Thursday, November 24, 2005

கனத்துப்போன நினைவுகள்...

"எனை உறுத்தும் நினைவுகளைச் சொல்வேன்
நொந்துபோன என் நாட்களின்
வேதனைச் சுமையினைச் சொல்வேன்
சிதழூறும் காயங்கள் பேசும் மொழியினில்
என்னைப் பேசவிடுங்கள்"
- அஸ்வகோஸ்

இந்த மனிதர்களுக்கும் எனக்குமிடையிலான உறவு எப்போது ஆரம்பமானது? கருவறைக் காலத்திற்கும் முன்பாய் இருக்கலாம். இவர்கள் புகைத்தெறிந்த சிகரட்டைச் சுற்றியிருந்த காகிதத்தைத் தயாரிக்கப் பயன்பட்ட, வைக்கோலாய் இருந்திருப்பேனோ நான்.......?! வார் அறுந்ததென இவர்கள் வீசியெறிந்த செருப்பு என் தோலால் செய்யப்பட்டிருந்திருக்குமோ.......?! fashion போய்விட்டதென இவர்களால் வெறுத்தொதுக்கப்பட்ட மேற்சட்டையின், உற்பத்திக்கு ஆதாரமாயிருந்த பருத்திப் பூவோ நான்.......?! வைக்கோலாய்...., மிருகமாய்...., பருத்திப் பூவாய் நானிருந்தபோது இவர்கள் இப்போதிருக்கும் இதே மனிதர்களாகத்தான் இருந்தார்களா அல்லது இவர்களுடனான சில கசந்துபோன அனுபவங்கள்தான் என் சிந்தனையை இவ்வாறெல்லாம் தூண்டுகின்றனவா?

எல்லாப் பெண்களையும் போல நானும் நேசித்தேன் ஒருவனை, உயிருக்குயிராய்... எதனிலும் மேலாய். ஆனால், என் மிகையான வெறுப்புக்கு இலக்காகியிருந்த ஆணாதிக்க வர்க்கத்தின் பிரதிநிதிகளில் அவனும் ஒருவனென்பதை நான் மறந்துவிட்டிருந்தேன். எனதேயெனதான உலகினில் வாழ்வதற்கான என் உரிமையை மறுத்த கயவர்களில் ஒருவன் அவனென்பதையும் உணரத் தவறிவிட்டிருந்தேன். ஆணாதிக்கத்தின் விஷவேர் அவனது அடிமனத்திலும் ஆழ ஊடுருவியிருந்தது. எம் சமூகத்தின் மரபார்ந்த போலி விழுமியங்களும், மூடக்கொள்கைகளும் அவனது இரத்தத்திலும் இரண்டறக் கலந்திருந்தன. இறுதிவரை அவனது தேவைகளும், எதிர்பார்ப்புகளும் என்னாலும் எனது உணர்வுகளும், ஏக்கங்களும் அவனாலும் புரிந்துகொள்ளப்படாமலே போயின. தூய, வெண்மையானதென நான் கருதியிருந்த அவனது ஆன்மாவில் ஆணாதிக்கப் புழுதிகள் படிந்தன... பின்னென்ன...., பிரிவது நிச்சயமாயிற்று.

இப்படித்தான் இன்னுமின்னும் அதிகமாக ஆண்களை வெறுக்கப் பழகிக் கொண்டேன், நான்.

மற்றுமொருநாள், நெரிசலான பேருந்துப் பயணத்தினூடு என் வயதொத்த இளைஞனொருவனின் வேண்டாத சில்மிஷங்கள் எல்லைமீறவும் அனிச்சையாய் ஓங்கிய என் கையைத் தடுத்து நிறுத்தின அவனது வார்த்தைகள்: "இவ்வளோ பத்தினிப் பொம்பளையா இருந்தா, பேசாம ஹெலிகொப்டரில போயிருக்க வேண்டியதுதானே." ஒருகணம் அதிர்ந்தே போனேன். என் விருப்பத்தைக் கேளாமலேயே தொங்கிப் போனதென் தலை. அவமானத்தினாலா அல்லது இயலாமையினாலா என்பதை ஆராயும் நிலையில் நானிருக்கவில்லை. ஆனாலும், பத்தினிப் பெண்கள் அனைவருமே பணக்காரிகளல்லர் என்பதை எப்படிப் புரியவைப்பேன், அவனுக்கு? 'ஹெலிகொப்டரில் போகுமளவுக்கு வசதி படைத்த பணக்காரிகள் மட்டும்தான் பத்தினிப் பெண்களாயிருக்க முடியும்; உலகத்திற்கு முகங்கொடுக்கத் துணிந்த பேருந்தில் பயணிக்கவும், தெருவில் நடந்து செல்லவும் முன்வருகின்ற ஏனைய பெண்கள் விபச்சாரிகளாகவேயிருந்தாக வேண்டும்' என்ற அவனது கருத்தியலின் நியாயத்திற்குப் புறம்பான தன்மையையும், அதை ஏற்றுக்கொள்ள முடியாத என் போன்ற மத்திய வர்க்கத்துப் பெண்களின் இயலாமையையும் எப்படித்தான் எடுத்துரைப்பேன், அவனிடம்?

இவ்வாறுதான் மனிதர்களைக்கண்டு அருவருப்படையத் தொடங்கினேன், நான்.

பாட்டியின் இறுதிக்கிரியைகள் நடந்தேறிய நாள். அதில் கலந்துகொள்ளுமுகமாக நகரத்து நெரிசல்களிலிருந்து விடுபட்ட நிம்மதியுடனும், மிகவும் பிரியத்திற்குரிய பாட்டியைத் தொலைத்துவிட்ட வேதனையுடனும் நெடுங்காலத்துக்குப் பின்னர் என் பிறந்தகமான அந்தப் பிற்பட்ட விவசாயக் கிராமத்திற்குப் போய்ச்சேர்ந்தேன். நான் பிறந்த சிலமாதங்களுக்குள்ளாகவே என் பெற்றோர் சொந்த ஊரிடமிருந்து விடைபெற்றுவிட்டபடியால் கிராமத்து வாசனையறியாமலேயே வளர்ந்திருந்தேன். ஆகையால் எத்தனையோ எதிர்பார்ப்புகளாலும், நெஞ்சுகொள்ளாக் கவலைகளாலும் நிறைந்திருந்தது மனம். வீட்டில் செய்யவேண்டிய சடங்குகள் முடிந்ததும், தகனக்கிரியைகளுக்காக பாட்டியின் உடல் சுடலைக்கு எடுத்துச்செல்லப்படுகையில் பெண்ணென்ற ஒரே காரணத்திற்காக அவரது உடலைப் பின்தொடர்வதற்கான அனுமதி எனக்கு மறுக்கப்பட்டது. பாடையில் செல்வது பெண்ணாயிருந்தும் பாடையைத் தொடர்ந்துசெல்லப் பெண்களுக்கு அனுமதியில்லை. வேடிக்கைதான்... ஆனாலும் இவை தெய்வநியதிகள்; நூற்றாண்டுகாலமாகத் தொடர்ந்துவரும், எம் சமூகத்தினரின் புனிதமான நம்பிக்கைகள்... சம்பிரதாயங்கள். எதிர்த்துக் கேள்விகேட்க எனக்கென்ன தகுதியிருக்கின்றது? இருந்தும்... என்னையும், எனது பெண்மையையும் மதிக்கத் தெரியாத சமூகத்தையும், அதன் நியதிகளையும் நான் மட்டும் மதிக்கவேண்டுமென அவர்கள் எவ்வாறு எதிர்பார்க்கலாம்?

ஆகையினால்தான் இந்தப் போலி அரிதாரங்களையெல்லாம் அலட்சியப்படுத்த ஆரம்பித்தேன், நான்.

ஆழிப்பேரலையின் கோரதாண்டவம் அரங்கேறி முடிந்த சிலதினங்களுக்குப்பின் சேகரித்த நிவாரணப்பொருட்களோடு இலங்கையில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசமாகிய மட்டக்களப்பிற்கு சில NGO நண்பர்களோடு பயணமானேன். அங்கே ஒரு அகதிமுகாமில், விநியோகிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களைப் பெறுவதில் ஒரு கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்க, அந்தச் சந்தடிகளுக்கப்பால் சில சிறுவர் எதிலும் கலந்துகொள்ளாமல் கனத்தமௌனத்துடன் வேடிக்கைபார்த்திருந்தமை உள்ளத்தை உறுத்த, சற்று நகர்ந்து அவர்களிடம் பேச்சுக்கொடுக்கலானேன். கடல்கொந்தளிப்பில் பெற்றோரிருவரையுமிழந்து 3 வயதுத் தம்பியுடன் அமர்ந்திருந்த சரண்யா என்ற 11 வயதேயான சிறுமியிடம் ஏதாவது வேண்டுமாவென்று கேட்டதற்கு, "ஒன்றுமே வேண்டாம் அக்கா, நீங்க கேட்டதே போதும்" என்ற அவளது பதில் எந்தக் கல்நெஞ்சத்தையும் அக்கணம் உருகச்செய்திருக்கும்.

ஒருபக்கத்தில், ஒருவேளை உணவுக்கே அடுத்தவர் கையையெதிர்பார்த்திருக்கும் இவ்வகதிகள். மறுபக்கத்திலோ, உண்டுகொழுத்த தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சி நிலையங்களைநாடி பணத்தையும், சக்தியையும் விரயமாக்கும் உயர்வர்க்கத்தினர். எல்லாமே இருந்தும் திருப்தியடையா உள்ளத்தோடு மேலும் மேலும் அப்பாவி மக்களைச் சுரண்டியும், ஏய்த்தும் பொருள்சேர்க்கும் முதலாளிகள் ஒருபுறம். மறுபுறத்திலோ, உயிரைத்தவிர எல்லாவற்றையும் கடல்கொண்டு போனபின்பும் சில ஆறுதல்வார்த்தைகளோடு திருப்திகண்ட இந்தச்சிறுமி. ஒருபுறம் சுனாமியால் உடைமைகளனைத்தையுமிழந்து அன்றாடப் பிழைப்பிற்கே அல்லலுறும் மக்கள், மறுபுறம் எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபமென எவரோ கொடுத்த நிவாரண உதவிகளையும் கூட சுருட்ட முயலும் அரசியல்வாதிகள்.

அன்றிலிருந்துதான் கடவுளரின் இருப்பையும் சந்தேகிக்கத் தொடங்கினேன், நான்.

இப்படித்தான்... இப்படித்தான் சமூகவிரோதிகள் உருவாகின்றார்கள். அவர்கள் தாமாகவே அவதரிப்பதில்லை. மனிதவரலாற்றின் வளர்ச்சிக் கட்டங்களில் மனிதத்திற்கான தேவைகள் மலியும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சூழ்நிலைகளாலும், இன்னுமின்னும் பல்வேறு காரணங்களாலும் இப்படித்தான் அவர்கள் கொஞ்சங்கொஞ்சமாக உருவாக்கப்படுகிறார்கள். சமூகத்தின் அங்கத்தவர்களென்றவகையில் நாமனைவரும் இதற்குப் பொறுப்பேற்றேயாகவேண்டும்..!!

30 comments:

ஒரு பொடிச்சி said...

இந்த மாதிரி பிரச்சினைகள் நடக்கிற இடங்களில் போய் வெலை செய்கிற உங்களைப்போன்ர்றவர்கள் ஒருபுறம், உங்களைப் போன்றவர்களிடம் தகவல் கேகரித்து தங்களை உயர்திக்கொள்கிறவர்கள் ஒருபுறம்!
சமூகம் இப்படித்தான் இருக்கிறது..
எமக்கான வெளிகளை எங்கேயோ நாங்கள் உருவாக்கிக்கொள்ளகூடியதாகவாவாது இருக்கவேண்டும்..
அஸ்வகோஸின் வரிகள் பொருத்தம்.
தொடர்ந்து எழுதுங்கள்...
முன்பு வாசிதது மிகவும் பிடித்தமான பெண்ணொருவரின் நடையை நினைவூட்டுகிறது உங்கட எழுத்துநடை..
நேர்மையான சொல்லல்முறை இல் இங்கு உங்களைச் சந்திக்கிறது மகிழ்ச்சியளிக்கிறது.

Anonymous said...

அக்கா, இது என் முதல் முயற்சி. உங்கள் ஊக்கத்திற்கும், வழிகாட்டலுக்கும் மிகவும் நன்றி. ஆனால் ஒரு விடயம்... நான் ஒரு சாதாரண student தான். மட்டக்களப்பிற்கு நண்பர்களுடன் தொத்திக்கொண்டு போனேனே தவிர, தொழில் விடயமாகவல்ல. உங்கள் விமர்சனங்களைத் தொடர்வீர்களென எதிர்பார்க்கிறேன். உங்களைப் போன்றோரின் துணை கிடைத்ததில் பெரிதும் மகிழ்கிறேன்.

ஒரு பொடிச்சி said...

அன்பின் தங்கைச்சீ... :-)
இப்படியான விடயங்களில் மாணவர்களாய் ஆர்வத்துடன் இருப்பதும் பெரிய விடயம்தான்.
அனேகம்பேர் தமது பாதுகாப்பான இடங்களில் இருந்துகொண்டே இவற்றை அணுகுவுது -இவற்றுக்காய் கண்ணீர் வடிப்பது- (போய் 'உதவ' முடிகிற தேர்வு இருக்கிறபோதும் கூட!) என்பதையே கூறவந்தேன்.
அப்புறம்
நேரில் (வயது)தெரியாத பெண்களையல்லாம் கூட அக்கா என்பது,
உந்த கடைவழிய நம்மட மறத் தமிழன்கள் தங்களிலும் சின்னப் பிள்ளையளிடம் எல்லாம் 'அக்கா என்ன வேண்டப்போறீங்க' எண்டு தங்கள என்றென்றும் பதினாறாய் வைத்திருக்க முனையிறதிலும் மோசமா இருக்கு ;-)

ஒரு பொடிச்சி said...

மற்றது தமிழ்மண நட்சத்திரமதிப்பிடல் பிற வசதிகளையும் உங்கள template போட்டீர்களென்றால் மறுமொழிகள் தமிழ்மண முகப்பில் வரும்...உதவும் வாசிப்பவர்களுக்கு.
அதற்கான சுட்டிகள்:
http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=post_rating_comment_status

blogger செய்முறை:
http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=blogger_rating_guidelines

உங்களுக்கு ஏலவே தெரிந்திருந்தால்...
don't mind this.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

தங்களுடைய பதிவினைப்பற்றி இன்றைய தினமலரில் அறிவியல் ஆயிரம் டாட்காம் பகுதியில் வெளியிட்டு இருக்கிறார்கள்

பாராட்டுக்கள்

நிறைய எழுதுங்கள்

அருள் குமார் said...

தோழி,
உங்கள் மொழி மிக வீரியம் மிக்கதாய் இருக்கிறது. உங்களின் பதிவுகள் என்னை மிகவும் பாதிக்கின்றன. ஒரு student இந்த அளவிற்கு மொழியை ஆளுமை செய்வது சாதாரணமான விஷயமல்ல. உங்களுக்கு அது வசப்பட்டிருக்கிறது. அதை வெறுமனே ஆணாதிக்க எதிற்பிற்காக மட்டுமே பயன்படுத்தாதீர்கள். ஆணாதிக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். அதற்காக வருந்துகிறேன்.

//இப்படித்தான் இன்னுமின்னும் அதிகமாக ஆண்களை வெறுக்கப் பழகிக் கொண்டேன், நான்.//

-இந்த கருத்துடன் நான் என்றைக்குமே உடன்பட மாட்டேன். மிகத்தவறாக உங்களை பழக்கிக் கொள்கிறீர்கள் என அறிய மிக வருத்தமாயிருக்கிறது. நீங்கள் சந்தித்த ஆண்களை மட்டுமே வைத்து உங்களின் வாழ்வின் போக்கை, இவ்வளவு சின்ன வயதில், ஒரு தீர்மானமாக மாற்றிக்கொள்ளாதீர்கள்.

சில பெண்களால் துயறுற்ற சில ஆண்கள் பெண்களையே வெறுப்பதாக சொன்னபோதும் இதே கருத்தைதான் சொன்னேன்.

உங்கள் மொழி மிக வலிது. அது எட்டவேண்டிய தளங்களும், இலக்குகளும் வேறு. அவற்றைத்தேடி பயணியுங்கள்.

ஆணாதிக்கம் தொடர்பாக உங்களின் கருத்துக்களுடன் விவாதிக்க இந்த இடம் போதாது. எனினும், தோழிகள் மற்றும் சகோதரிகளுடனான எனது வாழ்வின் நிகழ்வுகளை மனதில் கொண்டு, ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என்றைக்குமே ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் மிக இனிமையானவர்களே. புரிந்துகொள்ள தவறும் போதுதான் சில விபரீதங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. இன்றைக்கு இல்லாவிட்டலும் என்றைக்கவது இது உங்களுக்கு புரியும். சிலர் உங்களை துன்புறுத்தியதற்காக உங்களின் வாழ்வின் இனிமையான போக்கை மாற்றிக்கொள்ளாதீர்கள். நீங்கள் என்றைக்குமே நீங்களாக இருங்கள். - உங்கள் மீது அக்கறை கொண்டவனின் தாழ்மையான கருத்து இது.

தோழமையுடன்,
அருள்.

Anonymous said...

அக்கா, உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. இவை எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லாத விடயங்கள். மற்ற blogs களில் நட்சத்திர மதிப்பிடலைப் பார்த்து நானும் முயன்றேன். பலன் கிடைக்கவில்லை. எதற்கிந்த தேவையில்லாத ஆசைகளென்று முயற்சியைக் கைவிட்டேன். இப்போது உங்கள் புண்ணியத்தில் என் blog இலும் நட்சத்திரங்கள் மின்னுகின்றன. நன்றி.

உங்களை 'பொடிச்சி' என்று விளிப்பதைவிட அக்கா என்று கூறுவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. என்னதான் செய்யட்டும், நான்? ஆனாலும் ஒரு நம்பிக்கை... நீங்கள் நிச்சயம் எனக்கு அக்காவாகத்தான் இருக்க வேண்டும். :-)!!!

நிலவு நண்பனுக்கு..., தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. துரதிர்ஷ்டவசமாக தினமலரையோ, அதன் அறிவியல் மலரையோ என்னால் தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. தயவுசெய்து அதன் சுட்டியைத் தந்துதவ முடியுமா?

அருள்குமார்.... உங்கள் கருத்துகளுக்கும், அக்கறைக்கும் மிக மிக நன்றி. ஆனால், எனக்குமென்று சில பலவீனங்களிருக்கின்றன. ஆணாதிக்க எதிர்ப்பிற்குப் பிரயோகிக்கும்போதுதான் என் மொழியின் முழு வீரியத்தையும் வெளிப்படுத்தக் கூடியதாகவிருக்கிறது.

ம்ம்ம்ம்.... நான் சந்திக்காத, நேர்மையான ஆண்களும் இவ்வுலகில் இருக்கிறார்களென நீங்கள் சொல்லக் கேட்க சந்தோஷமாகத்தானிருக்கிறது. ஆணாதிக்கம் தொடர்பான உங்கள் விவாதங்களை மேலும் எதிர்பார்க்கிறேன். நான் வளையங்களை அறுத்தெறிய விரும்புவள். தவறுகளைச் சுட்டிக்காட்டும் பட்சத்தில் திருத்திக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன்.

அத்துடன் தோழர்களே..., அறிமுகமான வேகத்திலேயே சில நாட்களுக்கு தற்காலிகமாக விடைபெற வேண்டிய கட்டாயம். பரீட்சைகள் தொடங்கிவிட்டன. இரண்டு வாரங்களின்பின் மேலும் சில பதிவுகளோடு உங்களனைவரையும் சந்திக்கிறேன்.

இப்போதைக்கு விடைகொடுங்கள்.

Anonymous said...

magale,
ippodhu nalliravu neram
thinamalar seithi thaalil
unadhu virakthi vilaitha veruppu varigal...
mutrilum padikkamal mooda marukkum
kangal magale, manathum thaan...
oru naalenbathu vaal kaalamaguma..
oru anubavam vaalkaiai nirnayikkalaama...
pessimism - porada vendiya unarvallava - thookki eriyavendia
thunba chumai allava
magale, marupakkathaiyum parka muyal... marabukalukkum aalntha porul indu... puriyathathu ellam purakkanikka padavendiathillai.. puriya muyal
anbudan, idayam nirai prarthanaikaludan
alwarkkadiyan

Anonymous said...

Everyone would have some bitter experiences to quote. Just don't get yourself entangled in those uncomfortable memories. Best of luck... for the imminent exams and the whole life ahead.

ஒரு பொடிச்சி said...

// ஆனாலும் ஒரு நம்பிக்கை... நீங்கள் நிச்சயம் எனக்கு அக்காவாகத்தான் இருக்க வேண்டும்./

உங்கட நம்பிக்கை பலிக்கட்டும்!!

பரீட்சைக்கு வாழ்த்துக்கள், வந்து நிறைய்ய எழுதுங்கள்..

மதுமிதா said...

அன்பு நிவேதா

நன்றாக இருக்க வேண்டுமம்மா நீங்கள்.
மாணவப் பருவத்தில் தான் எத்தனை முதிர்ச்சி உங்களுக்கு.

ஒரு பொடிச்சி நிவேதாவை வழி நடத்தும் உங்களுக்கும் வாழ்த்து

அன்பு said...

உங்களின் கனத்த நினைவுகளை சற்றே இறக்கிய இந்தப்பதிவே வெகுவாய கனக்கிறது. சற்றே ஆசுவாசப்படுத்தி, நல்லமுறையில் தேர்வெழுதி வந்து தொடருங்கள்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நிவேதா,

உங்களுடைய மொழியாளுமை பிடித்திருக்கிறது. மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

பரீட்சைகளை முடித்துக்கொண்டு வந்து, தொடர்ந்து எழுதுங்கள்.

-மதி

பி.கு.: எனக்கும் உந்த அக்கா/அண்ணா விளித்தலில் உடன்பாடு இல்லை. :)

இளங்கோ-டிசே said...

நிவேதா,
தெளிவான எழுத்து நடை உங்களுக்கு வாய்த்திருக்கின்றது. நேர்மையாக, வெளிப்படையாக உங்கள் கருத்துக்களை (இறுகிப்போன எமது சமூகத்திலிருந்து) பொதுவில் வைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பரீட்சைகள் (தவணைப்பரீட்சையெனின்) முடிய ஒரு மாத விடுமுறை வருந்தானே, அடிக்கடி இங்கே வந்து எழுதுங்கள்.
....
மற்றும்படி, பொடிச்சியும், மதியும் கூறியதையே நானும் வழிமொழிகின்றேன் :-). அவ்வவ்போது என்னைப் போன்றவர்கள் உணர்ச்சிவசப்பட்டு 'ப்ரோ', 'தங்கத்தீ'என்று அழைப்பதை மட்டும் கணக்கிலெடுக்கவேண்டாம்.

மு. மயூரன் said...

நிவேதா,
உங்கள் வலைப்பதிவை இவ்வளவு காலமும் அறியாமலிருந்திருக்கிறேன்.
நன்றாக எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

டிசம்பர் பரிட்சைக்கு ஆயத்தப்படுத்தும் கொழும்பில் இருக்கும் பிள்ளை இணையம் அறிந்து, யுனிகோட்
அறிந்து, தட்டெழுதப்பழகி, தனது வலைப்பதிவின் வார்ப்புருவில் நிரற்துண்டுகளை
சரியாகப்பொருத்தி.. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பாராட்டுக்கள்.

Kannan said...

//அஸ்வகோஸின் வரிகள் பொருத்தம்.//

//உங்களுடைய மொழியாளுமை பிடித்திருக்கிறது. மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

பரீட்சைகளை முடித்துக்கொண்டு வந்து, தொடர்ந்து எழுதுங்கள்.//

வழிமொழிகிறேன்.

Chandravathanaa said...

நிவேதா
மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். சொல்ல வந்ததை மனதைத் தொடும்படியாகச் சொல்லும் அருமையான எழுத்துநடை. ஒரு பமாணவியிடம் கருத்துக்களை இத்தனை நாசூக்காக வைக்கும் நளினம் கண்டு வியப்பாக உள்ளது. தொடர்ந்தும் எழுதுங்கள்.

மேலே நீங்கள் எழுதியதில் வரும் இவ்வரிகள்
மறுபக்கத்திலோ, உண்டுகொழுத்த தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சி நிலையங்களைநாடி பணத்தையும், சக்தியையும் விரயமாக்கும் உயர்வர்க்கத்தினர்.
உங்கள் கருத்துக்களின் அழகைச் சற்றுக் குறைப்பது போல எனக்குத் தோன்றுகிறது.

ஏனெனில் உண்டு கொழுத்த பணக்காரர் எல்லோருமே உடற்பயிற்சி நிலையத்துக்குப் போவதுமில்லை. உடற்பயிற்சி நிலையத்துக்குப் போவது ஒரு கூடாத வேலையுமில்லை. சின்னவயதிலிருந்தே எமக்கு உடற்பயிற்சி ஒரு பாடமாகவே பாடசாலையில் கற்பிக்கப் படுகிறது.. அது எமக்கு அவசியம் தேவையான ஒன்று. நாம் போவதில்லை என்பதற்காகப் போபவர்களைத் திட்டக் கூடாது.

Thangamani said...

டிசே யின் பதிவின் வழி இங்கு வந்தேன். மொழியும், சொல்லும் முறையும் நன்றாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதவும். நன்றி.

மு. மயூரன் said...

//நாம் போவதில்லை என்பதற்காகப் போபவர்களைத் திட்டக் கூடாது.//

உடற்பயிற்சி கூடாத வேலை இல்லைதான்.

இங்கே பிரச்சனை உண்டு கொழுத்த தொப்பைகள் பற்றியதுதானே சந்திரவதனா அக்கா?

இந்த வார்த்தைகளினூடு வெளிவரும் இவரின் சமூகப்பார்வை மதிக்கத்தக்கது.

சமூகத்தின் ஏற்றதாழ்வுகளின் சுயநல மூலம் பற்றிய இவரது புரிதலும், அதன்வழிவரும் கோபமும் இவ்வாறான வரிகளின் துணைகொண்டுதானே வெளிவர முடியும்?

அவர் சோன்ன கோணத்தில், வேகத்தில் எந்த தவறும் இல்லை.

கொழும்பில் ஒளிரும் உடற்பயிற்சி நிலையங்கள் வசதி படைத்தவர்கள் வசதி அற்றோரை பார்த்து கைகொட்டி சிரிக்கும் எக்காள சிரிப்புத்தானே தவிர வேறொன்றுமில்லை.
அத்தோடு அவற்றின் ஆணாதிக்க முகமும்....

SnackDragon said...

டிசே யின் பதிவின் வழி இங்கு வந்தேன். மொழியும், சொல்லும் முறையும் நன்றாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதவும். நன்றி.

Anonymous said...

//தகனக்கிரியைகளுக்காக பாட்டியின் உடல் சுடலைக்கு எடுத்துச்செல்லப்படுகையில் பெண்ணென்ற ஒரே காரணத்திற்காக அவரது உடலைப் பின்தொடர்வதற்கான அனுமதி எனக்கு மறுக்கப்பட்டது//

என்னது அனுமதிமறுக்கப்பட்டதா..?
எனது தாத்தா பாட்டியின் இறுதிக் கிருகையின் பொது எனது சித்திமார்கள் சுடலைவரை போய் இறுதிக்கிரிகையில் பங்குகொண்டதாக எனக்கு நன்றாகவே ஞாபகம் உள்ளது! இது நடந்தது யாழ்பாணத்தில் 85-86ம் ஆண்டில்!

Anonymous said...

நல்லாக எழுதும் உங்களை எதற்கு டினமலர்.காமிலே போட்டார்களோ தெரியவில்லை. அது குறித்து மனம் தளராமல் தொடர்ந்து எழுதுங்கள்

Anonymous said...

சில பதிவுகளைப் படிக்கும் போது என்னையறியாமல் கண்கள் ஈரமாவதுண்டு. சமீபத்தில் சகோதரர் "ஜோ" அவர்களின் "பங்காளிகள்" என்ற பதிவும் அந்த ரகத்தில் படும். ஆனால் இது வரை பின்னூட்டம் இடும் போது "இப்பதிவு என் கண்களை குளமாக்கியது" என்று எழுதியதில்லை. பல முறை நினைத்தாலும் எழுதும் போது கூச்சம் மேலிட அவ்வரிகளை எழுதாமல் தவிர்த்திருக்கிறேன்.

ஆனால் அது போல் இப்பதிவிலும் செய்ய முடியவில்லை.

"ஒன்றுமே வேண்டாம் அக்கா, நீங்க கேட்டதே போதும்"
நிவாரண முகாமும் அதில் பெற்றோரை இழந்து வெறித்த பார்வையுடன் இருக்கும் என்னால் காணமுடியாத அச்சகோதரியும் இருக்கும் காட்சி அப்படியே என் மனத்திரையில் ஓடிக் கொண்டிருப்பதால் எப்பொழுதும் எட்டிப் பார்க்கும் கூச்சத்திற்கு அங்கு இடமில்லாமல் போய் விட்டது.

கண்களில் கட்டிய நீர் கன்னங்களில் வழிந்தோடுவது இன்னும் நிற்கவில்லை.

ஆரம்பத்தில் எந்தளவிற்கு பதிவினால் மனம் கனத்ததோ அந்தளவிற்கு முடிக்கும் போது பின்னூட்டத்தால் மனம் இலேசாகியது.(அழுகையையும், சிரிப்பையும் ஒருங்கே தந்த மிகச் சிறந்த பதிவு)

அனானிமஸ் அண்ணன்களால் சில நேரங்களில் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று.

நன்றி அனானிமஸ் அவர்களே!

Anonymous said...

//நல்லாக எழுதும் உங்களை எதற்கு டினமலர்.காமிலே போட்டார்களோ தெரியவில்லை.//

I indicate this!

Superp Anaanimus!

அன்பு said...

நல்லாக எழுதும் உங்களை எதற்கு டினமலர்.காமிலே போட்டார்களோ தெரியவில்லை. அது குறித்து மனம் தளராமல் தொடர்ந்து எழுதுங்கள்

By Anonymous, at 1:51 PM


கலக்கல்...:):):)

Pot"tea" kadai said...

அற்புதமாக எழுதுகிறீர்கள் அல்லது எழுத முயற்சித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். உங்களுடைய எழுத்தும் சிந்தையும் எனது தோழியை ஞாபகபடுத்துகிறது!

Anonymous said...

நன்றி தோழர்களே! மிகவும் நன்றி..

தருமி said...

நல்ல எழுத்துக்களில் நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள்

தமிழ்நதி said...

நிவேதா...! உங்கள் எழுத்து உங்கள் ஆன்மாவைப் பிரதிபலிக்கிறது. எழுத்தும் வாழ்வும் முரண்பட அனுமதித்துவிடாதீர்கள். கீழ்மைகளோடு சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்வதற்கே பெரிய தைரியம் வேண்டும்.

நிவேதா/Yalini said...

சாம், தமிழ்நதி.. பின்னூட்டங்களுக்கு நன்றி!

எழுதுவதற்கும் ஒரு நேர்மை வேண்டுமில்லையா, தமிழ்நதி.. சமரசம் செய்துகொண்டுவிட முடியாத இயலாமைதான் எழுத்து வடிவில் வெளிப்படுகின்றதெனக் கூறினால், அது தவறில்லைதானே..