுதிப் பக்கத்தைப் புரட்டுகிறேன்.. 'வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தன.. உன் பாதங்கள் இவை.. என்னில் படிவங்கள் எப்படியோ..' இதுவும் எங்கேயோ வாசித்ததுதான்.. மணிவாசகரோ, காரைக்காலம்மையாரோ யாரோ எழுதிவிட்டுப் போனது..

உள்ளம் நெக்குவிட்டுருக நின்றேன் பராபரமே... தாயுமானவரா.. நினைவில்லை.. யாராகவும் இருந்துவிட்டுப் போகட்டும்.. சொன்னது எவராகவும் இருக்கட்டும்.. என்ன சொன்னரென்பதுதான் முக்கியம் எனக்கு.. தலையைச் சாய்த்தால் புத்தகங்கள்.. ஓவியங்கள்.. கணனி.. பொம்மைகள்.. நான் தேடும் எதுவோ இங்கேயில்லை.. எங்கேயோ தவறிவிட்டிருந்தது.. அல்லது நான் தவறவிட்டிருந்தேன்..

தொலைபேசியில் அழைத்து நாளைய தினத்தின் கடமைகளையும், பொறுப்புக்களையும் பட்டியலிடும் நண்பி.. எனது பொறுப்பற்ற குணம் எத்தனை பேரை வருத்தியதென குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் அப்பா.. வழமையாக கதைசொல்லும் அம்மா ஏனோ இன்று மட்டும் மௌனமாய்.. தம்பி இவையனைத்தையும் கடந்த பேரமைதியில்.. உறங்குநிலையில்.. அக்கா எங்கோ வெகுதொலைவில்.. நீயும் கூடத்தான்.. எழுத்துக்களின் மேலே சுழலும் விழிகள் தயங்கும்.. சட்டென்று நினைவிலறையும் விம்பமொன்றின் பாதிப்பில்..

என்ன செய்கிறேன்.. எங்கே போகிறேன்.. எதைத் தேடியலைகிறேன்.. வினாக்கள் மட்டும் நீண்டுகொண்டே போகும்.. அனுமனின் வாலாய்.. அனுமன் வேண்டாம்.. இலக்கிய நாயகர்கள் வேண்டாம்.. இத்துப்போன பழைய பஞ்சாங்கங்கள் வேண்டாம்.. இல்லை, சீனப்பெருஞ்சுவரென்று சொல்வோமா.. ம்ஹூம்.. அதுவும் எங்கோவோர் இடத்தில் முடிவடைகிறதாக்கும்.. நைந்த ரிப்பனிலிருந்து இழுபடும் நூலாய்.. சுற்றும் முற்றும் பார்க்கிறேன்.. பொருத்தமான உவமானம் எங்கேயாவது தட்டுப்படுகிறதாவென.. ஆம்.. ஆம்.. ஆமாம்.. அதேதான்.. சிலந்தியின் அடிவயிற்றிலிருந்து கசியும் பிசுபிசுத்த திரவமாய்.. நீண்டபடியிருக்கின்றன விடைகாணமுடியா வினவல்கள் மட்டும்..

தொலைதூரத் தோழிக்கான எழுதப்படா மடல்கள்.. இடைவெளி கூடக்கூட பிரியங்களும் நீர்த்துப்போகுமோ.. அவளற்ற உலகத்தை உயிர்ப்பற்றதெனினும்கூட கட்டியமைக்க முடிந்துவிட்டது. எந்தச் சலனமுமில்லாமல் வாரவிறுதி நாட்கள் நகர்ந்துகொண்டே போகின்றன.. அவளற்ற கணங்கள்.. சூனியமாய்ப்போன எதிர்காலம்..

களைப்பாக இருக்கிறது.. விழிகள் சோர்ந்து விட்டதாக உணர்கிறேன்.. அலைக்கழிந்தபடியிருக்கும் மனம் மட்டும் கடலளவு கனக்கிறது.. கடல் எப்படி கனக்கும்.. நீ தூக்கிப் பார்த்திருக்கிறாயா.. எங்கிருந்தோ ஒலிக்கிறது கெக்கலிப்புக் குரலொன்று.. இப்படியேதான் ஒவ்வொருமுறையும் ஏதோவொரு குரலின் அபஸ்வர நாதத்தில் தடுமாறித் தடக்கி வீழ்கிறேன், எனது நேர்வழிப் பாதையினின்றும்.

என்னிலிருந்து ஆரம்பிக்கும் எனது உலகம்.. சுழன்று சுழன்று.. விரிந்து பரவி.. வெளியெங்கும் வியாபித்து.. வெறுமைகளை நிறைத்தபடி காத்திருக்கிறது. காத தொலைவிலிருந்து வந்து மோதிய மர்ம அதிர்வொன்றினால் தாக்கப்பட்டு தெறித்துச் சிதறுகிறது எனது நான்.. திக்குக்கொன்றாக.. ஒருத்திக்கு கத்தத் தெரியும், கோபிக்கத் தெரியும்.. அழத் தெரியாது. அடுத்தவளுக்கு அழத் தெரியும்.. கேவத் தெரியும்.. சிந்திக்கத் தெரியாது. மற்றுமொருத்திக்கு சிந்திக்கத் தெரியும்.. எழுதத் தெரியும்.. சுயமிழக்கத் தெரியாது.. இன்னுமொருத்திக்கோ சுயமிழக்கத் தெரியும்.. நேசிக்கத் தெரியும்.. கத்தத் தெரியாது.

பலவந்தமாக விழிகளை இறுக்கி மூடினால்.. என் செல்லக் குட்டி.. என்றபடி புன்னகைப்பாய் நீ.. என்னைக் கொல்லாதையடா.. என்று கவனத்தைத் திசைதிருப்ப முயன்றால்.. கதையாய், கவிதையாய், கனவாய், கருத்தாய்.. எல்லாமாகவும் வந்து என் உலகை ஆக்கிரமித்துக் கொள்வாய்.. உனக்கப்பால் சிந்திக்க முயன்றால் தோற்றுத் திரும்பவேண்டியதுதான்..

இதற்கு மேலும் என்னத்தைச் சொல்ல.. கானகமாய்.. ஊறும் மெல்லொளியாய்.. பாடும் வண்டினமாய்.. உருத்தொலைந்து நானும் மாற்றுயிர் கொண்டால் எப்படி என்னைக் கண்டடைவாய் எனதன்பே..

அதிகாலையில் கதிர்க்கரங்களால் துயிலெழுப்புவேன்.. நீராடுகையில் உன் மேனி தழுவும் ஒற்றைத் துளிக்குள் மறைந்திருப்பேன்.. உடல் போர்த்தும் ஆடையின் சிறு நீள இழையாவேன்.. காற்றில் தவழ்ந்து செவிசேரும் மென் ஸ்வரமொன்றில் உயிர்த்திருப்பேன்.. சோர்ந்து நீ உறங்குகையில் நித்ராதேவியாய் உன் மீது கவிந்து கொள்வேன்.. அடையாளங் கண்டுகொள்வாயோ என் கண்ணே..


வட்டங்கள்! (02)

"எப்பவாவது என்னைக் காணவில்லையென்றால் பீச்சுக்கு ஒருக்கா வந்து பாருங்கோ.. எங்கயாவது என்ட ஏதாவது சாமான் கிடந்தால் நான் கனநாளா தேடிக்கொண்டிருந்ததைத் தேடி போயிருப்பேன் என்று நினைச்சு பேசாமல் திரும்பிப் போங்கோ.. என்னை யாரும் எங்கேயும் தேடத்தேவையில்லை.."

இப்படித்தான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள். அப்படி என்னத்தைத்தான் இத்தனை நாளாய்த் தேடிக்கொண்டிருக்கிறாயென்று கேட்டால், ஒருபோதுமே அவளால் ஒழுங்காகப் பதிலளிக்க முடிந்ததில்லை. பத்துவயதாகும்போது, 'பொன்னியின் செல்வனை' என்றாள்.. பதின்மூன்று வயதில் எல்லாம் தெரிந்த மனுசி போல 'மனிதர்களை' என்றாள்.. பதினைந்தில் விடுபடலை.. பதினாறில் காதலோ என்னமோ.. தன் பிறக்காத குழந்தையை.. நேர்மையை.. புன்னகையை.. தொலைந்துவிட்ட வார்த்தைகளை.. சட்டென்று ஒருநாள் வாழ்ந்துமுடித்த கிழவியின் தோரணையோடு 'மரணத்தை' என்றாள். கடந்த ஒருசில வருடங்களில் அவள் அதிகம் வாழ்ந்துவிட்டாள் போலும்.

இருந்தாற்போல, எதிர்பாராதவோர் தருணத்தில் அத்துமீறி எனது அறைக்குள் நுழைந்தவள்.. 'கடலுடன் நான் உரையாடினேன்..' என்றாள். மின்னலாய்த் தெறித்த அவளது வார்த்தைகள் அவசர எழுத்து வேலையையும் புறமொதுக்கி என்னை நிமிரச் செய்தன. உயர்ந்த எனது ஒற்றைப் புருவம் 'அப்படியா..' என்பதைக் குறிப்பாலுணர்த்தியது அவளுக்கும் புரிந்திருக்க வேண்டும்.

'நீ நினைக்கக்கூடும் எனக்குப் பைத்தியமென்று. எப்படியும் நினைத்துவிட்டுப் போ. எனக்கு அதுதொடர்பாக எவ்வித கரிசனையுமில்லை. உனக்கு நம்பிக்கையில்லையென்பதற்காக எமது உரையாடல் பொய்யாகி விடாது..'

படபடவென்று பேசிக்கொண்டே போனவள்..

'அன்றைக்கு மழை என்னை அழைத்தது நினைவிருக்கிறதா உனக்கு.. தனது துளிச்சரங்களைப் பிடித்து ஏறிவரும்படி கேட்டது.. என்னை மேகக்கூட்டங்களினிடையே அழைத்துச் செல்வதாகவும், நிலவின்மீது உறங்கவைத்து தாலாட்டுப் பாடுவதாகவும் ஆசைகாட்டியது. நட்சத்திரங்களுக்குப் பாட்டுப்பாடத் தெரியுமா என்று நான் திருப்பிக் கேட்டேன்.. சூரியனுக்குப் பூக்களென்றால் மிகவும் பிடிக்குமா என்றும்.. அதிருப்தியில் உதட்டைச் சுளித்துக்கொண்டு திரும்பிப் பாராமல் நகர்ந்தது..'

நான் புன்னகைத்தேன்.. "நீ பொய் சொல்கிறாய்.. என்னுடன் இன்னுமொருவரையும் அழைத்துக்கொண்டு வரட்டுமாவென்று கேட்டிருப்பாய்.. அது மறுத்திருக்கும்.. நீதான் எடுத்தெறிந்து பேசிவிட்டு வந்திருப்பாய்.. எனக்குத் தெரியும்.."

மௌனம்.. மௌனம்..

"அதெப்படி நான் அவர்களை விட்டுப் போவது?" உனதிந்தக் கேள்விக்கு என்னிடம் பதிலிருக்கவில்லை.


கட்டங்கள்! (02)

உணர்ந்துணர்ந்து மறுகுதல்...

இப்படித்தான் சில வேளைகளில் கதறியழத் தோன்றும்.. வெறிபிடித்தலையும் மனதை அடக்க முயன்று தோற்றபோதெல்லாம் நிறைவேறாமற் போன எதிர்பார்ப்புகளும், சிதைந்து போன கனவுகளும் மனதை நிறைத்து விம்மப் பண்ணும். எதை இழந்தேன்..? எதைப் பெறத் தோற்றேன்..? யாருக்குத் தெரியும் ஆழ்மனப் பிரவாகத்தின் போக்கும், திசையும், அதன் திடீர் திருப்பங்களும்..?

எப்போதிருந்தோ உணரத் தொடங்கியது.. எதையோ இழந்ததாய்.. எவரையோ பறிகொடுத்ததாய்.. தேடலின் போது தொலைந்தது என் நிம்மதியும் சந்தோஷமும்தான்.. ஆயிரம் பேருக்கு மத்தியிலும் தனிமையைத் தேடத் தொடங்கினேன்.. திரையாய் மறைத்த தனிமைக்குள் ஆயிரம் பேரைத் தேடத் தொடங்கினேன். முண்ணுக்குப் பின் முரணாகவே சிந்தித்துப் பழகிப்போனது மனம். மற்றவர்களது தடத்தைப் பின்பற்றுதலையும், அவர்களது போக்கைத் தொடர்தலையும் எப்படியும் வெறுத்தேன்.


வட்டங்கள்! (03)

ஊகங்கள்.. வதந்திகள்.. கண், காது, மூக்கு, இன்னும் பெயர் தெரியாத பல உறுப்புக்கள் பூண்ட கதைகள் ஊரெங்கும் பரவின.

"காசுக்கு ஆசைப்பட்டு எவனாவது பிள்ளையைக் கடத்தியிருப்பான்"

"இதென்ன விசர்க்கதை.. காசுக்கு கடத்துறதுக்கு அவட அப்பரென்ன கோடீஸ்வரரா.. சாதாரண மாசச் சம்பளக்காரராக்கும்.."

"அவளென்ன தமிழ்ப் பொம்பிளைகள் மாதிரியே திரிஞ்சவள்.. நகையுமில்லாம ஒன்றுமில்லாம திமிர்க்கதை கதைச்சுக்கொண்டு.. இப்படி ஒருநாளைக்கு நடக்குமென்டு நானும் நினைச்சனான்.. எவனையாவது தள்ளிக்கொண்டு போனாளோ என்னமோ.. முந்தியும் இப்படியொரு தொடர்பிருந்ததா கேள்விப்பட்டனான்.."

"அது ஒரு சாதிப்பெட்டை.. எங்கயாவது விழுந்து செத்திருக்கும் போலத்தான் தோணுது எனக்கென்டால்.."

"ஏன் ஏதாவது லவ் பெயிலியரோ..? இருக்கும் இருக்கும்.. யார் கண்டார்.. இந்தக்காலத்து பிள்ளைகளுக்கு வேறென்ன வேலை"

"ஏன் அப்படியென்டா மட்டும்தான் சாக வேணுமே.. அவவுக்கு வேற என்ன பிரச்சனை இருந்ததோ.."


எனக்கு அவளைத் தெரியும்.., தாயின் கர்ப்பப்பைக்குள் அவள் தவழ்ந்திருந்த காலத்திலிருந்தே...

....................

"பொம்பிளைப் பிள்ளையை கூடவா வெயிலுக்குள்ள அலைய விடாதீங்க.. முகம் கறுத்துப் போனால் பிறகு பிரச்சனை.."

"அந்தக் கீரையை சாப்பிடக் குடுக்காதீங்க.. மலடாக்கிப் போடுமாம்.."

ஆயத்தப்படுத்தல்கள்.. சந்தை மாடல்லவா.. நாளை அவளும்..

"எனது உடம்பில் எந்த நாயும் சொந்தங் கொண்டாட விடமாட்டன்.." நினைவிலறைந்துவிட்டுப் போயின அவளது வார்த்தைகள்.

....................

"வந்துசேர்ந்திட்டுதாம்.."

அலுங்காமல் குலுங்காமல் மூன்று நாட்களின் பின் அவள் திரும்பினாள்.. அனைவரதும் பார்வையில் அது மூன்று இரவுகளாக மட்டுமே தெரிந்தது. இளம்பெண்ணொருத்தி மூன்று இரவுகள் காணாமல் போயிருந்துவிட்டு திரும்பியிருக்கிறாள். சல்லடைகளாகத் துளைத்த பார்வைகளைத் தகர்த்தெறிந்துவிட்டு நகர்பவளை மெல்லப் பின்தொடர்கிறேன். ஒருவித மௌனம் அவளைச் சுற்றிலும் கவிந்திருந்தது. தாய்மொழி மறந்துவிட்டிருந்தாள். எதுவும் பேச மறுத்தாள்.

அவளேன் பேச வேண்டும்..? எதைப்பற்றி பேச வேண்டும்..? தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்.. நெஞ்சுபிளந்தே அவள் காட்டினாலும் அவளது ஆழ்மனத்து வடுக்களைப் புரிந்துகொள்ளும் வல்லமை உங்களுக்கு அறவேயில்லையென்பது தெரிந்திருந்தும் என்னத்தைத்தான் எதிர்பார்க்கிறீர்கள் அவளிடமிருந்து..?

"நான் கடலைக் காதலித்தவள்.. காற்றைப் பெற்றெடுத்தவள்.."

ஆதிமாதாவின் அகங்காரக் குரல் கேட்கிறதா..?


முடிந்த முடிவென்று எதுவுமேயில்லை!

கட்டங்கள் நேர்கோடுகளாலானவை.. இறுக்க அடைபட்டிருப்பவை. முழுமூச்சுடன் முயற்சித்தால் எங்காவது ஓர் மூலையைப் பிய்த்தெறிந்துகொண்டு விடுபட்டுவிட முடியும். வட்டங்களைச் சமைத்திருப்பதோ ஒற்றை வளைகோடு.. எந்தப்பக்கத்தால் உடைக்க முயற்சித்தாலும் கோடு நெகிழும்.., வடிவம் மாறும்.., விடுபடல் மட்டும் சாத்தியமேயில்லை.

வட்டங்களுக்குள் அடைபட்டுவிடாதே.. அனைவரும் எச்சரிக்கிறார்கள்.. எங்கெங்கு காணினும் வட்டமடா.. எனும் நிலையில் எங்கேதான் போய் ஒளிந்துகொள்வதோ.. ஒவ்வொன்றிலிருந்தும் விடுபட விடுபட இன்னுமின்னும் பல புதிய வட்டங்களுக்குள் அடைபட்டுக் கொண்டுதானிருக்கிறோம்.. தத்துவங்கள், கொள்கைகள், இன்னபிற மண்ணாங்கட்டிகளென்று.

கதையொன்று எழுதத் திட்டமிட்டால்.. கட்டுக்கடங்காது சிறகடித்துப் பறக்கும் சிந்தனாப் பறவையை அடக்க முயன்று தோற்று, இறுதியில் இப்படித்தான் கொண்டுவந்து முடிக்க வேண்டியதாகின்றது:

'அனைத்தையும் துறந்து, கட்டங்கள் மற்றும் வட்டங்களுக்குள் வாழ்வதும் ஒருவகையில் வசதியானதுதான்..'